தினகரனின் வெற்றியும் விளைவுகளும் | தினகரன் வாரமஞ்சரி

தினகரனின் வெற்றியும் விளைவுகளும்

அருள் சத்தியநாதன்

 ஆர்.கே. நகரில் குக்கர் சின்னத்தில் சகல பின்னடைவுகள், சூழ்ச்சிகள், எதிர்ப்புகள் என பல பலவீனங்களுக்கும் சாதகமற்ற தன்மைகளுக்கும் மத்தியில் டி.டி.வி தினகரன் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றிருப்பது சாதனையாக பார்க்கப்பட வேண்டிய ஒன்றுதான்.

மத்திய மாநில அரசுகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி, எம்.ஜி.ஆரின் இரட்டை இலைச் சின்னமுமின்றி தினகரன் 89ஆயிரத்து 13 வாக்குகள் பெற்றிருக்கிறார். அவரை எதிர்த்த மதுசூதனன் சாமானியர் அல்ல. அ.தி.மு.க வின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவர். தொகுதிக்காரர் மாநிலமறிந்த பெயர். இரட்டை இலைச் சின்னம் என்ற விளம்பரம். இத்தனை தகுதி கொண்ட மதுசூதனனை 40 ஆயிரத்து 707 அதிகப்படி வாக்குகளால் தோற்கடித்துள்ளார் தினகரன். மதுசூதனன் பெற்ற மொத்த வாக்குகளே 48 ஆயிரத்து 306 வாக்குகள்தான்!

இந்தத் தேர்தலில் தி.மு.க வின் மருது கணேஷ் 24, 651 வாக்குகள் பெற்று கட்டுப்பணத்தையே இழந்திருக்கிறார். ஆனால் தமிழகம் முழுவதும் தினகரன் அலைதான் வீசுகிறது என்றோ, தி.மு.கவுக்கு பின்னடைவான நிலைதான் காணப்படுகிறது என்றோ, தினகரனின் இந்த வெற்றியை வைத்து நாம் கணக்குபோட முடியாது. ஆர்.கே.நகர் சூழல் வேறு தமிழக அரசியல் சூழல் வேறு.

ஆர்.கே.நகர் என்றைக்கும் அ.தி.மு.க. தொகுதிதான். அது ஒரு பாதுகாப்பான தொகுதி என்பதால்தான் சிறை சென்று வந்த ஜெயலலிதா இத் தொகுதியில் போட்டியிட முன்வந்தார். எனவே பிளவுபட்ட அ.தி.மு.க.வில் எந்த அ.தி.மு.க.வை உண்மையான அ.தி.மு.க.வாக ஏற்றுக் கொள்வது என்பதுதான் ஆர்.கே. நகரின் வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டியிருந்தது. அந்தத் தீர்மானம் இப்போது வெளிப்பட்டிருக்கிறது என்றுதான் இத்தேர்தல் முடிவை எடுத்துக் கொள்ளவேண்டும். அதாவது, இத் தேர்தல் முடிவு தி.மு.கவுக்கு தோல்வியோ பின்னடைவோ அல்ல. பன்னீர் -எடப்பாடிகளின் அ.தி.மு.கவுக்கும் அவர்கள் நடத்தும் ஆட்சிக்கும் கிடைத்திருக்கும் படு தோல்வியாகவே இது பார்க்கப்பட வேண்டும்.

