![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2018/01/21/w0.png?itok=uW854utB)
உலக வல்லரசுக்கான போட்டியில் புதிய கட்டத்தினை நோக்கிய நகர்வினை ஐக்கிய அமெரிக்கா உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. வல்லரசு போட்டி என்பது நாடுகளுக்கிடையில் நிலவும் அதிகாரத்தின் உச்ச அளவை பிரயோகிப்பதாக அமைந்திருப்பது பனிப்போர் காலத்தில் காணப்பட்ட குணாம்சம். அத்தகைய போட்டித் தன்மையை நோக்கியதாக அமெரிக்காவின் உத்திகள் காணப்படுகின்றன. விண்வெளியில் சக்தி வாய்ந்த ஆயுதங்களை நிலை நிறுத்துவதற்கான ஐக்கிய அமெரிக்காவின் திட்டமிடலின் போக்கினை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இரண்டாம் உலக யுத்த காலம் சர்வதேச அரசியலில் நில அதிகார கொள்கையையும் கடல் அதிகார கொள்கையையும் மிக முதன்மையானதாக கொண்டிருந்தது.. அவற்றின் ஊடாகவே உலக ஆதிக்கப் போட்டி புவிசார் அரசியலில் பரிமாணத்துக்கு வழிவகுத்தது. மைக்கிண்டரின் இருதய நில அதிகார கொள்கைக்கான பிரகடனம் முன்வைக்கப்பட்ட போது வரலாற்றின் முன் அனுபவம் அவரால் உரையாடப்பட்டது. நெப்போலியன் போனப்பாட் காலத்திலிருந்து இருதய நிலக் கொள்கையை முன்வைக்கும் போது அதன் முக்கியத்துவம் இரண்டாம் உலக யுத்தக் காலப்பகுதியுடன் மட்டுப்பட்டதல்ல என்ற செய்தியை வெளிப்படுத்துகின்றார். அவ்வாறே இன்றும் இருதய நிலக் கொள்கை முடிவுக்குவராத வலிமையான கோட்பாட்டு தளத்தையும் நடைமுறை அர்த்தத்தினையும் கொண்டு இயங்குகின்றது.
மைக்கிண்டரின் இருதய நிலக்கோட்பாட்டை மையப்படுத்தியே கடலதிகார கொள்கையும் அண்டவெளி அதிகார கொள்கையும் வடிவமைக்கப்பட்டது. எந்த அரசு இருதய நிலத்தினை அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றதோ அந்த அரசு உலகத்தை ஆளும் அரசாகும் என்ற இலகுவான விளக்கத்தினை கொடுத்திருந்த அக்கோட்பாடு பிற விளிம்பு நிலம் மையநிலக் கோட்பாட்டுக்கான தனித்துவங்களையும் அதன் மூலம் அக்கோட்பாட்டாளர்கள் முன்வைத்தனர். இதனுடைய வலிமை என்றுமே ரஷ்யாவின் எழுச்சியையும் ரஷ்யா மீதான பிற வல்லரசுகளது போட்டி தன்மையையும் கொண்டு அளவிட முடியாது.
அத்தகைய பரிமாணத்துக்கு அமெரிக்காவின் விண்வெளி திட்டம் 1987 ஆம் ஆண்டு முதன் முதலில் முன்வைத்தது. சோவியத் யூனியனின் பெரஸ்ரொய்க்கா எனும் மறுசீரமைப்பு திட்டத்தை முன்வைக்க நட்சத்திர யுத்தம் எனும் திட்டமே காரணமாக அமைந்தது. நட்சத்திர யுத்தத்திற்கான திட்டமிடலை அமெரிக்கா அறிவித்த போது சோவியத் யூனியனின் பொருளாதார பலம் அதனை எதிர்கொள்ளத் தயாராக இல்லை என்பதை உணர்நத மிகையில் கொப்பச்சேவ் மறுசீரமைப்பு திட்டத்துக்கு வழிவகுத்தார. அதுவே சோவியத் யூனியனின் சிதைவுக்கு பிரதான காரணமாக அமைந்தது.
