ரம்மியமான புளோரிடா! | தினகரன் வாரமஞ்சரி

ரம்மியமான புளோரிடா!

அன்றைய தினமே வொஷிங்டனில் நாம் தங்கியிருக்கும் இறுதிநாள். ஐ.வி.எல்.பி திட்டத்தின் பிரதான பங்குதாரரான இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளைச் சந்திப்பதற்கான தினமும் அன்றுதான். அந்தச் சந்திப்புக்களை முடித்துக் கொண்டு நாம் புளோரிடா மாநிலத்தின் டம்பா நகருக்குச் செல்லவேண்டும். இராஜாங்கத் திணைக்களம் என்பது அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சு. அந்நாட்டின் வெளிநாட்டுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் பாதுகாப்பு நிறைந்த கட்டமைப்பு. அங்கு நடைபெறும் சந்திப்பை முடித்துக் கொண்டு பிற்பகல் 1 மணிக்கு புளோரிடா செல்வதற்காக வொஷிங்டன் றேகன் விமான நிலையத்துக்குச் செல்லவேண்டும். அன்று காலை புறப்படுவதற்கு முன்னரே எமது பொதிகள் அனைத்தையும் தயார்படுத்தி, அவற்றையும் வாகனத்தில் ஏற்றிக் கொண்டே புறப்பட வேண்டும் என எமது வழிகாட்டியான மார்க்ரட் கூறியிருந்தார்.

காலை 9 மணிக்கு லரி வாகனத்துடன் ஹோட்டலை வந்துசேர நாம் எமது பொதிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டோம். அன்றையதினம் உத்தியோகபூர்வ சந்திப்பு என்பதால் நாம் கோட் சூட்டுடனேயே செல்லவேண்டியதாயிற்று. சந்திப்பை முடித்து விமானப் பயணத்துக்கும் அவ்வாறே செல்லவேண்டியதை நினைத்தபோது சற்று அசௌகரியமாக இருந்தது.

அமைதியான மரங்கள் நிறைந்த பகுதியில் பெரியதொரு கட்டடம், பொலிஸாரின் கடுமையான பாதுகாப்புடன் காணப்பட்ட அக்கட்டடமே இராஜாங்கத் திணைக்களம் என்றார் மார்க்ரட். நாமும் ஆவலுடன் இறங்கி, கடவுச்சீட்டை கையில் வைத்துக்கொண்டே உட்சென்றோம். நாம் அங்கு வருவோம் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததால் நுழைவாவிலில் எமது பெயர்களின் பேரில் தற்காலிக அடையாள அட்டைகளும் தயார்படுத்தப்பட்டிருந்தன. அவற்றை அணிந்துகொண்டு உட்சென்றோம்.

கூட்ட அறையொன்றில் ஆசிய பிராந்தியத்துக்குப் பொறுப்பான துறைசார் அதிகாரிகள் எம்மைச் சந்தித்தனர். நட்புரீதியான சந்திப்பாக அது அமைந்தது. இலங்கையின் நிலைமைகள் பற்றியும், அமெரிக்காவின் நிலைப்பாடுகள் பற்றியும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். ஒரு மணித்தியாலமே அச்சந்திப்பு. சந்திப்பை முடித்துக் கொண்டு நேரடியாக ரொனால்ட் றேகன் விமானநிலையத்தை நோக்கிப் புறப்பட்டோம். அது கட்டுநாயக்க விமான நிலையத்தை விட பன்மடங்கு விசாலமான விமான நிலையம். எமது பயணத்துக்கான விமான டிக்கட்டுக்கள் ஏற்கனவே புதிவுசெய்யப்பட்டிருப்பதால் தானியங்கி இயந்திரங்களின் உதவியுடன் ‘போர்டிங் பாஸ்’ பெற்றுக் கொண்டு உட்செல்வது மாத்திரமே எஞ்சியிருந்தது. மாக்ரட்டின் உதவியுடன் அவற்றைப் பெற்றுக் கொண்டு விமான நிலைய சோதனைகளை முடித்துக் கொண்டோம். ஐந்து நாட்களாக எம்முடன் இருந்த வாகன சாரதியான லாரிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டு உள்நுழைந்தோம்.

நிறைய விமானங்கள் காணப்பட்டதுடன், ஒவ்வொரு விநாடிக்கும் ஒரு தடவை விமானங்கள் ஏறுவதும், தரையிறங்குவதுமாக இருந்தன. எமது விமானத்துக்கு இன்னும் ஒரு மணித்தியாலம் இருந்ததால் பகல் உணவை விமான நிலையத்திலுள்ள உணவு விடுதிகளிலேயே முடித்துக் கொள்வதற்கு திட்டமிட்டோம். அடுத்த கணமே வழமைபோல சோறு தேடி களத்தில் குதித்துவிட்டோம்.

ஆளுக்கு ஒருபக்கம் சென்று சோறு இருக்கும் உணவகத்தைத் தேட, இறுதியில் சீன உணவகம் ஒன்றில் பிரைட் ரைஸ் வாங்கி அருந்தினோம். உணவை முடித்துவிட்டு விமானத்தில் ஏறுவதற்குத் தயாரானோம். விமான நேரத்தில் எந்த மாற்றமும் இருக்கவில்லை. குறிப்பிட்ட நேரத்தில் விமானம் வந்து நிற்கவே அதில் ஏறிக்கொண்டோம்.

