போரை தீவிரப்படுத்தும்? | தினகரன் வாரமஞ்சரி

போரை தீவிரப்படுத்தும்?

கலாநிதி 
கே.ரீ.கணேசலிங்கம் 
யாழ்.பல்கலைக்கழகம்
 

கொரியக்குடா போரை நோக்கி தீவிரமாக நகருகின்றது. அமெரிக்கா வடகொரியாவை முழுமையாக அழிப்பதற்கு திட்டமிட்டு வருகிறது. அதற்கான போர்பயிற்சியை ஆரம்பித்துள்ளது. இது நிச்சயமாக வடகொரியாவை தூண்டுவதாக அமையும். வடகொரி யாவின் நடவடிக்கை போரைத் தொடக்குவதாக அமைந்தால் அது அணுவாயுத யுத்தமாகவே அமைந்துவிடும்! அதனை உணர்ந்து கொண்ட ஐ.நா.சபை தனது அரசியல் பிரிவுத் தலைவரான ஜெப்ரி பில்மனை வடகொரியாவுக்கு அனுப்பியுள்ளது. கொரியக்குடாவில் நிகழ்ந்துவரும் மாறுதல்கள் போரை விரைவுபடுத்துமா என்பதை தேடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பிரமாண்டமான போர் ஒத்திகை அமெரிக்க – தென் கொரிய இராணுவங்கள் கூட்டாக மேற்கொண்டு வருகின்றன. முப்படைகளும் தனித் தனியே ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அதிலும் விமானப்படையின் ஒத்திகை மிக எச்சரிக்கை மிகுந்ததாக பார்க்கப்படுகிறது. அது வடகொரியாவை முழுமையாக தாக்கி அழிப்பதற்கான வரைபொன்றினை அமெரிக்கப் புலனாய்வு தரப்பு திட்டமிட்டிருந்தது. வட கொரியாவின் பதிலடிக்கு அல்லது தொடக்கத்திற்கு நேரம் வழங்காது தாக்குதலை நடாத்த திட்டமிட்டிருந்தது. அதனையே போர் ஒத்திகையாக மேற்கொண்டுவருகிறது. ஏறக்குறைய 200 விமானங்கள் போர் ஒத்திகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டீ-டீ1 தாக்குதல் விமானங்கள் வரை பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தென்கொரிய விமானங்களும் அமெரிக்க விமானப்படையுடன் இணைந்ததுடன் போரின் ஒரு பகுதியை கையாளும் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.

வெயிலன்ற் ஏய் எனும் போர்ப் பயிற்சியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட விமானப்படைகள் சேர்ந்துள்ளன. ஏறக்குறைய ஒரு வருடமாக திட்டமிடப்பட்ட போபயிற்சி முடிந்தவருடம் நிறைவு பெற்றது.

இப்போர் ஒத்திகை பற்றிய அபிப்பிராயத்தினை பரிமாற்றிக் கொண்ட வடகொரிய அணுவாயுதப் போருக்கு மிக அண்மையில் நகருகின்ற நடவடிக்கையென அரச ஊடகத்தின் செய்திப் பரப்புகையினால் வெளியிடப்பட்டுள்ளது. ஏறக்குறைய சரியான கணிப்பீடாகவே அமைந்துள்ளது. இத்தகைய ஒத்திகைகளே வடகொரியாவை தீவிரமான நடவடிக்கைக்கும், தற்பாதுகாப்புக்கும், திட்டமிடச்செய்தது. வடகொரியா உலகத்தில் ஒரு நாடு என்பதனை நிராகரித்துவிட முடியாது. அதற்கான தற்பாதுகாப்புக்களை உருவாக்குவதற்கு அது தயாராக உள்ளதென்பது தவிர்க்க முடியாததாகும்.

அமெரிக்காவின் ஆதிக்க நலன்களை நிறைவு செய்வதற்காகவும் கிழக்காசியா மீது கவனம் செலுத்தவும், வல்லரசுப்போட்டியை தக்கவைக்கவும், சீனா ரஷ்சியாவை அவற்றின் பிராந்தியத்திலேயே எதிர்கொள்ளவும் மேற்கொண்ட உத்தியாகவே கருதுவது பொருத்தமானதாக அமையும்.

அமெரிக்கா வடகொரியாவை தாக்கத்திட்டமிட்டுவிட்டது என்பது போர் ஒத்திகைகள் உணர்த்துகின்றன. அத்தகைய போரை உலகிலுள்ள இதரநாடுகளை கூட்டி ஒன்றிணைத்து தாக்குதல் மேற்கொள்ள முயன்றது. ஆனால் இதில் பெரும் அரசுகள் பின்வாங்க தென்கொரியாவையும், ஜப்பானையும் பயன்படுத்தும் தறுவாயில் போரை நோக்கி வேகமாக பயணிக்க அமெரிக்கா முயலுகிறது.

அத்தகைய போர் அணுவாயுதத் தாக்குதலாகவே அமையுமென்பது நன்கு தெரிந்த விடயம். அதனை அமெரிக்காவோ கொரியக்குடாவோ அனுபவிப்பதல்ல முழு உலகத்திற்குமே கேடான விடயமாகவே அமையும். அதனால் ஏற்படும் விளைவுகளில் இருந்து வளர்ந்த நாடுகள் தப்பிக் கொள்ளப்பார்க்கின்றன. ஆனால் அது அனைத்து புவிமேற்பரப்பினையும் பாதிப்புக்கு உள்ளாக்க கூடியதாகவே அமையும்.

