ஜெயலலிதாவின் முத்திரை மோதிரத்தை கைப்பற்றப் போவது யார்? | தினகரன் வாரமஞ்சரி

ஜெயலலிதாவின் முத்திரை மோதிரத்தை கைப்பற்றப் போவது யார்?

'அகில இந்திய அளவில் காங்கிரசுக்கும் தமிழக அளவில் தி.மு.க.வுக்கும் களங்கம் கற்பித்து முடக்கிப் போட்ட 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பு வெளியாகி அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வழக்கின் தீர்ப்பை தி.மு.க தற்போது கொண்டாடி மகிழ்ந்து அதை அரசியல் மயப்படுத்தினாலும் காயப்பட்ட புலியின் சீற்றத்தை ஏனோ கழகத்தில் காண முடியவில்லை என்பது அரசியல் ரீதியான சந்தேகத்தை எழுப்புகிறது

கடந்த வாரம் தமிழக அரசியலில் மூன்று முக்கிய விஷயங்கள் நடந்து முடிந்திருக்கின்றன. முதலாவது, முழு இந்தியாவுமே எதிர்பார்த்திருக்கும் ஆர்.கே.நனர் இடைத்தேர்தலுக்கான முடிவுகள். அது இன்று வெளியிடப்பட்டுவிடும். இந்தத் தேர்தல் பல புகார்களுக்கு மத்தியில் கடந்த 21ஆம் திகதி நடந்து முடிந்திருக்கிறது. 77 சதவீதமான வாக்காளர்கள் வாக்களித்திருக்கிறார்கள். இறுதி நேரத்தில் வாக்காளர்கள், குறிப்பாக பெண் வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளில் குவிந்து விட்டதால் இரவு ஏழு மணிவரை வாக்களிப்பு நீடித்திருக்கிறது. வாக்களித்து விட்டு கைவிரல் மையுடன் வந்தால் பணம் தரப்படும் என தினகரன் அணி அறிவித்திருந்தால் கடைசி நேர வாக்களிப்புக்கு கூட்டம் சேர்ந்ததாக ஒரு கதை அடிபட்டது. 19ஆம் திகதி, இறுதி பிரசார நாளான்று 100 கோடிக்கும் அதிகமான பணம் ஆர்.கே. நகரில் வாக்கு லஞ்சமாக விநியோகம் செய்யப்பட்டதாகவும் ஒரு பரபரப்பு செய்தி தொகுதியில் பரவியது.

இந்திய தேர்தல் வரலாற்றிலேயே ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெறுவதற்காக கட்சிகள் இத்தனை கோடிகளை, 500 கோடிக்கும் அதிகமான தொகையை, இறைத்திருப்பது இதுவே முதல் தடவை என்று கூறப்படுவதை, தமிழ்ச் சமூகம் அவமானகரமான தலை குனிவாக எடுத்துக் கொள்ளுமா அல்லது வெற்றிக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளுமா என்று தெரியவில்லை.

இரண்டாவது பரபரப்பு, தேர்தலுக்கு முதல் நாள், 20ஆம் திகதி, தினகரன் ஆதரவு முன்னாள் சட்டசபை உறுப்பினரான வெற்றிவேல் வெளியிட்ட ஜெயலலிதா விடியோ. இந்த விடியோவில் ஜெயலலிதா ஆஸ்பத்திரி கட்டிலில் படுத்துக்கொண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருப்பதை சித்தரிக்கிறது. இந்தக் காட்சி சில விஷயங்களை குறிப்பிட்டுக் காட்டுகின்றன.

அவர் நைட்டியுடன் படுத்திருக்கிறார். இடது கையில் பிளாஸ்டிக் ஜூஸ் குவளையை பிடித்திருக்கிறார். அவ்வப்போது கை வாயை நோக்கி உயர, பானத்தை ஸ்ட்ரோவினால் உறிஞ்சி குடிக்கிறார். இது, அவரது இடது கை வேலை செய்கிறது என்பதை உணர்த்துகிறது. ஒருகாலை நீட்டியும் மற்ற காலை மடித்தும் வைத்திருக்கிறார். அதாவது அவரது கால்களில் எந்தக்குறையும் இல்லை என்பதை அது உணர்த்துகிறது. வலது கையில் பெண்டேஜ் போடப்பட்டுள்ளது. கைவிரலில் ‘ட்ரிப்’ குழாய் பொருத்தப்பட்டுள்ளது. சிகிச்சைக்கான அறிகுறிகள் இவை. தான் விடியோ எடுக்கப்படுவதையும் உணராமல் டி.வி நிகழ்ச்சி ஒன்றில் ஆழ்ந்துபோகும் அளவுக்கு தெளிவான, தொந்தரவற்ற மனநிலையில் உள்ளார் என்பதையும் நமக்கு தெரிவிக்கிறது.

