ரஷ்ய வெளிவிவகார அமைச்சரின் முக்கியத்துவம் மிக்க வடகொரிய விஜயம் | தினகரன் வாரமஞ்சரி

ரஷ்ய வெளிவிவகார அமைச்சரின் முக்கியத்துவம் மிக்க வடகொரிய விஜயம்

வடகொரிய – அமெரிக்கா பேச்சுவார்த்தை யூன் 12 ஆம் திகதி நடைபெறும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ள்ார். இவ்வுறுதிப்பாடு நிரந்தரமானதா என்பது சந்தேகத்திற்குரியது. நிகழலாம் அல்லது நிகழாமல் போகலாம். ஆனால் வடகொரியா சிங்கப்பூர் உச்சி மாநாட்டை நடத்தியே முடிப்பது என்ற உறுதியுடன் பயணிக்கின்றது. இவ்வுறுதிப்பாட்டின் பின்னணியில் நிகழ்ந்து இருக்கும் சம்பவங்களை விளங்கிக் கொள்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கடந்த மாதத்தின் இறுதி நாளில் ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் sergei Lavro அரசமுறை பயணமாக வடகொரியா சென்றிருந்தார். அவரது விஜயம் ஒர் இராஜதந்திர பயணம் என்றும் வடகொரியாவின் உறுதிப்பாட்டுக்கு பக்கபலமானது என்பதையும் தெளிவுபடுத்த போதுமான தகவல் ஆகும்.

70 வருடங்களுக்கு முன்னர் கொரிய விவகாரம் முன்னாள் சோவியத் யூனியனுடன் நெருக்கமான பங்கெடுப்பாளராக முதன்மைப்படுத்தப்பட்டது. கொரியாவில் கம்யூனிச ஆட்சி முறை ஒன்றை ஸ்தாபிப்பதிலும் கொரிய கம்யூனிசக் கட்சியை கட்டமைப்பதிலும் சோவியத் யூனியன் அதிக பங்களிப்பை செய்திருக்கிறது. சீனா இராணுவ ரீதியில் வடகொரியாவிற்கு உதவி செய்திருக்கின்ற அதே சந்தர்ப்பத்தில் சோவியத் யூனியன் இராஜ்ய ரீதியாக உதவிகளையும் சோசலிசக் கட்டுமானத்தினையும் உறுதிப்படுத்துவதில் வெற்றி கண்டது. கொரியக் குடாவின் எல்லைகள் சோவியத் யூனியனாலும் சீனாவாலும் அதிகம் பங்கு போடப்படுகின்றது. இதன் தொடர்ச்சி சற்று குறைந்திருந்தாலும் தற்போது மீளவும் அதீதமான இரு பக்க உறவை ஏற்படுத்தியுள்ளது. இதனை மேலும் தெளிவுபடுத்திக் கொள்ள கடந்த குறுகிய காலத்தில் நிகழ்ந்த வடகொரிய – ரஷ்ய விடயங்களை மீள நினைவுப்படுத்திக் கொள்வது புரிதலை இலகுப்படுத்துவதாக அமையும்.

அந்த வகையில் கடந்த மாத முற்பகுதியில் கொரிய வெளிவிவகார அமைச்சர் ரஷ்யாவிற்கு மேற்கொண்ட விஜயம், வடகொரிய தலைவர் ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு எழுதிய கடிதம், அமெரிக்க – தென்கொரிய – ஜப்பான் போர் பயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ரஷ்யாவின் விமானங்கள் தென்கொரிய வான் பரப்பில் பிரவேசித்தமை, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பேச்சுவார்த்தையிலிருந்து விலகுவதாக அறிவித்த உடனேயே அப்பேச்சுவார்த்தை மீள ஆரம்பிக்க வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி புட்டின் வலியுறுத்தியமை ஆகிய சம்பவங்கள் மூலம் ரஷ்யாவின் வடகொரியா தொடர்பான புவிசார் அரசியலின் முக்கியத்துவத்தினை விளங்கிக் கொள்ள முடியும்.

இதன் தொடர்ச்சிகளில் ஒன்றாகவே ரஷ்யா வெளிவிவகார அமைச்சரின் வடகொரிய விவகாரத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். இது ஒரு இராஜதந்திர நகர்வு. வடகொரியாவும் ரஷ்யாவும் இத்தகைய இராஜதந்திர நகர்வின் பயனாளிகள். இதனை அடிப்படையாக கொண்டே வடகொரிய – அமெரிக்க உச்சி மாநாடு வடகொரிய தலைமையினால் உறுதிப்படுத்தப்படுகிறது.

இந்த இராஜதந்திர நகர்வில் உரையாடப்பட்ட விடயங்கள் மேற்குறித்த கருப்பொருளுக்கு வலுச் சேர்ப்பதாக அமையும்.

குறிப்பாக இரண்டு வெளிவிவகார அமைச்சுக்களும் உரையாடிக் கொண்ட விடயம், அணுவாயுத திட்டம் பற்றிய இரு அரசுகளதும் மீள இணைவிற்கான உரையாடல்களை ஆரம்பிப்பது, இரண்டு நாடுகளுக்குமிடையிலான இரு பக்க உறவை அரசியல் பொருளாதார இராணுவ விடயங்களில் ஏற்படுத்துவது, சர்வதேச மட்டத்தில் முதன்மை அடைந்து இருக்கும் விவகாரங்களை பற்றிய தீர்மானங்கள்.

