![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2018/10/13/pg20-2jpg.jpg?itok=YpsGYVyg)
அமெரிக்க சீன போட்டி போரை நோக்கி நகரவாய்ப்புள்ளதா என்ற கேள்வி அண்மைய வாரங்களில் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. ஆரம்பத்தில் வர்த்தகத்தில் ஏற்பட்ட விரிசல் பரஸ்பரம் இரு தரப்பையும் எதிரிகளாக மாற்றியது. மாறி மாறி வரியவீடுகளை அதிகரித்து சுயமாகவே இறக்குமதி தடையை விதித்துக் கொண்டன. இதன் விளைவுகள் அந்தந்த நாடுகளுக்கு மட்டுமுரியதல்ல. மாறாக ஏனைய உலக நாடுகளுக்குள் தாக்கத்தினை ஏற்படுத்திக் கொண்டு செல்கிறது.
இதனால் உலக வர்த்தகம் பாதிப்பை நோக்கி செல்வதனை அவதானிக்கலாம். சீனாவின் தென் சீனக்கடல் விவகாரத்தில் அமெரிக்கா முன்வைத்திருக்கும் எச்சரிக்கையின் பிரதிபலிப்புக்களை நோக்குவதே இக்கட்டுரையின் வெளிப்பாடாகும்.
தென்சீனக் கடற்கரை விவகாரத்தில் கடந்த ஒபாமா அரசாங்கத்தைப் போன்று நான் கையாலாகாமல் இருக்கமாட்டேன். தகுந்த பதிலடி கொடுப்பேன் என சீனாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென்சீனக்கடல் பகுதி தனக்கேரியுரியதென கடந்த பல ஆண்டுகள் சீனா கோரிவருகிறது. அப்பகுதியில் செயற்கையாக மணலை குவித்து தீவுகளை உருவாக்கி வருகிறது சீனா என்பது தெரிந்த தகவலாகும். சர்வதேச கடல் சட்டத்தின் பலவீனங்களை பயன்படுத்திக் கொண்டு செயற்கைத் தீவுகளை சீனா உருவாக்கி வருகிறது.
இக்கடற்பகுதியில் குவிந்துள்ள எண்ணெய்வளம், மற்றும் கனியவளங்களை தாமே அனுபவிக்க வேண்டுமென கருதி சீனா செயல்படுவதாக ஏனைய அயல்நாடுகள் கூறி வருகின்றன. குறிப்பாக ஜப்பான், வியட்நாம், தாய்லாந்து, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் இந்த நாடுகளை கையாளும் விதத்தில் சீனா சில நடவடிக்கைகளை அண்மையில் எடுத்திருந்தது. தென்சீனக் கடற்பகுதியிலுள்ள வளங்களை பங்கிடுவது தொடர்பான உரையாடலுக்கு அந்நாடுகளை அழைத்திருந்தது.
அத்தகைய சீனாவின் நடவடிக்கையை தொடர்ந்து அமெரிக்காவின் கடற்படைக் கப்பல்களது ரோந்துப்பணி அதிகரித்ததுடன் செயற்கைத் தீவுகளை அண்மித்து யுத்தக் கப்பல்களை அமெரிக்கா அப்பகுதிகளில் நடமாட வைத்தது. இதன் காரணமாக சீனா கடும் எச்சரிக்கைகளை அமெரிக்கா மீது விடுத்திருந்தது. இரு தரப்பும் கடுந்தொனியில் பேச்சுக்களை வெளிப்படுத்தின.
சமகால உலக ஒழுங்கில் அமெரிக்கா எதிர் சீனா என்ற பரிமாணம் வளர்ச்சியடைந்துள்ள போக்கு வெளிப்படையானது. சீனாவின் வர்த்தகப் பாய்ச்சலும் உலகம் நோக்கிய விரிவாக்கத்திட்டமும் அமெரிக்காவின் உலகளாவிய ஆதிக்கத்தினை பாதித்து வருகிறது.
அதிலும் கடற்பகுதிகளை கைப்பற்றுவதில் சீனா காட்டும் அக்கறையும் அதீத நடவடிக்கைகளும் அமெரிக்காவை நேரடியாகப் பாதிக்கின்றது. 90 சதவீதத்திற்கு மேலான வர்த்தகம் கடல் சார்ந்ததாக வளர்ந்துள்ளது. இதனாலேயே கடலும் வர்த்தகத்தையும் வல்லரசுகள் கையாளவும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் விரும்புகின்றன.