இந்த விடியோ வெளியாவதற்கு சில தினங்கள் முன்னரே, அபல்லோ அதிபர் பிரதாப் ரெட்டி, ஜெயலலிதா அபல்லோவுக்கு அழைத்து வரப்பட்டபோது ‘சீரியஸ் கண்டிஷ’னில் இருந்ததாகவும், மக்களை குழப்பக்கூடாது என்பதாலேயே நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் உடல் நிலை நன்றாக இருப்பதாகவும் பொய் சொல்ல வேண்டியிருந்தது என்றும் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். இந் சக்திவேல் விடியோ அவர் கூற்றை பொய்யாக்கி இருக்கிறது.

செப்டம்பர் 22ஆம் திகதி போயஸ் தோட்டத்தில் சசிகலாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே ஏதோ தகராறு ஏற்பட்டதாகவும் அதன் பின்னரேயே அவர் மூர்ச்சித்து விழுந்ததாகவும், இது நடந்து இரண்டு மணித்தியாலத்தின் பின்னரேயே அவர் அபல்லோவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் ஏற்கனவே ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது. இத் தகவல் முற்றிலும் சோடிக்கப்பட்டது என்பதாக சக்திவேலின் வீடியோ நிறுவ முயற்சிக்கிறது. ஏனெனில் வெளிப்படையாகத் தெரியக் கூடிய உடல் மற்றும் மனப் பாதிப்புகள் இன்றிஅவர் காணப்படுவதாகவே இந்த வெற்றிவேல் வீடியோ காட்சிகள் நிறுவ முயல்கின்றன.

ஜெயலலிதாவின் சுகவீனத்துக்கும், அதன்பின்னர் படிப்படியாக அவர் உடல் சீர்கெட்டு மரணமடைந்ததற்கும் சசிகலா குடும்பத்துக்கும் இடையே எந்த சம்பந்தமும் இல்லை. அவர் சுகவீனமுற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டபோது நல்ல நிலையில்தான் இருந்தார். அபல்லோ சிகிச்சைக்குப் பின்னர், அதாவது மருத்துவர்களின் கவனிப்புக்குள் அவர் வந்த பின்னரேயே அவரது உடலில் சீரியசான விஷயங்கள் நடக்கத் தொடங்கி இருக்கின்றன. இதற்கும் சசிகலா குடும்பத்துக்கும் தொடர்பு கிடையாது என்ற செய்தியை, ஆர்.கே. நகர் வாக்காளர்களிடம் அவர்கள் வாக்களிப்பதற்கு முதல் நாளே தெரிவித்துவிடும் நோக்கத்துடனேயே, தினகரனின் இறுதி தேர்தல் அஸ்திரமாக இந்த விடியோ காட்சி பிரயோகிக்கப்பட்டிருக்கிறது என்று இதை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

பிரசாரங்கள் அனைத்தும் ஓய்வடைந்த நிலையில் இவ்வாறான ஒரு வீடியோவை வெளியிட்டது தேர்தல் சட்டத்துக்கு முரணானது என்று தேர்தல் ஆணையாளர் கருதியதால் சக்திவேல் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. தான் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பும் வகையில் அவர் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு கடந்த வெள்ளிக்கிழமை சென்னை நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே வெற்றிவேல் கைது செய்யப்பட்டு வழக்கு நடைபெறலாம். அவருக்கும் அது தெரியும். ஆனால் அவர் வேக வைத்த கடைசி நேர பருப்பு எதிர்பார்த்த மாதிரி வெந்திருக்கிறதா என்பதே வெற்றிவேலுக்கு முக்கியம். அது இன்றைக்கு நன்பகலுக்கு முன்னரேயே உங்களுக்கு தெரியவந்திருக்கும்.

இதே சமயம் இந்த வீடியோ உண்மையா போலியா என்று கேட்டால், போலியானதாகவே இருக்க வேண்டும் என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. ஏனெனில், இது அவர் சுகவீனமுற்ற செப்டம்பர் 22ஆம் திகதிக்கு முன்னர் எடுக்கப்பட்ட கானொளி யாகவும் இருக்கலாம். போயஸ் இல்லத்தில் எடுக்கப்பட்டதாகவும் இருக்கலாம்.

