![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2018/07/22/w0.jpg?itok=il9kiQGk)
கலாநிதி
கே.ரீ. கணேசலிங்கம்
ட்ரம்ப் - புட்டின் சந்திப்பு சர்வதேச அரசியலில் மீண்டுமொரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோவியத் யூனியன் உடைந்த பிற்பாடு சிதைவடைந்திருந்த அரசியல் விளாடிமீர் புட்டினின் வருகைக்கு பின்னர் எழுச்சி பெற்றது. இந்த எழுச்சி அமெரிக்காவுக்கு சவால் விடும் நாடுக ளில் ஒன்றாக மாற்றியது. புட்டினின் தொடர்ச்சியான ஆட்சியும் பிராந்திய சர்வதேச அரசியலில் ஏற்படுத்தியுள்ள அதிகார பாய்ச்சலும் அமெரிக்காவிற்கு நெருக்கடியாக விளங்கியது. அது மட்டுமன்றி ரஷ்யா–சீனாவுடனான ஒத்துழைப்பும் அமெரிக்காவின் சர்வதேச நலன்களுக்கு மேலும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இவை யாவற்றையும் தணிக்கும் விதத்தில் அண்மையில் நடந்த ஹெல்சிங் மாநாடு ஒத்துழைப்பான சந்திப்பாக அமைந்தது. ஏறக்குறைய மீண்டும் பனிப்போரின் முடிவு என்று பழைய யுகத்தை நினைவுபடுத்திய உரையாடல்கள் ஊடக நெறியில் பரிமாறபட்டது. ஹெல்சிங் மாநாடு புட்டினை கையாளும் உத்தியா அல்லது ஒத்துழைப்புக்கான சந்திப்பா என்பதனை விளங்கிக் கொள்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பின்லாந்தின் தலைநகரான ஹெல்சிங் உலக அரசியல் வரலாற்றில் அதிக திருப்பங்களை ஏற்படுத்திய இடமாகும். பனிப்போரின் தளர்வுக்கான பேச்சுவார்த்தை அமெரிக்காவிற்கும் முன்னாள் சோவியத் யூனியனுக்கும் ஹெல்சிங்கிலேயே நிகழ்ந்தது. அதேபோன்று ஆயுத உடன்பாடுகளுக்கான உரையாடல்கள் விமானதாக்குதலுக்குரிய மட்டுப்பாடுகள் என்பனவற்றிற்கான உரையாடல்களும் ஹெல்சிங்கில் இடம்பெற்றது. எனவே அமெரிக்க – ரஷ்ய சந்திப்பு என்பது வரலாற்று திருப்பமான ஹெல்சிங்கில் நிகழ்ந்தது என்பது ஓர் அரசியல் உபாயத்தின் பிரதிபலிப்பு என்றே எண்ணத் தோன்றுகின்றது. அவ் எண்ணதோற்றத்திலிருந்து இம்மாநாட்டை அளவிட முயற்சித்தால் விளாடிமீர் புட்டினை அமெரிக்கா கையாள முயல்கின்றது என்றே அர்த்தப்படும். ஏனெனில் ஹெல்சிங் மாநாடு சோவியத் யூனியனின் உடைவிற்கு பிரதான காரணமாக கொள்ளப்படுகின்றது. எனவே புட்டின் - ட்ரம்ப் சந்திப்பு புட்டினை கையாளுவதற்கான வழிமுறை என்று கொள்வோமானால் அதன் முக்கியத்துவத்தை பின்வரும் அடிப்படைக்குள் விளங்கிக் கொள்ளமுடியும்.
