பிரித்தானியாவின் ஐக்கியத்தை தகர்க்குமா ஐரோப்பிய யூனியன்? | தினகரன் வாரமஞ்சரி

பிரித்தானியாவின் ஐக்கியத்தை தகர்க்குமா ஐரோப்பிய யூனியன்?

ஐரோப்பாவுக்குள் நிகழ்ந்துவரும் மாற்றங்கள் உலகத்திற்கே பாடமாக அமைந்த வரலாறு உண்டு. நாகரீகத்தின் தொட்டில் என்றும், மறுமலர்ச்சியின் பிறப்பிடம் என்றும் முதன்மைப்படுத்தப்படும் ஐரோப்பாவுக்குள் சமீபகாலமாக நெருக்கடி அரசியல் முனைப்பு பெற்று வருகிறது. குறிப்பாக பிரான்ஸில் நிகழ்ந்து வரும் போராட்டங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய மறுகணம் பிறிக்ஸிட்ற் விவகாரம் பிரித்தானிய பிரதமர் தெரேசாமேக்கு எதிரான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய யூனியன் பிரித்தானியாவை தகர்ந்து விடுமா என்ற சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இக்கட்டுரையும் பிரித்தானியாவின் ஐக்கியத்தினை ஐரோப்பிய யூனியன் பாதிக்குமா என்பதை தேடுவதாக உள்ளது.

ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து வெளியேறும் முடிவினால் முன்னாள் பிரதமர் டேவிட் கமரோன் பதவியை இராஜினாமா செய்துவிட்டு வெளியேறினார். தற்போது பிரதமர் தெரேசா மே மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையிலிருந்து தப்பித்துக் கொண்டதனால் பதவியை தக்கவைத்துக் கொண்டார். இதற்கிடையில் பெரும் குழப்பங்களும் இழுபறிகளும் ஐரோப்பிய யூனியனால் பிரித்தானியாவுக்கு ஏற்பட்டுள்ளது. பிரித்தானிய மக்கள் மிகத் தெளிவாக ஐரோப்பிய யூனியனை விட்டு வெளியேறுமாறு பணித்திருந்தனர். வெளியேறுவதற்கான காலம் இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் தறுவாயிலுள்ளது. அதனை விட 2020 ஆண்டுவரை மீளவும் ஒரு உடன்பாட்டை ஐரோப்பிய யூனியனுடன் செய்யப் போவதாகவும் அதுபற்றிய ஒப்புதலை பெறுவதற்கான முயற்சியிலும் தெரேசா மே ஈடுபட்டு வருகிறார்.

ஒரு பக்கம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் ஒப்புதல் பெறுவதுடன் பிரித்தானிய பாராளுமன்றத்திலும் ஒப்புதலை பெறவேண்டும். பிரித்தானியப் பாராளுமன்றத்தில் ஒப்புதலுக்காக அளிக்கப்பட்டு வாக்கெடுப்பு நிகழும் சந்தர்ப்பத்தில் வாக்கெடுப்பினை இரத்து செய்துள்ளார் பிரதமர் தெரேசா மே. இதே நேரம் ஐரோப்பிய யூனியன் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். காரணம் அந்த ஒப்பந்தத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் தெரேசா மே ஈடுபட்டுவருவதாக தகவல்கள் உறுதிப்படுத்தப்படுகின்றன.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக பிரிட்டன் பிரதமர் நெதர்லாந்து மற்றும் ஜேர்மனியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். காரணம் ஐரோப்பிய யூனியனுடன் மேற்கொண்டு வந்த உடன்பாட்டில் மேலும் உறுதிப்பாட்டையும் பிரிட்டன் சார்பு நிலையையும் பற்றி ஐரோப்பிய யூனியன் தலைவர்களுடன் பேசி வருகின்றார். இத்தகைய மேலதிகமான உறுதிப்பாடு சாத்தியமானால் மட்டுமே பிரித்தானியா பாராளுமன்ற பிரதிநிதிகள் ஒப்புதல் அளிப்பார்கள் என்பதை புரிந்து வைத்துக் கொண்ட மே அதற்கு அமைவாக செயல்பட்டு வருகிறார்.

