சிரியா போரும் ஐ.நா சபையும் | தினகரன் வாரமஞ்சரி

சிரியா போரும் ஐ.நா சபையும்

உக்கிரமடைந்துள்ள சிரியப் போர் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியலை உச்ச நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. சிரியாவின் ஆட்சியாளர்களை ஆதரித்து ரஷ்யாவும் கிளர்ச்சிப் படைகளுக்கு எதிராக போர் புரிந்து வருகின்றன. பதிலுக்கு கிளர்ச்சிப் படைகளுக்கு ஆயுதமும் ஆலோசனையும் அமெரிக்கா வழங்கி வருகின்றது. இவ்விரு நாடுகளையும் கொண்ட ஐ.நா.சபை அமெரிக்க சார்பு நிலையையே பிரதிபலிப்பது போல் காணப்பட்டாலும் அடிப்படையில் அங்கு நிகழும் அழிவினை தடுக்க முடியாத கையறுநிலையில் அது காணப்படுகின்றது. சர்வதேச உரையாடலில் ரஷ்ய - அமெரிக்கா ஆட்சியாளர்கள் நண்பர்களாக விளங்கினாலும் சிரியாவின் சண்டையில் எதிர் எதிர் அணியில் அவையிரண்டுமுள்ளன. சிரியாவில் நிகழும் போரில் ரஷ்ய, அமெரிக்க அரசியலையும் ஐ.நா.வின் இயலாமையையும் நோக்குவதே இக்கட்டுரையின் பிரதான தேவையாகும்.

2011 முதல் சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும் அரச படைகளுக்கும் இடையில் நீண்ட போர் நிகழ்ந்து வருகிறது. அரபு வசந்தத்தின் தொடர்ச்சியாகப் பார்க்கப்படும் சிரியாவின் யுத்தத்தில் ரஷ்யத் தரப்பின் பிர​ேவசம் அதிகமான நெருக்கடியையும் யுத்தத்தின் நீடிப்பினையும் சாத்தியப்படுத்தியது. ஆரம்பத்தில் கிளர்ச்சிப் படைகள் வலுவான நிலைகளை கைப்பற்றினாலும் ரஷ்யாவின் தலையீட்டுக்கு பின்னர் வீழ்ச்சியடையத் தொடங்கினர். ரஷ்யாவின் விமானப்படைகளின் ஆதரவுடன் ஈரானும் இஸ்லாமிய இயக்கங்களும் சிரியாவின் படைகளுக்கு ஆதரவளித்து செல்கின்றன. சிரியாவின் துறைமுகம் ரஷ்ய கடற்படைத்தளமாக நிரந்தரமாக அமைந்திருப்பதுடன் மேற்காசியாவுக்குள் ரஷ்யப் படைகள் நுழைந்துள்ள சம்பவம் அப்பிராந்திய அரசியலையும் உலக அரசியலையும் நெருக்கடிக்கு தள்ளியுள்ளது.

ரஷ்யப் படைகளின் மேற்காசிய மீள் பிரவேசத்திற்கு சிரியா ஒரு தெளிவான வெளியைத் தந்துள்ளது. எகிப்து, வெனிசூலா, நிக்கரகுவா, சிசிலி மற்றும் சிங்கப்பூர் துறைமுகங்களை மொஸ்கோவுக்காக திறந்து விடுவதற்கான உரையாடலை ரஷ்யா மீள ஆரம்பித்துள்ளது.

வொசிங்டன் போஸ் பத்திரிகை ரஷ்யா தனது S – 300 (Surface to air missiles) அணுவாயு தாங்கிய ஏவுகணைகளை சிரியாவிலுள்ள தனது துறைமுகமான Tartus க்குள் நகர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது ரஷ்யாவின் பிடி இப்பிராந்தியத்தில் ஓங்கியுள்ளது என்பதை காட்டுகின்றது.

கடந்தாண்டு அலெப்போ நகர் மீது இதனைப் போன்றே ஒரு தாக்குதலை சிரியப் படைகள் ரஷ்ய விமானப் படையின் உதவியுடன் மேற்கொண்டு வெற்றி கண்டது. அதிலும் ரஷ்யா மீதும் விளாடிமீர் புட்டின் மீதும் பாரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனாலும் ரஷ்யா- - சிரியா கூட்டுப் படை தாக்குதலை வெற்றிகரமாக முடித்து கிளர்ச்சிப்படைகளை விரட்டியது. அலெப்போ நகர் சிரியப் படைகளிடம் வீழ்ந்தது. அப்போதும் ஐ.நா.சபை மெளனமாகவே இருந்தது.

