அணுவாயுதப் போட்டி தொடர்பான சிந்தனை மீண்டும் உலக அரசியலுக்குள் முதன்மை பெற தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியின் அறிவிப்பின் தாக்கம் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது பதவிக்காலத்தில் அமெரிக்காவை வெளியேற்ற நாடாக மாற்றுவதில் கரிசனையுடையவராக விளங்குவதில் முனைப்புடன் பயணிக்கின்றார். அவரது இராஜதந்திரம் எப்படியானது என்பதற்கு பதில் அளிப்பது கடினமானது. இதனை இராஜதந்திரம் என்று அழைக்க முடியுமா என்பதுவும் கேள்விக்குரியது. அமெரிக்கா ரஷ்யாவுடனான அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து வெளியேறப் போவதாக அறிவித்துள்ளமை ஏற்படுத்தவுள்ள தாக்கங்களை விளங்கிக் கொள்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
நடுத்தர அணுவாயுத உடன்படிக்கை (Intermediate-Range Nuclear Force Treaty) 1988 ஆம் ஆண்டு டிசம்பர் 08 ஆம் திகதி வொசிங்டனில் முன்னாள் சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது. இதில் முன்னாள் ஜனாதிபதிகளான ரொனால்ட் றேகனும் மிகையில் கொர்பச்சேவ்வும் கைச்சாத்திட்டிருந்தனர். இந்த உடன்படிக்கையின் சாரம் அணுவாயுதத்தை சுமந்து செல்லும் குறுகிய தூரம் அதாவது 500-1000 கி.மீ வரையான தாக்குதல் திறனுடையதும் நடுத்தர தூரமான 1000-5500 கி.மீ. வரையான தாக்குதல் திறனுடைய ஏவுகணைகளை விலக்குதல் என்ற உடன்பாட்டுக்கு இரு நாடுகளும் உடன்பட்டு கொண்டன. இராணுவத்திலிருந்தும் போர்க் களத்திலிருந்தும் விலக்குவதுடன் கையிருப்பிலுள்ள அவ்வகை 2692 ஏவுகணைகளை 1991 மே இல் இரு தரப்பும் விலக்கிக் கொண்டன. அதே போன்று அடுத்துவந்த 10 ஆண்டுகளில் அவ்வகை ஏவுகணைகளை விலக்கிக்கொள்ள அந்தந்த அரசுகளே சுயமான பரிசோதனைகளை மேற்கொள்வதாகவும் முடிவானது. இது தரையிலிந்து மட்டுமே தாக்குதல் நடவடிக்கைக்கான மட்டுப்பாடாக அமைந்திருந்தது. கடலில் அத்தகைய ஏவுகணையை பாவிப்பதற்கு எதிரான எந்த நடவடிக்கையும் முன்வைக்கப்பட வில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
தற்போது ஜனாதிபதி ட்ரம்ப் இத்தகைய உடன்படிக்கையை ரஷ்யா மீறிவிட்டதாகவும் அதிலிருந்து தாம் வெளியேறப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். காரணம் ரஷ்யா தற்போது Novater-9M729 vDk எனும் நடுத்தர அணுவாயுத ஏவுகணையை தாயாரித்துள்ளதாகவும் அதனை நேட்டோ நாடுகள் SSC-8 எனவும் அழைப்பதுடன் அவை நோட்டோ நாடுகளுக்கு தாக்கும் தூரத்தில் அமைந்திருப்பதுடன் ஆபத்துமிக்கவை எனவும் ட்ரம்ப் குறிப்பிடுகின்றார்.
2014 இல் ஓர் அணுவாயுத ஏவுகணையை ரஷ்யா பரிசோதித்ததால் அத்தகைய உடன்படிக்கையை ரஷ்யா மீறிவிட்டதாக அப்போைதய ஜனாதிபதி ஒபாமா உடன்படிக்கையிலிருந்து வெளியேறப் போவதாகவும் அறிவித்தார். ஆனால் ஐரோப்பிய நாடுகளின் வற்புறுத்தலின் பிரகாரம் அத்தகைய நடவடிக்கையை ஒபாமா அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. ஆனால் 2007 இல் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இந்த உடன்படிக்கை ரஷ்யாவின் நலன்களுக்கு ஆபத்தானவை எனவும் 2002 இல் அமெரிக்கா ரஷ்யாவுடன் மேற்கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தவிர்க்கும் உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறிவிட்டது எனவும் தெரிவித்திருந்தமை கவனிக்கத்தக்கது.
