மக்கள் பிரச்சினைகளில் அமெரிக்க சமூக ஊடகங்கள் | தினகரன் வாரமஞ்சரி

மக்கள் பிரச்சினைகளில் அமெரிக்க சமூக ஊடகங்கள்

‘1991 வளைகுடா யுத்தத்தின்போது ஏற்பட்ட மனித இழப்புகளின் எடிட் செய்யப்படாத

முதலாவது வீடியோவை வெளியிட்டதாக

சொன்னபோது அவரில் நான் இன்னொரு

பரிமாணத்தைக் கண்டேன்.

அது சர்வதேச

மனிதநேயம்.

அவ்வாறான ஒரு வீடியோவை இங்கே வெளியிட்டிருந்தால் தேசத்துரோகியாகி இருப்போம் என்ற சிந்தனையை என்னால் தவிர்க்க முடியவில்லை’

 

பிற்பகல் ஒரு மணியிருக்கும் வாகன நெரிசல் நிறைந்த நியூயோர்க் வீதிகளில் நாம் பயணித்த பஸ் சென்றுகொண்டிருந்தது. மதிய உணவு நேரம் என்பதால் வானுயர்ந்த கட்டடங்களிலிருந்து வெளியேவரும் பணியாளர்கள் கையில் உணவுப் பொதிகளுடன் அவசரமாக கடந்து செல்கின்றனர். அன்றைய நிகழ்ச்சி நிரலுக்கு அமைய நியூயோர்க்கின் லாஃபாயெட்டே வீதியில் அமைந்துள்ள டௌன்டவவுன் கொமியூனிட்டி ரீவி சென்டர் (DCTV) தொலைக்காட்சி நிறுவனத்துக்குச் சென்றுகொண்டிருக்கின்றோம்.

விண்னைப் பிளக்கும் அளவுக்கு உயர்ந்த கட்டடங்களுக்கு மத்தியில் ஹொலிவூட் திரைப்படங்களில் வருவதைப் போன்று பழைமை வாய்ந்த கட்டடமொன்றின் முன்னால் எமது வாகனம் நிறுத்தப்பட்டது. இதுதான் நாங்கள் தேடிவந்த இடம், எமக்காக ஜோன் அல்பேர்ட் காத்துக் கொண்டிருப்பார் எனக் கூறியவாறு எம்மை வாகனத்திலிருந்து இறங்கச் சொன்னார் எம்முடன் வந்திருந்த வழிகாட்டி மார்க்ரட் பொக்ஸ். நாம் ஐவரும் ஒருவர் பின் ஒருவராக வாகனத்தைவிட்டு இறங்க, வெளியே மெதுவான குளிர். கைகளில் ஏந்திவந்த ஜக்கட்டுக்குள் புகுந்துகொண்டோம். அழகான கட்டடத்தின் இருப்புக் கதவுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த அழைப்பு மணியை ஒலித்ததும், அதில் பொருத்தப்பட்டிருந்த தொலைபேசியில் பெண் குரல் கேட்டது. இலங்கையிலிருந்து ஊடகவியலாளர் குழு அல்பேர்ட்டைச் சந்திக்க வந்துள்ளது என்ற தகவல் பரிமாறப்பட, கதவு தானாகத் திறந்தது. நாமும் உள்ளே சென்றோம்.

ஊடகவியலாளர், குறும்பட இயக்குனர், எமி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்ற இயக்குனர் என பல பரிணாமங்களைக் கொண்ட ஜோன் அல்பேர்ட்டை சந்திப்பதற்கே நாம் அங்கு செல்கின்​ேறாம். இவருடைய அசாத்தியத் திறமை தொடர்பில் நான் ஏற்கனவே இணையத்தளத்தில் படித்திருக்கின்றேன். அது மாத்திரமல்ல; அவர் நடத்திவரும் டௌன்டவுன் கொமியூனிட்டி ரீவி சென்டர் நிறுவனம் என்னைப் போன்ற பல இளம் ஊடகவியலாளர்களை உருவாக்கியுள்ளது என்ற மேலதிக தகவலை எமக்கு வழங்கப்பட்ட கோப்பிலிருந்து தெரிந்துகொண்டேன். இவரைச் சந்திப்பதற்கு முன்னர் இவருடைய இளைய சகோதரரை வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகையில் சந்தித்திருந்தோம். சில மணி நேரங்களில் சகோதரர்கள், அதுவும் வெவ்வேறு ஊடகங்களைச் சேர்ந்தவர்களுடன் சந்திப்பு. பழமைவாய்ந்த கட்டடத்துக்கே உரித்தான பழைமையான மின்தூக்கியில் ஏறி முதலாவது மாடிக்குச் சென்றோம்.

