![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2018/01/07/w0.jpg?itok=_MGaUJ51)
விளையாட்டினை இராஜதந்திரமாக பயன்படுத்தும் மரபு உலக நாடுகளின் தலைவர்களிடம் காணப்படும் சிறப்பான அரசியலாக பார்க்கப்படுகிறது. 1970 களில் சீனா அமெரிக்கா உறவை ஏற்படுத்துவதில் விளையாட்டே பிரதானமாய் அமைந்தது. அதனை Ping – Pong இராஜதந்திரம் என அழைத்தனர். அத்தகைய ஒரு இராஜதந்திர நகர்வு கொரியத் தலைவர்களிடையே நிகழ ஆரம்பித்துள்ளது. இதன் அரசியலை தேடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
வடகொரியா மீது அமெரிக்க போர் உத்தியை சரிவர சாத்தியப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது என இதே பந்தியில் பல தடவை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அத்தகைய புரிதலுடன் மேலும் ஒரு பின்னடைவை அமெரிக்க கூட்டணி கடந்த வாரம் எதிர் கொண்டது. ஐ.நா வின் தடையை மீறி சீனா, வடகொரியாவுக்கு எண்ணெய் பரிமாற்றம் செய்தமையை கடந்த ஒக்டோபர் (2017) முதல் அமெரிக்க உளவுத்துறையின் செயற்கைக் கோள் 30 தடவைக்கு மேல் படம் பிடித்துள்ளதாக தென்கொரிய ஊடகம் தகவல் தந்துள்ளது. நேரடி யுத்தத்தினை விட ஊடக யுத்தமே அபாயமானது. காரணம் இத்தகைய குற்றச்சாட்டினை சீனாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சென் யாங் மறுத்துள்ளார். அத்தகைய தகவல் முழுவதும் பொய்யானது என குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா வின் தீர்மானத்திற்கு ஆதரவாக செயற்பட்ட சீனா 90 சதவீதமாக வடகொரியாவுக்கான எண்ணெய்யை மட்டுப்படுத்தும் வரையறைக்கும் சீனா ஆதரவளித்துள்ளது. சீனாவின் கொள்கலன் மூலம் கடலில் உள்ள வடகொரிய கப்பல்களுக்கு எண்ணெய் விநியோகிக்கப்படும் காட்சிகளை ஆதாரமாக கொண்டு தென்கொாிய ஊடகங்களே அவ்வகை செய்திகளை வெளியிட்டுள்ளன. அது மட்டுமன்றி வடகொரியாவின் நான்கு கப்பல்கள் எந்தத் துறைமுகத்திலும் தரித்து நிற்கமுடியாத தடை உத்தரவையும் ஐ.நா விதித்துள்ளது.
இதில் இரு தரப்புக்குமே அதிகமான நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. அமெரிக்க கூட்டணியின் நீண்ட நாள் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. டுவிட்டரில் ட்ரம்ப் குறிப்பிடும் போது சீனா கையும் களவுமாக பிடிபட்டது என தெரிவித்துள்ளார். ஆனால் இது உணர்த்தும் செய்தி அமெரிக்காவுக்கு எச்சிக்கையானதாகும். சீனாவின் பின்புலத்திலேயே வடகொரியா செயற்படுவதால் அதன் புவிசார் அரசியல் பலத்தை தவறாக கணக்குப்போடுவது அமெரிக்காவுக்கு ஆபத்தானதேயாகும். சீனாவின் எல்லைக்குள் அமெரிக்காவின் ஆதிக்கம் வளர்வதனை சீனா ஒரு போதும் அனுமதிக்காது என்பதையும் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.
அவ்வாறே வடகொரியா எல்லை ஊடாக அனைத்து வடகொரியத் தேவையையும் நிறைவு செய்யும் வலிமை சீனாவுக்குண்டு. அது கடலில் வைத்து எண்ணெய்யை பரிமாற்றம் செய்ய வேண்டும் என்பதன் அவசியப்பாடு விளங்கிக் கொள்ள முடியாதுள்ளது. தகவல் எதிரி நாட்டுக்கு சரிவரப் பரிமாற்றப்பட வேண்டும் என்ற நோக்கமோ அல்லது எண்ணெய்யை இலகுவாக அவ்வாறு தான் பரிமாற்ற முடியுமென்பதோ அல்லது சீன பாதுகாப்பு அமைச்சின் தொடர்பாளர் குறிப்பிடுவது போல் பொய்யான தகவலாக கூட அமையலாம். எதுவாயினும் இது அமெரிக்க கூட்டணிக்கு நெருக்கடியான செய்தியே.