இலங்கையில் எதிர்வரும் பெப்ரவரியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. வழமையாக பெரிய அளவில் உள்ளூராட்வி தேர்தல்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனால் இம் முறை இத்தேர்தல் ஒரு பாராளுமன்றத் தேர்தல் அளவுக்கு உன்னிப்பாக அவதானிக்கப்படுகிறது. வாழ்வா சாவா என்பது போல. இதேபோலத்தான், சென்னை ஆர்.கே. இடைத்தேர்தலும் இந்திய அளவில் முக்கியத்துவதும் பெற்றத் தேர்தலாகப் பார்க்கப்படுகிறது.

இன்னும் சில மணித்தியாலங்களில் வெளிவரவிருக்கும் தேர்தல் முடிவானது எடப்பாடி அரசுக்கு சாதகமானதாக – மது சூதனன் வெற்றி பெறுவதாக அமையுமானால், எடப்பாடியின் அ.தி.மு.கவுக்கு இது சிக்சர் வெற்றியாக அமையும். இதன் ஸ்பொன்சராக விளங்கும் டில்லி மோடி அரசுக்கு ‘சென்சுரி்’ போட்ட மகிழ்ச்சியையும் அளிக்கும். இந்த அ.தி.மு.கவின் மீள் எழுச்சியை மோடி, பா.ஜ.கவின் தமிழக எழுச்சியாகவே பார்ப்பார்.

தினகரன் இத் தேர்தலில் வெற்றி பெறக்கூடும் என்ற பரவலான எதிர்வுகூறலும் உள்ளது. கடந்த ஆறுமாதகாலமாகவே அவர் இதற்காக உழைத்து வந்திருக்கிறார். பணம், பொருள் பட்டுவாடாவும் அவர் அணியினரால் நன்றாகவே நடத்தப்பட்டிருக்கிறது. மேலும் அவரது மக்களை அணுகும் பாணியும், சிரித்தமுகத்துடன் பேசும் விதமும் வாக்களார்களை, இந்தப் பூனையும் பால்குடிக்குமா? என எண்ண வைக்கக் கூடியவை. இத் தேர்தல் பிரசாரத்தை அவதானித்த ஊடகவியலாளர்கள், தினகரனுக்கு ஒரு செல்வாக்கு தொகுதிபூராகவும் காணப்படுவதை ஒப்புக் கொண்டுள்ளனர். எனவே தினகரன் வெற்றி பெற்றால், ஆச்சரியப்படுவதற்கில்லை. தமிழ் வாக்காளன் ஏன், எதற்கு, எப்படி சிந்திக்கிறான் என்பது வேறு விஷயம்!

தி.மு.கவின் மருது கணேஷின் வெற்றி இயல்பானது என்பது பலரின் கணிப்பு. அ.தி.மு.க பிளந்து பல்லிளித்துக் கொண்டிருக்கையில் மக்கள் கவனம் கட்டுக்கோப்பான தி.மு.க பக்கம் திரும்பும் என்பதே பொதுவாக எதிர்பார்ப்பு, தி.மு.க சிறந்த தெரிவு இல்லை என்றாலும் வேறு வழி, தமிழ் வாக்காளனுக்கு இல்லை. மேலும் எத்தனை வாக்காளர்கள் நோட்டாவுக்கு (எவருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை) வாக்களித்திருக்கிறார்கள் என்பது முக்கியம். குஜராத் தேர்தலில் 5.1 லட்சம் வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களித்திருந்தார்கள். காங்கிரஸுக்கும் பா.ஜ.கவுக்கும் வாக்களிக்காமல் இவ்வளவு பெருந்தொகையான வாக்களர்கள் நோட்டாவுக்கு வாக்களித்திருக்கிறார்களே என்பது அக் கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்திருக்கும்!

மருது கணேஷ் தோல்வி அடைவாரானாலும் அது. தி.மு.கவுக்கு பெருந்தோல்வி என்று கருதுவதற்கு இல்லைதான். ஏனெனில் அத் தொகுதியில் கடும் போட்டி இடம்பெறுவது இரு அ.தி.மு.க அணிகளுக்கு இடையேதான். மேலும் அது அ.தி.மு.வின் கோட்டை அம்மா இரண்டு தடவைகள் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியும் கூட. இவ்விரு அ.தி.மு.க அணிகளும் போட்டி போடுவது, அம்மா தொகுதி என்ற முத்திரை மோதிரத்தை ‘எடுத்து’ அணிந்து கொண்டால் அது தமக்கு மக்கள் தந்த முத்திரையாக அமையும் என்று கருதுவதனால் தான். இத் தொகுதியில் தி.மு.க அடையக் கூடிய வெற்றியானது, அதன் அடுத்த வெற்றிப் பயணத்துக்கான தொடக்கப் புள்ளியாக மட்டுமே அமையும். கழகத்துக்கு அது ஒரு புது உத்தேவகத்தை அளிக்கும். அவ்வளவுதான். ஒரு சட்ட மன்றத்தேர்தலில் தி.மு.க.வுக்குக் கிடைக்கக் கூடிய வெற்றி வாய்ப்புகளையும் ஆர்.கே.நகர் வெற்றி தோல்வியையும் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது. ஆனால், தி.மு.கவின் தோல்வியோ வெற்றியோ, அது எவ்வளவு கௌரவமாவது என்பதே முக்கியம். ஆர்.கே.யில் ஒரு படுதோல்வி, ஸ்டாலினுக்கு மோசமான பாதிப்பாகவே அமையும், மிகச் சிறிய பெரும்பான்மையுடனான வெற்றியும் சிலாகிக்கக் கூடியதாக இருக்காது.