இதே சந்தர்ப்பத்தில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக்மாஸ்டர் குறிப்பிடும்போது வடகொரியாவுடனான போர் அபாயம் அதிகரித்துவருகிறது. வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்கா வேகமாக செயல்பட்டு வருகிறது என்றார். எனவே போரை நோக்கி நகர்வு தீவிரமாகிவிட்டது. அமெரிக்காவின் அரச இயந்திரம் தெளிவாகவும் படிப்படியாகவும் போரை நிகழ்த்துவதற்கான தயாரிப்புகளை காட்சிப்படுத்துகின்றது. குறிப்பாக வடகொரிய தலைமை மற்றும் இராணுவம் பற்றிய செய்திகளுக்கு வழங்கப்படும் ஊடகமுக்கியத்துவம் அதிகம் போலிகளாக உள்ளன. அதில் வடகொரியா மீதான வெறுப்பினை நோக்கி உலகத்தை நகரவைக்கும் ஓர் உளவியல் யுத்தத்தினை மேற்குலக ஊடகங்கள் மேற்கொண்டு வருகின்றன. அது எப்போது பூரணத்துவமாக எட்டப்படுகிறதோ அப்போது உலக நாடுகளின் ஆதரவுடன் போரை அமெரிக்க அரச, புலனாய்வு பிரிவுகள் மேற்கொள்ள விரும்புகின்றன. ஆனால் அமெரிக்காவுடன் ஜனாதிபதி ட்ரம்ப்பின் அவசரமான போர் என்பது சாத்தியமற்ற தொன்றாகவே உள்ளது. அவரது டுவிட்டர் பக்கத்தின் அடிப்படையில் அமெரிக்கா போரை செய்ய தயாராக இல்லை என்பது நன்கு உணரக்கூடிய அம்சமாகும்.

வடகொரியா மீதான போரை காலம் தாழ்த்துவது அமெரிக்க அரச இயந்திரத்தின் நோக்கமாகும் அப்படியான கால நீடிப்பு எப்போது நாடுகளையும் அவற்றின் தலைமைகளின் உத்திகளையும் தோற்கடிக்க முடியுமென மேற்குலகம் செயல்பட்டு வந்துள்ளது. அது ஒரு நாட்டின் தாக்குதலாக அமையலாம், ஆயுதப் போராட்டங்களாக அமையலாம் அனைத்துமே கால நீடிப்பு எனும் அம்சத்தினால் தோற்கடித்த வரலாற்று வெற்றிகளை தலைமை தாங்கும் அரசுகள் பெற்றுள்ளன. இதே அணுகு முறையையே வடகொரியா மீதும் அமெரிக்கா கடைப்பிடித்துவருகிறது. அது மட்டுமன்றி வடகொரியா ஒரு மூடிய அரசு என்ற அடிப்படைலும் அதன் தகவல்களை பெறமுடியாத இறுக்க தன்மையும் அமெரிக்காவுக்கு கால நீடிப்பின் தேவையாக அமைந்துள்ளது.

இத்தகைய போர் உத்திகளில் ஒன்றாகவே ஐ.நா.சபையின் அரசியல் பிரிவுத் தலைவரது வட கொரிய விஜயம் அமைந்துள்ளது. அமெரிக்காவின் போர் ஒத்திகையின் அதீதத்திலும் வடகொரிய தலைமையை பணியவைக்க எடுத்த முயற்சியாகவே உள்ளது. ஒன்றில் வடகொரியாவுடன் இறுதிவரை உரையாடினோம் சாத்தியப்பாடான முடிவுகளை தராதமையால் போன்ற நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது எனக் கூறி நிலமையை கையாளுவது அன்றி வடகொரிய ஐ.நா.வுக்கு கட்டுப்படுமாயின் அதன் மீது அரசியல் ரீதியான ஆதிக்கத்தை செலுத்துவதே ஜெப்ரியின் விஜயத்தின் நோக்கமாக அமையும். ஐ.நா.என்பது அமெரிக்கா தான். இடையிடையே ரஷ்சியா தலைமை காட்டினாலும் ஐ.நா.வேலைத்திட்டத்தை கொண்டியங்குவது அமெரிக்கா என்பதில் மாற்று எண்ணமே முழுமைப்படவில்லை. அப்படியான ஒரு சூழலிலேயே ஐ.நா.அரசியல்துறை அதிகாரியின் விஜயம் அமைந்துள்ளது.

எனவே போர் ஒத்திகையின் தீவிரம் போரை வேகப்படுத்தப் போகின்றது என்பதையே காட்டுகிறது. போர் பயிற்சியும் ஐ.நா. தூதுவரது பயணமும் வடகொரியாவை மேலும் தூண்டலாம். அதனால் போர் வெடிப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கலாம். அதனை கடந்து மூன்று தரப்பும் செயல்படுமாயின் அதனால் உலகம் ஓர் அணுவாயுதப் போரை தவிர்க்க முடியும். இதில் தவிர்க்க முடியாத அணுவாயுதம் தீர்மான போர் உத்தியாக இரு தரப்பிடமும் காணப்படும்.

Comments