இரண்டாவது கட்டத்தில் ஜுனியர் புஷ் ஜனாதிபதியாக ஆட்சியில் இருந்த போது அமெரிக்கா தேசிய பாதுகாப்பு ஏவுகனைத் திட்டத்தினை முன்வைத்தது. (National Missile Development) அது ஒற்றை மைய அரசியல் உச்சமாக நிலவிய காலப்பகுதியில் நிகழ்ந்தது. அமெரிக்கா தனி வல்லரசாக வலம் வந்த போது (9/11) செப்ரெம்பர் தாக்குதல் பெரும் அதிர்ச்சியையும் நெருக்கடியையும் அமெரிக்காவுக்கு ஏற்படுத்தியது. அத்தகைய தாக்குதல்களை எதிர்கொள்ள ஏவுகணை பாதுகாப்பு அவசியமானதென கருதியது. அதனை உக்ரேனில் நிலை நிறுத்த எடுத்த முயற்சியை விளாடிமிர் புட்டின் தலைமையிலான ரஷ்யா முறியடித்தது. அதன் பின்பான அமெரிக்க நகர்வுகள் அதிக நெருக்கடிக்குள்ளான போதே அமெரிக்கா மீண்டுமொரு அண்டவெளி அதிகார கொள்கையைப் பிரகடனமாக முன்வைத்துள்ளது. இதனை ரஷ்யா நிராகரிப்பதும் அதில் சீனாவும் இணைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும.
அமெரிக்காவின் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக விண்வெளியில் ஏவுகணை மற்றும் சக்தி வாய்ந்த நவீன ஆயுதங்களை நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து உறுதிப்படுத்துமாறு அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனுக்கு அமெரிக்க அரசாங்கம் பணித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் எதிரி நாடுகள் அதன் மீது ஏவுகணை வீசினால் விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஏவுகணைகளை பயன்படுத்தி அதனை அழித்துவிட முடியும்.
இதற்காக அமெரிக்கா கூறும் நியாயப்பாடுகளில் முக்கியமானது, வடகொாியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் அமெரிக்காவை இலக்கு வைத்துள்ளன என்பதாகும். அத்துடன் வடகொரியாவின் அணுவாயுத அச்சுறுத்தல் மட்டுமன்றி சீனா தனது செயற்கைக் கோள் ஒன்றினை தரையிலிருந்து தாக்கி அழித்த சம்பவத்தை அமெரிக்கா தனக்கு மறைமுகமாக விடுக்கப்பட்ட அச்சுசுறத்தலாகவே எடுத்துக் கொண்டது. அவ்வகை ஏவுகணைகளை சீனா அதிகமாக தயாரித்து வருவதாகவும் அமெரிக்கா தனது திட்டத்திற்கான காரணத்தை தெரியப்படுத்தியுள்ளது.
இது எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருப்பினும் உலக அதிகாரச் சமநிலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதையே நாம் முக்கியமாக நோக்க வேண்டியிருக்கிறது. அமெரிக்காவின் திட்டத்தை முன்கூட்டியே புரிந்து கொண்ட ரஷ்யாவின் பதிலடி நடவடிக்கை எந்த விதத்தில் அமையப் போகின்றது என்பதும் எமக்கு முக்கியமானது. எவ்வாறிருப்பினும் ரஷ்யா- சீனா கூட்டு எந்தவகையில் அமெரிக்காவை எதிர்க்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
நட்சத்திர யுத்தத் திட்டத்தினை முன்வைத்து சோவியத்தை வீழ்த்தியது போன்று இதனையும் ரஷ்ய - சீனக் கூட்டுக்கு எதிராக முன்வைத்திருக்க முடியுமென்ற கருத்தியலிலும் பிழை இருப்பதாகத் தெரியவில்லை. அமெரிக்க அரசின் பிரதான தந்திரோபாயமும் கடந்த காலத்தில் அவ்வாறானதாகவே காணப்பட்டது. அதே நேரம் சீனாவின் இராணுவரீதியான வளர்ச்சியும் ரஷ்யாவின் வளர்ச்சியும் அமெரிக்காவுக்கு பாரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.
ஏவுகணை எதிர்ப்பு திட்டத்திற்கு மாற்று உபாயமொன்றை சீனா பரிசோதித்து வெற்றி கண்டுள்ளது என்பது அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இடைமறித்து தாக்கி அழிக்க முடியாத ஏவுகணைகளை பிரயோகித்து இலக்கினை தாக்கக் கூடிய வல்லமையை சீனா பெறுமானால் அதனைக் கடந்து செயல்பட வேண்டிய தேவை தனக்கு இருப்பதாகவே அமெரிக்கா கருதுகிறது.
எனவே அமெரிக்காவின் விண்வெளி அதிகாரக் கொள்கை அமெரிக்காவை நிலைநிறுத்த உதவுமா அல்லது சீனாவின் இராணுவ ரீதியான இதைவளர்ச்சியை உலக அரசியலில் சாத்தியப்படுத்துமா என்பதே எழுந்துள்ள புதிய கேள்வியாகும். அமெரிக்க நகர்வுக்கு ரஷ்யா வெளிப்படுத்தும் எதிர்ப்பினை விட அதனை செம்மையாகக் கையாளுவதே பொருத்தமானதாக இருக்கும்.
கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ்.பல்கலைக்கழகம்