![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2018/08/25/Var-mage-13-%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D.jpg?itok=Nfy-Hz4G)
ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதியன்று கஸ்பியன் கடலின் கரையோர நாடுகளான ரஷ்யா, அசர்பைஜான், ஈரான், கஜகிஸ்தான், துரக்மெனிஸ்தான் ஆகிய நாடுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டி ருந்தனர். இவ்வொப்பந்தம் சக்தி வளங்களுக்கான சந்தை என்று கூறப்படுகிறது. ஆனால் இவ் வொப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஈரான் மற்றும் ரஷ்யா என்பன கஸ்பியன் கடல் வளங்களை பங்கிடுவதற்கான புதிய உத்வேகம் ஒன்றிற்கான உரையாடலை கடந்த இருபது வருடங்களாக பேச்சுவாரத்தை மூலம் அடைவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தன. இவ் உடன்படிக்கையில் உள்ள அம்சங்களை மட்டுமன்றி இவ் உடன்படிக்கை ஏற்படுத்தவுள்ள பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் முக்கியத்துவத்தினை தேடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கஸ்பியன் கடல் நாடுகளுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் உள்ளடக்கத்தை மிகச் சுருக்கமாக நோக்குவது பொருத்தமானது.
கஸ்பியன் கடல் புவிசார் அரசியல் தந்திரோபாயத்தின் மையப் பகுதியாக விளங்குகிறது. இதற்கு காரணம் அதன் வளங்களாகும். அதே போன்று ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான பரிமாற்ற நிலையமாகவும், வரலாற்று ரீதியாக மேற்கு கிழக்கு அதிகாரத்தின் பரிமாற்ற பாதையாகவும், வர்த்தகத்தின் திறவு கோலாகவும் காணப்படுகின்றது. உலகிலேயே நவீன யுகத்தின் கண்டு பிடிப்புக்களின் பிரகாரம் சக்தி வளங்களின் புவி மையம் இப்பிராந்தியம் என வரலாற்றுத் தகவல்கள் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது. இக்கடல் பகுதி 50 பில்லியன் பரல்கள் எண்ணெய் வளத்தையும் 9 ரிலியன் கீயுபிக் மீற்றர் இயற்கை வாயுக்களையும் கொண்டு இருக்கின்றது என அடையாளம் காணப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி கஸ்பியன் கடலைச் சூழவுள்ள நாடுகள் தந்திரோபாயமான வலுவுடைய நாடுகள் என்ற பிரயோகமும் நிலவுகின்றது. இதில் ரஷ்யாவும் ஈரானும் சக்தி வள உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் பாரிய பங்களிப்பை செய்கின்ற நாடுகள் என்பதோடு கஜகிஸ்தான், அசர்பைஜான், துர்க்மெனிஸ்தான் ஆகியவற்றின் சக்திவள உற்பத்திக்கான பங்களிப்பு குறிப்பிடத்தக்களவிலும் காணப்படுகின்றது எனவும் அத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இருந்த போதும் 1991ஆம் ஆண்டு சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னர, இப்பிராந்திய அரசுகள் சுதந்திரம் பெற்ற போது கஸ்பியன் கடல் சக்தி வளத்தை பங்கீடு செய்வதில் போட்டியிட்டு கொண்டதோடு, எல்லை அமைப்பதில் முரண்பாடுகளை எதிர்கொண்டது.
மேற்குறித்த சூழலை கையாள்வதற்கு ரஷ்யாவும், ஈரானும் மிக நீண்டகாலமாக பிரயத்தனம் செய்துள்ளன. இத்தகைய பிரயத்தனத்தின் பிரதிபலிப்பாக செய்யப்பட்ட உடன்படிக்கையில் பிரதிபலிப்பு தனித்து வளப்பங்கீட்டுடன் நிறைவு பெறுமா என்பது கவனிக்கப்படவேண்டிய அம்சம்.
அதன் அடிப்படையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ள கஸ்பியன் வளப்பகுதிகள் 15 கடல் மைத்தூரத்தின் கட்டுப்பாடும், 25 கடல் மைல்தூரம் பிரதேசம் மீன் பிடிக்காகவும் வளங்கள் தொடர்பாக அகழ்வுக்காகவும் பகிரப்பட்டுள்ளது. ஏனைய பகுதி இயற்கை நீர்ப் பிரதேசம் பொதுப் பயன்பாட்டிற்கு என ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தகைய பொதுப் பயன்பாட்டிற்கான எண்ணம் என்பது பாதுகாப்பு விடயங்களுக்காகவும் குறிப்பாக உடன்படிக்கைக்கு கீழான கப்பல்களின் பிரவேசத்திற்காகவும் மேற்குறித்த நாடுகளின் மகாநாட்டில் ஒப்புதல் பெறவேண்டும் எனவும் குறிப்பிட்டு இருப்பதோடு கஸ்பியன் கடல் நாடுகள் அல்லாத எந்த நாடும் இக்கடல் பகுதியில் பிரவேசிக்க முடியாது எனவும் அம்மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டது.
