![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2018/05/20/w1.jpg?itok=Y6rXVTbE)
‘ஜனநாயக நாடொன்றின் ஜீவனை போற்றிக் காப்பாற்றி வருவது அதன் தேர்தல்
அரசியல். ஆனால் இந்தியத் தேர்தல்கள் லஞ்சம், ஊழல்,
பணப்பட்டுவாடா, தில்லுமுல்லு,
தகிடு தத்தங்கள் கொண்டதாகவும்
வெற்றிபெற்ற சட்ட மன்ற, பாராளுமன்ற
உறுப்பினர்களை கோடிகளில் விலை பேசி வாங்குவது என்று ஜனநாயக
படுகொலை நடக்கும் இடங்களாகவும்
மாறிவருது துரதிர்ஷ்வசமானது.
ஜனநாயகத்தில் இருந்து சர்வாதிகாரம் நோக்கி நகர்வதற்கான
மையப் புள்ளியே தேர்தல்
தகிடு தத்தங்கள்’
மதவாதம் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தியே வட இந்திய மாநிலங்களில் இன்று பாரதிய ஜனதா விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. நரேந்திரமோடி அதன் சிறந்தவொரு பார்த்த சாரதியாகவும் விளங்கும் இன்றைய சூழலில் அவரை எதிர்த்து வீழ்த்தப் புறப்பட்டிருக்கும் காங்கிரசின் சாரதியான ராகுல்காந்தி, பலரின் கண்களுக்கு பொருத்தமற்ற ‘லில்லிபுட்’ குள்ள மனிதராகத் தெரிவது துரதிஷ்டவசமானது. எனினும் காங்கிரஸ் ஆதரவாளர்கள், காங்கிரஸ் மக்கி மறைந்து வருவதாகச் சொல்லப்படுவது வெறும் புனைச் சிந்திரம் என்றும், மேகலாயா, மணிப்பூர், குஜராத், அஸாம் போன்ற மாநிலங்களில் காங்கிரசுக்கான வாய்ப்புகளை பா.ஜ.க. தட்டித்தான் பறித்ததே தவிர, வாக்காளர்கள் முழு மனதாக பா.ஜ.கவுக்கு வாக்களிக்கவில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறார்கள்.
இந்தியாவில் இன்று நடைபெறும் தேர்தல்களில் பொருளாதார வளர்ச்சி, உட்கட்டமைப்பு வளர்ச்சி, நாட்டின் பாதுகாப்பு, அயல்நாட்டு உறவு போன்ற முக்கிய ஆதார விஷயங்கள் முன்வைக்கப்பட்டு வாக்கு கேட்கப்படுவதற்கு பதிலாக, மதவாதமா மதச் சார்பின்மையா என்ற கேள்வியே பிரதானமாக முன்வைக்கப்படுவதையும் வடபுலத்தில் மாத்திரமின்றி கர்நாடகத்தின் வாக்காளர்களும் மதவாதத்தின் பால் ஈர்க்கப்பட்டிருப்பதையும் காண முடிகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை கர்நாடகத் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகள் என்ணப்பட்டு முடிவுகளும் வெளிவந்துவிட்டன. கடந்த தேர்தலில் அறுபது ஆசனங்களாக இருந்த பா.ஜ.க வின் பலம் இம்முறை 104 ஆகியிருக்கிறது. கர்நாடகத்தை ஆண்டுவந்த காங்கிரஸ்சின் பலம் இம்முறை 78 ஆக சுருங்கி விட்டது. இதேசமயம் மூன்றாவது கட்சியாகப் போட்டியிட்ட மதசார்பற்ற ஜனதாவும் 38 ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கிறது. எதிர்பார்க்கப்பட்டபடி தொங்கு சட்டசபையே மக்கள் தீர்ப்பாக வந்திருக்கிறது.
