துருக்கியின் பொருளாதார நெருக்கடியும்; தோல்வி கண்டுவரும் அமெரிக்காவின் அணுகுமுறைகளும் | தினகரன் வாரமஞ்சரி

துருக்கியின் பொருளாதார நெருக்கடியும்; தோல்வி கண்டுவரும் அமெரிக்காவின் அணுகுமுறைகளும்

ஐரோப்பாவின் துயர் என்று அழைக்கப்பட்டு வந்த துருக்கியின் பொருளாதார நிலை பாரிய நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணயத்தின் ஒரு சந்தையாக விளங்கிய துருக்கி பாரிய பொருளாதார சரிவிற்குள் அகப்பட்டுள்ளது. உலகளாவிய மட்டத்தில் அதன் மொத்த தேசிய உற்பத்தியின் அளவு 63வது இடத்திலும் வளர்ச்சி விகிதம் 2017 இல் 7 சதவீதமாகவும் காணப்பட்டது. அண்மைக்காலத்தில் அமெரிக்கா பின்பற்றி வரும் வரி அதிகரிப்புக்கான கொள்கையும் நாணயப் பெறுமதிக் கொள்கையும் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றது. துருக்கி நாணயமான லீரா எதிர்கொள்ளும் நெருக்கடியையும் அதனால் ஏற்படவிருக்கின்ற அரசியல் பொருளாதார விளைவுகளையும் வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

துருக்கியின் அரசியல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவப்புரட்சி ஒன்றுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இத்தகைய இராணுவப்புரட்சிக்கு பின்னால் அமெரிக்க செயற்பட்டதாகவும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. துருக்கியை ஒரு பகுதி நாடாக கொண்ட குர்தீஸ்த்தான் போராளிகள் தனிநாட்டு கோரிக்கையை முன்வைத்து துருக்கியின் ஒரு பகுதியை சுதந்திர பிரகடனம் செய்துள்ளன. இந்த நெருக்கடி இரண்டிற்கும் முகம் கொடுத்த துருக்கி அதிலிருந்து மீள் எழுவதற்கு பொருளாதார ரீதியில் அமெரிக்காவிடம் அதிகம் தங்கியிருந்தது. ஆனால் ஈரானுடனும், சிரியா மற்றும் ஜேர்மனுடன் நெருக்கமான நட்புறவை பேணி வந்தது.

இவ்வகை நெருக்கடிக்களுக்கூடாகவே அதன் பொருளாதாரத்தையும் அது எதிர்நோக்கியுள்ள நாணய சரிவையும் விளங்கிக் கொள்ள வேண்டும். கடந்த வாரம் டொலருக்கு எதிராக லீரா 20 வீத வீழ்ச்சியை எதிர்கொண்டது. இந்த சரிவிற்கு பின்னால் நாணய மீள் எழுச்சித் திட்டங்கள் சிலவற்றை துருக்கி அரசாங்கம் மேற்கொண்டது. அது பெரியளவில் லீராவின் நிமிர்வை சாத்தியப்படுத்தப்படவில்லை. இதேசந்தர்ப்பத்தில் துருக்கியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு, உருக்கு மற்றும் உலோக பொருட்களுக்கான வரியை இரட்டிப்பாக அமெரிக்கா அதிகரித்துள்ளது. இதற்கு பதிலாக அமெரிக்காவின் மின்னனுப் பொருட்களை புறக்கணிப்பது என துருக்கி அறிவித்துள்ளது.

துருக்கிய ஜனாதிபதி எர்டொகன் துருக்கிக்கான அமெரிக்காவின் பொருளாதார போரை துயரமானது எனவும் அதற்கான விலையை அமெரிக்கா கொடுக்க வேண்டி வரும் என எச்சரித்துள்ளார். இத்தகைய நெருக்கடி மூலதன கட்டுப்பாட்டையும் நாணய கொள்கையையும் மந்த நிலைக்கு இட்டுச் செல்வதோடு துருக்கியின் உள்நாட்டு ஸ்திரத்தை பாதிக்கும் என பொருளாதார நிபுணர்கள் வாதிடுகின்றனர். துருக்கி சந்தை முதலீடு அற்ற சூழலுக்குள் அகப்படுவதோடு உலகளாவிய ரீதியில் துருக்கியுடனான ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் பாதிப்புக்குள்ளாகும் என பொருளாதார நிபுணர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய நெருக்கடியை துருக்கி மீது அமெரிக்கா மேற்கொள்வதற்கு பின்னால் உள்ள காரணங்களை புரிவது அவசிமானது. அதாவது நேட்டோவில் அங்கத்துவம் பெற்று இருக்கும் துருக்கி, அமெரிக்காவுடன் நீண்ட நட்பு உள்ள துருக்கி, ஏன் முரண்பாட்டை அமெரிக்காவுடன் ஏற்படுத்த வேண்டும் என்பது கவனிக்கப்பட வேண்டிய அம்சம். குறிப்பாக துருக்கியின் அண்மைக்கால நகர்வுகள் அதிலும் குறிப்பாக 2016 ஆம் ஆண்டு இராணுவ புரட்சிக்கான முயற்சியில் அமெரிக்கா பின்னணியில் இருந்தது என்ற சந்தேகத்தின் பின்னர் இம்முரண்பாடு வலுத்தது என விளங்கிக் கொள்ளலாம். இன்னோர் வகையில் குறிப்பிடுவதனால் அமெரிக்காவின் நோக்கு நிலையில் மேற்காசியத்தின் பிராந்தியத்திற்குள் அல்லது இஸ்லாமிய நாடுகளுக்குள் அரசியல் உறுதிப்பாடு உடைய நாடுகள் வரிசையில் துருக்கியும் ஒன்றாகும். அத்தகைய உறுதிப்பாடு அமெரிக்காவின் நலன்களை முற்றாகவே நெருக்கடிக்குள்ளாவதோடு இஸ்ரேல் உடைய இருப்பை எதிர்காலத்தில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்ற நோக்கில் துருக்கியை கையாள அமெரிக்கா முனைகிறது.

