அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் காங்கிரஸ் உரை கட்சி முரண்பாட்டை தீவிரப்படுத்துகிறது? | தினகரன் வாரமஞ்சரி

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் காங்கிரஸ் உரை கட்சி முரண்பாட்டை தீவிரப்படுத்துகிறது?

கலாநிதி 
கே.ரீ.கணேசலிங்கம் 
யாழ்.பல்கலைக்கழகம்
 

அமெரிக்க ஜனாதிபதிக்கும் காங்கிரஸுக்குமான மோதல் தணிவதற்கான வாய்ப்பு குறைந்து கொண்டே செல்கிறது. கடந்த வாரமும் இதே பத்தியில் இந்த விடயம் அலசப்பட்டது. ஆனாலும் அதிகார மோதல் என்பது நீடிக்கின்றதொன்றாகவே அமைந்துள்ளது. காரணம் முடிந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி வருடாந்த காங்கிரஸ் மாநாட்டில் உரையாற்றும் போது வெளிப்படுத்திய கருத்துக்களால் ஜனநாயக கட்சிக்கார்கள் கொதிப்படைந்துள்ளனர். அ​மெரிக்க ஜனாதிபதி எதிர்க்கட்சி இழுபறியினை விளங்கிக் கொள்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அமெரிக்க அரசியலில் கட்சிகளும் அவற்றின் கொள்கைகளும் பாரிய வேறுபாடுகளை கொண்டவை அல்ல. இரு கட்சி ஜனநாயகத்தினை பல நூற்றாண்டுகளாக பராமரித்துவரும் அமெரிக்கா கட்சி பேதங்களை தேசிய நலனுக்காக விட்டுக் கொடுக்கும் மரபினை கொண்டுள்ளது. ஏறக்குறைய இரு கட்சிகளுமே தேசியக் கொள்கையையே கொண்டுள்ளன. தேசத்தின் நலனுக்காக கட்சி முரண்பாடுகளையும் பேதங்களையும் கைவிடுபவர்களே அமெரிக்காவின் கட்சி அரசியலில் காணலாம்.

அதற்கான காரணம் ஆளும் எதிர்க்கட்சி என்பது பெரும்பான்மையில் மட்டுப்படுவதில்லை. குறிப்பாக குடியரசுக் கட்சி ஜனாதிபதியை அதிகாரத்தில் வைத்திருக்கும் போது ஜனநாயகக் கட்சி செனற் சபையிலோ அல்லது மக்கள் பிரதிநிதிகள் சபையிலோ பெரும்பான்மையைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. அல்லது இரண்டும் சேர்ந்த காங்கிரஸில் பெரும்பான்மையை கொண்டிருக்கலாம். ஆனால் ஆட்சி சுமூகமாக இயங்கும் மரபு அமெரிக்க அரசியலமைப்பிலேயே வரையப்பட்டுள்ளது.

அத்துடன், கண்டங்கள் மற்றும் உப பிராந்தியத்திற்கான செனற் பிரதிநிதிகள் நியமிக்கப்படும் போதும் கட்சி வேறுபாட்டினைக் கடந்து த​ைகமையும், பிராந்தியம் சார் அறிவும் முதன்மைப்படுத்தப்படுவதுடன் ஆளுமைக்குள்ளால் உலகத்தை ஆளும் திறனை மட்டுமே முதன்மைப்படுத்தப்படுவதனை காணலாம். உலக நாடுகள் மீது ஆதிக்கம் செய்வதற்கான அரசியலமைப்பாகவே அமெரிக்க அரசியலமைப்பு விளங்குகிறது. மிகத் துல்லியமான நிறுவனக் கட்டமைப்புக்கூ டாகவே அரசியலமைப்பு தயார் செய்யப்பட்டுள்ளது. இங்கு கட்சி பேதமின்றி உலகத்தை கட்டுப்படுத்தும் வரைபுகள் அரசியலமைப்புக்குள் செலுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவின் உலக ஆதிக்கத்திற்கான போட்டியும் அத்தகைய வரைபுக்குள்ளேயே தயாரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசு வீழ்த்தப்படுவதென்பது சோவியத் யூனியன் வீழ்த்தப்படுவது போல நிகழ முடியாது. அதுமட்டுமன்றிமுதலாளித்துவம் மாற்றங்களையும், புதிய தேவைகளை அடைவதற்கு தாமே தயாராகும் இயல்பினைக் கொண்டுள்ளது. சோசலிஸம் போல் புரட்சியை ஏற்படுத்தும் தேவைப்பாடு முதலாளித்துவத்துக்கு இல்லை. அது எப்போதும் தானே தன்னை சரிப்படுத்திச் செயல்படும் இயல்பைக் கொண்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியும் காங்கிரஸின் கட்சி உறுப்பினர்களும் நினைத்தால் மட்டுமே அமெரிக்க முறைமையை தோற்கடிக்க முடியும். அதற்கான சாத்தியப்பாடு மிகமிகக் குறைவானது. பிரித்தானியவும் மேற்குறிப்பிட்ட முதலாளியத்தின் இயல்புகளைக் கொண்டதுதான். ஆனால் அரசியல் அமைப்பினால் பலவீனமானது. அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது உலகத்தை ஆளுவதற்கான வரைபில் மிகப் பலவீனமானது. அந்த யாப்பு உலக நாடுகளை அதிகம் இலக்கு வைக்காது தனது எல்லைக்குள் மட்டுப்படுத்தப்பட்டதொன்று.