இரண்டாவது வலுவான முரண்பாட்டுக்கு காரணம் இப்பிராந்தியம் நோக்கிய அமெரிக்காவின் நகர்வு பற்றியதாகும். அமெரிக்கா அப்போது தனது எதிரிகளை அமெரிக்க மண்ணில் எதிர்கொள்வதற்கு முன்னர் எதிரியின் பிராந்தியத்தில் அல்லது எதிரியின் மண்ணில் சந்தித்து தீர்த்துக் கொள்ள வேண்டியதை கையாள்வது மரபாகும்.
அந்தவகையிலேயே தென்சீனக்கடல் விவகாரத்தினை அமெரிக்கா முதன்மைப்படுத்தி வருகிறது. ஆதரவுக்கு அயல் நாடுகளையும் தனது நட்பு நாடுகளையும் சீனா மிரட்டுகின்றது என்ற போர்வையிலும் அமெரிக்கா செயல்படுகின்றது.
அயல் நாடுகளின் தீவிர முரண்பாடு சீனாவுக்கான உலக அணுகுமுறையை பாதிக்குமென அமெரிக்கா ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். சீனாவை சீனாவின் பிராந்தியத்திற்குள் வைத்து முறியடிப்பது.
இத்தகைய உபாயத்தினை பல அரசுகள் மீது அமெரிக்கா கையாண்டு வெற்றி பெற்றதென்பது கவனிக்கத்தக்கது.
தற்போதைய விடயத்திற்கு வருவோம். ஒபாமா போன்று என்னை நினைக்காதீர்.
பதிலடி கொடுப்பேன் சீனாவுக்கு என ஏன் ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்திருந்தார். இதில் இரண்டு விடயம் மீது ட்ரம்ப் வெளிப்பாடு அமைந்துள்ளது. ஒன்று முன்னாள் ஜனாதிபதி ஒபாமா மீதான அதிருப்தியான வார்த்தைகள் அமெரிக்காவைப் பொறுத்தவரை குடியரசுக்கட்சியினர் ஜனநாயகக் கட்சியினரைவிட வேறுபட்டே காணப்படுவர். ஏறக்குறைய குடியரசுக்கட்சிக்காரர் போர் விரும்பிகளாக காணப்படுவது வழமை. ஜனநாயகவாதக் கட்சிக்காரர் மிதமான போக்கினையே கடைப்பிடிப்பார்கள். ஆனால் ஒபாமா மிகத் தந்திரமான நகர்வுகளுக்கு உரித்துடைய மக்கள் ஆதரவாளன். அவரது அரங்குகள் கரகோசத்தால் வடிவமைக்கப்பட்டிருக்கும். சிறந்த இராஜதந்திரியாகவும் அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்டெடுத்த ஜனாதிபதி என்றும் கருதப்படுவர். அவர் உலக விவகாரங்களை ஆரவாரமின்றி மிக நிதானமாகக் கையாண்டார் என்பது மறுக்க முடியாது.
Obama docrine என்ற கொள்கை உரையின் உள்ளடக்கத்தில் முன்வைக்கப்பட்ட வெளிவிவகாரக் கொள்கையின் போக்கு எதிர்கால அமெரிக்காவினை நோக்கியதாக அமைந்திருந்தது. அவரது வெளிவிவகாரக் கொள்கைகளை முற்றாகவே நிராகரித்துள்ள ட்ரம்ப் வடகொரியா, கியூபா, மெக்ஸ்சிக்கோ, ஈரான், சிரியா, சவூதி அரேபியா உட்பட ஈரான் நாடுகளுடனான அமெரிக்க உறவை தந்திரமற்ற வரைபுக்குள் கொண்டு செல்கின்றார் என்ற விமர்சனம் நியாயமானதே. அதுமட்டுமன்றி ரஷ்யா, சீனா, இந்தியா பொறுத்தும் ட்ரம்பின் வெளியுறவு நிதானமானதாக அமையவில்லை.
இன்றைய உலகம் மென் அதிகாரத்திற்கானது. சற்றும் மாறுபடாத போக்குடன் செயல்படும் மென்அதிகார அரசுகளுக்கான வாய்ப்புக்களே அதிகரித்து செல்கிறது. ஒப்பீட்டடிப்படையில் குடியரசுக் ஆட்சியை காட்டிலும் ஜனநாயகக் கட்சி மென் அதிகாரத்தை பின்பற்றுகின்ற கட்சியாகும்.
