![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2018/05/13/w0.jpg?itok=KwWetoUt)
கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ்.பல்கலைக்கழகம்
மேற்காசிய அரசியலில் ஈரான் அணுவாயுத உடன்படிக்கை சர்ச்சை மிக்க அம்சமாக மாறியுள்ளது. 2015 ஆம் ஆண்டு வல்லரசுகளின் மேற்பார்வையின் கீழ் ஈரானுடனான அணுவாயுத உடன்படிக்கை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மேற்கொண்டிருந்தார். அந்த உடன்படிக்கையை தேர்தல் காலத்திலிருந்து தவறானது என்றும் முட்டாள் தனமானது என்றும் விமர்சித்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த வாரத்தில் அவ் உடன்படிக்கையிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இவ்வுடன்படிக்கை சர்வதேச அங்கீகாரத்தோடு இராணுவ தேவைக்கு அல்லாது சிவில் தேவைக்கு மட்டும் அணுசக்தியை ஈரான் பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் குறிப்பிட்டதோடு ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்குவதாகவும் அமெரிக்கா இவ்வுடன்படிக்கையின் மூலம் ஒப்புக் கொண்டது. இதன் பிரகாரம் ஈரான் மீதான அணுவாயுத உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறியதற்கான அரசியலையும் அதன் விளைவுகளையும் புரிந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
அமெரிக்கா தன்னிச்சையாக வெளியேறியதற்கான காரணங்களை ஜனாதிபதி ட்ரம்ப் பின்வருமாறு முதன்மைப்படுத்துகின்றார். குறிப்பாக, ஈரான் இந்த உடன்படிக்கையின் பிரகாரம் எந்தவிதமான விட்டுக்கொடுப்புக்களையும் செய்யாது இரகசியமாகவும் திட்டமிட்ட அடிப்படையிலும் அணுவாயுதத்தினை தயாரிக்கும் வல்லமையினை கொண்டிருக்கின்றது. இதற்கு ஆதாரமாக இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் 55 ஆயிரம் பக்க இரகசிய கோப்புக்கள் மற்றும் 138 சி.டீ க்களை ஆதரப்படுத்துகின்றார் ஜனாதிபதி ட்ரம்ப். அதுமட்டுமன்றி நெதன்யாகுவின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஈரான் மிகப்பெரிய பொய்யை கூறுகின்றது என்றும் தனது அணுசக்தி திட்டத்தினை மறைப்பதற்கு பெரும் பிரயத்தனங்களை எடுத்துள்ளது என்றும் புலனாய்வுத் தகவலுக்கு ஊடாகவே தாம் இவ்வறிக்கையை பெற்றுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
ஈரான் தொடர்ச்சியாக மேற்காசியாவிலும் இதர பகுதிகளிலும் அமெரிக்காவிற்கும் அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராகவும் செயல்படுவதாகவும் ஈரான் எப்போதும் அமெரிக்காவின் எதிரி என்றும் ஒபாமா நிர்வாகம் ஈரானை கண்டு கொள்ள தவறிவிட்டது என்றும் குற்றம் சாட்டுகின்றார். இவற்றை விட இவ்வுடன்படிக்கையில் சிரியா, யெமன் போன்ற நாடுகளும் இணைக்கப்பட வேண்டும் என்றும் அதனால் தாம் இதிலிருந்து விலகுவதாகவும் குறிப்பிடுவதுடன் மேற்காசியாவில் ஏவுகணைகளையும் அணுவாயுதங்களையும் விருத்தி செய்யக்கூடிய வல்லமையுடைய நாடாக ஈரான் விளங்குவதும் காரணங்கள் என முதன்மைப்படுத்துகிறார்.
ஆனால் இவ்வாறு ட்ரம்ப் குறிப்பிடும் காரணங்களை விட வேறு பல அம்சங்களும் செல்வாக்கு செலுத்துகின்றன. அதனை விரிவாக நோக்குவோம்.
மேற்காசிய அரசியலில் ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடியாக ஈரான் - சிரியா மற்றும் ரஷ்யாவின் கூட்டும், ரஷ்யாவின் அடுத்த யுத்தத்துக்கான தயாரிப்பும், எஸ் 300 ரக ஏவுகணை சிரியாவிற்கு வழங்க முன்வந்தமையும், சிரியாவில் அமெரிக்காவின் தோல்வியும், இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களாகும். எனவே, இதிலிருந்து ஈரான் தனிமைப்படுத்தப்படுவதும், சிரியா ஈரானிலிருந்து விலக்கப்படுவதும் இஸ்ரேலின் இருப்புக்கான அரசியலை உத்தரவாதப்படுத்துவதாக அமையும். இஸ்ரேல் என்னும் அரசு பாதுகாக்கப்படுமாயின் மேற்காசிய நாடுகள் எவற்றிலும் அணுவாயுதம் இல்லை என உறுதிப்படுத்தல் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் வேண்டும். ஏனெனில் இஸ்லாமிய அணுகுண்டு மூலம் நொடிப்பொழுதில் இஸ்ரேலிய தேசம் அழிக்கப்பட முடியும். அதனை எவ்வாறு தடுப்பதென இஸ்ரேலிய- அமெரிக்க தரப்பு கூட்டு திட்மிடல்களை வரைந்து செயல்படுகிறது. இதனாலேயே இஸ்ரேலின் இருப்பும் அமெரிக்காவின் நலனும் மேற்காசிய அரசியலில் மட்டுப்படுத்திய யுத்தம் ஒன்றை வேண்டி நிற்கின்றது. இத்தகைய யுத்தத்தின் மூலம் யுரேனிய செறிவூட்டலுக்கான எத்தகைய எச்சமும் இல்லாது அழிக்கப்படுவதோடு, பலமான ஈரானிய அரசின் கட்டமைப்பை தகர்த்து துண்டுகளாக்கி ஈராக் போன்ற நிலைக்கு ஈரானை தள்ளுதல் என்பது இஸ்ரேலின் பிரதான நோக்கமாகும்.