இச்சந்தர்ப்பத்தில் சவூதி அரேபியா பற்றி வாசகர்களிடம் கேள்வி எழலாம். சவூதி அரேபியா இஸ்லாமிய நாடாக இருந்தாலும் அமெரிக்காவின் பொம்மையாகவும், கட்டுப்பாட்டுக்குள்ளும் இயங்குவதோடு யூதர்களை செல்வாக்குட்பட்ட ஆட்சி முறையே நிலவுகின்றது என்ற வாதம் நியாயமானது ஆகும்.

அமெரிக்காவிற்கு எதிராக சவூதி அரேபியா செயற்பட முடியாது என்பது மட்டுமல்ல அவ்வாறு செயற்படும் சந்தர்ப்பத்தில் குறுகிய நேரத்தில் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்ற வலிமை மூலோபாய திட்டமிடலுக்கூடாக அமெரிக்காவும் இஸ்ரேலும் வகுத்து வைத்துள்ளன. எனவே ஏனைய அனைத்து இஸ்லாமிய நாடுகளையும் பயங்கரவாதத்தின் பெயராலும் அடிப்படைவாதத்தின் பெயராலும் அமெரிக்கா நிர்மூலமாக்கி வருகின்றது.

ஏற்கனவே துருக்கியின் ஆட்சி மாற்றத்தை முன்னிலைப்படுத்திய அமெரிக்கா தோற்றுபோனதும் துருக்கி திட்டமிட்ட அடிப்படையில் ரஷ்யாவுடனான உறவை பலப்படுத்திக் கொண்டதும் ஈரானுக்காக பரிந்து பேசியதும் அமெரிக்காவின் துருக்கி மீதான அணுகுமுறையில் தீவிரமான நெருக்கடிகளை கொடுப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக ரஷ்யாவின் ஏவுகணைகளை இறக்குமதி செய்தமை ஈரானின் அணுவாயுத உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகுகின்ற போது ஈரானுக்கு சார்பான கருத்துக்களை வெளியிட்டமை மற்றும் துருக்கியின் கச்சாய் எண்ணெய் பரிமாற்றம் செய்ய முன் வந்தமை என்பனவற்றை குறிப்பிட முடியும்.

இதனை அவதானிக்கின்ற போது கடந்த 2016 காலப்பகுதியில் கிரேக்கத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் அதன் துயரங்களும் நினைவுக்கு வருகின்றது. காரணம் துருக்கியின் பொருளாதார உறுதிப்பாட்டுக்குள் உற்பத்தியின் அளவிலேயோ அல்லது தேசிய பெறுமானத்தில் ஏற்பட்ட நெருக்கடியோ அல்ல. மாறாக துருக்கி மீது திட்டமிட்ட அடிப்படையில் இரண்டு பிரதான அம்சங்கள் அதன் நாணயம் மீதான பெறுமானத்தை பாதிப்புக்குள்ளாக்க வைத்துள்ளது. அதில் ஒன்று ​ெடாலருக்கு பதிலான துருக்கி நாணயத்தின் மதீப்பீடு ஆகும். இத்தகைய மதீப்பீட்டு பாய்ச்சலில் துருக்கியின் புதிய பொருளாதார திட்டங்களும் அதற்கான கடன்படுநிலைகளும் நேரடி முதலீட்டுக்கான உள்வாங்கலும் பிரதான இடம் வகித்துள்ளது.

இதில் சர்வதேச நாணய நிதியத்திற்கு பெரும் பங்கு உண்டு என்றே பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றன. எனவே, இதனை திட்டமிடப்பட்ட அரசியல் ரீதியான கையாள்கையின் நெருக்கடியை எதிர்கொள்வதற்கான உபாயமாக விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். துருக்கியின் வீழ்ச்சியை அல்லது துருக்கி அமெரிக்க உறவை சரிசெய்வதற்கான உபாயமாக கூட அமைந்து இருக்கலாம்.