முதலாவது அமெரிக்க– ரஷ்ய உறவு ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பிற்பாடு அதிக விரிசலை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் காலத்திலேயே மறைமுகமான மோதல்கள் தீவிரமாக வளர்ந்துள்ளது. அதற்கு காரணம் உக்ரைன் விவகாரம் ஆகும். உக்ரைனிற்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டது என்பதைவிட உக்ரைன் எல்லையோரத்தில் கரிபியன் கடலை அண்மிய பிரதேசத்தில் அமெரிக்கா நிறுவமுயன்றதால் ஏவுகணை விவகாரமே கிரிமியாவை ரஷ்யா தன்னோடு இணைத்துக் கொண்டதற்கு காரணமாகியது. அதேபோன்று அமெரிக்காவிற்கு எதிராக அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் நிகழ்ந்து கொண்டிருக்கும் தறுவாயில் சிரியாவின் துறைமுகமான Tartus ஐ ரஷ்சியா 2016 இல் கைப்பற்றியது. இதுமட்டுமன்றி அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான உடன்படிக்கையை ரஷ்யாஆதரித்ததோடு மேற்காசியாவில் ஈரானை ஒருபலமான அரசாகமாற்றுவதில் இராணுவ ஆயுத தளபாடங்களில் ஈரானைபலப்படுத்துவதில் ரஷ்சியா வெற்றிகண்டது. அவ்வாறே ஷங்காய் மாநாட்டிலும் சுற்றுச்சூழல் மாநாட்டிலும் இஸ்ரேல் - பலஸ்தீனமுரண்பாட்டில் பலஸ்தீனத்தோடும் ஒத்துழைப்பினையும் ஆதரவினையும் வெளிப்படுத்தி அமெரிக்காவிற்கு எதிராக புட்டின் செயல்படுகின்றார்.
மிகமுக்கியமாக அமெரிக்கர்கள் வெட்கித் தலைகுனியும் அளவிற்கு ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா தலையீடு செய்து ட்ரம்பை வெற்றிபெறச் செய்தது என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. அமெரிக்கா ஜனநாயகத்தை கேள்விக்குட்படுத்தி புலனாய்வுக் கட்டமைப்புக்களுக்கு நெருக்கடி கொடுத்து அதிகாரத்தில் அமர்ந்து இருப்பவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய ஒரு நாடாக அமெரிக்கர்கள் ரஷ்யாவை பார்க்கும் நிலை முரண்பாட்டின் உச்சவளர்ச்சியாகவே உள்ளது. இதனை எல்லாம் தகர்ப்பதற்கும் வெற்றி கொள்வதற்கும் அமெரிக்கா பொருளாதார தடையையும் இராஜதந்திர செயற்பாடுகளை நிறுத்துகின்ற நடவடிக்கைகளையும் கடந்தகாலத்தில் மேற்கொண்டது. இதுமட்டுமன்றி அமெரிக்கா தனித்து செயல்படுத்தாது ஐரோப்பாவுடன் கூட்டுச்சேர்ந்து ரஷ்யாவிற்கான பொருளாதார தடைகளையும் உச்சி மாநாடுகளிலிருந்து ரஷ்யாவிற்கு விலக்களிக்கும் பாரிய நெருக்கடியை புட்டினுக்கு ஏற்படுத்தியிருந்தார். ஆனால் இது எதற்கும் ரஷ்யா பலவீனப்பட்டதாகவோ அமெரிக்காவிற்கு எதிராக செயல்பட்டதை தவிர்த்தாகவோ முனையவில்லை. மாறாக சீனாவுடன் இணைந்துகொண்டு ஒரேபாதை ஒரேசுற்றை பலப்படுத்த புட்டின் முயன்றார். இதனால் ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் மட்டுமன்றி கிழக்கு ஐரோப்பாவிற்கும் கணிசமான ஆதரவு சீனா, ரஷ்சிய கூட்டு எட்டத் தொடங்கியது. சீனாவும் - ரஷ்யாவும் ஓர் அணியாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு வடகொரியா, - ஈரான், - பிரேசில், - தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளை ஒன்றிணைத்துக் கொண்டு அமெரிக்க – ஐரோப்பிய அணிக்கு எதிராக முனைப்புடன் செயல்பட்டு வந்தன. இத்தகைய பயணம் அமெரிக்காவின் வர்த்தகத்திற்கும் ஐரோப்பா பிற கண்டங்களோடு வைத்திருக்கும் வர்த்தகத்திற்கும் நெருக்கடிக்குட்பட்டதாக மாற்றியுள்ளது. இதனை சரிசெய்துகொள்வதற்கு எதிப்பு உபாயங்கள் எதுவும் அமெரிக்காவிற்கு இலாபகரமானதாக அமையவில்லை. பாரிய பொருளாதார இழப்பீடுகளும் நெருக்கீடுகளும் அமெரிக்காவிற்கு ஏற்பட ஆரம்பித்தது. உலகப் பொருளாதார தளத்தில் முன்னோடியான அரசுகளாக விளங்கும் சீனாவையும் ரஷ்யாவையும் ஒரேநேரத்தில் எதிர்ப்பது என்பது அபாயகரமான ஒன்றாகவே அமெரிக்கா கருதுகிறது. இதனால் புட்டினும் எதிரி என்ற தளத்தில் பயன்படுத்துவதைவிட நண்பன் என்ற தளத்தில் கையாள்வதன் மூலம் முரண்பாட்டிற்குள் தற்காலிமான தீர்வை எட்டமுடியும் என்று அமெரிக்கா கருதுகிறது.