இதே நேரம் பசுபிக் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தினை கட்டுப்படுத்தவே இந்த உடன்பாட்டிலிருந்து அமெரிக்கா வெளியேறப் போவதாக அமெரிக்க தரப்பில் குறிப்பிடுகின்றது. அதனை நேரடியாக ரஷ்யாவுக்கு அடுத்துவரு சந்திப்பில் தெரிவிக்கப் போவதாக வெள்ளைமாளிகை அறிவித்துள்ளது.
இது அமெரிக்காவின் ஒற்றை மைய அரசியல் நலனுக்கானதென ரஷ்யத் தரப்பு கருதுகிறது. அதாவது தனது ஆதிக்கத்திற்குள் உலகத்தை மீண்டும் கொண்டுவர வேண்டுமாயின் அணுவாயுதங்களையும் ஆயுதங்களையும் மீள அதிகரிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் அமெரிக்கா பயணிக்க ஆரம்பிக்கின்றது. அது ஒருவன் அதிகாரத் தளத்தையும் இராணுவ பலக்கோட்பாட்டுக்கூடாக உலகத்தை நகரத்துவதற்கான முயற்சியாகக் கொள்ள முடியும்.
இதே நேரம் ஐ.நா. செயலாளர் அணுவாயுத ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும் போசித் தீர்த்துக் கொளவார்கள் என தாம் நம்புவதாக அறிவித்துள்ளார். அந்தோனியோ குற்றஸின் நம்பிக்கை இராணுவ நலக்கோட்பாட்டுக்குள் அகப்படாது. அது நலன் சார்ந்தது. அமெரிக்க எதிர்கொண்டுள்ள சூழல் அந்த நாட்டுக்கு ஆபத்தானது. அதன் வலு பிராந்தியம் பிராந்தியமாக இழக்கப்படுகிறது. முன்னாள் சோவியத் யூனியன் போன்று இராணுவபலக் கொள்கையை இலகுவில் அமெரிக்கா விட்டுவிடாது. மீளவும் எப்படியாவது தனது ஆதிக்கத்தை தக்கவைக்க வேண்டுமென்ற கொள்கையைக் கொண்டு செயல்படக் கூடிய தேசம் என்பதை நிராகரித்து விட முடியாது. ஒருபக்கம் சீனா மறுபக்கம் ரஷ்யா என்ற தளத்தில் அமெரிக்காவின் எதிர்க் கொள்கை நகர்கின்றது.
அவ்வகைச் சூழலில் அமெரிக்காவின் விடாப்பிடியும் ரஷ்யாவின் புதிய உத்திகளும் நம்பிக்கையின் பாற்பட்டு செயல்படக் கூடியதல்ல. மாறாக நலன்கள் தீர்வுகாணவேண்டும். அதற்கான களம் அந்தோனியோவுக்கு கிடைத்துள்ளது. இத்தகைய நடவடிக்கை ஆயுதப் போட்டியை ஏற்படுத்தும் என்பதற்கு அப்பால் வல்லரசுகளின் இடம்மாறுதலை ஏற்படுத போகின்றது என்பதுவும் கவனிக்கத்தக்கது.
எனவே, இரு தரப்பும் உலக அதிகாரத்தை தக்கவைக்க கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர் அதனை அடைவதற்கான போட்டியாகவே அணுவாயுத ஏவுகணையின் திறன் பார்க்கப்பட வேண்டும். குறிப்பாக நோட்டோவின் விஸ்தரிப்பூடாக அமெரிக்கா உலகத்தின் எல்லைகளை தனது எல்லைகளாக மாற்றிக் கொண்டிருக்கின்றது. தனது நேட்டோ நாடுகளுக்கு ஆபத்தெனக் கூறிக்கொண்டு ரஷ்யாவின் எல்லைகளை கைப்பற்ற முயற்சிக்கிறது. இதனை தகர்ப்பதே ரஷ்யாவின் புதிய தயாரிப்பு ஏவுகணை. எனவே இது ஒரு தீர்க்கமான முடிவை எட்டும் வரை தொடரக்கூடியதென்பதை நிராகரித்துவிட முடியாது.
எனவே ரஷ்ய அமெரிக்கப் போட்டி அரசியலானது இராணுவ ஆயுத தளபாடங்களினால் மீளவும் ஆரம்பித்துள்ளது. இது உலக அரசியலை இரு தரப்பிடமிருந்து ஒரு தரப்புக்குரியதாக மாற்றும். அதே சந்தர்ப்பத்தில் உலக அதிகாரப் பரப்பில் நிலவும் பல துருவ அரசியல் ஒழுங்கினை புதிய வடிவத்திற்குள் மாற்றும் என்ற நிலை சாத்தியமடையப் போகின்றது. ஆனால் மென் அதிகாரப் பரப்பில் பயணிக்கும் சீனாவின் போக்கினை பாதிக்கக் கூடியதாக அமையுமா என்பதே பிரதான கேள்வியாகும். இதில் ரஷ்யாவின் போக்கானது எடுக்கவுள்ள முடிவினைப் பொறுத்தே அத்தகைய தீர்மானம் அமையும்.ரஷ்ய-அமெரிக்க கூட்டு சாத்தியமாகுமாக அமைந்தால் சீனாவின் போக்கில் நெருக்கடி தவிர்க்க முடியாதது. ஆனால் ரஷ்யா இலகுவில் அமெரிக்காவின் கூட்டாக மாறாது என்ற அடிப்படையிலே அதன் தீர்மானங்கள் அமையும்.