அது நடுத்தர அளவுகொண்ட விமானம். இரண்டரை மணித்தியால விமானப் பயணம். ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்குச் செல்ல இரண்டரை மணித்தியாலங்கள் பயணிக்க வேண்டுமா என்ற ஆச்சர்யத்துடன் சற்று உறங்கிவிட்டேன்.

மலைகள், சம தரைகள் என்பவற்றைக் கடத்து விமானம் பறந்துகொண்டிருந்தது. ஒன்றரை மணித்தியாலங்கள் கடந்த பின்னர் கடலுக்கு மேலாக விமானம் சென்றுகொண்டிருந்தது. நாம் புளோரிடாவின் டம்பா நகரில் உள்ள விமான நிலையத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். தரையிறங்கும் நேரத்தை அண்மித்ததும் விமானத்திலிருந்து கீழே பார்த்தால் ரம்மியமான காட்சி. கடலுக்கு நடுவில் இரண்டு பாரிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் மின்னல் வேகத்தில் சென்றுகொண்டிருந்தன. எமது விமானம் தரையிறங்குவதற்கு ஏதுவாக கீழே இறங்கத் தொடங்கியது. விமான நிலையத்தின் ஓடுபாதைக்குச் செல்ல முன்னர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாரிய பாலத்தைக் கடந்துசெல்ல வேண்டும். தாழ்வாகப் பறக்கும் விமானத்தை கீழிருந்து பார்த்தால் நிச்சயமாக அது அற்புத காட்சியாகவே இருந்திருக்கும். இரண்டரை மணித்தியாலத்தில் விமானம் தரையிறங்கியது. விமானத்திலிருந்து இறங்கி பொதிகளை எடுப்பதற்கு மற்றுமொரு டேர்மினலுக்குச் செல்ல வேண்டும். அதற்காக சிறிய ரக மொனோ ரயில் தயாராக இருந்தது. அதில் ஏறி பொதிகளை எடுப்பதற்கான பகுதிக்குச் சென்றோம். அனைவருடைய பொதிகளையும் சேகரித்துக் கொண்டு விமான நிலையத்துக்கு வெளியே வந்தோம். எமக்காக சாரதியொருவர் காத்திருந்தார்.

புளோரிடா மாநிலத்தின் டம்பா நகரில் நாம் தரையிறங்கியபோதும் தங்குவதற்கான ஹோட்டல் சென்.பீட்டர்ஸ்பேர்க் நகரிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக அறிந்தோம். விமான நிலையத்திலிருந்து சுமார் ஒரு மணித்தியாலம் பயணிக்க வேண்டும் என சாரதி குறிப்பிட்டார். அலுவலகங்கள் முடிந்து வீட்டுக்கும் திரும்பும் நேரமாகியிருந்ததால் நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிகமாகக் காணப்பட்டன. விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது முதல் அரை மணித்தியாலத்துக்கு மேலாக வீதியின் இரு மருங்கிலும் கடல். ஒரு இடத்தைச் சுட்டிக்காட்டிய சாரதி, இங்கிருந்து சற்றுத் தொலைவில்தான் மெக்சிகோ நாட்டின் எல்லை இருப்பதாக சொன்னார்.

பீட்டர்ஸ்பேர்க் நகரை அண்மித்ததும் அமெரிக்க புட்போல் மைதானமொன்று பிரம்மாண்டமாக நிமிர்ந்து நின்றது. வொஷிங்டனுக்கும் புளோரிடாவுக்கும் இடையில் பாரிய வித்தியாசங்களை உணர முடிந்தது. சனநெருக்கடி குறைந்த இயற்கை அழகு கடற்கரை நிறைந்த இடமாக புளோரிடா காணப்பட்டது. புளோரிடா சுற்றுலாத்துறைக்கு குறிப்பாக கடற்கரையை மையமாகக் கொண்டு சுற்றுலாத்துறைக்கு பெயர்போன இடம். அமெரிக்காவின் வேறு மாநிலங்களில் இருப்பவர்கள் தமது இறுதிக்கால வாழ்க்கையை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் களிப்பதற்காக புளோரிடாவுக்கு வருவதாகவும், வாழ் நாளில் சேர்த்த பணத்தைக் கொண்டு இங்கு வீடு, காணி வாங்கிக் கொண்டு நிம்மதியாக வாழ்வதாகவும் சாரதி கூறினார். சென்.பீட்டர்;ஸ் நகரைப் பார்த்ததும் அதனை உணர்ந்துகொள்ள முடிந்தது.

சென்.பீட்டர்ஸ் நகரில் நாம் தங்குவதற்கான ஹோட்டல் இருந்தது. சற்றுத் தூரம் நடந்துசென்றால் மீன்பிடி படகுகள் நிறுத்தப்படும் சிறியதொரு துறைமுகம் இருந்தது. பயண களைப்பில் அன்று வெளியில் எங்கும் செல்லவில்லை. அடுத்து இரண்டு நாட்கள் சுற்றிப் பார்ப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. மெக்சிகோ வளைகுடாவில் புளோரிடா அமைந்திருப்பதால் பெரும்பாலான பகுதிகள் கடலால் சூழ்ந்தே இருந்தன. புளோரிடாவில் நாம் சுற்றிப்பார்த்த இடங்களை அடுத்தவாரம் பார்ப்போம்.

நினைவுகள் தொடரும்...

Comments