![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2018/06/10/w0.jpg?itok=Lgt-31ZY)
வடகொரிய – அமெரிக்கப் பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகள் சிங்கப்பூரில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்கு தென்கொரியர்களும் அமெரிக்கர்களும் முகாமிட்டு உச்சி மகாநாட்டுக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேநேரம் சிங்கப்பூர் உச்சி மாநாட்டுக்கான தயாரிப்பில் ஈடுபட்டுவரும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் ஜேம்ஸ் மேட்டிஸ் தென்சீன கடல் விவகாரத்தினை முதன்மைப்படுத்தியுள்ளார்.
கடந்த பல மாதங்களாக அமெரிக்கா தென் சீன கடல் விடயம் பற்றிய சர்ச்சை மிக்க கருத்துக்களை சீனா மீது வீசி வருகிறது. சிங்கப்பூர் உச்சி மகாநாடும் தென்சீனக் கடல் மீதான சர்ச்சையையும் புரிந்துகொள்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சீனா தனது அயல் நாடுகளை மிரட்டவும் அச்சுறுத்தவும் சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் பகுதியில் ஏவுகணைகளை நிறுத்தி வருகிறது என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் எச்சரித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிடும்போது சீனாவின் நடவடிக்கைகள் அதன் நோக்கங்களை தெளிவுபடுத்தியுள்ளன. கப்பல்களை தாக்கும் ஏவுகணைகளையும் நிலத்திலிருந்து வான் நோக்கி சென்று தாக்கும் திறனுடைய ஏவுகணைகள் மின் கருவிகளை செயலிழக்கச் வைக்கும் சாதனங்கள் ஆகியவற்றையும் தென்சீனக் கடல் பகுதிகளில் சீனா நிறுவி வருகிறது எனக் கூறுகின்றனர்.
இதேநேரம் ட்ரம்ப் - கிம் பேச்சுக்களுக்கான சந்திப்பின்போது தென்கொரியாவில் அமெரிக்கப் படைகளின் கூட்டுப் இராணுவப் பயிற்சியில் ஈடுபடுவது குறித்து பிரச்சினைகள் விவாதிக்கப்படுவது என்றும் அமெரிக்கப் படைகள் தென்கொரியாவில் தொடர்ச்சியாக நிலைத்திருக்கும் விவகாரமும், வடகொரியாவின் அணுவாயுத சோதனை விவகாரமும் வெவ்வேறானவை என தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் சாங் யாங் - மூ குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க இராணுவம் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் நிரந்தரமாக முகாமிட்டு இராணுவப் பயிற்சியிலும் ஒத்திகைகளிலும் கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றது. சீனாவிடம் தாங்கள் ஆக்கபூர்வமான உறவை மேற்கொள்ள விரும்புவதாகவும் தேவைப்பட்டால் போட்டியிடத் தயாராக இருப்பதாகவும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
தென்சீனக் கடல் வர்த்தக ரீதியில் வல்லரசு நாடுகளுக்கு மிக அவசியமான வழித்தடமாக விளங்குகிறது. இப்பகுதியை சீனா, தாய்வான், வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றன. இந்த உரிமம் என்பது தனித்து அப்பகுதியில் உள்ள வளங்களை பெறுவது சார்ந்தது மட்டுமல்ல. ஆனால் அப்பிராந்திய நாடுகளை பொறுத்த வரை சீனாவின் எழுச்சி அரசியல் ரீதியில் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்ற அதேவேளை பொருளாதார அடிப்படையில் பெரும் ஒத்துழைப்பை பெறுகின்ற நாடுகளாக காணப்படுகின்றன. அதேநேரம் அமெரிக்கா தனது வர்த்தக உரிமத்தையும் பிராந்திய அரசுகளின் உறவினையும் ஒரே வகையான தன்மைக்குள் உட்படுத்தியிருக்கின்றது. அது மட்டுமன்றி இத்தகைய உரிமம் சீனாவின் பிராந்திய ஆதிக்கத்தை சீர்குலைப்பதாகவும் நெருக்கடியை தருவதாகவும் அமைந்திருக்கின்றது என்ற எதிர்பார்க்கை அமெரிக்காவிடம் காணப்படுகின்றது. இப்பிராந்தியத்தில்தொடர்ச்சியாக தனது செல்வாக்கை நிலைநிறுத்த போராடிவரும் அமெரிக்கா வடகொரிய – தாய்வான் விவகாரத்தினை பயன்படுத்திக் கொண்டு அரசியல் ரீதியான நெருக்கடிகளை சீனாவிற்கும் அதன் ஒத்துழைப்பு நாடுகளுக்கும் கொடுக்க விரும்புகின்றது.
