![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2018/11/17/pg13-2.jpg?itok=TaD8NXzN)
முதலாம் உலகப் போரின் நூற்றாண்டு விழா பிரான்ஸில் வெகு விமர்சையாகக் கெண்டாடப்பட்டது. உலகத் தலைவர்கள் ஒன்று சேர பாரிஸ் நகரம் முதலாம் உலக யுத்தத்தில் கொல்லப்பட்ட வீரர்களுக்காகவும், பொதுமக்களுக்காகவும் நிகழ்வுகளை அனுஷ்டிக்கும் நிகழ்வாக அமைந்தது. அந்நிகழ்வில் பிரான்ஸ் ஜனாதிபதி ஆற்றிய உரையும் முக்கிய இடத்தினை வகித்திருந்தது. இக்கட்டுரையும் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானின் உரையின் முக்கியத்துவத்தினை விளங்கிக் கொள்வதற்கான வெளிப்பாடாக உள்ளது.
மேக்ரானின் உரையின் உள்ளடக்கத்தினை நோக்குவோம்.
கிடைத்த பாடத்தினை கடந்த கால நிகழ்வுகளிலிருந்து உலகத் தலைவர்கள் மறந்துவிடக்கூடாது. உலகம் முழுவதும் அமைதிக்கான நம்பிக்கைகள் துளிர்க்க வேண்டும். ஆனால் அத்தகைய அமைதியை சீர்குலைக்கும் வகையில் தற்போதைய நிகழ்வுகள் உலகளாயவிய ரீதியில் உள்ளன. வருங்காலத் தலைமுறையினருக்கு சரியானதை தேர்ந்தெடுத்து தருவது நமது பொறுப்பாகும் என்றார். மேலும் அவர் தொடர்ந்து உரையாற்றும் போது உலகில் பல நாடுகள் தற்போது தேசியவாதக் கொள்ளையை கடைப்பிடித்து வருகின்றன. தேசப்பற்று என்பது வேறு தேசியவாதம் என்பது வேறு. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று வேறுபடானவை. பருவ நிலை மாற்றம், வறுமை, பசி, பிணி, ஏற்றத்தாழ்வு, புறக்கணிப்பு, வன்முறை, மேலாதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றார்.
பிரான்ஸ் ஜனாதிபதியின் உரை இரண்டு தளத்தில் காத்திரமானது.
ஒன்று, உலக நாடுகளின் தேசியவாதம் தொடர்பான கொள்கையை விமர்சித்துள்ளார். குறிப்பாக ஐரோப்பாவுக்குள் மீளவும் ஒரு தேசியவாத உணர்வு மேலெழுகின்றது. அது அமெரிக்காவிலும் பெரியளவில் வளர்ந்து வருகிறது. மேற்கின் தேசியவாதமானது மேற்கு மேற்கில் வாழும் மேற்கத்தேசத்தவருக்கானது எனும் உணர்வுடன் காணப்படுகின்றது. அதாவது அமெரிக்கா அமெரிக்கர்களுக்கு சொந்தமானது என்ற உணர்வையும், ஜேர்மனி ஜேர்மனியருக்கே என்ற வாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் இத்தாலி, கிரேக்கம், பிரித்தானியா என்பன அதற்கான அடிப்படை அணுகுமுறைகளைக் கொண்டியங்குகின்றன.
