![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2018/01/14/w0.jpg?itok=9V8pgkTu)
ஈரானில் நிகழ்ந்து வரும் அரச எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்ந்தும் எழுச்சி பெற உதவுகிறதா அமெரிக்கா என்ற சந்தேகம் நியாயமானதாக மாறியுள்ளது. பொதுவாக மேற்காசியாவில் அமெரிக்கா அடைந்துவரும் நெருக்கடியைத் தீர்க்கவும் 1979 இல் வாங்கிய அடிக்கு பதிலளிக்கவும் முயலுகிறது. இக்கட்டுரை ஈரான் அரசியலும் அமெரிக்காவின் போக்கும்பற்றிய் தேடலை நோக்கமாகக் கொண்டது.
ஈரானில் நிகழ்ந்து வரும் அரசு எதிர்ப்பு போராட்டங்கள் குறித்து விவாதிப்பதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பில் பாதுகாப்பு சபையை அமெரிக்கா கூட்டியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இதனை ரஷ்யா எதிர்த்து விமர்சனம் செய்ததுடன் ஐ.நா சபையின் கெளரவத்தினை சிதைப்பதாக அமைந்துள்ளது என்றும் உள்நாட்டு விவகாரங்களில் பாதுகாப்பு சபையை ஈடுபடுத்துவது மிக மோசமானது எனவும் ரஷ்யா தெரிவித்திருந்தமை குறிப்பிடத் தக்கதாகும். ஆனாலும் கூட்டம் அமெரிக்காவால் நடாத்தப்பட்டது.
விலை ஏற்றமும் வேலையின்மையும் ஆரம்ப நிலையில் கிளர்ச்சி அடங்கிய பொருளாதாரம் காரணமாகவுள்ளதென கூறப்படுகின்றது அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுபடுத்த முடியாத அரசு மீது இளைஞர்கள் கிளர்ந்தெழுந்ததாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன ஏறக் குறைய இதுவரை 28 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்ததாகவும் கிளர்ச்சிகள் ஈரானிய நகரங்களை நோக்கி விரிவடைவதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. இதனை தடுத்து நிறுத்துவதற்கு ஈரானிய அரசாங்கம் பாரிய முயற்சிகள் எதிலும் இறங்கவில்லை என்றே கூறலாம். சாதாரண அளவில் பொலிஸாரைக் கொண்டு கிளர்ச்சிகள் பொது சொத்துக்களை சேதம் விளைவிக்காது பார்த்துக் கொள்கிறது. அத்தகைய நடவடிக்கையின் போதே மேற்படி எண்ணிக்கையானவர் கொல்லப்பட்டனர்
ஈரானின் இளைஞர்களது எழுச்சி சிரியாவில் தடுத்து நிறுத்தப்பட்ட அரபு வசந்தத்தின் தொடர்ச்சியா என்ற கேள்வி இயல்பானது. காரணம் அமெரிக்கா உட்பட மேற்குலகம் ஈரான் மீது அளவு கடந்த ஆத்திரமும் வெறுப்பும் கொண்டுள்ளன. அரபு வசந்தத்தின் எந்த நடவடிக்கையையும் ஈரானுக்குள் மேற்கொள்ள முடியாத நெருக்கடியினை அமெரிக்கா எதிர்கொண்டிருந்தது.
இதனைவிட ஈரானின் அணுவாயுதம் பற்றிய நிலைப்பாட்டில் ட்ரம்ப் எடுத்துள்ள முடிவுகள் ஒபாமா நிர்வாகத்துகத்திற்கு முரணானது மட்டுமன்றி ஈரானுக்கு எதிரானதாகவும் உள்ளது. அதுமட்டுமன்றி ஈரானின் நெருக்கமான நட்புறவு கொண்டுள்ள நாடுகள் வரிசையில் ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் விளங்குகின்றன. ஈரானின் கொள்கைகளால் முழு அரபுலகத்தினையும் தமது கட்டுபாட்டில் வைத்துக் கொள்ள முடியாத துயரமும் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளது.
ஈரான், சிரியா போன்ற நாடுகளின் ரஷ்யா-, சீன சார்பு நடவடிக்கையானது இஸ்ரேலின் ஆதிக்கத்திற்கும் இருப்பிற்கும் ஆபத்தானதாக அமைந்துள்ளது. ஈரானின் கொள்கைக்கு எதிரான இஸ்ரேல் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்தில் சிரியா இராணுவ முகாம் மீது கடந்த வருடம் (2017) தாக்குதல் நிகழ்த்தியதும் குறிப்பிடத்தக்கதாகும்.
