சீன ஆட்சியாளரின் கால நீடிப்பு மாவோ சகாப்தம்? | தினகரன் வாரமஞ்சரி

சீன ஆட்சியாளரின் கால நீடிப்பு மாவோ சகாப்தம்?

கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் 
யாழ்.பல்கலைக்கழகம்
 
சீனாவின் வரலாறு முழுவதும் மூடியத் திரைக்குள் அதிகம் மாற்றங்களைக் கொண்டு இயங்கும் நாடாகவுள்ளது. ஏனைய நாடுகளை போலல்லாது அரசியலமைப்பில் மாற்றம் செய்வதென்பது சீனாவுக்கு கடினமானதல்ல. ஆனால் அதனை மேற்கொள்ளும் அதிகாரமுடையது  தேசிய மக்கள் காங்கிரஸ் மட்டுமே என்பது கவனத்திற்குரியது. இந்த மாதத்தின் ஆரம்பக் காலங்களில் கூடிய சீன தேசிய மக்கள் காங்கிரஸ் ஆச்சரியமான பல மாற்றங்களை முன்வைத்தது. அத்தகைய மாற்றங்கள் சீனாவை புதிய சகாப்பத்திற்குள் அழைத்து செல்கிறதா என்பதை தேடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.  
 
தற்போதைய சீன ஜனாதிபதி ஜின் பிங் கை சுற்றிய புதிய நம்பிக்கை தற்போது அதிகமாகியுள்ளது. 2017 ஆம் ஆண்டு முதல் அவரை மாவோவுக்கு சமமான ஆட்சியாளனாக சித்தரிக்கும் நிலையை சீன கம்யூனிஸக் கட்சி ஏற்படுத்தியிருந்தது. ஜின் பிங்கும் அதிகாரத்தில் முதன்மை மனிதனாக தன்னைக் காட்டிக் கொண்டிருந்தார். அரசியலில் ஆழமான பதிவுகளை வெளிப்படுத்தியிருந்தார். குறிப்பாக சீனாவை உலக அரசியலிலும் வர்த்தகத்திலும் பொருளாதார வளர்ச்சியிலும், இராணுவ திசையிலும் மிக வேகமாகவும் அதே நேரம் நிதானமாகவும் நகர்த்தினார். முன்னாள் சீன ஜனாதிபதி ஹூ ஜின்டாவோ விட்டுச் சென்ற இடத்திலிருந்து வேகமாக சீனாவை நகர்த்தினார்.  
 
உலகம் சீனாவை சீண்டி போருக்கு அழைத்த போதெல்லாம் தனது மென் வலுவைக் காட்டியும், கடைப்பிடித்தும்  அரசியல் தந்திரத்தை  ஜின் பிங் கையாண்டார். குறிப்பாக தென் சீனக் கடலில் செயற்கைத் தீவுகளை உருவாக்கிய போது எழுந்த சர்ச்சையும் அமெரிக்க கடற்படையுடனான உரசலையும் மிக சாணக்கியமாக கையாண்டார். அவ்வாறே இந்திய எல்லையில் நிகழ்ந்த உரசலையும் மோதலின்றி வெற்றிகரமாக பிங் கையாண்டார்.வடகொரியாவில் ஏற்பட்ட நெருக்கடியை சாதுரியமாக நகர்த்தி நிமிர்வுக்கு வழிவகுத்தார்  ஜின் பிங் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
அமெரிக்க ஜனாதிபதியின் தேர்தல் கால பேச்சுக்களையெல்லாம் தலைகீழாக மாற்றினார்  ஜின் பிங்.  அவ்வாறே அமெரிக்காவின் ஆழில்லாத நீர்மூழ்கி அத்துமீறி தென் சீனக்கடலுக்குள் பிரவேசித்த போது அதனைக் கைப்பற்றி மீள அமெரிக்காவிடம் கையளிக்க முன்வந்தமை என்பன அவரது காலத்தில் மிக தந்திரமான அரசியல் நடவடிக்கைகளாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்க நாட்டுடன் ஏற்பட்டுள்ள வர்த்தக முறுகலை மிக தந்திரமாக கையாண்டு பாதுகாத்து வருவதுடன் மோதல் போக்கினை கடைப்பிடிக்காது அமெரிக்கா உட்பட்ட நாடுகளை ஜின் பிங் சீனாவின் திசைக்குள் இழுத்துவருகிறார்.  
வர்த்தக ரீதியில் 'ஒரே சுற்று ஒரே பாதை'எனும் திட்டத்தை வெற்றிகரமாக அமுல்படுத்தி வரும் சீன ஜனாதிபதியின் உத்திகள் வியப்பாக உள்ளன. உலகத்தை மென் வலுவினால் வளைத்துப் போடும் திறனுடைய தலைவரான ஜின்பிங் காணப்படுகின்றார். அவரது காலத்தில் ஆபிரிக்க தென் அமெரிக்க நாடுகள், ஆசிய நாடுகள் என்பன சீனாவுடன் அதிக பிணைப்பினை கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.  
 