ஆனால் தி.மு.க பெருமை பட்டுக்கொள்ளவும், அரசியல் ரீதியான ஒரு பாய்ச்சலை மேற்கொள்ளவும் இப்போது அதற்கு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. அதுதான், 2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அ. ராசாவும் கலைஞரின் மகள் கனிமொழியும் ஏனைய 14 பேரும் எந்த நிபந்தனையுமின்றி குற்றமறறவர்களாக விடுதலை செய்யப்பட்டிருப்பதாகும். ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை கருணாநிதி குடும்பத்தை நேரடியாகக் குறிவைத்திருந்தது. இந்த அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து 26 ஆறாயிரம் கோடி வரைக்கும் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் இந்த ஊழலில் இலஞ்சமாகப் பெறப்பட பணத்தின் ஒரு பகுதி கலைஞர் டி.வி.க்கு கடன் வழங்குதல் என்ற போர்வையில் வந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாகவே, கலைஞர் டி.வியின் இயக்குநர் என்ற வகையில் கனிமொழி சிறை செல்ல வேண்டியதாயற்று. அதன் இன்னொரு இயக்குநரான கலைஞரின் துணைவியார் தயாளு அம்மாளும் கைதாகி சிறையில் தள்ளப்படலாம் என்ற சூழ்நிலையும் உருவாகி இருந்தது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த வேளையில், அந்த காஸ்கிரஸ் அரசின் பங்காளிக்கட்சியான தி.மு.க அச்சமயத்தில் தமிழகத்திலும் ஆட்சியில் இருந்தது. தமிழக முதல்வரின் மனைவியையே குறிவைத்த இந்த வழக்கு, எழுபதுகளில் கலைஞர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளையும் சர்க்காரியா விசாரணை கமிஷனையும் மறுபடி நினைவுபடுத்துவதாக இருந்தது. மேலும், தி.மு.க.வை. ஊழலில் தோய்ந்த கட்சியாக இவ்வழக்கு மீளுறுதி செய்தது.

தி.மு.கவின் செல்வாக்கில் கறைபடியச் செய்த இந்த வழக்கு, அ.தி.மு.கவின் அமோக வெற்றிகளுக்கு வழி செய்தது. முழு இந்தியாவிலும் காங்கிரஸின் செல்வாக்குக்கு சாட்டையடியாகவும் அமைந்து, பா.ஜ.கவின் வெற்றிக்கு வழி வகுக்கவும் செய்தது.

மத்திய அரசின் தொலைத்தொடர்புகள் அமைச்சர் என்ற வகையில் பிரதான சந்தேக நபராக தி.மு.கவின் அ.ராசா வழக்கில குறிப்பிடப்பட்டு, திஹார் சிறையில் தள்ளப்பட்டார். இந்தியாவின் மிகப்பெரும் ஊழலாக ஊடகங்களினால் வர்ணிக்கப்பட்ட இந்த ஸ்பெக்ட்ரம் 2ஜி வழக்கு, ஒரு சமயம் பிரதமர் மன்மோகன் சிங் மீதும் பாய்ந்தது. அவர் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரின.

காங்கிரசுக்கும் தி.மு.கவுக்கும் பெருங்களங்கத்தை ஏற்படுத்திய இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 21 ஆம் திகதி வெளியானது. சி.பி.ஜ. சிறப்பு நீதிமன்ற நீதியரசர் ஓ.பி. ஷைனி கண்டிப்புக்கு பெயர் போனவர். அவரது தீர்ப்பு, 16 பேரையும் வழக்கில் இருந்து நிரபராதிகளாக விடுவித்ததோடு, இவர்கள் குற்றம் புரிந்ததை நிரூபிப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தது.

