“பழி வாங்க நடந்த தேர்தல் இல்லை. சட்டமும், ஒழுங்கும் தவறவிட்டதை சீர்செய்ய வந்த தேர்தல்” என்று மலேசியாவின் பிரதமராக மீண்டும் பதவியேற்ற பிரதமர் மஹதிர் முகம்மது தனதரையில் கூறியிருக்கிறார். பிரதமர் மஹதிர் முகம்மதுவின் அந்தச் சொற்கள் பொருள் நிறைந்தவை. இன்று தோல்வி கண்ட இதே கட்சித்தலைமையில் 22 ஆண்டுகள் மலேசியாவை ஆண்ட ஒரு பிரதமர் சொல்கிறார் எனில் அதில் பொருள் உள்ளது. அவர் சில கனவுகள் கொண்டிருந்தார். மலேசியா எத்திசை நோக்கிச் செல்ல வேண்டுமென்று. அது தன் வாழ்நாளிலேயே பழுது பட்டுவிடுமோ என அஞ்சியதின் பலன்தான் இன்றைய வெற்றி.
இன்னுமொரு முக்கியமான திருப்பம் இம்முறை 11 சதவீதம் அளவில் இளம் சமூகத்தினர் வாக்களிக்க வந்தது. மலேசிய மாணவர்களெல்லாம் மகிழ்ச்சியில் துள்ளுகிறார்கள். அவர்களுக்கு ஊழல் அரசு பிடிக்கவில்லை. நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும் போது நாட்டின் வரிப்பணத்தை கொள்ளையர் போல் அரசியல்வாதிகள் சூதாடுவதை அவர்கள் எதிர்த்தார்கள். அவர்களது எதிர்காலம் ஒளி மயமாக இல்லை, அதை மாற்ற வேண்டுமென எண்ணினர். அதன் பலன்தான் இந்த மாற்றம்.
தமிழர்கள் தங்கள் எதிர்ப்பை பல வழிகளில் முன்பே காட்டியுள்ளனர். அசைக்க முடியாத தலைமைத்துவம் கொண்ட துன் சாமிவேலுவைத் தோல்வி காண வைத்தனர். தமிழர்களுக்கு சம உரிமை இல்லை என்ற போது இண்ட்ராப் இயக்கத்தைத் தோற்றுவித்து நாட்டைக் கலக்கினர். இத்தனைக்குப் பின்னும் மலேசிய இந்தியக் காங்கிரஸ் தன் சுயநலப் போக்கை கைவிடவில்லை என்ற போது இத்தேர்தலில் தங்கள் கோபத்தைக் காட்டினர். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பர். அது இதுதான்.
இத்தேர்தல் வெற்றி ஒரு மாற்றத்தை மக்கள் விரும்பியதால் ஏற்பட்டது. இது 2013லேயே உணரப்பட்டதுதான். அப்போதே இக்கோபம் கிளம்பிவிட்டது. கொஞ்சம் தில்லுமுல்லு செய்துதான் அப்போதைய கட்சிக்கு வெற்றி கிட்டியது. அதுவே இத்தேர்தலில் மிகக் கவனமாக மக்கள் படையாகத் திரண்டு,வெற்றிக் கனயைப் பறித்திருக்கிறார்கள்..
தேர்தல் முடிவிற்கு முன் டாக்டர். மஹதிர் சொன்னார். நாங்கள் வெற்றி பெறுவது உறுதி ஆனால் ஆளும் கட்சி ஏதாவது கடைசி நேரத் தில்லுமுல்லு செய்யாமல் இருக்கும்வரை என்று. உண்மையில், பெரும்பான்மை பெற்றுவிட்டோம், நாளை காலை பதவி ஏற்போம் என்று சொன்ன பிறகும் அது நடக்கவில்லை. மாலை ஐந்து மணிக்கு நடக்கும் என்றார்கள். அப்போதும் நடைபெறவில்லை. மக்கள் பொறுமை இழந்து ராஜ மாளிகை வாசலில் காத்துக் கிடந்தனர். இறுதியாக இரவு 9 மணி அளவில் பதவி ஏற்பு நடந்திருக்கிறது.
இதில் ஊடகங்கள், குறிப்பாக தேசிய வானொலி எப்படி ஊமை நாடகம் போட்டது என்பது வெட்கத்திற்குரியது. நாட்டில் ஒரு சரித்திர மாற்றம் நிகழ்ந்துள்ளது, மக்கள் பரிதவிப்பில் உள்ளனர். அப்போது அவர்களுக்கு என்ன நடக்கிறது எனச் சொல்லாமல் ஊடகங்கள்மௌனம் சாதித்தன. ஒரு பேச்சு இல்லை. இணையம் என்ற ஒரு ஊடகம் மட்டும் இல்லையெனில் மலேசியாவில் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கவே செய்யாது. சீனாவில் இது போன்ற புரட்சியொன்று இணையம் வழியாக நடக்கவிருந்தது. அது இரும்புக்கரங்களால் தடுக்கப்பட்டுவிட்டது. நல்லவேளை மலேசியாவில் இணையம் முழு சுதந்திரத்துடன் நடக்கிறது. அதுவே இம்மாற்றத்திற்கு ஆதாரமாக இருந்தது. தனிமனித ஒலிபரப்புகள், வாட்ஸ் அப், முகநூல் வீடியோ ஸ்டிரீமிங்க், யூ டியூப் ஒளிபரப்பு இவையே முதுகெலும்பு.
