ஆம்ஸ்டர்டாம்மில் இறங்கியபோது | தினகரன் வாரமஞ்சரி

ஆம்ஸ்டர்டாம்மில் இறங்கியபோது

அல்பேர்ட்டுடன் பகிர்ந்துகொண்ட அனுபவங்களையும், இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமெரிக்கா சென்ற அனுபவங்களையும் மீட்டியவாறு நான் நியூயோர்க் வீதியில் பயணித்துக் கொண்டிருந்தேன். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வருடா வருடம் உலகளாவிய ரீதியில் உள்ள பல்துறைசார்ந்தவர்களை அமெரிக்காவுக்கு அழைத்து அவர்களின் துறைபற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதோடு புதிய விடயங்களையும் அறிந்துகொள்ளச் செய்யும் நோக்கில் ‘சர்வதேச விருந்தினர்கள் தலைமைத்துவ திட்டம்’ (இன்டநஷனல் விசிட்டர்ஸ் லீடர்ஷிப் புரோகிராம்) என்ற ஒரு திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இலங்கையிலிருந்து ஊடகத்துறை சார்ந்தவர்கள் பலர் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். ‘புலனாய்வு ஊடகத்துறை’ என்ற தலைப்பில் என்னையும் இத்திட்டத்துக்குத் தெரிவுசெய்திருப்பதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. அறிவித்த நாள் முதல் முதன் முறையாக அமெரிக்காவுக்கு செல்லப் போகிறோம் என்ற பரபரப்பு எனக்குள் தொற்றிக் கொண்டது.

இலங்கையிலிருந்து என்னைவிட மேலும் நான்கு சக ஊடகவியலாளர்கள் தெரிவுசெய்யப்பட்டிருப்பதாகவும், எமது பயணம் ஜனவரி 20ஆம் திகதி முதல் பெப்ரவரி 12ஆம் திகதிவரை இருக்கும் என்றும் எனக்குத் தெரியப்படுத்தப்பட்டது. முதலாவது அமெரிக்கப் பயணம், முதலாவது நீண்ட பயணம் என ஏகப்பட்ட புதிய அனுபவங்களைப் பெறப்போகிறேன் என்ற ஆர்வத்துடன், பயண ஏற்பாடுகளை மேற்கொண்டேன். பதினெட்டு மணித்தியாலங்கள் விமானத்தில் பயணிக்க வேண்டும், சுமார் 24 மணித்தியாலங்களின் பின்னரே இன்னொரு நாட்டைச் சென்றடையப் போகிறோம். வழமைபோல இறுதிவரை பயண ஏற்பாடுகளிலேயே நேரம் செலவானது. ஜனவரி 21ஆம் திகதி அதிகாலை 2 மணிக்கு விமானம், ஆரம்பம் என்பதால் 20ஆம் திகதி இரவே விமான நிலையத்துக்குச் சென்றுவிட்டோம். வார இறுதிநாள் என்பதால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நீண்ட வரிசை. நாம் ஒரு குழுவாக நின்று சகல சோதனைகளையும் முடித்துக் கொண்டு விமானத்தில் ஏறினோம்.