அவ்வாறானால் மத்தியில் காங்கிரசும் மாநிலத்தில் தி.மு.கவும் ஆட்சியில் இருந்த சமயத்திலேயே மத்திய அரசின் ஒரு புலனாய்வு நிறுவனமான சி.பி.ஜயும் அமலாக்கல் பிரிவும் இணைந்து அரசாங்கத்துக்கு எதிரான ஒரு மிகப் பெரும் சதியை கட்டமைத்து அதை உண்மைபோன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கி பூதாகரமாக உலவ விட்டதா? என்ற கேள்வி இங்கு எழுகிறது.

இந்த வழக்கு ராசா, கனிமொழிக்கு சாதகமாக அமையும் என்பதற்கு, சில மாதங்களுக்கு முன்னரேயே தெரிந்துவிட்டது. இதேபோன்ற ஒரு அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கு முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் மீதும் அவர் சகோதரர் கலாநிதி மாறன் மீதும் தொடுக்கப்பட்டிருந்தது. இருவரும் கைது செய்யப்படலாம் என்ற நிலையும் காணப்பட்டது. ஒரு பக்கம் கலைஞர் குடும்பத்தின் மீதும் மறு பக்கம் முரசொலி மாறன் குடும்பத்தின் மீதும் தொடுக்கப்பட்ட இந்த வழக்குகள் தி.மு.கவின் பலத்தை அசைத்துப் பார்த்தது. இதை மறைந்த ஜெயலலிதா நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார். மாறன்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த விசேட டில்லி நீதிமன்றம் இருவரையும் குற்றமற்றவர்களாகக் கண்டு விடுதலை செய்தது. எனவே 2ஜி வழக்கும் இதே பாணியிலேயே பயணிக்கும் என்று சென்னை வழக்கு மன்ற வட்டாரத்தில் ஒரு உறுதியான கருத்து நிலவி வந்தது.

ஆர்.கே.நகர் தொகுதிக்கான வாக்களிப்பு நடைபெற்ற தினத்தன்றே ஒ.பி ஷைனியின் தீர்ப்பும் வெளியானதில் தி.மு.கவுக்கு மகிழ்ச்சி. இது, இரட்டை மகிழ்ச்சியாக மாறுமா என்பது இன்று தெரிந்துவிடும்.

தீர்ப்பு வெளியான பின்னர் கருத்து வெளியிட்ட ராசாவும் சரி, கனிமொழியும் சரி, இந்த வழக்கை யோசித்து, கட்டமைத்து ஒரு பூதமாக உருவாக்கி திஹார் ஜெயிலில் அடைக்கும் வரை இவ்வளவையும் முன் நின்று செய்த அந்த சூத்திரதாரி யார் அல்லது எந்த அமைப்பைக் சேர்ந்தவர்கள் என்ற விவரத்தை வெளியே சொல்லவே இல்லை என்பது எமது புருவத்தை உயர்த்துகிறது. ஸ்டாலினும், பின்னணியில் நின்றவர்கள் யார் என்பது குறித்து எதுவும் தெரிவி்க்கவில்லை. புதுடில்லியில் ஒரு ஊடகத்துக்கு பேட்டியளித்த தி.மு.கவின் துரைமுருகனும் இக் கேள்விக்கு நேரிடையாக பதில் அளிக்காமல், ‘யாராக இருந்தாலும் அவர்கள் பேடிகள்’ என்ற வார்த்தையாடலுடன் நிறுத்திக்கொண்டார்.

ஏன் சூத்திரதாரிகள் பற்றி, குற்றமற்றவர்கள் என வெளிவந்த பின்னரும், பேச மறுக்கிறார்கள்? இந்த வழக்கை தொடுத்தவர் சுப்பிரணியம் சுவாமி, முன்னெடுத்துச் சென்றவர் அமலாக்கல் (CAB) பிரிவின் தலைவரான வினோத் ராய். இந்த வழக்கால் பயன் அடைந்த கட்சிகள் அ.தி.மு.க, தமிழகத்தில் என்றால் பா.ஜ.க முழு இந்தியாவிலும். தீர்ப்பு வெளியானதும் இவ்வழக்கு மேன்முறையீடு செய்யப்படும் என்கிறார் பா.ஜ.கவின் தலைவர் அமித்ஷா. மோடியோ மௌனம் காக்கிறார். ஏன் தி.மு.க கொதித்தெழ மாட்டேன் என்கிறது?

அடுத்து வரவுள்ள சட்ட மன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் தி.மு.க கூட்டணி வைத்துக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் இருப்பதால்தான் அடக்கி வாசிக்கிறாரா செயல் தலைவர் ஸ்டாலின்? 

அருள் சத்தியநாதன் 
 

Comments