மேற்குறித்த மூன்று விடயங்களும் ரஷ்யா – வடகொரிய உறவை மீள பலப்படுத்தியுள்ளது. அத்தகைய உறவின் பலத்தை ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் Lavrov குறிப்பிடும் போது வடகொரியாவின் அயல்நாடுகள் கொரியக் குடாவில் நிகழும் அனைத்து விவகாரங்களிலும் புரிந்துணர்வோடு செயல்படுவது பயன் உள்ள நடவடிக்கையாக அமையும் என்றார்.

மேலும் ரஷ்ய வெளி விவகார அமைச்சர் குறிப்பிட்ட விடயங்கள் கவனிக்கப்பட வேண்டிய அம்சங்கள், கிம், - ட்ரம்ப் இடையிலான சந்திப்பு ரஷ்யாவின் தொடர்ச்சியான வடகொரிய உறவினை பலவீனப்படுத்தாது என நம்புகின்றேன். வடகொரியாவிற்கும் தென் கொரியாவிற்கும் உறவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் முழுமையாக ரஷ்யா வரவேற்கிறது. அவ்வாறே அமெரிக்க – வடகொரியா உறவும் அமைய வேண்டும். உண்மையாகவே ரஷ்யா இந்த உரையாடலை நம்பிக்கையோடு எதிர்பார்க்கின்றது. எந்தவித துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளாலும் முடிவுக்கு வந்துவிடக் கூடாது.

எனவே ரஷ்ய வெளிவிவகார அமைச்சரின் வடகொரிய விவகாரம் எத்தகைய போக்கை எட்டியுள்ளது என்பது மேற்குறித்த தகவலூடாக உறுதிப்படுத்த முடிகிறது. இதில் வடகொரியா பேச்சுவார்த்தைக்கு முன்னர் இவ்வாறான சந்திப்புக்களை செய்ய முனைவதன் ஊடாக பேச்சுவார்த்தை மேசையில் தன்னை பலப்படுத்த திட்டமிடுகிறது. அதே நேரம் அமெரிக்க எதிர்த்தரப்புடன் நெருக்கமான உறவை வடகொரியா கொண்டுள்ளது என்பதையும் அமெரிக்காவிற்கும் அதன் பேச்சாளர்களுக்கும் தெரியப்படுத்த முனைகிறது. வடகொரிய ஜனாதிபதி இரண்டு தடவை சீனாவிற்கு விஜயம் செய்து அதே முக்கியத்துவத்தோடு ரஷ்யாவை அணுகுவதும் சிங்கப்பூர் உச்சி மாநாட்டிற்கு தயாராகுவதற்கான நகர்வுகளாக உள்ளன. வடகொரியாவும் கிம்மும் தனியான பாத்திரங்கள் இல்லை என்பதை அமெரிக்காவிற்கு வடகொரியா தெரியப்படுத்திக் கொண்டே இருக்கிறது.

இதேபோன்று வடகொரிய – ரஷ்யா – சீனா என்பன தென்கொரியாவுடனான ஒத்துழைப்பை அதிகம் விரும்புகின்றன. வடதென்கொரிய இணைவின் மூலம் அமெரிக்காவை இப்பிராந்தியத்திலிருந்து அகற்றுவதற்கான முயற்சியாக சீனாவும் ரஷ்யாவும் முயற்சிக்கின்றன. அதேபோன்று கொரியப் பிராந்தியத்தில் அணுவாயுதமற்ற சூழலை ஏற்படுத்துகின்ற அதே வேளை ரஷ்யா ஜனாதிபதி புட்டின் ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் வடகொரியாவின் அணுவாயுதம் வடகொரியாவின் இறைமைக்கு உரித்துடையது என தெரியப்படுத்தியுள்ளார்.

இவ்வாறே ரஷ்யாவும் சிங்கப்பூர் உச்சி மாநாட்டுக்கு முன்னர் வடகொரியாவின் பலத்தை உலகத்திற்கு அறிவிப்பதோடு வடகொரியாவை அமெரிக்கா விரும்பிய பக்கத்திற்கு இழுக்காவோ கையாளவோ முடியாது என்பதை சூசகமாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி இப்பிராந்தியத்திலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்வதே ரஷ்யாவின் பிரதான நோக்கமாகும்.

எனவே முடுக்கி விடப்பட்ட இராஜதந்திர போட்டி உச்சி மாநாட்டு மேசையில் பாரிய நெருக்கடியை இரு தரப்புக்கும் ஏற்படுத்தும் பேச்சுவார்த்தையின் பதிவுகள் ஒவ்வொன்றும் நேர்கணியத்திலும் அதன் நடைமுறையையும் சாதகமாக அமைத்துக் கொள்ள இரண்டு தரப்பும் விளையும். எப்போதும் வல்லரசுகள் உரையாடல் இராஜதந்திரத்தை பயன்படுத்தி பிற தேசங்களின் உத்திகளை முறியடிப்பது மரபாக உள்ளது. இதனை வடகொரியாவிடம் அமெரிக்கா ஏற்படுத்த முனைகிறது.

ஆனால் வடகொரியாவோ அதிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள அனைத்து உபாயங்களையும் மேற்கொள்கிறது. இதுவரை அமெரிக்காவை விட வடகொரியா முன்நோக்கிய பாய்ச்சலில் முதன் நிலையில் உள்ளது. ஆனாலும் உச்சி மாநாடுகள் கையாளுப்படும் சக்திகளால் வெற்றியை தமதாக்கிக் கொள்கின்ற தன்மை பொதுவாகவே அமைந்துள்ளது.

Comments