நெதர்லாந்து நாட்டுக்குச் சொந்தமான ‘றோயல் டச் எயார்வெய்ஸ்’ நிறுவனத்தின் ‘கே.எல்.எம்’ விமான சேவையில் எமது பயணம். போயிங் ரக பெரிய விமானம். தொடர்ச்சியாக 11 மணித்தியாலங்கள் பயணிக்கப் போகும் விமானம் கம்பீரமாக நின்றது. விமானத்தில் ஏறிய எம்மை வாசலிலேயே விமான பணிப் பெண்கள் வரவேற்க, எமது ஆசனங்களைத் தேடிச் சென்று அமர்ந்துகொண்டோம். சரியாக 2 மணிக்கு விமானம் புறப்பட்டது. எமது முதலாவது தரிப்பு நெதர்லாந்தின் அம்ஸ்டர்டாம் விமான நிலையம் என்பதால் கே.எல்.எம் விமானசேவையில் நாம் புறப்பட்டோம். விமானம் தரையிறங்குவதற்கு ஐந்து நிமிடங்கள் இருப்பதாக விமானி அறிவிக்க நாமும் இறங்குவதற்குத் தயாரானோம். ஜன்னல் ஓர் ஆசனத்தில் நான் அமர்ந்திருந்தமையால் வெளியே எட்டிப்பார்த்தேன். நெதர்லாந்து நேரம் 8 மணி எனக் காண்பித்தபோதும் வெளியே ஒரே இருட்டு. இலங்கையில் அதிகாலை 5 மணிபோன்று இருட்டு, கருமுகில்களால் மூடிக்கிடந்தன. விமானம் தரையிறங்கியதும் எமது பொதிகளை எடுத்துக் கொண்டு இறங்கினோம். நெதர்தலாந்து என்றதும் எனக்கு அந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. போர்த்துக்கேயரை விரட்டி விட்டு இலங்கையின் கரையோரப் பிரதேசங்களைத் தமது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தது. கருவாதோட்டங்களை அமைத்தது. கத்தோலிக்க சமயத்தை முடக்கிவிட்டு கிறிஸ்தவ சமயத்தை நிலைபெறச் செய்தது, யாழ்ப்பாணக் கோட்டையை விசாலமாக கட்டியது. காலியிலும் கொழும்பு முகத்துவாரம், கொட்டாஞ்சேனை போன்ற பகுதிகளில் இப்போதும் காணப்படும் டச்சு பாணி வீடுகள், ரேந்தை பின்னுதல், வுல்பெண்டோல் கோவில், பறங்கியர் சமூகம் என்றெல்லாம் என் நினைவுகள் விரிந்தன. உலக வல்லரசாக விளங்கிய ஒரு நாட்டுக்கு வந்துள்ளோம் என்ற எண்ணம் மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தின.

விமானத்திலிருந்து இறங்கியதும் குளிர் எம்மை நடுங்கவைத்தது. கையிலிருந்த ஜக்கட்டுக்குள் புகுந்துகொண்டோம். அமெரிக்காவின் வெஷிங்டன் செல்லும் அடுத்த விமானம் தரித்துநிற்கும் ‘டேர்மினல்;’ எங்கு உள்ளது என்பதை அறியவேண்டும் என்பதே எமது நோக்கம். அமெரிக்காவின் வொஷிங்டனுக்குச் செல்லும் அடுத்த விமானம் 4 மணித்தியாலங்களின் பின்னரே புறப்படும். சுமார் பத்து நிமிட நடைபயணத்தின் பின்னர் அமெரிக்க விமானத்தில் ஏறுவதற்கான டேர்மினலை அடைந்தோம். அங்கே சென்றதும் தான் புரிந்தது, நமது விமானம் மேலும் ஒரு மணித்தியாலம் தாமதும் என்பது. ஏற்கனவே விமானத்தில் நீண்டநேரம் பயணித்த எமக்கு ஒரு மணித்தியால தாமதம் மேலும் சலிப்பைத் தந்தது. எமது காலைக் கடன்களை முடித்துக் கொண்டு விமான நிலையத்துக்குள் ஒரு விசிட் அடித்தோம்.