இதில் தெரசா மே இன் இராஜதந்திரத்தை புரிந்து கொள்ளுதல் அவசியமானது. பாராளுமன்றம் உடன்பாட்டை நிராகரித்துவிடும் என்பதால் உடனடியாக உடன்பாட்டுக்கான வாக்கெடுப்பினை இரத்து செய்தார். மறுபக்கத்தில் தன் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் முன்வைக்கப்பட்ட போது அதனை எதிர்கொண்டு வெற்றி பெற்றார். தொழில்கட்சி குற்றம்சாட்டியது போல் தெரேசா மே இன் தலைமைத்துவம் திருப்தியாகவில்லை என்ற கருத்தினை தகர்த்தெறிந்து பாராளுமன்றத்தில் வெற்றியை பெற்றார். அத்தோடு ஐரோப்பிய யூனியன் தலைவர்களுடன் உரையாடலை ஆரம்பித்தார். எனவே அவர் உறுதியாகவும் நிதானமாகவும் செயல்பட்டு வருகிறார். இந்த சந்தர்ப்பத்தில் ஏன் இத்தகைய குழப்பமும் இழுபறியும் ஏற்பட்டுள்ளது என்பதே முக்கியமானது.

பிரெக்ஸிட் உடன்பாட்டில் பெரும்பாலான பகுதிகளுக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல் தரத் தயாராக உள்ளது. ஆனால் வட அயர்லாந்து குடியரசு தொடர்பான விடயமே முரண்பாட்டிற்குரிய அடிப்படையாகும். ஐரோப்பிய யூனியனது வர்த்தக நடவடிக்கைகயை அயர்லாந்து தொடரப் போவதாகவும் அதற்கான ஒப்புதலை அளிக்கும் விதத்தில் தயார் செய்யப்பட்ட உடன்பாட்டையே பிரித்தானியப் பாராளுமன்ற நிராகரிக்க திட்டமிட்டது.

அயர்லாந்துடன் ஐரோப்பிய யூனியன் ஒரே சந்தை மாதிரியை பின்பற்ற விரும்புகிறது. இது ஐக்கிய இராச்சியத்திலிருந்து அயர்லாந்தை பிரித்துவிடுமென பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களும் கருதுகின்றனர். ஐரோப்பிய யூனியனின் பிரிவினையானது பிரித்தானியாவை பிரிவினைக்கு உட்படுத்த முயலும் என்ற சந்தேகம் பிரித்தானிய பாராளுமன்றத்திடம் எழுந்துள்ளது. அதனை தடுப்பதற்காகவே 2020 வரையுமான வர்த்தக உறவை நீடிக்கும் விதத்தில் ஐரோப்பிய யூனியனுடன் உடன்படிக்கையை வரைவதற்கு பிரித்தானியா விரும்பியது. அதேநேரம் ஐரோப்பிய நீதிமன்றமும் பல நிபந்தனைகளை பிரித்தானியாவுக்கு வழங்கியது. அதாவது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 27இன் அனுமதி இல்லாமலே பிரெக்ஸிட் முடிவை பிரிட்டனால் இரத்து செய்ய முடியும். மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் எந்தவொரு நாடும் ஒன்றியத்தை விட்டு விலகும் முடிவை எடுத்துவிட்டு பின்னர் சம்பந்தப்பட்ட நாட்டிற்கும் ஒன்றியத்திற்கும் ஒப்பந்தம் ஏற்படும் வரைபில் அல்லது ஒன்றியத்தை விட்டு விலகும் முடிவை எடுத்த பின்னர் இருக்கக்கூடிய இரண்டு ஆண்டுகால அறிக்கை காலத்திற்குள் தமது யோசனையை மாற்றிக் கொள்ள முடியும் என்னும் இரண்டு ஆண்டு காலம் என்பது நீடிக்கப்பட்ட காலகட்டத்தில் கூட தமது முடிவை மாற்றிக் கொள்ள முடியும் என ஐரோப்பிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நீதிமன்றத்தின் முடிவின் பிரகாரம் பிரித்தானியா மீளவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. ஆனால் பிரித்தானிய பாராளுமன்றம் மற்றும் பிரதமர் மே அரசாங்கம் ஐக்கியப்பட்ட தேசத்தை பாதுகாப்பதற்கான உத்தியை கொண்டு இயங்குகிறது. பிரெக்ஸிட் உடன்படிக்கை பிரித்தானிய அரசியலமைப்பை மீறுகின்ற உடன்படிக்கை என பிரித்தானியா பராளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஐரிஷ் கடற்பகுதி கூட பிரித்தானியாவின் கட்டுப்பாட்டை மீறி வர்த்தக நடவடிக்கையில் ஐரோப்பிய யூனியனுடன் செயல்படுமென குற்றம் சாட்டுகின்றனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரெக்ஸிட் உடன்படிக்கையினால் அமெரிக்காவுடனான பிரிட்டனின் வர்த்தகம் பாதிப்படையுமென குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில் முழுமையாக ஐரோப்பிய யூனியனுடன் உறவை பிரிட்டன் முறித்துக் கொள்வதாக அறிவித்தது. பின்பு 2020 வரையான காலப்பகுதி வரை நீடிப்பதாக தெரிவித்தது. ஆனால் பிரித்தானியப் பாராளுமன்றமோ ஐரோப்பிய ஒன்றியத்துடனான உடன்பாடு ஐக்கிய இராட்சியத்துடனானதாக அமைவதாக விளங்க வேண்டும் எனக் கருதுகிறது.