இந்த வகையில் பார்த்தால் காங்கிரஸ்காரர்கள் சொல்வது சரிதான். அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும் என்ற எடியூரப்பாவின் எதிர்பார்ப்பில் மண் விழுந்திருக்கிறது. ஏனெனில் பா.ஜ.க, அவ்வளவு கடுமையாக உழைத்திருந்தது. ஆண்ட கட்சி என்ற வகையில் காங்கிரஸ் மீளவும் வெற்றிபெறுவது இந்தியத் தேர்தல் கலாசாரத்தில் சிரமம்தான். ஆனால் காங்கிரஸ் தேர்தல் காலத்தில் அமைத்த வியூகத்தில் விழுந்திருந்த பெரிய ஓட்டைதான், பா.ஜ.க வை எதிர்த்து களமிறங்கிய மதசார்பற்ற ஜனதாதளத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டு பொது எதிரியான பா.ஜ.கவை எதிர்க்காமல் விட்டதாகும். கர்நாடக முதல்வராக வீற்றிருந்த சித்தராமையாவுக்கு மாநிலத்தில் காங்கிரசின் உண்மையான செல்வாக்கு எவ்வாறு இருக்கிறது என்பதை முன்கூட்டியே அறிந்திருப்பதற்கான சகல வசதிகளும் இருந்தன. உண்மை நிலவரத்தை அறிந்து, ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்துக் கொள்வதே உசிதமாக இருக்கும் என்பதை அவர் டெல்லி தலைமைக்கு எடுத்துச் சொல்லியிருக்கலாம். ஆனால் கர்நாடகாவில் சரியான அரசியல் கணக்கு போடத் தெரியாததால் ஜனதா தளமும் காங்கிரசும் தனித்தனியாக போட்டியிட வேண்டியதாயிற்று. இவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைத்திருந்தால் 116 ஆசனங்களைப் பெற்று பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சி அமைத்திருப்பார்கள். இந்த ஞானோதயம் தேர்தல் முடிவுகள் வெளியானது பின்னரேயே அக் கட்சிகளுக்கு வந்ததில் இருந்து, இக் கட்சிகள் கர்நாடக அரசியலில் எவ்வளவுக்கு ஞானசூனியமாக இருந்திருக்கின்றன என்பதை அறிந்து கொள்ளலாம். தென்னக மாநிலங்களுக்கான வாசலாக கர்நாடகத்தைக் கருதுகிறோம் என்ற பா.ஜ.க.வின் உறுதிப்பாட்டை காங்கிரசிடம் காணமுடியவில்லை. காங்கிரஸ் அடுத்தடுத்து அடைந்து வரும் பின்னடைவுகளுக்கு அதன் தலைமையின் அணுகுமுறை, செயற்பாடுகளில் ஏற்பட்டிருக்கும் குறைப்பாடுகள்தான் காரணமா? ராகுல் காந்தி இன்னும் நெருக்கமாகத் தமது மாநிலத் தலைமைகளுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை இத்தோல்விகள் உணர்த்துகின்றனவா? என்ற கேள்விகள் எழும்பியுள்ளன. இத்தோல்விகளும் சறுக்கல்களும் ராகுல் காந்தியின் தலைமை மீதான கேள்விகள் கட்சிக்குள் எழுப்பப்படும் என்பதும் நேரு குடும்ப செல்வாக்கு சரிவடைய வழி வகுக்கும் என்பதும் கவனத்துக்குரியன.
கர்நாடகத் தேர்தல் முடிவடைந்ததும் காங்கிரசும் மதசார்பற்ற ஜனதா தளமும் திடீரென கூட்டணி அமைத்து ஆட்சிக்கு உரிமை கோரி கடிதம் வழங்கின. பின்னர், கர்நாடக ஆளுநர் வஜுபாய்வாலா, ஆட்சி அமைக்க யாரை அழைக்கப்போகிறார் என்ற சர்ச்சை முழு இந்தியாவிலுமே எழுந்தது ஏனெனில் இந்தியாவின் மாநில ஆளுநர்கள் மத்திய அரசால் நியமனம் செய்யப்படுபவர்கள். மத்திய அரசின் மாநில பிரதிநிதிகளான அவர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார்கள். ஜனாதிபதிக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள். மாநில ஆளுநருக்கென அதிகாரங்கள் இந்திய அரசியல் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன. மாநில அரசுக்கு பதவிப் பிரமாணம் செய்வது, அவசியம் ஏற்பட்டால் மாநில ஆட்சியைக் கலைத்துவிட்டு கவர்னர் ஆட்சியை பிரகடனப்படுத்துவது, ஒரு தேர்தலின் பின்னர் எந்தக் கட்சிக்கு ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை வழங்குவது, ஒரு கட்சியின் சட்டமன்றத் தலைவருக்கு முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்யப்பட்டு அவர் சட்டசபையில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்கத் தவறினால் அவரை நீக்கி விட்டு மற்றொருவருக்கு அந்த வாய்ப்பை வழங்குவது, இருவருக்கும் ஆட்சியை தக்க வைக்க முடியாத நிலையில் மறுதேர்தலுக்கு உத்திரவிடுவது என்பன அவர் அதிகாரத்துக்கு உட்பட்டவை. எனினும் இந்திரா காந்தி காலத்தில் இருந்து கவர்னர் என்பவர் சுதந்திரமாகவும் சட்டப்படியும் இயங்க முடியாதவராகவும் மத்தியில் ஆட்சியில் அமரும் கட்சியின் விருப்பங்களை மாநிலங்களில் செயற்படுத்துபவராகவுமே இருந்து வருகின்றார். மோடியின் ஆட்சியில் இன்னும் ஒரு படி மேலேபோய் மத்திய அரசின் கைப்பாவையாகி இருக்கிறார்கள் இந்த ஆளுநர்கள்!
