கிம்மின் சீன விஜயம் உணர்த்தும் அரசியல் | தினகரன் வாரமஞ்சரி

கிம்மின் சீன விஜயம் உணர்த்தும் அரசியல்

வடகொரிய ஜனாதிபதி கிம் - யொங் உண் இரண்டு நாட்கள் அரச முறை சுற்றுப் பயணம் ஒன்றை சீனாவிற்கு மேற்கொண்டுள்ளார். இது அவரது மூன்றாவது சீனாவிற்கான பயணம் ஆகும். இப்பயணத்தின் முக்கியத்துத்தை உணர்த்தும் வகையில் வழமைக்கு மாறாக சீன ஊடகங்கள் முதன்மைச் செய்தியில் குறிப்பிட்டிருந்தன. இவ் விஜயம் ஏற்படுத்தக் கூடிய அரசியல் முக்கியத்துவத்தை தேடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கிம் - யொங் - உண் இன் விஜயம் பற்றி உள்நாட்டு சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடும்போது வடகொரியா மீதான பொருளாதார தடை பற்றியும் சிங்கப்பூரின் உச்சி மாநாட்டின் முக்கியத்துவம் பற்றியும் சீனா ஜனாதிபதி ஜிங் பிங் உடன் கலந்துரையாடுவார் எனக் குறிப்பிட்டிருந்தன. அதேநேரம் சீனா வடகொரியா மீதான பொருளாதார தடையை தளர்த்த வேண்டும் என பரிந்துரை செய்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய விஜயம் உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தக் கூடிய பிரதிபலிப்புக்கள் சர்வதேச அரசியலில் ஓர் அங்கமாக உள்ளது. இதே உத்தியுடன் கிம் சீனாவிற்கு விஜயம் செய்துள்ளார். இதனை விளங்கிக் கொள்வதன் மூலம் கொரியக் குடாவின் அரசியலை புரிந்துகொள்ள முடியும்.

இராஜதந்திரம் உடலாலும் உணர்வாலும் அறிவாலும் மேற்கொள்ளப்படுகின்ற செயலாகும். அது கறுப்பு, வெள்ளையாகவோ கலப்பு நிறமுடையதாகவோ அமைந்திருந்தாலும் இலக்கினை அடைவதற்கு மேற்கொள்ளும் உத்தி என்றே கருத முடியும். கிம் - ட்ரம்புடன் மேற்கொண்ட உரையாடல் இரண்டு நாட்டுக்குமான சர்வதேச முக்கியத்துவத்தை ஏற்படுத்தியிருந்தது. அமெரிக்காவுக்கு சமதையாக வடகொரியாவும் தனது அரசியல் இருப்பை தக்கவைப்பதற்கு சிங்கப்பூர் உச்சி மாநாட்டை மிகச் சிறந்த உபாயமாக கையாள முனைந்தது. இதன் ஒரு கட்டமாகவே கிம்மின் சீன விஜயம் அமைந்தது. சிங்கப்பூர் உச்சி மாநாட்டுக்கு முன்னரும் உச்சிமாநாட்டுக்கு பின்னரும் சீன ஜனாதிபதியை சீனாவில் சந்திப்பது என்பது அமெரிக்காவிற்கு தெளிவான ஒரு செய்தியை வெளிப்படுத்தியுள்ளது. அந்த செய்தி வடகொரியாவின் பலத்தையும் இருப்பையும் தெரிவிப்பதோடு பேச்சுவார்த்தையில் நெருக்கடியான முடிவுகளை எடுக்க முடியாது என்றும் அவ்வகை சூழல் ஏற்பட்டால் சீனாவின் உதவியோடுவடகொரியாவை எதிர்கொள்ளும் என்றும் தெரியப்படுத்தியுள்ளார்.