எனவே, கட்சி வேறுபாடுகளைக் கடந்து அமெரிக்க தேசிய நலனுக்கானதே அமெரிக்க கட்சி அரசியல். அதிலும் குடியரசுக் கட்சியும் ஜனநாயக கட்சியும் அத்தகைய இயல்பினை அதிகம் கொண்டவை. இதனால் தான் ட்ரம்ப் நெருக்கடிக்குள் அகப்பட்டுள்ளார் எனலாம். அவரது முடிவுகள் தேசியத்திற்கு விரோதமானவை என்ற கருத்து நிலை உலகத்தில் மட்டுமல்ல அமெரிக்க அரசியல் கட்சிகளுக்குள் வளர்ந்துவிட்டது. ட்ரம்ப் அத்தகைய முடிவுகளையே அடிக்கடி அறிவிப்பதில் குறியாக உள்ளார். வருடாந்த காங்கிரஸ் மகா நாட்டில் உரையாற்றும் போது இரு முரண்பட்ட எண்ணத்தை வெளிப்படுத்தினார்.

ஒன்று குடியேற்றக் கொள்கையில் எந்த விட்டுக் கொடுப்பும் செய்ய முடியாது எனக் குறிப்பிட்டார்.

இரண்டாவது கட்சி பேதமற்ற அமெரிக்காவை கட்டி வளர்க்க அழைப்பு விடுத்தார்.

இரண்டுமே ஜனநாயக கட்சியினருக்கு மட்டுமல்ல அமெரிக்கர்களுக்கு முரண்படானதேயாகும். காரணம் ட்ரம்பின் குடியேற்றக் கொள்கை மீது ஜனநாயக கட்சியும் சில குடியரசுக் கட்சியினரும் அதிருப்தி கொண்டுள்ளனர். இடைக்கால வரவு செலவுத் திட்டத்திற்கான ஒப்புதலை ஜனநாயகக் கட்சி வழங்க மறுப்பதற்கான பிரதான காரணம் குடியேற்றக் கொள்கையே. அதுவே முரண்பாடான செய்தியாக அமைந்துள்ளது.

ட்ரம்பின் உரையில் முக்கிய அம்சங்களாக அமெரிக்காவில் குடியேற தகுதி இருந்தால் மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதில் எந்த சமரசமும் கிடையாது எனக் குறிப்பிட்டார். மேலும் அங்கு உரையாற்றும் போது அமெரிக்காவை பலம் பொருந்திய நடாக மாற்றியமைப்போம். உலகத்திலேயே சிறந்த நாடாக அமெரிக்காவை மாற்ற வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றுபடுங்கள். அரசின் திட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கி வருகிறோம். மக்களை கடுமையாக பாதிக்கும் வரியை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அமெரிக்காவுக்கு பங்களிப்பை வழங்கக் கூடியவர்கள், நாட்டை நேசிக்க கூடிய மக்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும் என்றார். இரு கட்சிகளும் ஒன்றிணைந்து பாதுகாப்பான, துரிதமான, நம்பகரமான, நவீன உட்கட்டமைப்பை எமது பொருளாதாரத்திற்கு ஏற்படுத்துவோம். எமது மக்கள் அதற்கு உரித்துடையவர் என்றார்.

ட்ரம்பின் உரை இரு கட்சிகளையும் ஐக்கியப்படுத்துவதாக அமைந்திருந்தாலும் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் பலர் வெளிநடப்பு செய்துள்ளனர். ட்ரம்பினது கொள்கை பாராட்சமாது என அதிருப்தி தெரிவித்ததுடன், அவரது நியாயமற்ற கொள்கைப் போக்கே எனவும் விமர்சனமும் செய்தனர்.

எனவே, ட்ரம்பின் முயற்சி தோற்றுவிட்டதென்றே தோன்றுகிறது. அடிப்படையில் ஒற்றுமையில்லாத சூழலை ட்ரம்பே ஏற்படுத்துவதாக ஜனநாயகக் கட்சியினர் குறிப்பிடுவதுடன் அமெரிக்க தேசியத்திற்கு எதிரானவராகவும் ட்ரம்ப்பை பார்க்கின்றனர்.

இத்தகைய இழுபறி பெப்ரவரி மாத வரவு செலவுத் திட்டத்தின் போது தெரியவரும். அது ட்ரம்புக்கு பாரிய நெருக்கடியாக அமையும். அதற்கு முன்பே வருடாந்த காங்கிரஸை பயன்படுத்திக் கொள்ள முயன்ற ட்ரம்ப் அதனை சரிவர கையாளத் தெரியாது நெருக்கடியையும் முரண்பாட்டையும் ஏற்படுத்தி விட்டார். ட்ரம்பின் நடவடிக்கை அமெரிக்கா அரசியலமைப்பை கேள்விக்குட்படுத்த ஆரம்பிக்குமாயின் அது அமெரிக்காவின் உலக அரசியலுக்கு ஆபத்தானதாக மாறும்.

Comments