விமான நிலையத்துக்குள் பல பளபளப்பான கடைகள். மதுபானங்கள், சொக்லட்டுக்கள், வாசனைத்திரவியங்கள் என பலவிதமான பொருட்களுடன் காணப்பட்டன. இடையிடையே டொச் மொழியிலான அறிவிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. சிறிது நேரம் இருக்கைகளில் இருந்தவாறே உறங்கினோம். அம்ஸ்டர்டாங் நேரம் பிற்பகல் 2.20 மணிக்கு எமது அடுத்த விமானம் புறப்படும் என அறிவிக்கப்பட்டது. அரை மணிநேரத்துக்கு முன்னால் விமானத்தில் நாம் ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்டோம். உடற் பரிசோதனை சற்றுக் கடுமையாகவே இருந்தது. விமானம் புறப்பட்டு சில நிமிடங்களிலேயே எமக்கான மதிய உணவு பரிமாறப்பட்டது. அதனை உண்டுவிட்டு ஆழ்ந்த உறக்கம். டொம்மி ஆம்ஸ்டர்கிலிருந்து வொஷிங்டனுக்கு மேலும் 8 மணித்தியாலங்கள் பயணிக்க வேண்டியிருந்தது. இந்த எட்டு மணித்தியாலங்களில் பெரும்பகுதி தூக்கத்திலேயே கழிந்துவிட்டது.

அமெரிக்காவின் நேரப்படி மாலை 4.50 மணிக்கு எமது விமானம் வொஷிங்டன் டலஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது. டலஸ் என்பவர் அமெரிக்காவின் சிறந்த ராஜதந்திரிகளில் ஒருவர். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஐசனோவர் காலத்தில் வெளிவிவகார அமைச்சராக பணியாற்றியதாகவும் கடுமையான அல்சர் காரணமாக மரணமடைந்தார் என்றும் நான் படித்திருக்கிறேன். அமெரிக்காவுக்கு வந்துவிட்டோம் என்ற ஆர்வத்துடன் விமானத்திலிருந்து இறங்கினோம். அமெரிக்காவுக்குள் நுழையும் விருந்தினர்களுக்கு தனியான வரிசை. அமெரிக்க குடிவரவு, குடியகல்வு மற்றும் சுங்க அதிகாரிகளின் பரிசோதனைக்காக நாம் காத்திருக்க வேண்டும். எமது ஆவணங்களை தயாராக கைகளில் வைத்துக் கொண்டு வரிசையில் மெது மெதுவாக நகரத் தொடங்கினோம். சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு மேலாக வரிசையில் காத்திருந்தோம். எமக்கு முன்னால் பிறிதொரு நாட்டைச் சேர்ந்த ஒருவரைச் சந்தித்தோம். அவரும் ஐ.வி.எல்.பி திட்டத்துக்கு வந்திருப்பதாகவும், தான் கலைத் துறை சம்பந்தமாக அழைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். இறுதியாக என்னை அதிகாரி அழைக்கவும் சென்று எனது கடவுச்சீட்டை வழங்கினேன். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பில் வந்துள்ளமையால் பெரிதாக எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.

வெளியே எம்மை வரவேற்பதற்கும், எமது பயணம் முழுவதும் எம்மை வழிநடத்துவதற்கும் மாக்ரட் பொக்ஸ் என்ற பெண்மணி வருவார் என எமக்கு முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. நாமும் அவரை சந்திக்கும் ஆர்வத்துடன் விமான நிலையத்தின் வரவேற்புப் பகுதியை நோக்கி நகர்ந்தோம். ‘ஐ.வி.எல்.பி ஸ்ரீலங்கா’ என்ற அட்டையை கையில் ஏந்தியவாறு ஒரு பெண்மணி ஆசனத்தில் அமர்ந்திருந்தார். நாம் அவரிடம் சென்று “பொக்ஸ் நீங்களா?” எனக் கேட்டதும், “ஸ்ரீலங்கன் ஜேர்னலிஸ்ட் டீம்?” என எம்மிடம் அவர் கேட்டார். ஆம் என்றதும் அவருள் மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது. எமது பயணம் தாமதமடைந்தமையால் காத்திருந்து களைத்துப்போய் அமர்ந்து கிடந்த கதையைக் கூறினார். விமான நிலைய சோதனைகளை முடித்து வருவதற்கு ஒரு மணித்தியாலம் சென்றுவிட்டதைக் கூறியதும், சில வேளைகளில் அப்படித்தான் இருக்கும் என நியாயப்படுத்தினார்.

