அன்றைய பொழுது நியூயோர்க் நகரத்தில் விடிந்தது. காலை முதலே மழை சாதுவாக பெய்துகொண்டிருந்தது. அன்றையதினம் உத்தியோகபூர்வ சந்திப்புக்கள் எதுவும் இல்லையென்பதால் நகரத்தைச் சுற்றிப்பார்ப்பதற்கான வாய்ப்புக் கிடைத்தது. திரைப் படங்களிலும், இணையத்தளங்களிலும் பார்த்ததைவிட அங்கு கிடைத்த அனுபவம் சற்று வித்தியாசமாகவே இருந்தது. வானுயர்ந்த கட்டடங்களுக்கு மத்தியில் வாகன நெரிசல்கள் மிக்க வீதிகள். நடைபாதைகளில் திரள் திரளாக மக்கள் எந்நேரமும் நகர்ந்துகொண்டே இருக்கின்றனர். ஏனைய மாநிலங்களில் கிடைத்த ரம்மியமான வித்தியாசமான அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் இங்கு ஒரு அவசர உலகமொன்றை காணமுடிந்தது.
ஐக்கிய அமெரிக்காவில் உள்ள மாநிலங்களில் உள்ள நகரங்களில் நியூயோர்க் நகரமே சனத்தொகையும் பரபரப்பும் செலவு மிகுந்ததுமான நகரமாகும். இங்கு உலகெங்குமிருந்து குடிபெயர்ந்த மக்கள் வாழ்வதால் வணிகம், நிதி, பண்பாடு, பொழுதுபோக்கு போன்ற துறைகளில் உலகளாவிய அளவில் நியூயோர்க் முக்கியத்துவம் பெறுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் நியூயோர்க்கில் அமைந்திருப்பது இந்த நகரத்துக்கான முக்கியத்துவத்தை அதிகரிக்கிறது. உலகெங்குமிருந்து வருகைதரும் சுற்றுலாப் பயணிகளை நியூயோர்க் வீதியெங்கும் நீங்கள் காணலாம்.
ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கில் அட்லாண்டிக் கரையோரம் பெரிய இயற்கை துறைமுகமாக அமைந்துள்ளது இந்நகரம். பிரான்க்சு, புருக்ளின், மென்ஹாட்டன், குயின்ஸ், ஸ்டேட்டன் தீவு ஆகிய ஐந்து நகரங்களைக் கொண்டதாக இம்மாநிலம் அமைந்துள்ளது. 2008ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 8.3 மில்லியனுக்கும் அதிகமாகும். உலக நகரங்களின் சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் நியூயோர்க்கின் சனத்தொகை அதிகமாகும்.
கடலுடன் தொடர்புபட்ட பிரதேசம் என்பதால் துறைமுகக் கொடுக்கல்வாங்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நியூயோர்க் முக்கியத்துவம் பெறுகிறது. 19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த பல மில்லியன் கணக்கான குடியேற்றவாதிகளை சுதந்திரதேவி சிலை வரவேற்றது என்றால் மிகையாகாது. மன்ஹாட்டன் பகுதியில் உள்ள வால் தெரு (Wall street) இரண்டாம் உலகப்போருக்கு பின் ஆதிக்கம் மிகுந்த உலக நிதி மையமாக திகழ்கிறது, இங்கு நியூயோர்க் பங்குச் சந்தை அமைந்துள்ளது. உலகின் பல உயரமான கட்டடங்கள் இந்நகரில் உள்ளன.
இத்தனை புகழ்பெற்ற நியூயோர்க் நகரைச் சுற்றிப்பார்ப்பதற்கு அரைநாள் ஒதுக்கியிருந்தனர். முதலில் சுதந்திரதேவி சிலை அமைந்துள்ள பகுதி, இரட்டைக் கோபுர நினைவிடம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்வதற்கு தீர்மானித்தோம். இதற்காக நிலக்கீழ் ரயில் வண்டிகளில் செல்வதற்கான டிக்கட்டுக்களை மார்க்கிரட் பெற்றுத் தந்திருந்ததுடன், எம்மை தனியாகச் சென்று பார்வையிட்டுவருமாறும் கூறினார். நாம் இறங்கவேண்டிய ரயில் நிலையம், செல்லவேண்டிய பக்கம் போன்றவற்றை வரைபடமொன்றில் அவர் குறித்துத் தந்தார். அமெரிக்காவில் தனியாகப் பயணிக்கும் முதல் அனுபவமாக அது அமைந்தது. நாம் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகிலேயே ரயில் நிலையம் இருந்தது. செல்லவேண்டிய ரயிலில் ஏறி டைம்ஸ் ஸ்குவார் பகுதி ரயில் நிலையத்தில் இறங்கினோம். அங்கிருந்து சுதந்திர தேவி சிலையைப் பார்ப்பதற்கான இடத்துக்குச் சென்றோம். கடலுக்கு நடுவில் கம்பீரமாக உயர்ந்திருந்த சிலை தூரத்திலேயே தென்பட்டது. நாம் கரையிலிருந்து பார்ப்பதற்குத் தீர்மானித்தோம். இல்லாவிட்டால் பெரியில் சென்று பார்வையிடலாம். எமக்கு வழங்கப்பட்ட குறுகிய காலத்துக்குள் படகில் சென்று வருவது சாத்தியமற்றது என்பதால் தூரத்திலிருந்தே சிலையைப் பார்வையிட்டோம். எமது கெமராக்களில் சிலையை பலவிதமான கோணங்களில் புகைப்படங்களை சுட்டுத்தள்ளினோம்.