இத்தகைய புதிய தேசியவாதமானது சந்தையையும், வர்த்தகத்தையும், வேலைவாய்ப்பினையும் பொருளாதார நலன்களையும் கொண்டது. ஐரோப்பா அடங்கலாக மேற்குலகத்தின் இருப்பை பிரதிபலித்தது. நவதாராளவாதத்தின் செழிப்பு இறைமையற்ற, எல்லையற்ற, பொருளாதாரக் குடும்பமாக கட்டமைத்த ஐரோப்பாவை பாதிப்புக்கு உள்ளாக்கியது. அதாவது பொருளாதார தேவைக்காக ஐரோப்பா அரசற்ற சமூகமாக வடிவமெடுத்திருந்தது. ஐரோப்பிய யூனியன் அதற்கான பலத்தை கொண்டிருந்தது. உற்பத்தியின் பெருக்கமானது சந்தையிலும் வர்த்தகத்திலும் தங்கியிருக்கின்ற போக்கானது பொது அடையாளத்தினை நோக்கி நகர்ந்தது. அதன் வளர்ச்சிகள் அனைத்தும் வேலையின்மையாலும் ஆசிய, ஆபிரிக்கா நாடுகளிலிருந்து குவிந்த அகதிகளாலும் தகர்ந்தது. தேசிய மட்டத்திலும் பல்தேசிய மட்டத்திலும் இயங்கிய கம்பனிகளது வளர்ச்சி வேகமான வீக்கத்தினால் வலிமையற்ற போக்கினை எட்டியது. 2008 இல் அமெரிக்காவில் ஏற்பட்ட (26/11) நிதி நெருக்கடியானது படிப்படியாக ஐரோப்பாவையும் தாக்கத்திற்கு உள்ளாக்கியது.
ஐரோப்பிய பொது அடையாளமான ஐரோப்பிய யூனியனின் அங்கமான கிரேக்கம் முதல் பலியாகியது. அமெரிக்காவுக்கு ஏற்பட்ட நெருக்கடியில் ஐரோப்பாவும் சீனாவும், இந்தியாவும் பங்கெடுத்த நிலை மாறி ஐரோப்பிய யூனியனின் அங்கமான கிரேக்கம் அதன் பொருளாதார கொள்கையாலேயே நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. பொருளாதாரம் தகர்ந்து போக அரசியல் நெருக்கடி மிக ஆபத்தான சூழலை எட்டியது. ஸ்திரம் குலைந்தது. மீளவும் ஐரோப்பா எனும் பொது அடையாளத்தைக் கைவிட்டு கிரேக்கம் தனியுடமைவாதத்துக்கும் தள்ளப்பட்டது. மீளவும் இறைமை எல்லை, அரசுக்கான அடிப்படை வடிவங்களாக நோக்கி உந்தப்பட்டது. கிரேக்கத்தின் பெரும் பொருளாதார நெருக்கடி அரசியல் ஆதிக்கத்தை கட்டமைத்தது. அதனூடாக அது படிப்படியாக நெருக்கடிகளை தீர்க்க ஆரம்பித்தது. முழுமையாக மீளாதுவிட்டாலும் மீளெழல் என்றும் அம்சத்தை கிரேக்க அரசியல் கட்டமைப்பு ஏற்படுத்தியது.
இத்தகைய அனுபவம் ஐரோப்பிய நாடுகளுக்குள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. கிரேக்கம் நெருக்கடியை சந்திக்கும் போது ஐரோப்பிய யூனியனின் அணுகுமுறை மட்டுமன்றி அனைத்து அரசுகளாலும் கைவிடப்பட்ட நிலை அரசுகளின் தேசியவாத சிந்தனையை மீளமைக்க வழியமைத்தது. இது பெருமளவிற்கு அரச மத்திய அல்லது அரச மேலாதிக்கத் தேசியவாதமாக பரிமாணம் எடுத்தது எனலாம். மக்கள் - அரச நிறுவனத்திற்கிடையிலான நெருக்கமும் புரிதலும் அரச ஆதிக்க தேசியப் பரிமாணம் எழ வழிவகுத்தது. கீழைத்தேச நாடுகளின் அனுபவங்களுக்கு மாறான வடிவடித்தைக் கொண்ட ஐரோப்பிய அரசுகள் மக்களின் விருப்புக்களை நிறைவேற்ற தலைப்பட்டன. அதன் முதல் கட்டமாக அகதிகள் தொடர்பான கொள்கை வகுப்பு நிகழ்ந்தது. இதில் ஐரோப்பாவுக்கு சற்று வேறுபட்ட தளத்தில் அமெரிக்கா