தென்சீனக் கடல் பகுதியில் காணப்படும் தீவுகள் பெருமளவு எண்ணெய் வளங்களை கொண்டிருப்பதும் கனிய வளங்கள் குவிந்திருப்பதும் போட்டித் தன்மைக்கான அடிப்படை காரணமாக கொள்ளப்படுகிறது. இப்பகுதியிலுள்ள வூடித் தீவு பாரிய அளவான மீன்பிடித் தொழிலையும் ஏனைய கனியவளங்களையும் கொண்டிருக்கின்றது. வியட்நாம் - தாய்வான் ஆகிய இரு நாடுகளும் இத்தீவின் மீது அதிக உரிமம் தமக்குரியது என கோரிவருகின்றது. அதே போன்று ஸ்பரலி தீவு என்பது முப்பது தீவுகளை உள்ளடக்கிய தென் சீனக் கடல் மையப் பகுதியை அண்டியதீவுக் கூட்டங்களை உள்ளடக்கிய பகுதியாகும். மொத்த நிலப்பகுதி 15000 சதுர கிலோ மீற்றரை கொண்டது. ஏறக்குறைய 5800 கடல் தரையை கொண்டது. இதனை சீனாவும் வியட்நாமும் உரிமை கோரி வருகின்றன. இதேபோன்று பாராஷில் தீவு சீனாவின் பூரண கட்டுப்பாட்டில் அமைந்திருக்கிறது. இதுவும் ஜபரலித் தீவுக்கு சமமான நிலப்பரப்பினையும் கடல் மட்டத்திலிருந்து 14 மீற்றர் உயரமான ரொக்கிதீவு என அழைக்கப்டும் பகுதியையும் உள்ளடக்கி காணப்படுகிறது.
தற்போது இப்பகுதியில் உள்ள அனைத்து தீவுகளும் சீனாவின் கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் அமைந்திருந்தாலும் ஜப்பான், வியட்நாம், இந்தோனேஷிசியா என்பன இத்தீவுகளின் பகுதியான பரப்புக்களில் தமது செல்வாக்கை நிறுவி வருகின்றன.
இதற்கு பின்பே இப்பகுதியில் சீனா செயற்கைத்தீவுகளை கட்டமைத்து அத்செயற்கைத் தீவுகளிலும் சீனா இராணுவத்தையும் கடற்படையையும் விமானப் படையையும் கொண்ட இராணுவத் தளங்களை அமைத்து வருகிறது. இத்தகைய இராணுவத் தளங்களின் பெருக்கம் இப்பகுதியூடாக பயணத்தினை மேற்கொள்ளும். அமெரிக்காவின் யுத்த கப்பல்களையும், விமானத் தாங்கிக் கப்பல்களையும் அச்சுறுத்தும் செயல்முறை என்பது ஒரு சர்ச்சையான அம்சமாக மாறிவருகிறது. செயற்கைத் தீவுகளை அமைத்தல் என்பது சர்வதேச விதிமுறைகளுக்கும் ஐ.நாவின் சட்டத் திட்டங்களுக்கும் விரோதமானதொன்றல்ல. ஆனால் பிராந்திய நாடுகளின் ஒப்புதலோடும் பங்களிப்போடும் மேற்கொள்ளப்படுதல் என்பது அவசியமானது. கடல் சட்டமும் அதன் வரையறையும் நாடுகள் கரையோரத்தினையும் தீவுகளையும் சார்ந்து இருக்கின்ற போது பயன்படுத்தப்படும் கடல் வளங்கள் தொடர்பான வரையறைகள் முதன்மைப்படுத்தப்படுத்தப்படுகின்றன. இதனையே சீனாவும் அண்மைக் காலங்களில் பிரயோகித்து வந்தது. இந் நடைமுறையிலுள்ள பலவீனங்களை சீனா கருத்தில் கொண்டு செயற்கைத் தீவுகளை அமைத்து தென்சீனக் கடலின் கணிசமான வளங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிக்கின்றது. இதனூடாக இரண்டு பிரதான சவால் உலகத்தின் முன்தோன்றியுள்ளது.
01. ஏனைய சமுத்திரங்களை நோக்கி செயற்கைத் தீவுகளை நிறுவுகின்ற செயன்முறை ஒன்றை வல்லரசுகளாலும் பிராந்திய அரசுகளாலும் தோற்றிவிக்க முடியும்.
02. தென்சீனக் கடல் இராணுவ ரீதியான முக்கியத்துவத்தை எதிர்காலத்தில் எதிர்நோக்குகின்றபோது அப்பிராந்திய நாடுகளுக்கும் அப்பிராந்தியத்தில் கரிசனை கொண்டிருக்கின்ற அமெரிக்காவுக்கும் அச்சுறுத்தலாக அமையும்.