அதற்கு வலுவான காரணங்கள் கடந்த காலத்திலிருந்து நோக்கப்பட வேண்டும். குறிப்பாக அமெரிக்காவின் நேட்டோ விஸ்தரிப்பு அபாயமான நகர்வுகளை கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல மத்திய ஆசியக்குடியரசுகளையும் ரஷ்யக் குடியரசுகளையும் இலக்கு வைத்து நகர்ந்தமை கவனிக்கப்பட வேண்டியதாகும். வட அத்திலாந்திக் நாடுகளின் உடன்படிக்கை எப்போதோ காலாவதியான சித்தாந்தமாகியுள்ளது. அது தற்போது முழு உலகத்திற்குமான நாடுகளை ஒன்றிணைக்கின்ற அமைப்பாக மாறிவிட்டது. நேட்டோ என்பதற்கான வலிமையானது அமெரிக்காவின் எடுபிடியானதாக அரசுகளை மாற்றுவதாகவே உள்ளது. பொதுவில் சம அதிகாரமோ வலிமையோ இராணுவக் கொள்கைக்கான திறனோ இல்லாத நாடுகளை இணைப்பதிலேயே கரிசனை காட்டுகின்றது. இத்தகைய அமைப்பினை விஸ்தரிப்பதன் மூலம் தனது எல்லையை ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் அருகாமையில் நகர்த்துவதே அமெரிக்காவின் நோக்கமாகும். அது மட்டுமன்றி இந்த வலிமையான நாடுகளை கண்காணிக்கவும் தனது இராணுவ வலிமையை தக்கவைக்கவும் அரணை அமைப்பதுவுமே அமெரிக்காவின் உபாயமாகும்.
இதனை கருத்தில் கொண்டே அமெரிக்கா ரஷ்யாவின் ஏவுகணைத் திட்டத்தினை நிராகரிக்கின்றது. ஆயுதப் போட்டியானது அரசுகளை தினம் தினம் தயார்ப்படுத்தும் ஒரு செயல் முறையாகும். இதுவரை ரஷ்யாவின் தயாரிப்புகள் அனைத்தையும் விட அது அமெரிக்காவுக்கு ஆபத்தானதாக உள்ளது என்பது ட்ரம்ப்பின் நடவடிக்கையிலிருந்து தெளிவாகிறது. SSC-8 என்பது அணுவாயுதம் சார்ந்த அதிக ஆபத்து மிக்க இராணுவ வலிமையுடைய ஆயுதமாகும். இதன் இருப்பினை தகர்த்ததன் மூலமே முன்னாள் சோவியத் யூனியனின் வலிமையை உலகாவிய ரீதியில் அமெரிக்கா உடைத்ததென்பது நன்கு புரியக் கூடிய விடயமாகும்.மீளவும் ரஷ்யா எழுச்சியடைவதென்பது அபாயகரமான செய்தியாக அமைந்துள்ளது அமெரிக்காவுக்கு. அதனாலேயே அணுவாயுத ஒப்பந்தத்தை விவகாரமாக்கிவருகிறது. அதன் மூலம் ஏதும் அடைய முடியுமா என்பது கேள்விக்குரியது தான். காரணம் புட்டின் ரஷ்ய ஜனாதிபதியாக இருக்கும் வரை கடினமான இலக்காகவே அமெரிக்காவுக்கு அவ்விடயம் அமையும். கடந்த காலங்களில் பல அனுபவங்களை உலகம் கண்டிருகிறது.
எனவே இரு தரப்பின் ஆயுதப் போட்டியானது புதிய உலக சூழலை ஏற்படுத்தும். தவிர்க்க முடியாது அதனை உலக நாடுகள் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும்.நேட்டோவை நோக்கி ரஷ்யா அடுத்த கட்டத்தை தொடக்கியுள்ளது. உக்ரையின் முதல் கஸ்பியன் கடல்வரையான நேட்டோவின் விஸ்தரிப்புக்கு முடிவுகட்டுவதே ரஷ்யாவின் பிரதான நோக்கமாகும்.
கலாநிதி
கே.ரீ. கணேசலிங்கம்
யாழ்.பல்கலைக்கழகம்