வயதான நிலையில் உடல் தளர்ந்திருக்கும் கலைஞர் கருணாநிதி காலமாகி அவரது திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது என்று எடுத்துக் கொள்வோம். தி.மு.க அப்போது அழகிரி அணி, ஸ்டாலின் அணி எனப் பிளவுபட்டு தேர்தலில் களமிறங்கினால் அவ்விரு அணிகளில் ஒன்றைத் தெரிவு செய்வதில்தான் திருவாரூர் வாக்காளர்கள் கவனம் செலுத்துவார்களே தவிர அங்கே போட்டியிடக் கூடிய அ.தி.மு.க வேட்பாளர் மீது அவர்கள் கவனம் திரும்பாது. காரணம் அது தி.மு..கவின் தொகுதி கலைஞர் கருணாநிதியின் தொகுதி. அ.தி.மு.கவுக்கு அங்கே வேலை கிடையாது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை இப்படித்தான் பார்க்க வேண்டும். அத் தொகுதி வாக்காளர்கள் இந்த இடைத்தேர்தலை இப்படித்தான் பார்த்திருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர். மறைவின் பின்னர் ஜெயலலிதா அணி, ஜானகி அணி என அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்ததும். இரு அணிகளும் மூர்க்கமாக போட்டி போட்ட போதிலும் இறுதி முடிவு அ.தி.மு.க ஆதரவாளர்களினாலேயே எடுக்கப்பட்டு, ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் வாரிசாக அங்கீகரிக்கப்பட்டார். இப்போது, ஆர்.கே. நகர் இடைத் தேர்தலின் பின்னர் எழுந்திருக்கும் சூழல், ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு தினகரனா? என்பது தான். ஆர்.கே.நகர் வாக்காளர்கள் அப்படித்தான் தீர்மானித்திருக்கிறார்கள். தமிழகமெங்கும் உள்ள அ.தி.மு.க ஆதரவாளர்களின் நிலைப்பாடும் இதுதானா என்று தெரியவில்லை. இதே சமயம், தான் வெற்றிபெறுவது சிரமம் என்பதைப் புரிந்து கொண்ட தி.மு.க ஒரு பலவீனமான வேட்பாளரை நிறுத்தியதாகவும் அதன் முக்கிய நோக்கம் எடப்பாடி – பன்னீர் தரப்புக்கு தோல்வியை ஏற்படுத்துவதாகவே இருந்தது என்றும் அதற்கான உள்ளடி வேலைகளில் தி.மு.க ஈடுபட்டிருந்தது என்றும் கூறப்படுவதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அ.தி.மு.க இந்த இடைத்தேர்தலில் அடைந்திருக்கும் தோல்வி, பன்னீர் - எடப்பாடி தரப்புக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இதே சமயம் இந்த இடைத் தேர்தல் முடிவுகள் சில கேள்விகளையும் எழுப்பி இருக்கிறது. இந்தியாவிலேயே ஒரு இடைத்தேர்தலில் இந்த அளவுக்கு ஊழலும். அதிகார துஷ்பிரயோகங்களும், லஞ்சமும் தலைவிரித்தாடி இருக்குமா என்ற கேள்வி எழும் அளவுக்கு ஆர்.கே. நகரில் முறைகேடுகள் நடந்துள்ளன. தேர்தல் ஆணையம் வெளிப்படையாகவே எடப்பாடி தரப்புக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருந்தது. முன்னர் இந்த இடைத்தேர்தலை இடைநிறுத்துவதற்கு ஒரு அ.தி.மு.க அமைச்சர் வீட்டில் கைப்பற்றப்பட்ட 79 கோடி ரூபா மற்றும் ஆவணங்களை ஒரு காரணமாகக் காட்டிய இந்திய தேர்தல் ஆணையம் அவ்விவகாரம் தொடர்பாக எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது ஒரு சின்ன உதாரணம்.

அடுத்தது, இங்கே நடைபெற்ற பண, பொருள் மழை! அனைவரும் தினகரன் தரப்பு இங்கே வாக்காளர்களுக்கு பணமும் பொருட்களும் வழங்குவதாக குற்றம் சுமத்தினார்கள். ஊடகங்களும் அப்படித்தான். ஆனால் தினகரனுக்கு நிகராக எடப்பாடி தரப்பும் பணத்தை வீசி எறிந்தது. முறைகேடுகளில் ஈடுபட்டது. தி.மு.க பெருமளவில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக செய்தி வெளிவரவில்லை. தான் இங்கே ஒரு போட்டியாளர் அல்ல என்பதை அது முன்னரேயே தெரிந்து வைத்திருந்தது.

தினகரனின் அமோக வெற்றிக்கு அவர் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததே காரணம் என்கிறது அ.தி.மு.க அரசு. ஊடகங்களின் கருத்தும் இதுவாகத்தான் இருக்கிறது. பண மழை பொழிந்தது உண்மையானாலும், தினகரனுக்கு சற்றும் சளைக்காமல் எடப்பாடியார் தரப்பும் பணமழையோடு தன் அரசு அதிகார பலத்தையும் பிரயோகிக்கவே செய்தது. இரு தரப்பிலும் பணம் வாங்கிக் கொண்ட வாக்களார்கள், யார் அதிகம் தந்தார்களோ அவருக்கே வாக்களித்து வெற்றி பெறச் செய்தார்கள் என்று பொத்தாம் பொதுவாக ஒரு வாதத்தை முன்வைப்பது சரியானது அல்ல. அது வாக்காளர்களை ஊழல் பேர்வழிகளாக்கும் முயற்சி. தமிழ்த் தொலைக்காட்சிகள் நடத்திய கருத்துக் கணிப்புகளில், பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்வோம் என்றும் ஏனெனில் அது தமக்குரிய பணம் என்றும் வாக்காளர்கள் தெரிவித்திருந்தார்கள். “எமக்கு வர வேண்டிய பணத்தைத்தான் அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதைத்தான் வாக்கு லஞ்சமாகத் தருகிறார்கள். ஆகவே அதை வாங்கிக் கொண்டு யாருக்கு வாக்களிக்க விரும்புகிறோமோ அவர்களுக்கே வாக்களிப்போம்” என்று அவர்கள் கூறியிருப்பது, வாக்காளர்கள் ஏமாளிகள் அல்ல என்பதையே நிறுவுகிறது. எனவே, பணநாயகமே வெற்றி பெற்றது என்று கூறுவது முற்றிலும் சரி அல்ல. இது, வாக்காளர்களை கொச்சைப்படுத்துகிறது.