ஈரான் இராணுவ மற்றும் ஆயுத தளபாடங்களை பெறும் நோக்கிலும் இராணுவ பயிற்சிக்கான ஒத்துழைப்பினை பெறும் நோக்கிலும் ரஷ்யா, சீனாவுடன் இராணுவ உடன்படிக்கைகளை இரகசியமாக மேற்கொண்டுள்ளது. அதுமட்டுமன்றி அணு ஆயுதம் தொடர்பாக அமெரிக்க நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு பதில் அளிக்கும் ஈரான் அணு ஆயுத உடன்பாட்டிலிருந்து சுயாதீனமாக வெளியேறப் போவதாக எச்சரித்திருந்தது.
இவற்றை அவதானிக்கும் போது ஈரானில் நிகழ்பவை அமெரிக்காவினால் அரபு நாடுகளில் நிகழ்த்தப்படும் புரட்சியின் தொடர்ச்சியாகவே கொள்ள வேண்டியுள்ளது. அரபு புரட்சிகள் சமூக வலைத்தளங்களாலும் சிறிய சம்பவங்களாலும் கட்டி வளர்க்கப்பட்டவையாகவே கடந்த கால அனுபவங்கள் உணர்த்துகின்றன. மேற்காசியாவில் இந்த மாதிரியான உபாயங்களுக் கூடாகவே அரபு புரட்சி பரவலானது என்பது கவனத்திற்குரியது.
இதனைக் கடந்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் டுவிட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்ட செய்திகளின் அர்த்தமும் அத்தகைய சந்தேகத்தினை வலிமையாக்குகின்றது. அதாவது ஈரான் பயங்கரவாதத்திற்கு அதிக நிதியை வழங்குவதாலும் ஊழலாலும் கொதிப்படைந்த மக்களின் உரிமை போராட்டத்தை தடுப்பது வேடிக்கையானது. இதனை உலகம் பார்த்துக் கொண்டு இருக்கிறது. மக்களுக்கு போராடும் உரிமை உண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனை அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சகமும் அமைதியான முறையில் ஊர்வலம் செய்பவர்களை கைது செய்யும் அரசின் நடவடிக்கையினை கண்டிப்பதாகவும் ஈரான் மக்களின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்கு உரிமை போராட்டத்திற்கு உலக நாடுகள் வேறுபாடின்றி ஆதரிக்க வேண்டுமென்று அறிக்கை வெளியிட்டது.
இங்கே கவனிக்க வேண்டிய விடயம் எதுவெனில் ஊழல் பொருளாதார நெருக்கடிக்காக உலகத்தில் பல நாடுகளில் கிளர்ச்சிகளும் பகிஸ்கரிப்புகளும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அமெரிக்காவில் கூட கடந்த இரண்டு வருடங்களாக ட்ரம்புக்கு எதிராகவும் அவரது பொருளாதார கொள்கைக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்கின்றன. இவற்றுக்காக எந்ந விதமான நடவடிக்கையும் ஐ.நா சபை எடுக்காத நிலையில் குறைந்தது பொதுச் சபையில் கூட விவாதிக்காத நிலை காணப்படும் போது ஈரான் விடயத்தினை மட்டும் ஐ.நா பாதுகாப்பு சபையில் விவாதிப்பதன் உண்மைத் தன்மை விளங்கக் கூடியதொன்றே. அமெரிக்கா வெளிப்படையாக ஈரானிய கிளர்ச்சியையே ஆதரிக்கின்றது. பாதுகாப்பு சபையில் விவாதிக்கப்பட கூடிய விடயங்கள் என ஐ.நா சபை பட்டியலிட்டுள்ள விடயங்கள் எதிலும் ஈரான் விடயம் இல்லை என்றே கூறலாம் அத்தகைய விடயம் உலகத்திற்கு ஆபத்தானதாாக அமைய கூடியதுமில்லை. அப்படி இருக்கும் போது அமெரிக்கா எடுத்து வரும் நடவடிக்கைகள் ஈரானிய அரசுக்கு எதிரானதாகவே உள்ளது
ஈராக்கைப் போன்றும் மேற்காசியா போன்றும் ஈரானை ஆக்குவதே அமெரிக்காவின் நோக்கமாகும. மேற்காசியாவின் இராச்சியம் என்று அழைக்கபப்டும் ஈரானின் இருப்பு அழிக்கப்படுவது அமெரிக்கா உட்பட்ட மேற்குலத்தின் உபாயமாக உள்ளது. எண்ணை வளத்தினை சுரண்டுவதற்கும் அதன் ஆதிக்கத்திற்கும் ஈரானின் நடவடிக்கை ஆபத்தானதாக அமையும் என கருதும் அமெரிக்கா மக்களின் கிளர்ச்சியை சரிவர பயன்படத்திட்டமிடுகின்றது.
