வடகொரியாவின் அதிரடி நகர்வு; அதிர்ந்து நிற்கும் மேற்குலகம் | தினகரன் வாரமஞ்சரி

வடகொரியாவின் அதிரடி நகர்வு; அதிர்ந்து நிற்கும் மேற்குலகம்

 

கடந்த 70 ஆண்டுகளாக பகைவர்களாக செயல்பட்ட வட–தென் கொரியத் தலைவர்களின் உலகத்தை வியப்பில் ஆழ்த்திய சந்திப்பு நடந்து முடிந்த வாரங்களில் நிறைவு பெற்றது. அதிலும் வடகொரியத் தலைவர் தென்கொரியத் தலைவருடனான உரையாடலின் போது வெளிப்படுத்திய வார்த்தைகள் மிக ஆச்சரியத்தை தந்துள்ளன. “நாம் இரு தேசங்களும் ஒரே இரத்தம், ஒரேமொழி, ஒரேநாடு என்பதாகும்.” இந்த சந்திப்பு வடகொரியர்கள் பற்றிய பதிவை மாற்றியுள்ளது என்பதுடன் அவர்களின் நடத்தை பற்றிய மேற்குலக ஆய்வாளர்களின் எதிர்பார்ப்பும் அதன் யதார்த்தமும் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை தேடுவதே இக்கட்டுரையின் வெளிப்பாடாகும்.

இரு நாட்டுத் தலைவர்களது சந்திப்பும் அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது உரையாடல் விட்டுக் கொடுப்புடனான நடத்தைகள் பரஸ்பரம் உரையாடிய விடங்கள் அனைத்துமே கொரியர்களுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே வியப்பாகவும் நம்பிக்கையாகவும் அமைந்துள்ளது. அது மட்டுமன்றி அணுவாயுதங்களை இனி உற்பத்தி செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஐ.நா.வின் கண்காணிப்பில் உற்பத்தி தளத்தை அழிக்க வடகொரியா திட்டமிட்டதாக செய்திகள் வந்துள்ளன. அதே நேரம் அணுவாயுதங்களை முற்றாக கைவிடத் தயாராக உள்ளதென்பதுடன் அமெரிக்கா தான் தென்கொரியாவில் குவித்து வைத்துள்ள இராணுவத்தினை முற்றாக விலக்கிக் கொள்ள வேண்டும் எனவும் வடகொரியா கோரியதாக தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அது மட்டுமன்றி அவ்வாறு அமெரிக்கா படைகளை விலக்கிக் கொள்ளாது என தென்கொரியா தெரிவித்துள்ளது. இதனை விளங்கிக் கொள்ள வடகொரிய அதிபர் கிம் - ஜாங்- உன்னின் அறிவிப்புப் பற்றிமேற்குலக ஊடகங்களும் ஆய்வாளர்களும் என்ன கூறுகிறார்கள் என்பதைமுதலில் அவதானிப்போம்.

அமெரிக்கா அரசின் சிரேஷ்ட அதிகாரி Evans Revere என்பவர் குறிப்பிடும் போது, இது அமெரிக்கா முன்வைத்துள்ள நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கான வடகொரியாவின் நடவடிக்கையாக அமைந்துள்ளது என்றார். மேலும் அவர் வோசிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு தெரிவித்த கருத்தில் இது அமெரிக்காவை வேறுபட்ட பல திசைகளுக்குள் ஈர்க்க முயலுகின்றது. ஆனால் முடிவில் எதுவுமேயில்லாத நிலையை ஏற்படுதும் எனக் குறிப்பிட்டார்.

அதுமட்டுமன்றி இத்தகைய முடிவுகளை முன்வைத்துவிட்டு அமெரிக்காவின் படைகளை தென்கொரியாவிலிருந்து விலக்கிக் கொள்ள நிர்ப்பந்திக்கலாம். அவ்வாறே ஜப்பானிலிருந்தும் குறிப்பாக ஒக்கினாவா, குவாம் தீவு போன்ற பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள அமெரிக்கப் படைகளையும், மேற்கு பசுபிக்கில் நிறுத்தப்பட்டுள்ள விமானதாங்கிக் கப்பல் படையையும் விலக்கிக் கொள்ள அமெரிக்காவை கோரமுடியுமெனக் குறிப்பிடுகின்றார். இதுமட்டுமன்றி இப்பிராந்தியத்தில் தென்கொரியா ஜப்பானுடன் இணைந்து அமெரிக்க மேற்கொள்ளும் பயிற்சிகளையும் போர் ஒத்திகைகளையும்,கொரியக் குடாவில் ஏற்படுத்தப்படும் போர் அச்சுறுத்தல்களையும் அமெரிக்கா கைவிடவேண்டுமென கோருவதற்கான வாய்ப்பு அதிகமுண்டு எனக் கூறுகின்றார்.