சிங்கப்பூர் உச்சி மாநாடு வடகொரிய – தென்கொரிய விவகாரங்களோடு சம்பந்தப்பட்டிருந்தாலும் தென்கொரிய – ஜப்பான் - அமெரிக்கா என்பன இந்தோ – பசுபிக் பிராந்திய அரசுகளாகவே கருதுகின்றன. இந்தோ – பசுபிக் பிராந்திய அரசியல் என்பது அமெரிக்கா எதிர் சீன என்பது ஆகும்.
அதாவது சீனா, ரஷ்யா, வடகொரியா, சிரியா, ஈரான் எதிர் அமெரிக்க எதிர், நட்பு நாடுகள் என்ற நிலையாகவே உள்ளது. ஆனால் சிங்கப்பூர் உச்சி மாநாடு பற்றி தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்ட விளக்கம் அமெரிக்காவின் உள்நோக்கத்தை இனம் காண உதவுகிறது. அந்த மாநாட்டில் அமெரிக்க தென்கொரிய கூட்டு இராணுவ பயிற்சி விவாதிக்கப்படமாட்டாது, என்பதும் அமெரிக்காவின் படைகள் தென்கொரியாவில் நிலைத்திருப்பதும் வடகொரியாவின் அணுவாயுத விவகாரமும் வேறுவேறானவை என்று குறிப்பிட்டிருப்பதும் வேடிக்கையான விளக்கம் ஆகும். வடகொரியாவின் அணுவாயுத பரிசோதனை என்பது அமெரிக்க – தென் கொரிய இராணுவ ஆதிக்கத்திற்கு எதிரானதாகும். அமெரிக்காவின் படைகளை தென்கொரியாவில் இருந்து அகற்றுவதே வடகொரியாவின் நோக்கம். அதற்காகவே ஐ.நா சபையை மீறி வடகொரியா அணுவாயுத பரிசோதனையை மேற்கொண்டது. அணுவாயுதமே வடகொரியாவின் பலம். அணுவாயு தம் இல்லாத நிலை வடகொரியாவிற்கு இருந்திருக்குமாயின் ஈராக்கிற்கும் லிபியாவிற்கும் ஏற்பட்ட துயரம் வடகொரியாவிற்கும் நிகழ்ந்து இருக்கும்.
எனவே, உச்சி மாநாட்டின் எல்லைகளும் கோரிக்கைகளும் தெளிவான பரப்பை வெளிப்படுத்தியுள்ளன.
இதேநேரம் சிங்கப்பூர் உச்சி மாநாட்டுக்கான தயாரிப்புக்களில் ஷன்றிலா தொகுதி விடுதியில் தங்கியிருக்கும் அமெரிக்க –தென்கொரிய – ஜப்பானிய தரப்பு வடகொரியா அணுவாயுதத்தை கைவிட்டால் மட்டுமேபொருளாதார தடை நீக்கப்படும் என்ற உறுதி நிலைக்குள் இருக்கின்றது. அதேநேரம் தென்சீனக் கடல் பகுதியில் சீனா ஏவுகணைகளை நிறுத்துவதாகவும் ஆயுத தளபாடங்களை குவித்து வருவதாகவும் தொடர்ச்சியான குற்றச்சாட்டை மேற்கொண்டு வருகின்றது. எனவே, வடகொரிய - அமெரிக்கபேச்சுவார்த்தை என்பது தனித்து வடகொரியாவின் அணுவாயுத அரசியல் சார்ந்தது மட்டுமல்ல.
சீனாவின் அரசியல் பொருளாதார இராணுவ உத்திகளும் தென்சீனக் கடலும் இந்து பசுபிக் பிராந்தியமும் மையப்படுத்தப்பட்ட ஒன்றாகவே அமைந்திருக்கிறது.
உலக அரசியல் பரப்பில் கிம் -– டரம்ப் சந்திப்பு என்பது ஓர் அடையாள அரசியல் பரிமாணம் தான். அத்தகைய அடையாளம் புவிப் பரப்பில் எல்லா வகை அரசியலுக்குமான மையப்பரப்பு எனக் கூறிக்கொள்ளலாம். இதில் எடுக்கும் முடிவுகள் நாடுகளை கடந்து பிராந்திய அரசியலையும் சர்வதேச அரசியலையும் பூகோள அரசியலையும் பாதிக்க கூடியதாக அமையும்.
எனவே, தென்சீனக் கடல் பகுதியில் அமெரிக்க – சீன மோதல் என்பது பிராந்திய அரசியலில் தனித்துவமான அம்சமாகும். முன்னுக்குப் பின் முரணான முடிவுகளும் தீர்மானங்களும் தென்கொரிய – வடகொரிய விவகாரங்களை மட்டுமல்ல தென்சீனக் கடல் பிராந்தியத்தையும் பாதிப்புக்குள்ளாக்கும். இரு வல்லரசுகளுக்குமான முறுகலை தீர்க்குமா கிம்- – ட்ரம்ப் சந்திப்பு என்பதே புதிதாக எழுந்துள்ள அரசியல் சர்ச்சையாகும்.