முன்னேறியது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரெம்ப் ஆட்சிக்கு பிற்பாடு அகதிகள் அல்லது புலம்பெயர்ந்தவர்கள் மீதான கொள்கைகள் இறுக்கமாக கடைப்பிடித்ததுடன் இஸ்லாமிய பிரிவினர் தனித்துவமான அரசியல் பிரிவினராக அடையாளப்படுத்தப்பட்டு குடியேற்றவாசிகள் வருகை முற்றாக நிறுத்த முயலுகின்ற திட்டங்களை அமைத்தது அரபு நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை மெக்ஸிக்கோ அமெரிக்க எல்லையில் சுவரமைக்க திட்டமிட்டமை மற்றும் கியூபா, ஈரான், சீனா, இந்தியாவுடனான வர்த்தக நிர்ப்பந்தங்களும் உடன்படிக்கை மீறல்களும் புதிய உபாயங்களாக அமைந்தன. இதற்கூடாக அமெரிக்க தேசியவாதம் கட்டியெழுப்படுகின்றது. அதனால் அமெரிக்கர் பாதுகாக்கப்படுகின்றனர். அவர்களது இருப்பும் வாழ்வதாரமும் மேம்படுத்தப்படுவதாக உணரத் தலைப்பட்டுள்ளனர்.
அவ்வாறே ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறிய பிரித்தானியாவின் தேசியவாத உணர்வே காரணமாகியது. ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் ஆசிய, ஆபிரிக்க நாடுகளிலிருந்தும் புலம்பெயர்ந்த குடியேற்றக்காரர்களாலும், அகதிகளாலும் பாரிய நெருக்கடியை பிரிட்டன் எதிர்நோக்கியது. பிரிட்டனின் பொருளாதார வாய்ப்புக்களும் நாணய உறுதிப்பாடும், வாழ்வாதாரமும், வேலையின்மையும் அதீத நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால் உள்நாட்டுக்குள் ஏற்பட்ட குழப்பங்களும், எதிர்ப்பலைகளும் பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதனை உறுதிப்படுத்தியது. அது தவிர்க்க முடியாத அரசியல் பொருளாதார சூழலாகும். பிரித்தானியாவின் நிலைத்திருப்புக்கு அத்தகைய வெளியேற்றம் தவிர்க்க முடியாததாகவுள்ளது.
எனவே, ஐரோப்பா ஒரு புதிய தேசியவாத சிந்தனைக்குள் திரும்பியுள்ளது என்றே கூறலாம். அது ஒரு திரும்புகை என்ற வாதம் எழுவதற்கு காரணம் மீளவும் நவீன சிந்தனையுடனும் எண்ணங்களுடனும் புராதன ஐரோப்பாவின் மறுமலர்ச்சி யுகத்திற்குள் செல்வதைப் போன்றே தென்படுகிறது. 16, 18 ஆம் நூற்றாண்டுக்கிடையில் ஐரோப்பாவில் ஏற்பட்ட மாற்றங்கள் உலகம் முழுவதையும் ஏதோ ஒரு வடிவத்தில் செல்வாக்கு செலுத்தியது போல் தற்போதைய அணுகுமுறையும் அமைந்துள்ளது. இதனை புதிய தேசியவாதம் எனவும் மீள்தேசியவாதமெனவும் புலமையாளர்கள் அழைக்க முயற்சிக்கின்றனர். இது நவீன யுகத்தில் பழைய ஏற்பாடு என்பது போல் அமைந்துள்ளது எனலாம்.
முதல் உலகப் போரின் நூற்றாண்டு நினைவுகளை மையப்படுத்திய பிரான்ஸ் ஜனாதிபதியின் உரையின் இரண்டாவது அம்சமாக காணப்படுவது முழு உலகத்துக்குமான சவாலாகும். குறிப்பாக பருவநிலை மாற்றம், வறுமை, பசி, நோய், ஏற்றத்தாழ்வு புறக்கணிப்பு, வன்முறை மற்றும் மேலாதிக்கம் என்பன. இவை ஒவ்வொன்றின் தாக்கமும் ஒன்றிணைந்த அரசுகளின் போராட்டத்தை வலியுறுத்துகிறது என்ற மேக்ரான் குறிப்பிடுகின்றார்.