மாநில ஆட்சியில் ஆளுநர்கள் நேரடியாகத் தலையிடுவது மரபல்ல. பாண்டிச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி என்பதால் அங்குள்ள ஆளுநர் கிரண்பேடி மாநில விவகாரங்களில் நேரடியாகத் தலையிடுவதோடு தன்னிச்சையாக சட்டசபைக்கான உறுப்பினர்களை நியமனமும் செய்கிறார். தமிழகத்தில் பல இடங்களுக்குச் சென்று அதிகாரிகளுடன் சந்திப்புகளை நடத்தி பரிசீலனை செய்வதோடு, ஊடக சந்திப்பையும் நடத்துகிறார் தமிழக ஆளுநர், பன்வாரிலால். இதைத்தட்டி கேட்க முடியாத நிலையில் தமிழக அரசு மௌனம் காக்கிறது. ஏற்கனவே பெரும்பான்மை பெறாத நிலையிலும் மணிப்பூர், மேகலாயா, அஸாம் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க ஆளுநரின் துணையுடன் ஆட்சி அமைத்திருக்கிறது. இவற்றுக்கு முன்னுதாரணங்கள் இல்லை.
இத்தகைய பின்னணியில்தான் கர்நாடகத் தேர்தலில் அவசர அவசரமாக பா.ஜ.கவின் எடியூரப்பாவுக்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்திருக்கிறார் ஆளுநர் வாஜூபாய். கர்நாடக சட்டமன்றத்தில் அதிக ஆசனங்களைப் பெற்ற தனிப்பெரும் கட்சியாக விளங்குகிறது பா.ஜ.க. 104 ஆசனங்களை அது கைப்பற்றியிருக்கிறது. இதே சமயம் காங்கிரஸ் 78, மதசார்பற்ற ஜனதாதளம் 38 என இந்தக் கூட்டணி 116 ஆசனங்களை வைத்துள்ளது. இரண்டு சுயேட்சைகளும் இக்கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதால் இக் கூட்டணி 118 ஆசனங்கள் தம்மிடம் இருப்பதாக கூறியுள்ளது.
ஆனால் ஆளுநர் வாஜுபாய் தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி 116 எண்ணிக்கையை ஒதுக்கி விட்டு 104 ஆசனங்களை வைத்திருக்கும் பா.ஜ.க வையே அழைத்தார். உடனடியாக எடியூரப்பாவுக்கு முதல்வர் பதவியை அளித்தார். 15 நாட்களில் சட்டசபையில் பெரும்பான்மையை நிறுவ வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது. கர்நாடக சட்ட சபையில் ஆட்சி அமைக்க வேண்டுமானால் 113 ஆசனங்கள் அவசியம். ஆனால் எடியூரப்பாவிடம் இருப்பதோ 104. இச் சட்டசபையில் வெற்றி பெற்றிருப்பவை மூன்று கட்சிகளும் இரண்டு சுயேச்சைகளும் தான். இதில் பா.ஜ.க.வைத் தவிர்த்து பார்த்தால் ஏனைய மூன்று பிரிவனரும் ஓரணியில் இருக்கையில் பா.ஜ.க சட்டமன்ற குழு எங்கிருந்து ஒன்பது உறுப்பினர்களைத் தேடும் என்பது முக்கியமான கேள்வி. இக் கேள்விக்கு ஒரே பதில், குதிரைபேரம் நடத்தியாவது காங்கிரஸ் மற்றும் ஜனதாதளத்தில் இருந்து ஒன்பது அல்லது பத்து உறுப்பினர்களை இந்தப் பக்கமாகக் கொண்டு வாருங்கள் என்பதே, இங்கே எழுப்பப்படும் கேள்வி, இது போன்ற முக்கியமான தருணங்களில் சட்டப்படி மட்டுமே செயற்பட வேண்டிய ஆளுநர் அவ்வாறு செயற்படாமல், எப்படியாவது உறுப்பினர்களை பிடித்து 15நாட்களுக்குள் பெரும்பான்மையை நிலை நாட்டி விடுங்கள் என்று எடியூரப்பாவிடம் சொன்னதற்கு சமனான ஒரு காரியத்தை பக்கச் சார்பாக செய்திருக்கிறார் என்று தான் இதை பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது. இதைத்தான் வைகோவும், கர்நாடக ஆளுநர் சட்டப்படி செயற்படாமல் பா.ஜ.க வின் ஏஜண்ட் போல் செயற்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார்.