அவரது விஜயத்தில் சீனாவில் விவசாயத்தை துறை சார்ந்த அம்சங்களில் அதிக கவனம் செலுத்தியிருந்தார். அத்தோடு வடகொரியாவின் பொருளாதாரம், உட்கட்டமைப்பு சார்ந்த விருத்தி பற்றி அதிக கரிசனை செலுத்தியதோடு அவ்வகை சீன நிறுவனங்களோடு உடன்பாடுகளை செய்வதற்கான உரையாடல்களிலும் ஈடுபட்டார். இது பொருளாதார ரீதியான தடைக்கு எதிரான தேவைப்பாட்டை யுத்த ரீதியான விடயங்களிலிருந்து விடுபட்டு பொருளாதார செழிப்பு பற்றிய விடயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது என்பதை உணர்த்துகிறது. தற்போது வடகொரியாவிற்கு மிக அவசியமாகதோன்றுவது பொருளாதார விருத்திக்கான வாய்ப்புக்கள் ஆகும். அணுவாயுத வல்லமையோடு பொருளாதார திறனும் சாத்தியப்பட்டால் பிராந்திய ரீதியிலும் சர்வதேச மட்டத்திலும் அதிக முக்கியத்துவத்தை வடகொரியா தமக்குரியதாக மாற்றிவிடும். இதனை நோக்கியே வடகொரியா செயல்படுகிறது.

இதனை வெறும் உச்சி மாநாடு சார்ந்தும் பொருளாதாரம் சார்ந்தும் அளவீடு செய்வது உலக அரசியலை விளங்கிக் கொள்வதில் போதாமையை ஏற்படுத்தும். அதாவது சிங்கப்பூர் உச்சி மாநாட்டுக்கு பின்னர் வடகொரிய ஜனாதிபதியின் அரசியல் பலம் அதிகரித்துள்ளது. அம்மாநாட்டுக்கு பின்னர் ரஷ்ய ஜனாதிபதியின் அழைப்பும் சீனாவுக்கான அவரது விஜயமும் இந்நாடுகளினை மையப்படுத்திய அணி ஒன்றிற்கான பலப்படுத்தலை தந்துள்ளது. ஏற்கனவே, உருவாகியிருந்த இத்தகைய அணி சிங்கப்பூர் மாநாட்டிற்கு பின்னர் வெற்றிகரமானமாக மாறிக் கொண்டு இருக்கின்றது. இதனை எதிர்கொள்ளும் எதிர்ப்பு அணியைவிட வலிமையானதாக இருந்தாலும் எதிரணி முன் வைக்கின்ற சவால்களை எதிர்கொண்டு வெற்றிகரமான நகர்வை சாத்தியப்படுத்த வெற்றிகரமான அணி தேவைப்படுகின்றது. அதனையே கிம் - பிங் சந்திப்பு ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் தந்திரமான அணுகுமுறைகளை முறியடிக்க எதிர்க்கூட்டு ஒன்று பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டு அமெரிக்காவின் கூட்டினை ஏற்கனவே பலவீனப்படுத்தியுள்ளது. ரஷ்யா, வடகொரியா, சீனா, ஈரான், சிரியா போன்றவற்றின் கூட்டு அரசியல் பொருளாதார ரீதியில் மட்டுமன்றி இராணுவ ரீதியிலும் பலமாகவே உள்ளது. இத்தகைய பலப்படுத்தல் சிங்கப்பூர் உச்சி மாநாட்டின் தொடர்ச்சியை பாதிப்புக்குள்ளாக்கும். ஜனாதிபதி ட்ரம்பின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் படிப்படியாக அதன் சர்வதேச வலுவை நெருக்கடிக்குள்ளாக்கின்றது. பரிஸ் உடன்படிக்கை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை உடன்படிக்கை என்பனவற்றிலிருந்து அமெரிக்காவின் வெளியேற்றம் சர்வதேச அரசியலில் பெரும் பாதிப்பினை அமெரிக்காவிற்கு ஏற்படுத்தியுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் வடகொரியாவுடனான உரையாடலில் மனிதவுரிமை பற்றிய பேச்சுக்களை மேற்கொள்வது என்பது கடினமான இலக்காக மாறவுள்ளது. எனவே, அமெரிக்க சர்வதேச அரசியல் அரங்கில் படிப்படியாக பலவீனமடைவதும் அதன் சர்வதேச அதிகார சமநிலை தளம்பலுக்குள்ளாவதும் கொரிய தீபகற்பத்தின் அரசியலை கையாளுகின்ற சக்திகள் அமெரிக்காவை எதிர்கொள்வதும் இலகுவானதாக அமையும்.

கிம் இன் சீன விஜயம் அமெரிக்காவுடனான அடுத்த கட்ட சந்திப்புக்களுக்கு வாய்ப்பான சூழலை ஏற்படுத்தக்கூடியது. சிங்கப்பூர் உச்சிமாநாட்டில் சீனா நேரடியாக கலந்து கொள்ளாத போதும் சீனாவின் பிரதிநிதியாகவே கிம் செயல்பட்டார்.