இதுமட்டுமன்றி அவ் உடன்பாட்டில் ரஷ்யாவும், ஈரானும்் இப்பிராந்தியத்தில் ஆதிக்க சக்திகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் முயற்சியில் இவ்வுடன்பாட்டை கையாண்டுள்ளன. இதன் மூலம் அத்தகைய ஆதிக்கத்தை செய்யக்கூடிய சக்திகள் மீதும, அமைப்புக்களின் மீதும் மறைமுகமாக எச்சரித்ததோடு அத்தகைய நாடுகளும் அமைப்புக்களும் எல்லை மீறுகின்ற சந்தர்ப்பத்தில் கஸ்பியன் அமைப்பு நாடுகள் கூட்டாக இணைந்து எதிர்க்க வேண்டும் என அந்த உடன்பாட்டில் வலியுறுத்தியிருந்தன. எனவே, இந்த உடன்படிக்கை செய்யப்பட்ட நாடுகள் மத்தியில் வளங்களை பகிர்வது மட்டுமன்றி, அமெரிக்காவினதும் நேட்டோவினதும் எல்லை மீறல்களை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியாகவே கொள்ளப்படுதல் வேண்டும். கடந்த காலங்களில் அசர்பைஜனான் மீது நேட்டோ மற்றும் அமெரிக்காவினது செல்வாக்கு வலுவான ஒரு அரசியல் நெருக்கடியை ரஷ்யாவிற்கும் ஈரானுக்கும் ஏற்படுத்த விளைகிறது. கஸ்பியன் கடல் பகுதிகளுக்கு பிரவேசிக்கும் கடற்படை கப்பல்களை தடுத்து நிறுத்தும் விதத்திலும் ஆப்கானிஸ்தானில் நிறுத்தப்பட்டடிருக்கும் நேட்டோ படைகளுக்கு ஆயுதங்களை அசர்பைஜான், கஸகஜ்தான் நாடுகளுக்கு ஊடாக பரிமாற்றம் செய்வதற்கும் ஊக்குவிக்கும் செயல்முறையினை தடுக்கும் வகையில் மேற்படி கஸ்பியன் நாடுகளுடைய மாநாடு அமைந்துள்ளது.
இதுமட்டுமன்றி ரஷ்யா இப்பிராந்திய நாடுகளோடு எண்ணெய் மற்றும் இயற்கை வாயு தொடர்பான குழாய் திட்டங்களுக்கான சட்டரீதியான உடன்பாடுகளை எட்டியுள்ளது. அசர்பைஜனாலிருந்து துர்கமெனிஸ்தானுக்கும் அதனை அண்டிய பிரதேசத்திலுள்ள நாடுகளுக்கும் இயற்கை வாயுப் பரிமாற்றம் செய்வதற்கு உதவுவதோடு ஐரோப்பிய நாடுகளுக்கான பரிமாற்றத்தை மேற்கொள்வதற்குரிய தெற்கு பிரதேச பாதை ஒன்றை உருவாக்குவதற்கும் ரஷ்யா சட்டரீதியான ஒப்புதலை இதன் மூலம் பெற்றுள்ளது. இவ்வாறே துர்க்மெனிஸ்தான் வழி ஊடாக ஈரானும் ரஷ்யாவும் இணைந்து செயல்படுவதற்கும் இவ் உடன்பாட்டில் முனைந்துள்ளன.
இவ்வகை நடவடிக்கைகளுக்கு அப்பால் சமகால சர்வதேச அரசியல் பரப்பில் ரஷ்யாவும் ஈரானும் அமெரிக்காவிற்கு எதிராக முனைப்பாக செயல்பட்டு வரும் நாடுகளாக உள்ளன. உலக அரசியல் பரப்பில் மத்திய ஆசியா, மேற்காசியா ஆகிய இரண்டு பிரதேசங்களும் அமெரிக்காவில் பொருளாதார இராணுவ அழுத்தங்களுக்குள் அகப்பட்டிருப்பதோடு அதிக நெருக்கடியினையும் சந்தித்து வருகின்றன. இதில் ஈரான் மீதான அணுகுமுறைகள் பாரிய அச்சுறுத்தல்களை மேற்காசியாவில் ஏற்படுத்தியுள்ளது. எனவே, இதனைக் கட்டுபடுத்துவதும் எதிர்கொள்வதும் ஈரானுக்கு மிகப்பிரதான சவாலாக அமைந்துள்ளது. கஸ்பியன் நாடுகளுடான உடன்படிக்கை ரஷ்யாவின் இலக்குகளை அடைவது என்பதைவிட ஈரானின் தனித்துவத்தையும் அதன் பலத்தையும் இராஜதந்திர ரீதியில் வெற்றி கொள்வதற்கான களமாக கஸ்பியன் நாடுகளின் மாநாடு அமைந்துள்ளது. இது ஈரானுக்கு கிடைத்துள்ள இராஜதந்திர வெற்றியாகவே மதிப்பிடுதல் வேண்டும். அமெரிக்காவின் நெருக்கடிகளை எதிர்கொள்கின்ற தளத்தில் ஈரானின் இராணுவ பொருளாதார வெற்றிகளோடு இராஜதந்திர ரீதியான வெற்றியையும் அது எட்டியிருக்கின்றது.