பிரான்ஸின் ஐ.நாவுக்கான துாதுவர் ஈரானின் நிகழும் சம்பவங்களால் உலக அமைதி பாதிக்கப்பட்டதென கூற முடியாது என்றார். அதனால் ஐ.நாவின் மீதான நடவடிக்கையினை விமர்சித்ததுடன் ஐ.நா மீதான விமர்சனம் தவிர்க்க முடியாதென்றார்.
நிச்சயமாக ஐ.நா.வின் பாதுகாப்பு சபையை கூடுவதற்காக அமெரிக்காவின் அழைப்பு அதன் ஆதிக்க மனோ நிலையை காட்டுகின்றது. அமெரிக்கவே ஐ.நா என்றும் உலகம் என்றும் கருதும் நிலையில் இருந்து அமெரிக்கா மீளவில்லை. அதன் ஆதிக்கத்திற்குள் உலகத்தை வைத்திருக்கும் நடவடிக்கையாகவே ஈரான் விவகாரத்தினை விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.
ஈரான் மீது அதிக நெருக்கடியினை ஏற்படுத்த பல தடவை முயற்ச்சித்த அமெரிக்காவிற்கு அது சாத்தியமாகவில்லை. சில சந்தர்ப்பங்கள் ஒபாமா நிர்வாகத்தில் கிடைத்திருந்தப் போதும் ட்ரம்ப் அதனை வீணடித்திருந்தார். அணுவாயுத உடன்படிக்கை மூலம் ஈரானுக்குள் நுழைய கிடைத்த வாய்ப்பினை ட்ரம்பின் அரசியல் மெத்தனம் வீணடித்தது இதனை மீள ஏற்படுத்தி கொள்ள தவறான அணுகு முறையை தற்போது கையாள ஆரம்பித்திருக்கிறது. இத்தகைய அணுகுமுறை ஐ.நா.வின் தனித்துவத்தை அவமதிப்பதுடன் அதனை தனது அரசியல் தவறுக்காக பயன்படுத்தி முயல்கின்றது அமெரிக்கா. இதனால் ஏற்பட போகும் அரசியல் விபத்தினையும் அமெரிக்காவும் ஐ.நா. சபையும் அனுபவிக்க வேண்டிய நிலை தவிர்க்க முடியாதது.
ஈரான் விவகாரம் சர்வதேச சக்திகளின் அரசியல் வங்குரோத்துதனத்தையே வெளிப்படுத்தி நிற்கின்றன. ஈரான் ஒரு இஸ்லாமிய குடியரசாக விளங்கிய போதும் உலக அரசியலில் அதன் பங்கு மேற்காசியாவிலும் கீழ்திசை நாடுகளிலும் 1979 பின்பு முன் மாதிரியாக பார்க்கப்படுவதுடன் குறிப்பாக ஆதிக்க சக்திகளுக்கு விரோதமான நாடு என்ற தனித்துவத்தையும்பெற்றது. ஐ.நாவில் அமெரிக்காவுக்கான வதிவிட பிரதிநிதி நிக்கி ஹானி உரையாற்றும் போது, ஈரானில் மனித உரிமை மீறப்படுவது பற்றியே குறிப்பிடுகின்றார. அமெரிக்காவினது மனித உரிமை பிரகடனம் எப்படியானது என்பது ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா போன்ற நாடுகளில் கடந்த காலம் முழுவதும் உலகம் தெரிந்துக் கொண்டதே. மீளவும் ஈரானை அபாயமான நிலைக்கு இட்டு செல்வதே அமெரிக்காவின் நோக்கமாகும.
ஈரான் மீதான அமெரிக்காவின் ஆதிக்கம் ஆரம்பித்துள்ளதாகவே தோன்றுகிறது. அரபு வசந்தத்தின் பெயரால் மேற்காசியா அழிக்கப்படுகின்ற வரலாறு தொடரப் போகிறதா அல்லது சிரியா போன்ற நிலை எடுக்கப் போகிறதா என்பதே இன்றுள்ள பிரதான கேள்வியாகும்.