இரண்டாவது ஹெல்சிங் மாநாட்டில் 2 மணித்தியாலத்திற்குமேல் நீடித்த பேச்சுவார்த்தை பலமான விட்டுக்கொடுப்புக்களையோ தீர்வுகளையோ முன்வைக்கவில்லை. இதற்கு ஆதாரமாக ட்ரம்ப்பின் கருத்துக்களை அவதானிப்போம்.
அமெரிக்காவின் முட்டாள்தனமே ரஷ்யாவிடனான உறவு சீர்குலையக் காரணம் இம்மாநாடு நல்லதொரு தாடக்கம் ஆகும். அணுசக்தி வல்லமையுடைய நாடுகளான அமெரிக்காவும் ரஷயாவும் தனித்து செயல்பட்ட நிலையை கைவிட்டு இணைந்து செயல்பட வேண்டிய தருணம் உருவாகியுள்ளது. புட்டினுடைய பேச்சுவார்த்தை வெளிப்படையாகவோ ஆக்கபூர்வமாகவோ அமைந்தது என்றார். மேலும் அமெரிக்கா தேர்தலில் ரஷ்யா தலையிட்டதா என்ற குற்றச்சாட்டு அமெரிக்காவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் எங்கள் கட்சியினர் சிறப்பாக பிரசாரம் செய்தனர். அதனால் தான் என்னால் அமெரிக்கா ஜனாதிபதியாக முடிந்தது இதில் ரஷ்யாவின் தலையீடு இல்லை எனக் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி புட்டின் அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையிடவில்லை. அதேபோல் அமெரிக்காவின உள்விவகாரங்களில் தலையீடும் திட்டமும் ரஷ்யாவிடம் கிடையாது. என்னை ட்ரம்ப் நம்புகின்றார். அவரை நான் நம்புகின்றேன். பனிப்போர் நிலவிய காலத்திற்கு பின் நடந்துள்ள இச்சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இரண்டு மிகப்பெரிய அணுவாயுத நாடுகளான அமெரிக்காவும் ரஷ்யாவும் புதிய சவால்களை எதிர்கொள்கின்றன எனக் குறிப்பிட்டார்.
ஹெல்சிங், மாநாட்டில் உரையாடப்பட்ட பிரதான விடயம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு பற்றியதாகவே உள்ளது. சர்வதேச விவகாரங்களில் இரண்டு நாடுகளும் ஒத்துழைப்போடு செயல்பட போவதாக கூறிக்கொண்டாலும் ஹெல்சிங் மாநாட்டின் கருப்பொருள் ரஷ்ய தலையீட்டை பற்றியதாக இருந்தது. ஒருவகையில் கூறுவதானால் புட்டின் ட்ரம்ப் சந்திப்பு அமெரிக்காவில் எழுந்து இருக்கின்ற ரஷ்யா தலையீட்டுக்கான விசாரணையை கையாளுவதாகவும் ட்ரம்பை பாதுகாப்பதாகவும் புரிந்துகொள்ள முடியும். இதற்கே அவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். அமெரிக்கா புலனாய்வின் தகவலை மீறி ஆதாரங்கள் எதுமே இல்லாமல் அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையிடவில்லை என ட்ரம்ப் உத்தரவாதம் அளித்திருப்பது கவனிக்கத்தக்கது. அத்தகைய உத்தரவாதத்தை நாடு திரும்பியதும் ட்ரம்ப் மீறிவிட்டார்என்பது இன்னோர் குத்துக்கரணம்.