எடியூரப்பாவுக்கு முதல்வ்ர் பதவியை வழங்கி அவருக்கு 15 நாள் அவகாசம் தந்தது முற்றிலும் அரசியல் நயவஞ்சகத்தனம் என ஆளுநர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதோடு அவர் பதவி விலக வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. கொஞ்சம் விரிவாகப் பார்தத்ால், ஆளுநர் தான் என்ன செய்வார், அவரது ‘பொஸ்’ சொல்கிறபடி ஆடித்தானே ஆக வேண்டும் என்ற அவரது பரிதாபமான நிலையும் தெரிகிறது.
நாட்டை முன் நிறுத்தாமல் கட்சி அரசியல் இலாபங்களுக்கு முக்கியத்துவம் தரும் அரசியல் கொண்ட ஜனநாயக நாடுகள் முன்னேறுவதில்லை என்ற கூற்றுக்கு இலங்கையும் இந்தியாவும் நல்ல உதாரணங்கள் என்பதை இங்கே சொல்லி வைக்க வேண்டும்.
ஒரு ஆளுநர் மாநிலமொன்றில் நிலையான ஆட்சியை அமைக்க உதவ வேண்டியது அவரது சட்ட ரீதியான கடமையாக இருக்க, 116 என்ற பெரும்பான்மை எண்ணிக்கையை புறந்தள்ளிவிட்டு 104 என்ற குறைந்தபட்ச பெரும்பான்மை எண்ணிக்கைக்கு கிட்டவும் வராத கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தை தந்தது தவறான முன்னுதாரணமாகி இருக்கிறது.
முன்னர் கூட்டணி அமைப்பதில் தவறிழைத்த காங்கிரஸ் தன்னை சுதாரித்துக் கொண்டு, எடியூரப்பாவுக்கு முதல்வர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்கு கவர்னர் எடுத்த முடிவு செல்லாது என்று அறிவித்து இடைக்கால தடை விதிக்குமாறு புதுடில்லி உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை அவசர வழக்காக எடுத்துக் கொண்ட நீதிமன்றம் வியாழன் அதிகாலை 1.45க்கு விசாரணையை ஆரம்பித்து 4.30 வரை வாதங்களைக் கேட்டது. இறுதியில் ஆளுநரின் அதிகாரத்துக்குள் தான் தலையிட விரும்பவில்லை என்றும் கவர்னர் மற்றும் ஜனாதிபதியின் அதிகாரங்களில் குறுக்கீடு செய்ய முடியாது என்றும் கூறி பதவியேற்புக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. ஆனால் இவ்விசாரணையின் தீர்ப்பு மறுநாள் வெள்ளிக்கிழமை வழங்கப்படும் என்று அறிவித்தது. வெள்ளியன்று வெளியான தீர்ப்பு, எடியூரப்பா மறுநாளே (சனிக்கிழமை) தனது பெரும்பான்மை பலத்தை சட்ட சபையில் நிரூபித்துக் காண்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவு, ஒரு வகையில் கவர்னரின் கட்டளையில் குறுக்கீடு செய்த மாதிரி இருக்கிறது அல்லவா? ஏனெனில் ஆளுநர் 15 நாள் அவகாசம் விதிக்க, உச்ச நீதிமன்றம் அதை மாற்றி, சனிக்கிழமை மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டிருப்பது ஆளுநரின் அதிகாரத்தில் குறுக்கீடு செய்ததாகாதா?