இத்தகைய சூழலை கையாளும் தன்மையில் எழுந்ததே குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான அழைப்பு. 2018 இல் தென்கொரியாவில் குளிர் கால ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ள நிலையில் வடகொரியாவை பங்கேற்க வைப்பதற்கான உயர்மட்ட பேச்சுக்களை நடத்த தென்கொரியா அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ள போட்டியில் வடகொரியா தனது அணியை அனுப்புவது பற்றிய பரிசீலனையை ஜனாதிபதி ஹிம் உன் முன்வைத்திருந்த செய்தியை அடுத்தே இவ்வழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பதற்றமான உறவை சுமூகமாக மாற்றுவதற்கு உதவும் வாய்ப்பாக இது அமையும் என தென்கொரிய ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இரு நாட்டுப் பிரதிநிதிகளும் சமாதான கிராமமென அழைக்கப்படும் பன்முன் ஜோமில் சந்திக்கவுள்ளதாக தெரிவித்தார். ஜோமில்லே கொரியர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுக்களை கடந்த காலத்தில் நடாத்தியுள்ளனர். இது இருநாட்டுக்குமான எல்லையோரக் கிராமமாகும்.
தென்கொரியாவின் நல்லிணக்க அமைச்சர் சோ மியுங் இயான் போட்டியாளர் பற்றி உறையாடுவதுடன் கொரியாக்களின் உறவுகளை முன்னேற்றுவதற்கான பேச்சு வார்த்தையாக அமையுமென குறிப்பிட்டுள்ளார்.
இருநாட்டுக்குமான நிறுத்தப்பட்டிருந்த தொலைபேசியுரையாடலை மீண்டும் தென்கொரிய, வடகொரிய தலைவர்கள் ஆரம்பித்துள்ளனர். 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் மீள ஆரம்பிப்பதில் முனைப்பாகவுள்ள இரு நாட்டு தலைவர்களும் கொரியப்பிராந்தியத்தை அமைதியான பிராந்தியமாக மாற்ற உதவுவார்கள் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இராஜதந்திர உரையாடல்கள் எப்போது அரசுகளிடையே சுமூகத்தன்மையையும் தெளிவான அமைதியான போக்கையும் சாத்தியப்படுத்தும். ஆயுதத்தினால் சாதிக்கமுடியாத அரசியலை இராஜதந்திரம் சாதித்துவிடும் என்பது நினைவுகூரத்தக்கது. இத்தகைய இராஜதந்திர உரையாடலுக்குப்பின்னால் இரு தரப்பின் மீதான அரசியல் அழுத்தங்களும் சமகால நிர்ணயங்களும் காரணமாக அமைந்தன எனக் கொள்ள முடியும். வடகொரியத் தலைவர் திரும்பத் திரும்ப அமெரிக்க இராணுவ பலத்துக்கு சமமாக வளர்ச்சியடைவதே தமது நோக்கம் என்கிறார்.அது சாத்தியமானதோ இல்லையோ என்பதல்ல முக்கியமானது. ஒரு நாடு அத்தகைய முயற்சியில் ஈடுபடத் தயாராகிவிட்டதொன்பதே சரியான மதிப்பீடாகும்.
தென்கொரியத் தலைமைக்ேகா வடகொரியாவை அழிப்பதல்ல நோக்கம்.மாறாக ஒரு சுமூகத்தன்மையை நோக்கி நகர்த்துவதாகவும் மிகத் தந்திரமான தலைமையாகவும் விளங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. ஆனால் வடகொரியாவுடன் மோதுவதற்கு தென்கொரியத் தலைமை விரும்பவில்லை எனபதை அதன் அறிக்கைகளில் இருந்தும் பேச்சுக்களில் இருந்தும் காணக்கூடிய தாகவுள்ளது.
இதனை குழப்புவதிலும் நெருக்கடியை பூதாகரமாக்கியதிலும் அமெரிக்க ஜனாதிபதிக்கே அதிக பங்கிருந்தது. தற்போது கூட அவரது டுவிட்டர் தகவல் வடகொரியாவை மிரட்டுவதாக அமைந்துள்ளது. வடகொரியத் தலைமைக்கு சற்று கீழ் நிலையிலேயே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்ன் தலைமைத்துவம் அமைத்துள்ளது.
பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியே சீனாவின் புதிய முகத்தை உலகத்திற்கு காட்டியது. அவ்வாறே சீனா அமெரிக்க உறவுக்கும் விளையாட்டே வித்திட்டது. உலகம் முழுவதும் இராஜதந்திரத்தை பிரயோகித்து நாடுகளின் கொள்கைகளும் இலக்குகளும் அடையாளப்படுத்தப்படுகிறது. அவ்வகையான தந்திரமிக்க ஒன்றாக குளிர்கால ஒலிம்பிக் போட்டி வட-, தென்கொரியாக்களிடையே காணப்படப்போகின்றமையை உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றது. இது விளையாட்டு மட்டுமல்ல.அரசியலும் இராஜதந்திரமும் கலந்த விளையாட்டு அரசியலாகும். இதன் வெற்றியே கொரியப்பிராந்தியத்தின் நிலைத்திருப்பிற்கு காரணமாக அமையும்.