அது மட்டுமன்றி மாவோ சேதுங்கின் மாதிரிகளை வெளிப்படுத்தியிருந்தார். இந்த விஜயத்தின் மூலம் ட்ரம்புடன் வடகொரிய ஜனாதிபதியாக மட்டுமன்றி சீனாவின் பிரதிதிநியாகத் தான் செயல்பட்டதாக உணர்த்தியுள்ளார். மேலும் கிம் இன் நடவடிக்கைகளை பலப்படுத்துவதோடு தென்கொரியா – ஜப்பான் போன்ற நாடுகளும் வடகொரியா மீதான பதில் செயல்பாடுகளை எச்சரிக்கையுடன் கையாள விரும்புகின்றது. இதற்கான அடிப்படை வடகொரிய – சீனா நெருக்கமாகும்.

ட்ரம்ப் உடனான சந்திப்பு வடகொரியாவில் பொறியாக அமைவதற்கான வாய்ப்பு அதிகமானது என்பது தவிர்க்க முடியாதது ஆகும். ஏனெனில் பேச்சுவார்த்தைகளும் சமாதான உடன்படிக்கைகளும் பரஸ்பரம் இரு தரப்புக்கும் அரசியல் பொறியாகவே அமைந்து விடுகிறது.

அந்தவகையான Zero – sum அரசியல் என்ற நிலை சிங்கப்பூர் உரையாடலில் Win – Win அரசியலாக நிறைவு பெற்றது. அதில் அமெரிக்காவும் வடகொரியாவும் சம அளவான வெற்றிகளை அனுபவித்தன. கிம் சிறிய நாட்டின் இளமையான தலைவராக இருந்தாலும் அரசியல் தந்திரத்தில் ட்ரம்புக்கு சமமாக செயல்பட்டார். அச்செயல்பாடு வடகொரியாவுக்கும் கிம்க்கும் மட்டுமல்லாது இந்தோ – பசுபிக் வட்டகையின் சீனா – ரஷ்யா சார்பில் எழுந்த அணுகுமுறையாகவே அமைந்திருந்தது. கிம்மை தயார் செய்வதிலும் முனைப்பாக செயல்பட வைப்பதிலும் சீனா, ரஷ்யா என்பன அதிக கரிசனை கொண்டிருந்தன. இதனை மூன்று நாடுகளதும் ஆட்சியாளர்களுக்கிடையிலான விஜயங்களும் உரையாடல்களும் வெளிப்படுத்தியிருந்தன. எனவேதான் இரு தரப்புசந்திப்பும் இரு தரப்புக்கான வெற்றியை நிர்ணயித்தன. உலகிற்கு அதிக மாற்றத்தை ஏற்படுத்தாது விட்டாலும் மேற்படி இரு தரப்பும் அதிக இலாபங்களை அடைந்துள்ளன.

எனவே, சர்வதேச அரசியலில் வடகொரிய – சீன உறவு நீண்டபாரம் பரியமிக்கது. இரு தரப்பும் நீண்டு நிலைத்திருக்கக் கூடிய புவிசார் அரசியல் உறவை கொண்டிருக்கின்றன.

இதனால் சீனாவின் நலன்களை பிராந்தியம் சார்ந்த தளத்திலும் வடகொரியாவின் நலன்களை பிராந்தியத்தை கடந்து சர்வதேச தளத்திலும் சீனா மேற்கொள்வதனை காண முடியும். கிம் இன் சீன விஜயம் நிறைவு பெற்ற பின்னர் அமெரிக்காவிற்கு ஒரு செய்தி காத்திருக்கின்றது என்பதை கடந்தகால அனுபவம் உணர்த்தியுள்ளது.

சிலவேளைகளில் ரஷ்ய ஜனாதிபதியின் அழைப்பின் பெயரில் கிம் இன் ரஷ்ய விஜயம் சாத்தியப்படுமாக இருந்தால் அதன் பின்னர் அத்தகைய அறிவிப்பு வெளியாகும். அவ்வறிப்பும் பிராந்திய நலன்களை அல்லது ரஷ்ய – வடகொரியா – சீனா நலன்களை மையப்படுத்தியதாக அமையும்.

 

 

 

Comments