எமது வருகையை அறிந்து கொண்டிருந்த அல்பேர்ட்டின் உதவியாளர் எம்மை ஒரு அறையில் அமருமாறு கேட்டுக் கொண்டார். ஏற்கனவே ஒரு சந்திப்பை முடித்து வந்தமையால் சிறிய பசி இருந்தது. சில நிமிடங்களில் சிவப்பு நிற டீஷேர்ட், நீல ஜக்கட்டுடன் தலையில் தொப்பியணிந்த நபர் ஒருவர் எம்முன்னால் வந்துநின்றார். அவருடைய கையில் தட்டொன்றில் சொக்லட்கள் நிறைந்திருந்தன. இணையத்தில் அறிந்த விடயங்களுக்கு அமைய அல்பேர்ட்டுக்கு 70 வயது. ஆனால் நேரில் பார்க்கும்போது வயதின் வெளிப்பாடு தெரியவில்லை. எம்மை சிரித்த முகத்துடன் வரவேற்ற அவர், ஒவ்வொருவராக கைலாகு கொடுக்க நாமும் எம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம். நாம் அமர்ந்திருந்த அறையில் அமர்ந்து எம்முடன் கதைக்கத் தொடங்கினார்.

“இப்பதான் உங்கள் தம்பியை சந்தித்து வருகின்றோம்” என்றோம். அப்படியா யார் இளமையானவர்கள் எனக் கேட்டு சிரித்தபடியே “உங்களுக்கு என்ன தெரிந்துகொள்ள வேண்டும்?” என்று கேட்டார்.

நாம் மேற்கொண்டிருப்பது புலனாய்வு ஊடகத்துறை பற்றிய சுற்றுப் பயணம் என்பதால் இத்துறை பற்றியே அவருடன் கதைத்தோம்.

1970களில் நியூயோர்க் நகரில் காணப்பட்ட பல்வேறு குறைபாடுகளை வெளிக்கொண்டு வந்ததுடன் அவருடைய இந்த ஊடகப் பயணம் ஆரம்பமாகியுள்ளது. இளைஞராகவிருந்த காலத்தில் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் பல போராட்டங்களில் ஈடுபட்டு, இதற்காக பொலிஸாரிடமும் அடிவாங்கியுள்ளார். இவ்வாறு உதைவாங்கி நியூயோர்க்கின் டௌன்டவுனில் உள்ள மாநில வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது, சத்திரசிகிச்சைக் கூடத்தில் போதிய வசதி இன்மையால் சகநோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை நேரடியாகப் பார்த்ததில் ஏற்பட்ட உந்தலால் அதை அவர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பின்னர் அதை ஊடகத்தில் வெளியிட்டார் இப்படித்தான் அவருடைய சமூகப்பணி ஆரம்பமானது. அவரும் அவரடைய மனைவியும் இணைந்து இந்தத் தொலைக்காட்சியை ஆரம்பித்தனர். வைத்தியசாலையில் எடுக்கப்பட்ட அந்த வீடியோ காட்சியையும் அவர் எமக்குப் போட்டுக் காண்பித்தார்.

தான் வசிக்கும் பகுதியில் அக்கம் பக்கத்தில் உள்ள பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதற்காக இந்த சமூகத் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. நவீன தொழில்நுட்பம் நிறைந்த உலகத்தில் ஊடகங்கள் வழமையான தமது வொட்ச் டோக் எனப்படும் காவல் நாய் பணிக்கு அப்பால் சமூகத்துக்கான பங்காளியாக தற்போது மாறியுள்ளன. இவ்வாறு மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதற்காக ‘கொம்யூனிட்டி ஊடகங்கள்’ அதாவது சமூகம்சார்ந்த ஊடகங்கள் பல அமெரிக்காவில் இயங்கி வருகின்றன. இவ்வாறான ஊடகங்கள் இலாப நோக்கற்றவை. அர்பேர்ட்டின் இந்த நிறுவனமும் இலாபநோக்கற்ற நிறுவனம். அமெரிக்காவில் பல்தேசிய கம்பனிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் லாபத்தையே நோக்காகக் கொண்ட பாரிய தொலைக்காட்சி வலையமைப்புக்கு மத்தியில் இதுபோன்ற சமூக ஊடகங்களும் மக்கள் மத்தியில் பிரபல்யமாகவே இருக்கின்றன. குறிப்பாக அயலில் உள்ள சமூகத்தவர்களின் பங்களிப்பு அதிகமாக விருப்பதுடன், இவ்வாறான ஊடகங்களுக்கு நிதி திரட்டும் நோக்கில் பல நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

இத்தகைய பின்புலம் கொண்ட இந்தத் தொலைக்காட்சி நிறுவனம் ஊடகத்துறையில், குறிப்பாக வீடியோ துறையில் கற்க விரும்பும் மாணவர்களுக்கும் உதவுகிறது. கடந்த 30 வருடங்களில் டி.சி.ரி.வி நிறுவனம் உலகம் முழுவதிலும் 50 ஆயிரம்பேரை இத்துறையில் பயிற்றுவித்துள்ளது. குறிப்பாக குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இதனால் நன்மை அடைந்துள்ளனர். செய்தி சேகரிப்பு, குறும்பட தயாரிப்பு, வீடியோ எடிட்டிங், கமரா கையாள்வது உள்ளிட்ட பல நுட்பங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. பணத்துக்காக செய்வது என்பதைவிட சமூகத்தின் வளர்ச்சிக்காக அல்லது தனது திருப்திக்காக இத்துறையில் ஈடுபட்டு வருவதாக அவர் எம்மிடம் கூறினார்.