தி.மு.க தொடர்ந்து சொல்லி வரும் குற்றச்சாட்டுதான், எடப்பாடி அரசு செயற்பாடற்ற அரசாகவும், ஊழல் ஆட்சியையே தொடர்வதாகவும் மக்கள் கருதுகிறார்கள் என்பதாகும். மக்களுக்கு ஒரு தேர்தலே அவசியம் என்பது எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு. அதையே ஆர்.கே. மக்களும் குக்கருக்கு வாக்களித்திருப்பதன் மூலம் வெளிப்படுத்தி, இருக்கிறார்கள். இந்தத் தேர்தல் ஆர்.கே. நகரில் அல்லாமல் இரு கட்சிகளுக்கும் பொதுவான ஒரு தொகுதியில் நடைபெற்றிருந்தால் ஆளும் அ.தி.மு.கவை எதிர்த்து தி.மு.கவுக்கு சாதகமாக வாக்காளர்கள் வாக்களித்திருக்கக் கூடும். ஆர்.கேவில் பணம் விளையாடி இருக்கலாம். ஆனால் ஓரளவுக்குத்தான். பணத்தை வாங்கிக் கொண்ட வாக்காளர்கள் தமது அ.தி.மு.க அரசுக்கு எதிராகவே வாக்களித்திருக்கிறார்கள் என்பதே சரியான கணிப்பு.

தினகரன், தனக்கு எதிரான சகல எதிர்ப்புகளையும் தன் சிரித்த முகத்துடன் எதிர் கொண்டு வெற்றி பெற்றிருப்பது, ஜெயலலிதாவை நினைவுபடுத்துகிறது. அ.தி.மு.கவில் தனக்கு எதிராகக் கிளம்பிய பலம் வாய்ந்த அணியை அவர் தோல்வியடையச் செய்தார். அவர் ஊழல், முறைகேடுகளில் ஈடுபட்டது நீதிமன்றத் தீர்ப்பில் உறுதியான பின்னரும் மக்கள் மன்றத்தில் அது குற்றமாகக் கருதப்பட வில்லை அவரைத் தம் தலைவியாகவே ஏற்றுக் கொண்டார்கள். எனினும், மக்கள் அவரை ஏற்றிப் போற்றினாலும், குற்றவாளி எனத் தீர்க்கப்பட்டமை அவரை மன, உடல் ரீதியாகவும் நலிவுறச் செய்து அவர் வாழ்வை முடிவுக்குக் கொண்டு வந்தது.

தினகரனுக்கு ஆர்.கே.நகர் வாக்காளர்கள் அறிந்திருக்கும் பேராதரவை சசிகலாவுக்கு அளிக்கப்பட்டிருக்கும் அங்கீகாரமாக எடுத்துக்கொள்ளமுடியாது. ஒரு சட்டசபைத் தேர்தல் நடைபெற்றால்தான் சசிகலாவின் மக்கள் செல்வாக்கைக் கணிக்கலாம். இந்த இடைத்தேர்தல் வெற்றி நிச்சயமாக தினகரனுக்கு செல்வாக்கு வளர்ச்சியை தந்திருக்கிறது. உண்மையான அ.தி.மு.க தனது அணியே என்றும் அ.தி.மு.கவுக்கு தலைமை தாங்கும் தகுதி தனக்கு உண்டு என்றும் அவர் நிரூபித்திருக்கிறார். அடுத்து வரும் நாட்களில் எடப்பாடி அணியைச் சேர்ந்த பின் வரிசை சட்டசபை உறுப்பினர்கள் தினகரன் பக்கம் சாய்வதற்கு வாய்ப்பு உண்டு. ஜெயலலிதாவும் இப்படித்தான் தன் மக்கள் செல்வாக்கை நிலை நாட்டியதன் மூலமே அ.தி.மு.கவை முழுமையாகத்தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இதே சமயம், அ.தி.மு.கவில் இருந்து எடப்பாடி – பன்னீர் இருவரையும் தினகரன் ஓரம் கட்டும்வரை அவருக்கு தி.மு.கவின் மறைமுக ஆதரவு இருந்து வரும். தினகரன், எடப்பாடி – பன்னீர் தரப்பினரை எவ்வளவுக்கு எதிர்க்கிறாரோ அதே அளவுக்கு பா.ஜ.கவையும் எதிர்க்கிறார் என்பது தி.மு.கவுக்கு சாதகமான அம்சம்.

இத்தேர்தலின் பின்னரும் மோடி அரசு, ஆளும் அ.தி.மு.கவுக்கு தன் ஆதரவைத் தொடருமா அல்லது தி.மு.கவுடனோ அல்லது தினகரனுடனோ தோழமை கொள்ள விரும்புமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Comments