அதனால் ஏற்படப்போகும் பாதிப்புக்கள் சாதகத் தன்மைகள் அயர்லாந்து குடியரசு உட்பட அயர்லாந்து, ஸ்கொட்லாந்து என்பவற்றை உள்ளடக்கியதாக அமைய வேண்டும். அயர்லாந்து பகுதி ஐரோப்பிய ஒன்றியத்துடன் தனித்து வர்த்தம் மேற்கொள்வதென்பது அது பிரித்தானியாவிலிருந்து பிரிவதற்கு ஒப்பானதாக அமையும். இது பொருளாதார ரீதியில் பிரித்தானியாவுடன் தங்கியுள்ள இதர பகுதிகள் சுதந்திரமாக செயல்படுவதற்கு அதிக காலம் எடுக்காது என பாராளுமன்றம் கருதுகின்றது. மிக நீண்டகாலம் கட்டிக்காக்கப்பட்ட ஐக்கிய இராச்யம் ஐரோப்பிய யூனியனது நடவடிக்கையினால் பாதிப்படையும் என அஞ்சுகின்றனர்.

இதுவே பிரெக்ஸிட் உடன்படிக்கையின் இழுபறிக்கும் மே மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கும் அடிப்படைக் காரணமாகும். இது ஒரு பாரிய நெருக்கடியாகும். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான ஆணையை மக்கள் முன்வைத்துள்ளனர். அதேநேரம் அதனால் ஏற்படும் இழப்புக்களும், பாதிப்புக்களும் ஐக்கிய இராட்சியத்தையே தகர்க்கக்கூடியது. இது பிரித்தானியாவுக்கும் அதன் அரசாங்கத்திற்கும் ஆபத்தான கட்டம். எந்த அரசாங்கமும் நாட்டை கூறுபோடுவதற்கு அனுமதிக்காது. பிரித்தானிய அரசியலமைப்பு அதீதமாக ஒற்றையாட்சி இயல்பைக் கொண்டது. ஆனால் மூன்றுக்கு மேற்பட்ட அலகினைக் கொண்டது. அதுமட்டுமன்றி அயர்லாந்தின் தேசிய விடுதலைப் போராட்டம் நீண்ட நூற்றாண்டுக்கணக்கான வரலாற்றைக் கொண்டது.

எனவே ஐரோப்பிய ஒன்றியம் பிரித்தானியாவின் இறைமையையும், ஒற்றையாட்சித் தத்துவத்தையும் தகர்க்க முயலுகின்றமை மறுபக்கத்தில் வர்த்தக ரீதியான உறவினால் பிரித்தானியாவை பிரிவினைக்கு உட்படுத்துதல் அல்லது பிரித்தானியாவை மீள இணைத்தல் என்ற அடிப்படையில் செயல்படுவதனைக் காணமுடிகின்றது.

கலாநிதி

கே.ரீ. கணேசலிங்கம்

யாழ்.பல்கலைக்கழகம்

 

Comments