நியூயோர்க்கில் ‘ஒயாலா லங்காவத?’ என்று விசாரித்த கல்முனைத் தமிழர்! | தினகரன் வாரமஞ்சரி

நியூயோர்க்கில் ‘ஒயாலா லங்காவத?’ என்று விசாரித்த கல்முனைத் தமிழர்!

அலபாமா மக்களின் விருந்தோம்பல் அனுபவத்துடன் ஹன்ஸ்வில்லைவிட்டு புறப்படும் நாளும் நெருங்கியது. அடுத்து நாம் நியூயோர்க் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஜில்லென்னு ஒரு காதல் திரைப்படத்தில் வரும் ‘நியூயோர்க் நகரம் உறங்கும்’ என்ற பாடலே தொடர்ச்சியாக என் மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தது. அந்தளவுக்கு எதிர்பார்ப்பு நியூயோர்க் பற்றி இருந்தது. நியூயோர்க் பற்றிய நினைவுகளுடன் அலபாமாவிலிருந்து புறப்படத் தயாரானோம். அலபாமா மாநிலத்திலிருந்து நியூயோர்க் மாநிலத்துக்கு விமானத்தில் செல்ல சுமார் நான்கரை மணித்தியாலம். அதில் வொஷிங்டன் ரேகன் விமான நிலையத்தில் ஒரு மணித்தியால ட்ரான்ஸிட் வேறு. ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்குச் செல்ல விமானம் மாறிச் செல்வது எமக்கு வியப்பைத் தந்தது. மிகவும் ஆவலுடன் விமானத்தில் ஏறி அமர்ந்துகொண்டோம். குறிப்பிட்ட நேரத்தில் விமானம் புறப்பட்டது.

மூன்று மணித்தியாலங்களில் எமது விமானம் வொஷிங்டன் விமான நிலையத்தை வந்தடைந்துவிட்டது. குறுகிய நேரத்தில் அடுத்த விமானம் தரித்து நிற்கும் முனையத்தைக் கண்டுபிடித்து செல்லவேண்டும் என்பதால் அவசர அவசரமாக இடத்தைத் தேடிப்பிடித்தோம். அரை மணித்தியாலங்கள் விமானம் தாமதம் என அறிவிக்கப்பட்டதால் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு மதிய உணவை விமான நிலையத்திலேயே முடித்துக் கொண்டோம்.

அரை மணித்தியாலத்தின் பின்னர் விமானத்தில் ஆட்களை ஏற்றத் தொடங்கினர். பயணக் களைப்புடன் ஏறி விமானத்தில் அமர்ந்துகொண்டோம். சிறிது நேரத்தில் விமானம் மெதுவாக நகர்ந்து ஓடுபாதையில் சிறிது தூரம் சென்றதும் மீண்டும் நின்றது. மீண்டும் ஒரு அறிவிப்பு! “மேலும் சில விநாடிகள் விமானம் தாமதமாகும்” என்றது அந்த அறிவிப்பு. ஒரு மணித்தியாலத்துக்கு மேல் விமானத்தில் அமர்ந்திருக்கின்றோம். ஒரு பத்து நிமிடங்களின் பின்னர் “நியூயோர்க் சென்று தரையிறக்க முடியாது. என்பதால் உங்களை இறக்கிவிடுகிறோம்” என மறுபடியும் ஒரு அறிவிப்பை விடுத்தார் தலைமை விமானி. விமானம் மீண்டும் இருப்பிடத்துக்கு வந்து எம்மை இறக்கிவிட்டது. நியூயோர்க் என ஆவலுடன் இருந்த எனக்கு இது சற்று சலிப்பைத் தந்தது.

எப்படி நியூயோர்க் செல்வது என யோசித்துக் கொண்டிருக்க மார்க்ரட் உடனடியாக மத்தியூவுக்கு அழைப்பை ஏற்படுத்தி நடந்தவற்றைக் கூறினார். பிறிதொரு விமானத்தில் எம்மை நியூயோர்க்கிற்கு அனுப்ப ஏற்பாடு நடந்தது. ஒன்லைன் மூலம் டிக்கட்டுக்கள் மாற்றப்பட்டு அடுத்த விமானத்தில் ஏற நாம் ஆரம்பத்தில் நியூயோர்க்கின் ஜோன்.எப்.கென்னடி விமான நிலையத்துக்குச் செல்லவிருந்தோம். ஆனால் தற்பொழுது வேறொரு விமான நிலையத்துக்கு செல்லவேண்டியதாயிற்று. எமக்காக விமானநிலையத்தில் காத்திருக்கும் சாரதியை மற்ற விமான நிலையத்துக்கு வரவழைப்பதற்கான ஏற்பாடுகளையும் மார்க்ரட் செய்தார். அடுத்த விமானத்தில் ஏறக் காத்துக் கொண்டிருந்தபோதே எமது பயணத் தடங்கலுக்கான காரணம் எமக்குத் தெரிந்தது. ஜோன்.எப்.கென்னடி விமான நிலையம் அமைந்திருக்கும் பகுதியில் கடுமையான மழையும், பனிக் காற்றும் வீசுவதால் விமானங்களைத் தரையிறக்க முடியாத நிலை காணப்படுகிறதாம்.

இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கவேண்டி ஏற்பட்டது.

சில மணிநேர தடங்கலின் பின்னர் நியூயோர்க் பயணிப்பதற்கான விமானத்தில் ஏறிக்கொண்டோம். விமானத்தில் ஏறினாலும் எமது பொதிகள் சரியான விமானத்தில் ஏற்றப்படுகின்றனவா என்ற சந்தேகம் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. நியூயோர்க் நகரத்தில் மிகவும் குறைவான நாட்கள் தங்கும் வகையிலேயே எமது திட்டம் தயாரிக்கப்பட்டிருந்தது.

நியூயோர்க்கில் கழிக்கவேண்டியிருந்த ஒரு மாலை நேரம் வீணாகிவிட்டதே என்ற வருத்தத்துடன் விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தோம். சுமார் ஒன்றரை மணித்தியாலங்களில் விமானம் தரையிறங்கியது. பொதிகளைப் பெறும் இடத்துக்குச் சென்றோம். நான் சந்தேகப்பட்டபடி எந்தவித குழறுபடிகளும் இன்றி பொதிகள் ஒழுங்கு முறையாக வந்து சேர்ந்தன. வெளியே வந்தபோது வான் ஒன்று எம்முன்னால் வந்து நின்றது. பொதிகளை ஏற்றுவது பற்றி எமக்குள் சிங்களத்தில் கதைத்துக் கொண்டிருந்தபோது சாரதி ‘ஒயாலா லங்காவத?’ எனக் கேட்டார். அவருடைய தோற்றம் ஆசிய நாட்டவர் போன்று இருந்தபோதும் இலங்கையராக இருப்பார் என நாம் எண்ணியிருக்கவில்லை. இலங்கையர் ஒருவரை வெளிநாட்டில் சந்தித்த மகிழ்ச்சி ஏற்பட்டது. அவருடன் சிங்களத்தில் பேச்சைக் கொடுத்தவாறே பொதிகளை ​வேனில் ஏற்றிக்கொண்டோம்.

‘மம கல்முனே’ என்றார். கல்முனையைச் சேர்ந்த தமிழ் சகோதரர் அவர். கொழும்பில் நீண்டகாலம் இருந்து பின்னர் குடும்பமாக அமெரிக்கா வந்துள்ளார். அவருடைய சகோதரர்கள் பலரும் அமெரிக்காவில் இருப்பதுடன், தனது குடும்பத்துடன் அமெரிக்கா வந்து பல வருடங்கள் ஆகியிருப்பதாக அவர் என்னுடனும், இந்திரஜித்துடனும் தமிழில் கதைத்தார். எமது ஹோட்டலுக்குச் செல்லும் வழியில் உள்ள முக்கிய இடங்கள் பற்றி அவர் கூறிக் கொண்டே வந்தார். அதைவிட முக்கியமான விடயம் எம்முடன் வழிகாட்டியாக வந்த மார்க்கிரட்டின் சொந்த இடமும் நியூயோர்க் தான். தனது சொந்த மாநிலத்துக்கு வந்துவிட்ட மகிழ்ச்சியில் அவரும் ஒவ்வொரு இடங்களையும் முழுமையான விபரங்களுடன் விளக்கிக் கொண்டுவந்தார்.

பயணக் களைப்பு ஒருபுறம் இருக்க நானும் நியூயோர்க் நகரத்துக்குச் சென்றுவிட்டேன் என்ற மகிழ்ச்சியுடன் வேனில் ஹோட்டலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தேன். ஹோட்டலை அடைந்ததும் சற்று ஆறுதலாக இருந்தது. எமது அறைகளுக்குச் சென்று தூங்கிவிட்டோம்.

மறுநாள் நியூயோர்க் நகரை சுற்றிப்பார்க்கப்போகின்றோம் என்ற ஆவல் தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டே இருந்தது.

நினைவுகள் தொடரும்...

Comments