இனிமேலும் மலேசியாவில் இனம் சார்ந்த கட்சிகள் தேவையா எனும்கேள்வயை இத்தேரத்தல் எழுப்பி விட்டது. அரசு எனும் நிறுவனத்தை தொழும் அப்பழைய தலைமுறைக்குப் பின் மூன்று தலைமுறை வந்தாகிவிட்டது. அது இந்தியனாக இருந்தாலும், சீனனாக இருந்தாலும், மலேசியனாக இருந்தாலும் தன்னை மலேசியன் என்றே காணும் பக்குவம் வந்து கொண்டு இருப்பதை இத்தேர்தல் உறுதி செய்துள்ளது. அந்த அரசியல் பின்னணியும், அனுபவமும் இல்லாத 22 வயது இளைஞர் ஒருவர் தேர்வாகி இருக்கிறார், மலேசிய இந்திய காங்கிரஸின் தலைவர் தோல்வியுற்று இருக்கிறார், அது போன்ற சீன அணித்தலைவரும் தோல்வியுற்று இருக்கிறார்.
இனம் முக்கியம் இல்லை எனும் போது நாம் தமிழர் போன்ற இயக்கங்களுக்கு மலேசியாவில் எதிர்காலமில்லை. தமிழகத்தின் ஜாதி அரசியலுக்கும் மலேசியாவில் இடமில்லை என்பதை இத்தேர்தல் உறுதி செய்துள்ளது.
அப்படியெனில் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு யார் பொறுப்பு? சிறுபான்மையினரின் ஒற்றுமையே அதற்கு பதில் என்று சீனர்கள் இத்தேர்தலில் உறுதியாகக் காட்டியுள்ளனர். தமிழர்களும் காட்டியுள்ளனர். ஆளும் கட்சியின் சார்பாக 27 இடங்களில் போட்டியிட்ட தமிழர்களில் 5 மட்டுமே தேர்வாகியுள்ளனர். அதே சமயம் எதிர்க்கட்சியின் சார்பில் (இப்போதைய ஆளும் கட்சி) போட்டியிட்டு 13 பேர் தேர்வாகியுள்ளனர். இரண்டு அணிகளையும் சேர்த்தால் மொத்தம் 15 இடங்களைத் தமிழர்கள் கைப்பற்றியுள்ளனர். இந்த வெற்றிக்குப் பின் சீனர்களும், மலேய்காரர்களும் இருக்கின்றனர்.எனவேதான் இனிமேல் இனவாத அரசியல் மெல்ல மலேசியாவில் இருந்து விலகும் என்பதற்கு இத்தேரத்ல கட்டியம் கூறுகின்றது.
இறையாண்மை, நல்ல கொள்கைகள், ஊழலற்ற அரசு இவையிருந்தால் எந்த இன மக்களும் மகிழ்வோடு அரசை ஆதரிப்பர். நல்ல உதாரணம் பினாங், செலாங்கூர் அரசுகள். அத்தகையதொரு 25 அம்சத் திட்டத்தை இப்புதிய அரசு வெளியிட்டுள்ளது. இதில் குடியுரிமை இல்லாத தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவது, தமிழ்ப் பள்ளிகளுக்கு பிற தேசிய பள்ளிகளுக்குள்ள சலுகைகளைத் தருவது, அரசு வேலையில் தமிழர்களுக்கு சமபங்கு தருவது என்பவையும் அடங்கும்.
எனவே, இத்தேர்தலை மேம்போக்காக எடுத்துக் கொள்ளக் கூடாது. மலேசியாவின் எதிர்காலத்தை நிச்சயிக்கும் தேர்தல் என்றே கொள்ள வேண்டும். ஒரு 93 வயதுக் கிழவரை என்ன தைரியத்தில் பிரதமராக்கியுள்ளனர். அவர் நீண்ட நாள் வாழப்போவதில்லை என்பதை அவரே சொல்லியுள்ளார். ஆனால் ஆட்சிப்பொறுப்பு தகுதியுள்ளோரிடம் கொடுக்கப்படும். முன்பு பழிவாங்கப்பட்ட அன்வார் இப்ராஹிம் போன்றோருக்கு வழங்கப்படும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.
60 வருடம் ஆண்டுவிட்டால் அரசை சாசனம் செய்துவிடுவர் என்ற பயம் ஒரு குடியாட்சியில் இயல்பாய் மக்களுக்கு வரவேண்டும். அது வந்திருக்கிறது. அதற்கான மாற்றத்தை தங்கள் வாக்குகள் மூலம் மக்கள் செலுத்தியுள்ளனர். அதுவே இத்தேர்தலில் கொண்டாட வேண்டிய விஷயம். மக்களால் மாற்றத்தை உருவாக்க முடியும் எனும் நம்பிக்கை! அதுவே குடியாட்சியின்ஆதாரம்.
குடியாட்சிமுறை தோன்றிய ஐரோப்பாவிலேயே அதன் மீது நம்பிக்கை குறைந்து வரும் வேளையில். முற்றும்குடியாட்சி இல்லாத, அரசர்கள் கோலோட்சும் மலேசியாவில் இது நிகழ்ந்து இருப்பது சரித்திரம். சரித்திரம் படைத்த மலேசிய மக்கள் சக்தி ஓங்குக!