அதனை முழுமைப்படுத்தும் வாய்ப்புக்களை முற்றாகவே நிராகரித்தவர் ட்ரம்ப். அவரது அணுகுமுறை வெளியேற்றத்திற்கான அமெரிக்கக் Excite America காலமென்ற அழைக்கப்படுகிறது. இது அமெரிக்காவை தனிமைப்படுத்துவதாகவே அமையும். ஒபாமாவுடன் ஒப்பிடும் போது உத்திகளற்ற தலைவராகவே ட்ரம்ப் காணப்படுகின்றார்.
ட்ரம்ப் சீனாவை எச்சரித்தமைக்கு முக்கிய காரணம் வெளியுறவுச் செயலாளரது சீன விஜயமாகும் மைக் பாம்பியோவைச் சந்தித்த சீன அதிகாரிகள் ஜனாதிபதி ட்ரம்ப்க்கு சில செய்திகளை அனுப்பியிருந்தாகவும் அதில் அதிருப்தியடைந்த பின்பே ட்ரம்ப் அவ்வாறு கருத்தைத் தெரிவித்தாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. சீனர்கள் சிறந்த வரவேற்பளிப்பார்கள்.
பின்னர் தங்கள் சிந்தனைகளையும் எண்ணங்களையும் திணிப்பதிலும் பின்நிற்கமாட்டார்கள். ஒரு தடவை ஹைனன் தீவுக்கு மேலாக உளவு பார்த்த அமெரிக்க விமானத்தை இடைமறித்து சீனாவின் இராணுவ விமானத் தளத்தில் இறக்கிவிட்டு அதனை பாகம் பாகமாக பிரித்து தனது சரக்கு விமானத்தில் ஏற்றி அமெரிக்க விமான நிலையத்தில் தரையிறங்கி ஒப்படைத்த சம்பவம் நினைவு கொள்ளத்தக்கது.
இது சீன தேசத்தின் அரசியல் - இராணுவ தந்திரமாகவே உள்ளது. சீனாவிடமிருந்து பல செய்திகள் உள்ளதாக ட்ரம்ப் குறிப்பிடுகின்றார். அதனால் எப்பயனும் இல்லை என்றும் கூறுகின்றார். அப்படியாயின் ட்ரம்பை சீண்டும் நடவடிக்கையில் சீனா ஈடுபட ஆரம்பித்துள்ளது.
ஆனால் இத்தகைய உரையாடல்கள் இருநாட்டுக்கும் இடையில் ஒரு யுத்தத்தை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அது சாத்தியமாவது மிகக் கடினமானது. தற்போது கணனி யுத்தம், வர்த்தக யுத்தம், நாணய யுத்தம் என்றெல்லாம் இரு நாட்டுக்குமான போர் நிகழ்ந்து கொண்ேட இருக்கிறது. ஆனால் இரு தரப்பும் நேரடி யுத்தத்திற்கு செல்வார்கள் என்று எதிர்பார்ப்பது கடினம்.
ட்ரம்பின் வடகொரியா தொடர்பிலும், ஈரான் தொடர்பிலும், சிரியா தொடர்பிலும் கொண்டுள்ள அணுகுமுறைகள் அவரது போர் உத்தியின் எல்லையை இனங்கண்டு கொள்ள போதுமானது.
எனவே ட்ரம்பின் எச்சரிக்கை வெறும் உரையாடல் விடயமேயாகும். அது கூட சரியான தளத்திலிருந்து நோக்கப்படவில்லை. வடகொரியாவுடன் மோதலை தவிர்த்த அமெரிக்க சீனாவுடன் மோதுமென்பது கடினமான இலக்காகவே அமையும்.
தென்சீனக்கடல் ஏற்படுத்தக்கூடிய உச்ச பாதிப்பு பிராந்திய அரசுகளை சீனாவிடமிருந்து பிரித்து கையாள கூடியதாக மட்டுமே தற்போதைய சூழலில் அமையும். அதனைக்கூட கஸ்பியன் கடல் விவகாரத்தில் ரஷ்யாவின் அணுகுமுறையை சீனா கடைப்பிடிக்க ஆரம்பித்தால் அமெரிக்கா தானாகவே விலகிவிடும் நிலை தவிர்க்க முடியாததாக அமையும்.