ரஷ்யாவைப் பொறுத்தவரையில் நேட்டோவின் விஸ்தரிப்பை தடுத்து நிறுத்துவதற்கான முனைகளை மத்திய ஆசியா குடியரசிற்குள் ஏற்படுத்தியிருக்கின்றது. நேட்டோவின் தலையீடும் அதன் ஆதிக்கமும் ரஷ்யாவின் எல்லைப் பரப்புக்களை நோக்கியதாக திட்டமிடப்படுகின்றபோது, அதனை முறியடித்தல் என்பது அதிலும் குறிப்பாக உடன்பாடுகளின் மூலம் முறியடிப்பது என்பது பெரும் இராஜதந்திர வெற்றியாக கொள்ளப்பட வேண்டும். இது ரஷ்யாவிற்கு உலகளாவிய ரீதியில் அதிகார எல்லைகளை விஸ்தரிப்பதற்கான ஆரம்ப கட்டங்களை குறிப்பதாகவே அமையும். இதன் ஊடாக தனது எல்லையை மேலும் அதிகப்படுத்த வாய்ப்புக் கிடைத்துள்ளது.
ஏனைய நாடுகளை வலுப்படுத்தும் விதத்தில் கஸ்பியன் கடல் பகுதியில் சமவலுவுடை அரசுகளாக மாறியிருப்பதோடு சரியான முறையில் வளங்கள் ஒவ்வொரு நாட்டுக்கும் பங்கிடப்படடிருப்பதும் பொருளாதார ரீதியான வாய்ப்புக்களை பயன்படுத்தக்கூடிய சூழல் ஏற்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இவற்றை கடந்து அமெரிக்காவினதும் நேட்டோவினதும் எல்லை மீறல்களை தவிர்ப்பதற்கு இத்தகைய உடன்படிக்கை உத்தரவாதம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்க வியடம் ஆகும்.
எனவே, கஸ்பியன் உடன்படிக்கை பொருளாதார அரசியல் இராணுவ அம்சங்களை கடந்து புவிசார் அரசியல் ரீதியில் பிணைப்பையும் ஒருமைப்பாட்டையும் சாத்தியப்படுத்தக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது. அமெரிக்காவின் மேலாதிக்கத்தில் நேட்டோ அணியின் விஸ்தரிப்பை தடுப்பது என்பது ஐரோப்பிய கட்டமைப்பில் ஏற்படுத்தி வரும் மாற்றத்தை மேலும் துரிதப்படுத்துவதற்கு வாய்ப்பினை கொடுக்கக்கூடியது. அமெரிக்காவும் ட்ரம்பும் உலகளாவிய பொருளாதார சூழலியல் இராணுவ அமைப்புக்களிலிருந்து விலகிக் கொள்கின்ற சந்தர்ப்பத்தில் ரஷ்யா சந்தர்ப்பங்களையும் வாய்ப்புக்களையும் சரியாக பயன்படுத்தி தனது வலுவினை உலகளாவிய ரீதியில் விஸ்தரித்து வருகிறது. 20 வருடங்களுக்கு மேலாக தீர்க்கப்படாது இருந்த கஸ்பியன் கடல் விவாகாரம் புடினின் முயற்சியானால் சாதகமான அடைவை எட்டியிருந்தது. இது தனது பிராந்தியத்தை சூழவுள்ள் வலயங்களையும் சரியான முறையில் நிர்வகிக்கவும் செல்வாக்கு செலுத்தவும் வாய்ப்பான ஒரு நகர்வாகவே அமைந்து இருக்கின்றது.
எனவே, கஸ்பியன் கடல் உடன்பாடு சர்வதேச அரசியலில் புதிய அத்தியமாக அமைந்துள்ளது. இது நேரடியாக உலக நாடுகளை இப்பிராந்தியம் மீதும் உடன்பாடு எட்டப்பட்ட நாடுகள் மீதும் கரிசனை கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இது ரஷ்யாவியாவின் மென் அதிகார நகர்வாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும். கஸ்பியன் கடலை பங்கீடு செய்வது என்பது கஸ்பியன் கடல் அல்லாத நாடுகளிடமிருந்து அவ்வளத்தை பாதுகாப்பதும் பேணுவதும் எதிர்காலத்திற்காக உத்தரவாதம் அளிக்கும் சட்ட பிரமாணங்களை கொண்டு நிர்வகிப்பதும் ஆகும். எனவே இது வெளிப்படையாக அமெரிக்க ஆதிக்கத்திற்கு எதிரான ஓர் அம்சம் ஆகும்.