சனிக்கிழமையே நம்பிக்கை வாக்கொடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற உத்தரவையடுத்து, காங்கிரசும் ஜனதா தளமும் பெருமூச்சு விட்டுள்ளன. வாக்கெடுப்பில் தாம் வெற்றிபெற்று எடியூரப்பாவை பதவி இழக்கச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை அவற்றுக்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் தமது சட்ட மன்ற உறுப்பினர்களை 15 நாட்களாக ஹோட்டல்களில் ஒளிந்து வைத்து பாதுகாக்க வேண்டிய கஷ்டத்துக்கு முடிவு கிடைத்துள்ளது. தமது சட்ட மன்ற உறுப்பினர்ககளை நூறு கோடி, 150 கோடி என விலைபேசி குதிரைபேரம் நடத்துவதற்கான அவகாசம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளதால் இச் சட்டமன்ற உறுப்பினர்களை ‘கன்னி கழியாமல்’ சட்ட சபையில் நிறுத்த முடியும்.
இன்று பத்திரிகை படிக்கும் நீங்கள், நம்பிக்கை வாக்கெடுப்பில் யார் வெற்றி பெற்றது அல்லது என்னென்ன தகிடு தத்தங்கள் நிறைவேற்றப்பட்டு சபை குழப்பியடிக்கப்பட்டது போன்ற விவரங்களை முன்பக்கச் செய்திகளாக படித்திருப்பீர்கள். இக்கட்டுரை எழுதப்பட்ட சனிக்கிழமையன்று உச்ச நீதிமன்றமே கதாநாயகனாகவும் பா.ஜ.க வின் வெற்றி வாய்ப்பு குறைவானதாகவும் காணப்பட்டது. இதே சமயம் கர்நாடக சட்ட சபைக்கு சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட கே.ஜி. கோப்பையா இச் சபையை நடத்துவதற்கு தகுதியற்றவர் என்றும் அவர் மாற்றப்பட வேண்டும் என்றும் ஒரு அவசர மனுவை காங்கிரஸ், டில்லி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.
ஊழலை ஒழிப்பதாகவும், கறுப்பு பணத்தை இந்தியாவில் மட்டுமல்ல, அயல்நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பில்லியின் கணக்கிலான கறுப்புப் பணத்தையும் வெளியே கொண்டுவந்து அவற்றை தலைக்கு 15 இலட்சம் என இந்திய குடிமக்களுக்கு விநியோகிக்கப் போவதாகவும் (1970 தேர்தலின் போது சந்திரனில் இருந்தாவது அரிசி கொண்டு வந்து தருவேன் என ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா பிரசாரம் செய்து வெற்றி பெற்றது ஞாபகத்துக்கு வருகிறதா?) சொல்லி பதவிக்கு வந்தவரே நரேந்திர மோடி. அவர் ஆயிரம் மற்றும் 500 ரூபா நோட்டுகளை செல்லாக்காசாக்கிய போதிலும் கறுப்புப் பணம் ஒழியவில்லை என்பதோடு, சட்டமன்ற உறுப்பினர்களை கோடிகளுக்கு விலை பேசவும் தேர்தல்களில் இலஞ்சம் கொடுப்பதற்கும் கட்சிகள் பல நூறு கோடிகளை இறக்குவதற்கும் எங்கிருந்து வருகிறது பணம்? என்ற கேள்விக்கு எந்த நேர்மையான பதிலும் கிடையாது.
மோடியின் அரசு சொல் ஒன்று செயல் வேறொன்று என்றிருப்பதால் அடுத்த வருடம் வரவுள்ள பாராளுமன்றத் தேர்லில் தென் மாநிலங்களில் பா.ஜ.க வுக்கு எதிர்மறையான பலன்கள் கிட்டலாம் என்று ஒரு எதிர்வு கூறலும் உள்ளது. எந்த வழியிலாவது நாங்கள் வெற்றிபெறுவோம் என்ற அகங்காரமும் அதை சாதிப்பதற்கான வழிமுறைகளும் ஓரிருமுறை பெற்றிபெறலாம். ஆனால் அது ஏற்படுத்தும் மோசமான அபிப்பிராயம் வாக்காளர் மனதில் எதிர்ப்பு உணர்வை ஒட்டுமொத்தமாக உருவாக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது. இந்துத்துவம் பேசும் பா.ஜ.க வினருக்கு,
வினாசகாலே விபரீத புத்தி (முடிவு நெருங்கும் போது புத்தி விபரீதமாகிவிடும்) என்ற சொற்றொடர் மறந்திருக்க முடியாது. இந்திரா காந்திக்கு எதிராக ஜெயபிரகாஷ் நாராயணன் ஜனதா கட்சியை ஆரம்பித்தபோது அவர் முன் வைத்த இந்திராவுக்கு எதிரான கோஷம்தான்.
வினாசகாலே விபரீத புத்தி!