அக்கருத்தை மேலும் வலுப்படுத்தும் விதத்தில் முன்னாள் பிரித்தானிய இராஜதந்திரி James Edward Hoare குறிப்பிடும் போது வடகொரியா இப்பிராந்திய எண்ணத்துடன் மிக நீண்டகால இலக்குகளுடன் அணுவாயுதம் பற்றிய பேச்சுக்களை முதன்மைப்படுத்தியிருக்க முடியும் என்று கூறினார். மேலும் அவர் தெரிவிக்கும் போது, இது இருதரப்புக்கும் சாத்தியமற்றதொன்றாகும். வடகொரியா வேறு ஏதும் திட்டத்துடன் இத்தகைய விடயத்தை முன்வைத்திருக்கலாம். இது ட்ரம்ப் நிர்வாகத்திற்கு பொருத்தமற்ற ஒரு விடயமாகவே உள்ளது. வடகொரியாவைப் பொறுத்தவரை சாத்தியமற்ற உத்தரவாதம். ஒருபோதும் அணுவாயுதம் பற்றிய அறிதலை அல்லது புரிதலை அந்த நாடு அழித்துவிட முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் Hoare தெரிவிக்கும் போது பேச்சுவார்த்தை சட்டரீதியானதும் பலமானதுமாகும். அமெரிக்க உலகத்திற்கு தனது அதிகாரத்தையும் வலுவையும் தெளிவாக வெளிக்காட்ட வேண்டியுள்ளது. வடகொரியாவே வல்லரசுடன் நீண்டகாலத்திற்கு அரசியல் விளையாட்டினை மேற்கொள்ளப் போகின்றது. சதாம் உசைன் கேணல் கடாபி போன்றவர்களின் அனுபவத்தை கண்டு கொண்டு வடகொரியா தவிர்க்க முடியதாது என்பதை தெரிந்திருக்கலாம். வடகொரியா அமெரிக்கா தன்னில் தங்கியிருக்க விரும்புகிறது எனக் கூறலாம்.

அமெரிக்க ஜனாதிபதி உடனடியாகவே பேச்சுவார்த்தைக்கு ஒப்புதலளித்துள்ளார். ஆனால் இது ஆபத்தானது. நெருக்கடிமிக்கதாக மாறும். ஆரம்பத்தில் உயர்மட்ட சந்திப்புடன் முடித்துக் கொண்டு நீண்ட தயாரிப்புக்களுடன் பேசுவது சிறப்பானதாக அமையும் என்றார்.

இன்னோர் அமெரிக்க இராஜதந்திரி Christopher hill குறிப்பிடும் போது, வடகொரியா கொரிய குடாவில் அமெரிக்கா குவித்துவைத்துள்ள படைகளையும் ஆயுத தளபாடங்களையும் நீக்குவது மட்டுமன்றி சக்திவள உதவியையும்,பொருளாதார ஒத்துழைப்பையும், பிராந்திய மட்டத்தில் அங்கீகாரத்தையும் சமாதான உடன்படிக்கையையும் கோரலாம். அப்படியான சந்தர்ப்பத்தில் அமெரிக்கா அவற்றை வழங்க முடியாதென கூறமுடியுமா?

நொட்டிங்காம் ரின்ற் பல்கலைக்கழக அரசறிவியல் பேராசிரியர் இது பற்றிக் கூறுகையில் அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் இராணுவ ரீதியான குறைப்புக்குரிய உடன்படிக்கைக்கு வருமாறு வடகொரியா நிர்ப்பந்திக்கமுடியும். இதனையே அணுவாயுதக் குறைப்புக்கு பதிலீடான கோரிக்கையாகவும் இலக்காகவும் இது அமையப் போகிறது என்கின்றார். மேலும் சமூகநலத் திட்டங்களுக்காகவும், பொருளாதார அபிவிருத்தியை அடைவதற்காகவும் வடகொரியா முன்னுரிமை வழங்கியுள்ளது என்ற பிரச்சாரத்தினை உலக அரசாங்கங்கள் முன்வைக்க முயலும். இதனால் வடகொரியா பிரஜைகள் மீது வெளியுலகிலுள்ள நாடுகள் நெருக்கடியை ஏற்படுத்துவதனாலேயே அணுவாயுதத்தினை இதுவரை வைத்துக் கொள்ள முயன்றதாகவும் வடகொரியா பிரசாரம் செய்யவாய்ப்புள்ளது.

அணுவாயுதமே வடகொரியாவை அமெரிக்காவிடமிருந்தும் அதன் நட்பு நாடுகளது அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதற்கும் உத்தரவாதத்தை பெறுவதற்கும் ஏற்ற அம்சமாகும். அவ்வகையில் மூன்று உத்தரவாதங்களை வடகொரியா கோரமுடியும். முதலாவது பிராந்திய ரீதியான பாதுகாப்பை விட கொரியா சார்ந்திருத்தல். இரண்டாவது இராணுவ இடைத் தொடர்பாடல்களை அமெரிக்காவுடனும் அதன் நட்பு நாடுகளுடனும் ஏற்படுத்திக் கொள்வது மூன்றாவது, அமெரிக்காவின் தலைமையில் வடகொரியாவின் பராம்பரிய கொரியன் கலாசாரத்தினை கிம் உன் ஆட்சிக் காலப்பகுதியில் பாதுகாப்பதற்கான அரணை ஏற்படுத்துதல் என கிறிஸ்ரோபர் குறிப்பிடுகின்றார்.