டோறாவில் கடந்த பல நாட்களாக நடந்து கொண்டிருக்கும் யுத்தம் பாரிய இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஏறக்குறைய 600 -- 700 க்கும் இடைப்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் அனேகமான குழந்தைகளும் அடங்கும். குழந்தைகளது மரணம் உலகை உலுக்குகின்றது. ஏறக்குறைய முள்ளிவாய்க்கால் யுத்தம் போன்றே டோறா யுத்தம் காணப்படுகின்றது. இதனால் தான் யுத்த நிறுத்தத்தை முதன்மைப்படுத்தி ஐக்கிய நாடுகள் சபை செயல்படுவதாக சில ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அதே பாணியிலேயே அமெரிக்காவும் யுத்த நிறுத்தத்தை ரஷ்யா மீறுவதாகவும் ரஷ்ய - சிரியா கூட்டே ஐ.நா அறிவித்த 30 நாள் யுத்த நிறுத்தத்தினை பலவீனப்படுத்தியுள்ளதாகவும் குற்றம் சாட்டி வருகின்றது. அமெரிக்க வெளிவிவகாரச் செயலகம் ஜனநாயகம், மனித உரிமை, சிறுவர் உரிமை என்பன மீறப்படுவதாவும் 30 நாள் யுத்த நிறுத்தம் மூலம் அவற்றை மீட்கலாம் எனவும் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறது.

ஐ.நா சபை பாதுகாப்பு கவுன்சிலின் 2401 (2018) தீர்மானம், மனிதாபிமான பொருட்களைக் கொண்டு செல்வதற்கான அனுமதியை வழங்குவதற்குரித்தான வகையில் மருந்து, மற்றும் உணவுப் பொதிகளை ஐ.நா வாகனத் தொடர் மூலம் அப்பகுதிக்கு சேர்ப்பித்தல் என்பதாக அமைகின்றது. சிரிய மக்கள் தொகையில் 70 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள். இந்த நகரில் வாழும் மக்கள் தொகையில் 5.6 மில்லியன் மக்கள் எதுவித வசதியுமின்றி இருப்பதாகவும் அதில் 2.9 மில்லியன் மக்கள் மிக நெருக்கமாக நகர்ப்புறங்களில் இருப்பதாகவும் ஐ.நா தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

சர்வதேச மனிதாபிமானச் சட்டத்திற்கு அமைவாக இத்தகைய போர் நிறுத்த உடன்பாட்டுக்கு ஒத்துழைக்குமாறு சகல தரப்பையும் ஐ.நா சபையின் பொது செயலாளர் வலியுறுத்தியிருந்தார். பாதுகாப்புச் சபையில் 15 நாடுகளும் ஒப்புதலளித்தன. நடைமுறையில் சில திருத்தங்களுடன் அமுல்படுத்த முடியுமென ரஷ்யா வலியுறுத்தியது. இந்த போர் நிறுத்த உடன்பாடு கிளர்ச்சியாளருக்கு சாதகமானதென ரஷய பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

எனவே இங்கு மிகத் தெளிவான பிரிநிலை தெரிகிறது. அமெரிக்கா மனிதாபிமானத்தை சிரியாவில் பாதுகாக்க விரும்புகிறது போல் காட்டிக் கொள்கிறது. அதன் மூலம் கிளர்ச்சியாளரை பாதுகாக்க திட்டமிடுகிறது. ஏறக்குறைய கிளர்ச்சிப்படைகளின் நிலைமை மோசமான நிலையை எட்டியுள்ளதையே இது வெளிப்படுத்துகிறது. இதிலிருந்து கிளர்ச்சிப்படைகளை பாதுகாப்பதில் அமெரிக்கத் தரப்பு முனைப்புடன் செயல்படுகின்றது என்ற முடிவுக்கு வரலாம். அதற்கான பணியினையே ஐ.நா சபையும், அமெரிக்காவும் ஆற்றி வருகின்றன. கிளர்ச்சியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அமெரிக்கா ஆயுதங்கள் சென்றடைவதில் தடைகள் நிலவுவதாகவும் தெரியவருகின்றது. இதற்காகத்தான் ஐ.நாவின் 30 நாள் போர் நிறுத்துமா என்ற கேள்வி ரஷ்யா, ஈரான், சிரியா போன்ற எதிர்த்தரப்பினரால் கோரப்படுகிறது.

மேலும் போரில் சிறுவர்களது கொலைகளும், சிதைவுகளும், காயங்களும், முதன்மைப்படுத்தி ஊடகங்கள் செய்திகளை தந்த வண்ணமுள்ளன. மிகக் கொடுமையான துயரம் டோறா நகரில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதனை தடுக்க ஐ.நா சபையின் அணுகுமுறையாக போர் நிறுத்த உடன்படிக்கை அமைந்துள்ளதாக கிளர்ச்சியாளருக்கு விசுவாசமான அமெரிக்க கூறிவருகிறது.

பதிலுக்கு ரஷ்யாவும், - சிரியாவும் இச்சந்தர்ப்பத்தினை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முடிவுடன் உள்ளன. கிளர்ச்சிப் படைகளை அழிப்பதென்பது அமெரிக்காவின் மேற்காசியா தொடர்பிலான கொள்கைகளையும் அதன் நலன்களையும் அழிப்பதற்குச் சமமானதாகும்.