இத்தகைய மட்டுப்படுத்தப்பட்ட போரினை ஒபாமா நிர்வாகம் இராஜதந்திர வழிமுறைக்கூடாக கையாள முயன்றது. உரையாடலும் உடன்படிக்கைகளும் இராஜதந்திரத்தின் மிகச் சிறந்த உத்திகள். அதன் மூலம் ஈரானை கட்டுப்படுத்தி வைத்திருக்கின்ற அதே வேளை அதன் மீதான கண்காணிப்பினையும் மேற்கொள்வதோடு பொருளாதார ரீதியான ஒத்துழைப்பின் ஊடாக ஈரானில் காணப்படும் நெருக்கடியையும் வளர்ச்சியையும் கையாள முடியுமெனக் கணக்குப் போட்டு செயல்பட்டது. இத்தகைய கையாளுகை பிராந்திய அமைதியை சிதைக்காத வகையிலும் இஸ்ரேலை அதிகம் உணர்ச்சியூட்டாத வகையிலும் பின்பற்றப்பட்டது. ஆனால் ட்ரம்ப் நிர்வாகம் அதனை ஒரு பாரிய சவால் மிக்க அம்சமாக மாற்றியதுடன், இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் அமெரிக்காவின் நடவடிக்கையை மட்டுப்படுத்தி செயல்படுகின்ற தன்மையினையை தெளிவாக காணமுடிகின்றது. இஸ்ரேலின் நலன்களுக்காக அமெரிக்கா தனது தந்திரங்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது மட்டுமன்றி ஐரோப்பிய அணியையும் பகைக்க ட்ரம்ப் தீர்மானித்துள்ளமையே அதன் பலவீனத்தைக் காட்டுகிறது.
அமெரிக்கா தன்னிச்சையாக வெளியேறியது பற்றி வில்சன் சிந்தனைக்கூடம் குறிப்பிடுகின்ற போது இது ஒரு இராணுவ ரீதியான விவகாரம். இறுதியானதும் முழுமையானதுமான நிகழ்வுகளின் வெளிப்பாடுகள் அமெரிக்க இராணுவத்திற்கானது. இந்த உடன்படிக்கையின் பிரகாரம் ஏற்பட்ட மிகச் சிறந்த மாறுதல் ஈரானை கடந்த நான்கு வருடங்கள் அணுவாயுதத்தினை உற்பத்தி செய்யமால் பிற்போட்டுள்ளதே ஆகும். இதுவே அந்த உடன்படிக்கையில் அமெரிக்கா இராணுவத்திற்கு பெறுமதியான காலப்பகுதி. இவ்வாறே அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அமெரிக்கா தன்னிச்சையாக வெளியேறியதை தவறான முடிவு என்றும் இதன் விளைவுகளை அமெரிக்கா சந்திக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார். இவ்விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் எடுத்துள்ள முடிவும் ட்ரம்பின் முடிவிற்கு எதிராகவே உள்ளது. ஈரானுடனான அணுசக்தி உடன்படிக்கையை தொடர்ந்தும் பின்பற்றப் போவதாகவும் அதிலிருந்து தாம் வெளியேறப் போவதில்லை என்று குறிப்பிட்டதுடன் அமெரிக்காவின் நடவடிக்கையைக் கண்டிக்கும் விதத்தில் ஐரோப்பிய நாடுகள் செயற்பட்டு வருகின்றன. ஈரானும் யுரேனியத்தை செறிவூட்டுவதற்கான நடவடிக்கையை ஆரம்பித்திருப்பதாகவும் அது பெருமளவுக்கு அணுவாயுத பரிசோதனையை சாத்தியப்படுத்தும் எனவும் குறிப்பிட முடியும்.
இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளோடு கூட்டுச் சேர்ந்துள்ள ரஷ்யா ஈரானுடன் தொடர்ந்தும் தனித்துவமான உறவை பேண விரும்புகின்றது. ஆனால் ஜேர்மன், பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளும் ரஷ்யாவிற்கும் ஈரானுக்குமான உறவு அமெரிக்காவின் வெளியேற்றத்தினால் அதிகரித்து விடும் என அச்சம் அடைகின்றன. எனவே ஐரோப்பிய யூனியன் ஈரானை அணுவாயுத பலமுள்ள நாடாக எழுச்சி அடைவதை தடுக்கின்ற அதேவேளை ரஷ்ய - ஈரான் உறவை மட்டுப்படுத்தவும் விரும்புகின்றது.
கடந்த மாதம் ஐ.நாவின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குறிப்பிட்ட ஒரு செய்தி கவனிக்கதக்கது. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறினால் போர் மூளும் அபாயம் உண்டு என எச்சரித்திருந்தார். காரணமும் அதற்கான வாய்ப்புக்களும் அதிகரித்து செல்கின்றது. இஸ்ரேலின் சிரியா மீதான தாக்குதல் தொடருகின்றது, ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொள்ளப்போவதாக எச்சரித்துள்ளது.
அமெரிக்கா வெளியேற்றத்திற்கு பின்னர் போருக்கு போவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு எனவும் கருதுகின்ற சந்தர்ப்பத்தில் மேற்காசியாவில் யுத்தம் ஒன்று தவிர்க்க முடியாத ஒன்றாக அமைய முடியும்.