அங்கிருந்து சிறிது தூரம் நடந்து சென்றால் செப்டெம்பர் 11 நினைவுத் தூபியைப் பார்வையிடலாம். நாமும் ஆவலுடன் நடந்துசென்றோம். நினைவுத் தூபி அமைந்திருக்கும் பகுதியை நெருங்கியதும் மனதில் ஒரு விதமான கவலையுணர்வு ஏற்பட்டது. வானுயர்ந்த இரு கட்டடங்கள் விமானங்கள் மோதி ஒரு சில விநாடிகளி தரைமட்டமாக இடிந்து வீழ்ந்த காட்சிகள் மனக்கண்ணில் தோன்றின. கட்டடம் இடிந்து வீழ்ந்தபோது ஏற்பட்ட புகைமண்டலம் மற்றும் மக்கள் சிதறி ஓடிய காட்சிகளை மனதில் நினைத்துக் கொண்டே அங்கு சென்றோம். இரட்டைக் கோபுரக் கட்டடங்கள் இருந்த இடத்தில் இரண்டு பாரிய கிடங்குகள் அமைக்கப்பட்டு அவற்றில் நீர் ஓடிக்கொண்டிருந்தன. கறுப்பு நிற பளிங்கு கற்கலால் தடாகம் போல அவை அமைக்கப்பட்டிருந்தன. அவற்றின் கட்டுக்களில் உயிரிழந்த அனைவரினதும் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. ஓரிடத்தில் உயிரிழந்த ஒருவரின் பெயருக்கு அருகில் வெள்ளைநிற ரோஜா மலரொன்று செருகப்பட்டிருந்தது. அதனைப் பார்த்ததும் நெஞ்சம் கனத்தது.
2001ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டதில் 2,977 பேர் உயிரிழந்திருந்தனர். உயிரிழந்தவர்களின் நினைவாகவே இந்த நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் இதனை அமைப்பதற்கான நிதி சேகரிப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டது. பெருமளவான மக்கள் மனமுவந்து உதவியளித்திருந்தனர். இதனை அமைக்கும் பணிகள் 2006ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், செப்டெம்பர் 11 தாக்குதல் சம்பவம் இடம்பெற்று பத்து வருட பூர்த்தியை முன்னிட்டு 2011ஆம் ஆண்டு செப்டெம்பர் 11ஆம் திகதி நினைவுத்தூபி பொதுமக்களின் பார்வைக்குத் திறந்துவிடப்பட்டது. 2014ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி செப்டெம்பர் 11 நூதனசாலை திறந்துவைக்கப்பட்டது.
பாரிய ட்ரகன் ஒன்று மீண்டு எழுவது போன்று இந்த நூதனசாலை வடிவமைக்கப்பட்டுள்ளது. செப்டெம்பர் 11 நினைவுத் தூபி மற்றும் நூதன சாலையைப் பார்வையிட நாளாந்தம் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உறவுகள் சிலர் இன்னமும் அவ்விடத்தில் கண்ணீர்விட்டு அழுவதைக் காணக்கூடியதாகவிருந்தது. தாக்குதல் நினைவுகள் இப்படியிருக்க, இரட்டைக் கோபுரத்துக்குப் பதிலாக வர்த்தகமையம் தற்பொழுது ஒற்றைக் கோபுரமாக வானுயர்ந்து நிற்கிறது. நாம் அங்கு சென்றதற்கான நினைவுகளை கமராக்களில் பதிவுசெய்துகொண்டு அங்கிருந்து வெளியேறி அடுத்த சந்திப்புக்கான இடத்தை நோக்கி நகர்ந்தோம்.
நாம் சென்ற பாதையில் நியூயோர்க் பங்குச் சந்தைக் கட்டடத்துக்குச் செல்ல வேண்டும் என நானும், சமிலவும் விரும்பினோம். எமது குழுவினரை நினைவுச் சின்னம் இருக்கும் இடத்தில் காத்திருக்கக் கூறிவிட்டு எருமைமாடு சீறிப்பாயும் வகையில் உள்ள நியூயோர்க் பங்குச் சந்தைக் கட்டடத்தைத் தேடி ஓடினோம். ஒருவாறு கண்டுபிடித்தோம். அந்த நினைவுச்சின்னத்துடன் புகைப்படம் எடுப்பதற்கு பெரும் கூட்டம். கூட்டத்துக்குள் நுழைந்து நாமும் அதனைப் பார்வையிட்டுவிட்டு எமது குழுவினரை நாடிச் சென்றோம்.
நினைவுகள் தொடரும்