அமெரிக்காவின் ஆதரவுப் படைகளான கிளர்ச்சிப்படைகள் மேற்காசியா முழுவதிலுமுள்ள நாடுகளில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி அமெரிக்காவுக்கு ஆதரவான ஆட்சி என்பதை விட ஒரு அழிவையும் இஸ்லாமியரின் சிதைவையும் ஏற்படுத்த விளைகிறது. ஆனால் சிரியாவில் மட்டும் பாரிய தடையாக ரஷ்யா, சீனா ஆதரவு உள்ளதால் அது சாத்தியப்படாமல் போயுள்ளது. அதன் நீடித்த திட்டமிடலை தகர்ப்பதன் மூலம் ஈரானை பாதுகாக்க முடியும் என்பதில் ரஷ்யா சீனாவை விட ஈரான் கரிசனையாக உள்ளது. ஈரானின் இருப்புக்கெதிராக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சியை அடக்கினாலும் எதிர்காலத்தில் சிரியாவில் அமெரிக்கா வெற்றி பெற்றால் இலகுவாக ஈரான் தகர்க்கப்படும். அதனை ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் அனுமதிக்க கூடாது என்பதில் தெளிவாக உள்ளன.

எனவே, சிரியாவைப் பாதுகாப்பதென்பது ரஷ்ய, சீன நலன்களைப் பாதுகாப்பதுடன் ஈரானையும் எஞ்சியுள்ள மேற்காசியாவையும் காத்தல் என்ற பொருள்படும். இதனால் நீதியோ, ஜனநாயகமோ, மனிதாபிமானமோ, பாதுகாக்கப்படும் என்ற அர்த்தத்தில் அல்ல. மாறாக அத்தகைய பாதுகாப்பு.

அமெரிக்காவின் மேற்காசியாவையும் இஸ்லாத்தையும் அழித்தல் எனும் உபாயத்தை பாதுகாப்பதாகவே அமையும். அதனால் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் மேற்காசிய நலன்கள் பாதுகாக்கப்படும். அவை ஒன்றும் சிரியாக் குழந்தைகளையோ அழிந்து கொண்டுள்ள இஸ்லாமிய மக்களையோ பாதுகாக்க ப் போவதில்லை.

2011 இல் கிளர்ச்சிப் படைகளுக்கும் சிரியாவின் அரச படைகளுக்கும் இடையில் ஆரம்பித்த போர் துறைமுகத்தினை ரஷ்யா தன்வசப்படுத்தியதன் பின் வல்லரசு போராக மாறியது. இரு தரப்புகளுமே தெளிவான வல்லரசுகளது பின்புலத்துடன் மோதி வருகின்றன. போரின் உக்கிரத்திற்கு வல்லரசுகளின் நலன்களே காரணமாகும். உக்ரெயினுக்குள் புகுந்து ரஷ்யாவின் கொல்லைப் புறத்தை கைப்பற்ற அமெரிக்கா ஆரம்பித்த யுத்தம் இந்த ரஷ்யாவை கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.

இந்த யுத்தம் ஐ. நா சபையினாலேயே உலகத்தின் அதிர்வுகளினாலோ நிறுத்தப்பட முடியாதது. ஐ.நா 30 நாட்கள் போர் நிறுத்த அறிவிப்பினை செய்தது. ரஷ்ய ஜனாதிபதி புட்டின் 05 மணித்தியால போர் நிறுத்தத்தினை தினமும் அமுல்படுத்துமாறு தனது தரப்பு படைகளுக்கு கட்டளை பிறப்பித்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் ஐ.நா.வினால் எதனையும் செய்யமுடியவில்லை என்பது அதன் இருப்பினை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவுக்கு ஆதரவாக ஐ.நா.வின் நிலைப்பாடே அதன் இயலாத்தன்மைக்கும் ரஷ்யாவின் தான்தோன்றித்தனமான தலையீட்டுக்கும் காரணமாகும்.

எனவே சிரியாவில் நிகழும் யுத்தம் உள்நாட்டு யுத்தம் ஒன்றும் கிடையாது. அது வல்லரசுகளுக்கிடையிலான யுத்தம் ஆகும். ஐ.நாவின் போர் நிறுத்தம் அமெரிக்கா ஆதரவுள்ள கிளர்ச்சி படைகளுக்கு ஆதரவானதேயன்றி சிரியாவின் மக்களுக்கோ, குழந்தைகளுக்கானதல்ல. ரஷ்யாதனது நலனை எப்படியாவது அடைவதென திட்டமிட்டு சிரியாவின் மக்களை அழித்துவருகிறது.

அம்மக்களை சிரியாவின் ஆட்சியாளர் தன் மக்களென கருதாத வரையும் ஆட்சியளைர் பற்றிய அகராதி ஒன்றானதே. முள்ளிவாய்க்கால் அவலத்தில் வேடிக்கை பார்த்த ஐ.நா இங்கு மட்டும் மனிதாபிமானம் மற்றும் சிறுவர் உரிமையையும் பேசுவதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

டோறா யுத்தமும் முள்ளிவாய்க்கால் யுத்தமும் ஒரே நலனையும் ஒரே முடிவையும் கொண்டது. ஆனால் நலன் பெறும் சக்திகள் மட்டும் இடமாறியுள்ளன.

Comments