மூன்றாவது சர்வதேச விவகாரங்களில் இரு நாடுகளும் ஒத்துழைக்கப்போவதாக கூறிக்கொண் விடயம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படப் போகின்றது என்ற உத்தரவாதம் மாநாட்டில் முன்வைக்கப்படவேயில்லை. அதேபோன்று ரஷ்சியாவும் இத்தகைய சந்திப்பின் போது மேற்காசியாவிலும் உக்ரைன் விவகாரத்திலும் எத்தகைய முடிவுகளை பின்பற்றபோகின்றது என்பதையும் வெளிக்காட்டவில்லை. ஆனால் ஒருவிடயம் மிகத்தெளிவாக புலனாகின்றது. ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த காலப்பகுதியிலிருந்து ரஷ்யா மீதான குற்றச்சாட்டுக்களை அதிகம் தவிர்க்க விரும்பினார் என்பதாகும். ரஷ்யா மீதும் புட்டின் மீதும் முன்வைக்கப்பட்ட எதிர்ப்பு உணர்வுகளை நிராகரிக்கவும் கருத்துஎதனையும் கூறாமலும் தவிர்க்க முயன்றார். கனடாவில் நிகழ்ந்த ஜி – 7 மாநாட்டில் ரஷ்யாவிற்காக பரிந்து பேசினார். பிரித்தானியாவிற்கு விஜயத்தை மேற்கொண்ட போதும் பிரதமர் தெரசாமேயுடனான சந்திப்பின் போதும் ரஷ்யாவை நெருக்கமான நட்புநாடு என வரிந்து கட்டிக்கொள்ள விரும்பினார். இவையனைத்தும் ட்ரம்பின் ரஷ்யா பற்றிய அபிப்பிராயத்தை வளிப்படுத்தியுள்ளது. அமெரிக்க புலனாய்வுத்துறையின் ட்ரம்ப் ஜனாதிபதியாக வருவதற்கு ரஷ்யா காரணம் எனக் குறிப்பிட்டதை விட வேறு எதனையும் முதன்மைப் படுத்தவில்லை. இது தொடர்பான விசாரணை உறுதியான முடிவுகளை எட்டியுள்ளது. ரஷ்யாவின் தலையீடு இன்றி ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட கூடியவர் அல்ல என்பதை விசாரணைக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எனவே, ஜனாதிபதி ட்ரம்ப்பைப் பொறுத்தவரை அமெரிக்க நலைன கடந்து புட்டினோடு நெருக்கமான உறவை வைத்துக் கொள்ளவும் ஒத்துழைப்பினை மேற்கொள்ளவும் தனிப்பட்ட ரீதியில் விருப்பம் உடையவராக விளங்குகின்றார். ஆனால் அமெரிக்காவின் நலன் அதுவல்ல. ட்ரம்ப்க்கும் புட்டினுக்குமான நெருக்கத்தை பயன்படுத்தி புட்டினை கையாளுவதற்கான உத்தியை பிரயோகித்துள்ளது. இணைந்து செயற்படுதல், ஒத்துழைப்பு வழங்குதல், உலகளாவிய ரீதியில் இசைந்து போதல் என்ற பிரயோகங்கள் எல்லாம் போலியான வார்த்தைகள் மட்டுமே. அடிப்படையில் சீனா– ரஷ்யா உறவை உடைத்து ரஷ்யா - ஈரான், - சிரியா உறவை உடைத்தல் என்ற நோக்கோடுதான் ஹெல்சிங்கி மாநாட்டுக்கான சந்திப்பை தயார் செய்துள்ளது. இத்தகைய இலக்கை அடைவதற்கான அமெரிக்கா திட்டமிடல் அமைய ரஷ்யாவும் அதன் தலைவர் புட்டினும் மீளவும் அமெரிக்காவுடனும் ஐரோப்பாவுடனான நட்பையும் பலப்படுத்துவதன் மூலம் வலுவான ஓர் அரசாக ரஷ்யாவை மாற்றிக் கொள்வதோடு மீளவும் சர்வதேச அரசியலில் வல்லரசு என்ற எல்லையை அடைதல் என்ற நோக்கத்தோடு செயல்படுகிறது.
எனவே ஹெல்சிங் மாநாடு இராஜதந்திர ரீதியில் உரையாடல் வாயிலான, பரஸ்பரம் கையாளுகைக்கான அரங்கம் மட்டுமேயாகும்.