ஏனெனில் இவற்றுக்கு பின்னால் அரசுகளது அவற்றின் தவறான கொள்கைகளுமே பிரதான காரணமாகும். பருவநிலை மாற்றத்துக்கு பின்னால் அரசுகளின் தவறான இயற்கையை நிராகரிக்கும் அணுகுமுறைகளே அடிப்படையானவை. உலகம் முழுவதும் தொழில்நுட்பத்தின் வல்லமை தந்த சிறப்புக்களை தவறான இயற்கை மீறல்களுக்கு பயன்படுத்திய அரச உத்திகளே எல்லை மீறிய பருவ நிலை மாற்றத்திற்கு முகங்கொடுக்க வைத்துள்ளது. அதில் வல்லரசுகளும் ஐரோப்பிய அரசுகளும் முக்கிய பங்கெடுப்பாளர்கள். அந்த அரசுகளின் இயற்கை கட்டமைப்பு முரணான பொருளாதார - இராணுவக் கொள்கைகளே முக்கிய காரணமாக உள்ளன.
அவ்வாறே வறுமை, ஏற்றத்தாழ்வு, சுகாதார கேடு என்பவற்றுக்கு பின்னால் ஆதிக்க சக்திகளும் வன்முறைகளும் வலிமையான சாதனங்களாக உள்ளது. வன்முறை முழு உலகத்தினை ஏதோ ஒரு அடிப்படையில் நிகழ்ந்து வருகிறது. முதலாம், உலக யுத்தம் இரண்டாம் உலக யுத்தத்திற்கு வழிவிட்டது போல் இரண்டாம் உலக யுத்தம் பாரியளவில் சிறிய யுத்தங்களுக்கு வழிவிட்டுள்ளது. வல்லரசுகளது ஆதிக்கப் போட்டியும் அதிகாரத்தின் அரசியல் நடவடிக்கைகளும் வன்முறையை நீடிக்க செய்துள்ளது. ஆயுத உற்பத்தியும் அதற்கான சந்தையும் ஆசிய ஆபிரிக்க நாடுகளை நோக்கியதாக அமையும் வரையும் வன்முறை தவிர்க்கமுடியாததாகவே காணப்படும்.
எனவே, மேக்ரானின் உரையின் உள்ளடக்கம் ஐரோப்பிய அரசுகளுக்கே உரியதாகும். வல்லரசுகளது போட்டியே உலகளாவிய நெருக்கடிகளுக்கு அடிப்படையாகும். ஐரோப்பாவுக்கு எழுந்துள்ள புதிய மீள் தேசியவாதத் சிந்தனை உலகளாவிய தளத்தில் அதிக தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடியது. தேசியவாதம் தந்திருக்கும் ஜனநாயகம், சுதந்திரம், மனிதநேயம், சமத்துவம் என்பனவற்றை மேற்கு தனது நலனுக்கு பிரயோகித்த சூழலே மீள்தேசியவாதத்திற்கு வித்திட்டுள்ளது. இவை மீளவும் மேற்கினை பலப்படுத்துவதாகவே அமையும். அரசுகளின் எல்லைக்குள் பொருளாதார - இராணுவ நலன்களை நிறைவு செய்துவிட்டு சர்வதேச போட்டிக்கு தயராகும் உத்தியை மேற்கு வகுத்துள்ளது. அது உலகமயவாக்கத்தில் அடைந்த நெருக்கடியும் அதனை கீழைத்தேச சக்திகள் முதன்மைப்படுத்துவதனையும் முறியடிக்கும் விதத்திலேயே புதிய தேசியவாதம் எழுச்சி நிகழத் தொடங்கியுள்ளது.