இரண்டாவது ​ெடாலருக்கு நிகரான லீராவின் பெறுமானத்தின் வீழ்ச்சி தன்மையை மேலும் அதிகரிப்பதற்கான அமெரிக்காவின் அணுகுமுறைகள் துருக்கிய பொருளாதாரத்தின் உறுதிப்பாட்டை குலையச் செய்துள்ளது. அதாவது துருக்கிய பொருட்களுக்கான இரட்டிப்பு வரிப்பு அதிகரிப்பு இறக்குமதியின் அளவை மட்டுப்படுத்தச் செய்து பொருளாதாரத்தின் தேக்கநிலையை குறிப்பிட்ட அரசு மீது திணிப்பதே அமெரிக்காவின் பிரதான நோக்கமாகும். இதனையே அண்மைக்காலத்தில் உலகம் முழுவதும் அமெரிக்கா பின்பற்றி வருகின்றது. இதனை சீனா ஒரு வியாபார உத்தியாக வரியற்ற வர்த்தகத்தின் ஊடாக கடந்த காலத்தில் கையாண்டு வந்துள்ளது. அதன் ஊடாக சீனாவின் பொருளாதாரம் பாரிய வளர்ச்சியை அடைந்தது. அதற்கான காரணம் சீனாவின் உற்பத்திப் பொருட்களுக்கும் மேற்கின் உற்பத்திப்பொருட்களுககும் நிலவும் வேறுபாடே காரணம். அதாவது சீனாவின் உற்பத்திப் பொருட்கள் அனைத்தும் சாதாரண நிலையிலும் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் நிலையில் இருக்கும் போது மேற்கின் சீனாவிற்கான இறக்குமதி பொருட்கள் சொகுசு வாகனங்களாகவும் ஆடம்பர பொருட்களாகவுமே அமைந்து இருக்கும். இதனால் சீனாவின் ஏற்றுமதி பொருட்கள் அதிகமாவும் இறக்குமதி பொருட்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலும் நிலவுவதானால் சீனா பொருளாதாரம் வேகமாக பாய்ச்சலை எட்டியது. இதுமட்டுமன்றி சீனாவின் ஏற்றுமதி பொருட்கள் சாதராண மனிதனின் நுகர்வை ஈடுசெய்யக்கூடிய பொருளாதார பெறுமானத்தையும் குறைந்த ஆயட்காலத்தையும் கொண்டு இருந்தது. இதனால் சீனாவின் பொருட்களுக்கு உலகம் தழுவிய விதத்தில் வரவேற்பு நிலவியது. இதனை தவறாக புரிந்து கொண்ட அமெரிக்கா வரியின் இரட்டிப்புத்தன்மையை ஏற்படுத்துவதன் ஊடாக சீனாவின் இறக்குமதி பொருளை நிறுத்தலாம் என திட்டமிட்டுள்ளது. இது தாராள பொருளாதார பொறிமுறையில் தவறான அணுகுமுறை ஆகும். தாராள பொருளாதார பொறிமுறையின் அர்த்தத்தை அரசியல் ரீதியில் வலிமையற்றது ஆக்குவதாகும். இதனையே சீனா, ரஷ்யா ஆதரவுடைய துருக்கி மீதும் பிரயோகிக்க அமெரிக்கா முயன்றுள்ளது.

எனவே துருக்கி மீதான அமெரிக்காவின் அணுகுமுறை துருக்கி, ரஷ்யா, சீனா நாடுகளுடனான உறவை பலப்படுத்த உதவுவதோடு மேற்காசியாவை அமெரிக்காவின் நட்பு நாடு ஒன்றை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்கா பின்பற்றுகின்ற அதே அணுகுமுறைகளை துருக்கியும் பின்பற்றத் தொடங்கியுள்ளது. அதாவது துருக்கியுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளை அமெரிக்காவுடன் வர்த்தகம் மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்காவின் பாணியில் கோரிகை விடுத்துள்ளது. அமெரிக்கா வல்லரசின் அணுகுமுறை ஒன்றின் பலவீனமே துருக்கியின் கோரிக்கையில் அமெரிக்காவிற்கு சமமாக செயல்பட வழிவகுத்தது. இதுமட்டுமன்றி மேற்காசிய பரப்பில் அமெரிக்காவின் பிரதான இலக்கில் ஈரானும் துருக்கியும் முதல்நிலை அடைந்து இருக்கின்றது என்பது கவனத்திற்குரிய விடயம். சீனாவும் ரஷ்யாவும் துருக்கிய பொருளாதாரத்தை மீள் எழுகைக்கான வித்திடலை ஆரம்பித்துள்ளது. இந்தவாரத்தின் ஆரம்ப நாட்களை துருக்கியின் நாணயத்தின் நிலை வாரத்தின் இறுதிநாட்களில் மாற்றத்தை எட்டியுள்ளது. எனவே துருக்கியின் அரசியல் பொருளாதார இராணுவ இயங்குதிறன் ரஷ்சியா மற்றும் சீனா பக்கம் அதிக ஈடுபாட்டை எதிர்காலத்தில் ஏற்படுத்தும்.

 

கலாநிதி

கே.ரீ. கணேசலிங்கம்

யாழ்.பல்கலைக்கழகம்

 

Comments