எனவே மேற்குலக ஆய்வாளர்கள் அமெரிக்காவை எச்சரித்தது போன்றே வடகொரியாவின் நடவடிக்கை அமையவுள்ளதென்பது உணரப்பட்ட தகவலாகும். ஆனால் அதனை தென்கொரியாவும் சேர்ந்து செயல்படுவதே கவனிக்கப் பட வேண்டிய விடயமாகும்.

அதே நேரம் இன்னொரு சாரார் வடகொரியா எதிர்நோக்கியுள்ள பொருளாதார பிரச்சினைக்கு தீர்வை தரக்கூடியதாக அதன் நடவடிக்கைகளை அமையும் என எதிர்பார்க்கின்றனர். வடகொரியாவின் பொருளாதார வளங்களும் தென்கொரியாவின் தொழில்நுட்பமும் ஒன்று சேருவ தென்பது கொரியப் பிராந்தியத்தின் பொருளாதார சுபீட்சத்தை சாதகமானதாக்கும். தென்கொரியாவின் பொருளாதார வாய்ப்புக்களையும் சந்தர்ப்பங்களையும் வடகொரியா பயன்படுத்துவதுடன் இரண்டுதேசங்களுக்குமான வர்த்தக வாய்ப்புக்கள் பிராந்தியத்திலேயே அதிகரிக்க கூடியதாக அமையும்.

இரண்டாவது கொரியக்குடாவில் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றத்திற்கான தணிவானது இப் பிராந்தியத்தையும் கடந்து அமைதியை சாத்தியப்படுத்தக் கூடியதாக அமையும்.

குறிப்பாக தென்சீனக் கடல்,கிழக்கு சீனக்கடல், பசுபிக் கடல், பகுதியில் அமெரிக்க–சீன பதட்டமென்பது சுமூகநிலையை நோக்கி நகர நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. கொரியக் குடாவின் பதற்றத்தினால் அமெரிக்க இராணுவப் பிரசன்னம் கொரியப் பிராந்தியத்தில் அதிகரித்ததுடன் அமெரிக்காவின் இராணுவ ஆயுத தளபாடங்களின் குவிப்பும்,கடற்படையின் பிரசன்னமும் இப்பகுதியில் குறைவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் அமெரிக்காவின் ஆயுத சந்தைக்கான வாய்ப்புக்களும் இப் பிராந்திய நாடுகளில் நிறுத்த முயன்ற ஏவுகணைதடுப்பு திட்டமும் கைவிடவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இத்தகையஅமைதியைப் பயன்படுத்திக் கொண்டு சீனா தனது வர்த்தகப் பாதையையும், சந்தையையும், உற்பத்தி உறவையும் WIN – WIN உபாயத்தையும் வடகொரியாவுக்கூடாக தென்கொரியாவுக்குள் கொண்டு சென்றுவிடும். சீனா–வடகொரியா–தென்கொரிய இணைவுப் பாலம் பொருளாதார வர்த்தக பொருட்களால் கட்டப்படும். அதனால் ஏற்படும் இசைவும் இணைவும் பிராந்தியவலுவை சாத்தியப்படுத்தி பொருளாதார இணைவுப் பிராந்தியமாக மாற்றிவிடும்.

போர் பதற்றம் குறைந்ததனால் சீனா பொருளாதார பக்கத்தை பலமாக வளர்த்துக் கொள்ளும். அதிலும் அமெரிக்காவின் நேரடிதொழில்நுட்பத்திற்கான எல்லாம் தென்கொரியா மூலம் பெறுவதுடன் வடகொரியாவையும் தென்கொரியாவுக்கு நிகரான தேசமாக மாற்றிவிடும் திறன் சீனாவிடம் உண்டு.

இதன் மூலம் நிரந்தரமான அமெரிக்க ஆக்கிரமிப்பை வடகொரியா தவிர்த்துள்ளது. அணுவாயுதத்தை காட்டி அச்சுறுத்திவிட்டது போல் அணுவாயுதத்தை கைவிடுவதாக கூறிக் கொண்டு நிரந்தர சமாதானத்தையும் அமைதியையும் அரசியல் பொருளாதார இருப்பையும் தக்கவைத்துள்ளது. இது தனித்து சாத்தியமானதல்ல. சீனாவின் அரவணைப்புடனும் திட்டமிடலுடனும் நிகழ்ந்துள்ளது.

இந்தவகை நடவடிக்கையை முறியடிக்க அமெரிக்கா முயலாது கைவிட்டுவிடும் எனக்கூறிவிட முடியாது. இராணுவ பதட்டத்திற்கு பதில் சமாதான பதற்றம் எதிர்காலத்தில் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் வடகொரியாவின் திட்டமிடலும் நகர்வுகளும் அதன் பாதையை மேலும் பலப்படுத்தியுள்ளது என்பதையே தெளிவாக காணமுடிகின்றது.

 

Comments