ஊடகவியலாளன் என்ற ரீதியில் அல்பேர்ட்டின் வெளிப்படுத்தல்கள் அமெரிக்காவுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கவில்லை. எல்லை தாண்டிச் சென்று செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதே தனது ஆர்வம் என்றார்.

(12ஆம் பக்க தொடர்)

அமெரிக்காவின் பரம எதிரியாகவிருந்த கியூபாவின் தலைவர் பிடல் கஸ்ட்ரோவை சந்தித்து நேரடியாக செவ்வியைப் பெற்ற ஒருசில ஊடகவியலாளர்களில் இவரும் ஒருவர். அவருடன் இருந்த நெருக்கத்தில் கியூபாவுக்குள் சுதந்திரமாகச் சென்றுவரும் வாய்ப்பு இவருக்குக் கிட்டியிருக்கிறது.

என்.பி.சி நிறுவனத்தின் ஊடகவியலாளராக இருக்கும்போது 1991ஆம் ஆண்டு இடம்பெற்ற வளைகுடா யுத்தத்தில் ஏற்பட்ட மனித இழப்புக்கள் பற்றிய எடிட் பண்ணப்படாத வீடியோவை முதலில் வெளியிட்டிருந்த அனுபவத்தையூம் அவர் பகிர்ந்துகொண்ட போது அவருள் நான் இன்னொரு பரிமாணத்தைக் கண்டேன். அது மனித நேயம். இங்கே அதைச் செய்தால் தேசத்துரோகிகளாகி விடுவோம்!

சமூக ஊடகம் என்பதால் தமது நிறுவனத்தின் வளங்கள் குறிப்பாக கேட்போர்கூடம் மற்றும் வீடியோ கமராக்கள் போன்ற உபகரணங்கள் வாடகைக்கு விடப்பட்டு அதன் மூலம் பணம் ஈட்டப்பட்டு வருவதையும் சுட்டிக் காட்டினார். பசியையும் மறந்து அவருடன் இரண்டு மணித்தியாலங்கள் கலந்துரையாடிய நிலையில், அலுவலகத்தை சுற்றிப் பார்ப்பதற்கு எம்மை அழைத்துச் சென்றார். நாம் இருந்த அறைக்கு முன்னாலேயே கேட்போர் கூடம் இருந்தது. அங்கும் ஆசிரியர்களுக்கான வெளிநிகழ்வொன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. மேற்தளத்தில் வகுப்பறைகள் அதாவது கணனிகளுடன் கூடிய வகுப்பறைகள் காணப்பட்டன. கற்கை நெறிகளுக்குப் பொறுப்பான ஒரு பெண்ணை எமக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

சிறிது நேரம் அந்தப் பெண்ணுடன் உரையாடிக் கொண்டிருந்துவிட்டு புறப்படுவதற்கு ஆயத்தமானதும் எம்மை கோப்பி அருந்துவிட்டுப் போகுமாறு அழைப்பு வந்தது. அங்கிருந்த நபர் ஒருவர் ‘அல்பேர்ட் சிறப்பாக கோப்பி போடுவார். டேஸ்ட் பண்ணிப் பாருங்கள்’ எனக் கூறினார். பசியுடன் இருந்த எமக்கு அது சற்று ஆறுதலைத் தந்தது. உணவருந்தும் மேசையில் எமக்காக குட்டி கோப்பைகளில் சூடான கோப்பி தயாராகவிருந்தது. உண்மையில் கோப்பி சூப்பராகத்தான் இருந்தது! நியூயோர்க் நகரில் நாம் செல்லக் கூடிய உணவகங்கள், பார்க்கக்கூடிய இடங்கள் பற்றிய தகவல்களையும் அவர் எமக்கு வழங்கினார்.

ஏற்கனவே, எமக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிவடைந்திருப்பதால் வான் சாரதியிடமிருந்து மார்க்கிரட்டுக்கு பலதடவைகள் தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டிருந்தன. நாம் விடைபெறும் நேரம் வந்துவிட்டது எனக் கூறியதும், வழியனுப்பிவைக்க அவரும் கீழ் மாடிக்கு வந்தார். அவருடைய கட்டடத்துக்கு முன்னால் குழுப் புகைப்படமொன்றையும், செல்பி ஒன்றையும் கிளிக்கிவிட்டு நாமும் வாகனத்துக்குள் ஏறிக் கொண்டோம். வாகனம் ஹோட்டலை நோக்கிச் செல்ல, பசிக் களையுடன் இருந்த எனக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் ‘புலனாய்வு ஊடகத்துறை’ தொடர்பில் அமெரிக்காவுக்குப் புறப்பட்ட காட்சிகளே மனக்கண்ணில் தோன்றின.

 

(நினைவுகள் தொடரும்...)

Comments