இதனால் தான் தேசிய மக்கள் காங்கிரஸ் அவரது பதவிக் காலத்துக்கான தவணையை நீடித்துள்ளது. இரண்டு தவணைக் காலத்தை தளர்த்தியுள்ளதன் மூலம் அவர் ஆயுட்காலத் தலைவராக செயல்பட வாய்ப்புள்ளது. அதாவது தேசிய மக்கள் காங்கிரஸ் அதிகார பூர்வமாக ஜின்பிங்கின் சகாப்தம்  தொடங்கும் ஆண்டாக 2018 இனைக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2017 இல் 19 வது கம்யூனிஸக் கட்சி காங்கிரஸில் ஜின் பிங் சீனாவுக்கான உள்நாட்டு சர்வதேச இலக்குகளை எட்டுவதற்கான திட்டங்களை 2035 முதல் 2050 வரையான காலப்பகுதியில் முன்வைப்பதாக குறிப்பிட்டது நினைவு கோரத்தக்கது. அதில் 2035 _ -2050 க்கு இடைப்பட்ட காலத்தில் சீனாவின் புதிய உலக ஒழுங்குக்கான கனவு நிதர்சனமாக்கப்படும் எனும் நம்பிக்கையும் ஜின்  பிங் மீதான விசுவாசத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. உலகளாவிய செல்வாக்குடைய தேசமாக சீனாவை மாற்றுவதே ஜின் பிங்கின் கனவு என்பதை சீன மக்கள் தேசிய காங்கிரஸ் அங்கீகரித்துள்ளது. இத்தகைய தலைமை எதிர்காலத்தில் சீனாவுக்கு கிடைக்காமல் போய்விடக் கூடாது என்பது மக்கள் தேசிய காங்கிரஸின் எண்ணமாக உள்ளது.  
 
ஒரு ஆட்சியாளனின் ஆளுமையை முழுக்காலமும் அந்த நாடு அனுபவிக்க வேண்டும் என்ற அபிலாசையுடன் அரசியலமைப்பையே சீனா மாற்றுகிறது. இது உலக வரலாற்றில் புதிய அம்சமாகும். வளர்ச்சியடைந்த எந்த நாட்டிலும் காணமுடியாத அம்சமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் இது மாவோ சேதுங்கின் சகாப்பத்திற்கு வழிவகுத்துவிடுமா? என்ற சந்தேகமும் தவிர்க்கமுடியாதது. அத்தகைய கேள்விகளுக்கான பதில் மாவோவின் சாதனைகளை வெளிப்படுத்தியிருந்தன. குறிப்பாக மாவோவின் கட்டுமானத்திலேயே சீனா வடிவமைக்கப்பட்டள்ளது. அதற்கு டாட்டர் சென்ஜான்சன் மூலகாரமாக அமைந்தார்  என்பது போல் கொன் பூசியஸூம் முக்கிய பாத்திரம் வகித்தார். அதில் டெங்-ஷியாவோ-பிங் சீனாவை செழுமைப்படுத்தினார். ஹூஜிண்டாவோ உலகத்தளத்தில் சீனாவை பயணம் செய்ய வழிசமைத்தார். அதில் முதல் நிலை நாடாக மாற்றவும் பதிய உலகத்தை உருவாக்கவும் ஜின்பிங் முயல்கிறார். இத்தகைய பயணத்தில் கணிசமான பகுதியை  ஜின் பிங்கே பயணம் செய்துள்ளார். அதனாலே அவர்  அதன் முழுப்பகுதியையும் தொட்டு விடுவார் என சீன மக்கள் காங்கிரஸ் கருதுகிறது.   
 
மூடிய சீனாவுக்குள் தனிமனித ஆதிக்கமும், சர்வாதிகார நடைமுறையும் ஒன்றும் புதியதல்ல.  காலம் காலமாக நிகழும் விடயங்கள் தான்.  தினமென் சதுக்க படுகொலையின் கறைகளை கழுவ ஒலிம்பிக் போட்டி வரும்வரை காத்திருந்தனர் சீன ஆட்சியாளர்கள். அத்தகைய ஒரு தேசமே சீனா.  அது மட்டுமன்றி மக்கள் தேசிய காங்கிரஸ் மேலும் பல திட்டங்களை முன்வைத்தது அவற்றை பின்வருமாறு நோக்குவோம்.  
 