எம்மை அழைத்துச் செல்வதற்காக வானொன்றுடன் வந்திருந்த அவர், எமது பொதிகளை வாகனத்தில் ஏற்றுமாறு கூற நாமும் சகலவற்றையும் ஏற்றிக் கொண்டு வானில் புறப்பட்டோம். விமான நிலையத்தில் நிற்கும்போது இருந்த குளிர் வாகனத்தில் இல்லை.

இதுவரை திரைப்படங்களிலும், இணையங்களிலும் பார்த்த வொஷிங்டன் நகரின் பிரம்மாண்டத்தை ரசித்தபடியே செல்லலாம் என எண்ணியிருந்தபோதும், எமது பயணத்தில் ஏற்பட்ட தாமதங்களால் வெளியே இருட்டிவிட்டது. வொஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் எம்மை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஹோட்டலுக்கும் விமான நிலையத்துக்கும் இடையில் 45 நிமிட பயணத் தூரம். வாகனத்தில் செல்லும்போது வொஷிங்டன் நகரில் உள்ள முக்கிய கட்டடங்கள் மற்றும் கொலம்பிய மாநிலத்திலிருந்து வொஷிங்டன் எவ்வாறு உருவானது போன்ற விபரங்களை பொக்ஸ் விளக்கியவாறே வந்தார். மத்தியிலும் பயணக்களைப்பின் எம்மால் முடிந்தவற்றை பார்த்தவாறு அரைத் தூக்கத்தில் இருந்தோம். எமக்கு எந்த உணவு அதிகம் பிடிக்கும்! என்ற கேள்வியை பொக்ஸ் எம்மிடம் கேட்டார். நமக்கு சோற்றைத் தவிர வேறு எந்த உணவு பிடிக்கும். இந்தியன் என்று கூறவே எமது ஹோட்டலுக்கு அருகில் இருக்கும் சில இந்திய உணவகங்களின் பெயரைக் கூறிக் கொண்டு வந்தார். பல மாடிகளைக் கொண்ட கட்டடம் ஒன்றின் முன்னால் எமது வான் நின்றது. கொழும்பிலுள்ள ஹில்டன் ஹோட்டலைவிட பலமடங்கு பிரம்மாண்டமான கட்டடம் அது! எமக்கான அறைகள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.

அத்துடன், எமது விஜயத்தின் நிகழ்ச்சி நிரலும் ஹோட்டலில் ஏற்கனவே கையளிக்கப்பட்டிருந்தார். எமது வழிகாட்டி பொக்ஸ் 70 வயதுடைய அனுபவம் வாய்ந்த பெண்மணி என்பதால் அடுத்தநாள் திட்டம் பற்றி அன்றே எமக்கு விளக்கினார். அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வொஷிங்டன் நகரைச் சுற்றிப்பார்ப்பதே மறுநாள் நிகழ்ச்சி. சுற்றிக் காட்டுவதற்காக மற்றுமொரு வழிகாட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 9 மணிக்கு எம்மை வரவேற்பு கூடத்தில் சந்திப்பதாகக் கூறி அவர் விடைபெற்றுச் செல்ல, நாம் எமது அறைகளுக்குச் சென்றோம். அமெரிக்காவின் தலைநகரமான வொஷிங்டனை சுற்றிப் பார்க்கப் போகின்றோம். இதுவரை தொலைக்காட்சியிலும், இணைத்தளங்களிலும் பார்த்த வெள்ளை மாளிகை உள்ளிட்ட வொஷிங்டனின் அடையாளங்களை நேரில் பார்க்கப் போகிறோம் என்பதை நினைத்துக் கொண்டே ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்து போனேன். தூங்கிவிட்டேன்.

 

(நினைவுகள் தொடரும்)

Comments