1.கட்சி மற்றும் மாகாணங்களை ஒன்றிணைப்பதற்கான பிரகடனம் ஒன்றும் முன்மொழியப்பட்டது. குறிப்பாக கட்சியின் ஊழல் ஒழிப்பு மேற்பார்வைக்கான ஆணையம் அமைக்கப்பட்டமை அதனை அரசியலமைப்பில் ஒழுங்காக இணைத்துள்ளமை சிறப்புடைய விடயமாக பார்க்கப்படுகின்றது. இது ஊழல் எதிர்ப்பு மீதான புதிய சட்டமாகிறது. இது கட்சி உறுப்பினர்களைக் கடந்து அரச நிறுவன நிர்வாகிகள் முதல் பொது அதிகாரத்தை வைத்துள்ள அனைவரையும் நோக்கியதாக அமைந்தள்ளது. அனைத்து மாகாண நிர்வாக அதிகாரிகளும் அரசியலமைப்புக்கு விசுவாசமாக இருக்க உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டுமென அரசியலமைப்பு கருதுகின்றது.  
2. மாகாணங்களுக்கான பொருளாதார வாய்ப்புக்களையும் இயற்கை சார் பாதுகாப்புக்களையும் ஏற்படுத்தும் விதத்தில் சீன மக்கள் தேசிய காங்கிரஸ் அதிகாரங்களை கைமாற்றியுள்ளது. நகர்ப்புற கிராமப்புற அபிவிருத்தியை ஏற்படுத்துவதுடன் சுற்றுச்சூழல் விருத்தி மற்றும் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளன. 
நீர் மற்றும் காற்றின் மாசுபாட்டினை கட்டுபடுத்தும் சட்டத்தினை வலிமையாக்குதல் எனவும் தீர்மானிக்கப்பட்டது. குறிப்பாக முழுமையான உணவுப் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குதல் என்பது மக்கள் தேசிய காங்கிரஸின் தீர்மானமாக அமைந்துள்ளது.  
 
3. மிகவும் முக்கியமான தீர்மானமாக வரவு செலவுத்திட்டம் 2018க்கானது முன்மொழியப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. அதில் பாதுகாப்பு செலவுக்கான ஒதுக்கீட்டினை 174.5 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்தது. இது 2017 ஐ விட 8.1 சதவீதம் அதிகரிப்பாகும். இதனைப் பற்றிய தூர நோக்கிலும் ஜின் பிங் 2017 இல் கம்யூனிசக் கட்சி மாநாட்டில் குறிப்பிடும் போது 2030 - 2050 இடைப்பட்ட காலத்தில் சீன இராணுவத்தினை உலகத்தில் முதல் தர இராணுவமாக்குதல்  எனக் குறிப்பிட்டது நினைவுக்கோரத்தக்கது. சீன இராணுவத்தினை நவீனமயப்படுத்துவதில் ஜின் பிங் அதிக கவனம் செலுத்துவதனை காங்கிரஸ் வரவேற்றது. மென் வலுவை பிரயோகித்து சீன பொருளாதாரத்தையும் இராணுவத்தையும் புதிய திசைக்கு அழைத்து செல்லும் ஜின் பிங் சீன மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு சுகாதாரம் சமூக பாதுகாப்பு மற்றும் சமூக ஒழுங்கு என்பனவற்றிலும் கவனம் எடுப்பது சிறப்பானதென மக்கள் காங்கிரஸ் கருதுகின்றது. 
 
சீனாவின் திறந்த சந்தை பொருளாதாரத்திற்கு நாற்பது வயது. அதன் நிறைவைக் குறிக்கும் நினைவுகளை வெளிப்படுத்திய காங்கிரஸ், அதனால் சீனாவின் எழுச்சியை அளவீடு செய்யத்தவறவில்லை எந்தப்பகுதியில் பலமென்பதையும் பலவீனம் என்பதையும் கண்டு கொண்ட காங்கிரஸ் அவற்றை சரிசெய்வதில் கரிசனை கொண்டது.  
எதுவாயினும் சீனாவின் ஆட்சியாளர் பதவிக்காலத்தை நீடித்த காங்கிரஸ் முடிவின் மீது விமர்சனம் இல்லாமலில்லை. இது மாவோசேதுங்கின் காலத்தினை நினைவு கொள்வதன் மூலம் சர்வாதிகாரத்தை நோக்கியதான வளர்ச்சியில் இன்னோர் படி என்றும் குறிப்பிடப்படுகின்றது.  சீனா தனக்குள் வடிவமைத்துள்ள ஜனநாயகத்தினை கூட அவ்வப்போது மீறுகின்றது  என்பது கவனத்திற்குரியது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் இதனை வரவேற்றதுடன் ஒரு சந்தர்ப்பத்தில் அமெரிக்காவும் அரசியலமைப்பிலுள்ளப்படி இரண்டு தடவை என்பதை விலக்கிக் கொள்ளும் என்றும் தெரிவித்தார். 
 
 
 

Comments