பிரெக்ஸிட் ஐரோப்பாவின் தேசிய உணர்வை தூண்டுகிறதா? | தினகரன் வாரமஞ்சரி

பிரெக்ஸிட் ஐரோப்பாவின் தேசிய உணர்வை தூண்டுகிறதா?

ஐரொப்பிய ஒன்றியமும் பிரிட்டனும் அதிக அழுத்தங்களுக்கு உள்ளாகி வருகின்றதை கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாக அவதானிக்க முடிகிறது. இது பெரும் அரசியல் பொருளாதார நெருக்கடியை உருவாக்கிவிட்டுள்ளது. இதனை சரி செய்யமுடியாதுள்ள பிரிட்டன் ஆளும் தரப்பு ஆட்சியை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றது. இதில் அயர்லாந்தின் பங்கும் அதிகமாக உள்ளதென்பதை இதே பத்தியில் குறிப்பிட்டிருந்தமை நினைவு கொள்ளத்தக்கது. இன்றைய அரசியல் சூழலில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கருத்தில் கொள்வதனை விட எதிர்காலம் பற்றிய உரையாடலே பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியன் தரப்புக்களால் உணரப்படுகின்றது. இக்கட்டுரையும் அத்தகைய பிரெக்ஸிட் ஏற்படத்தியுள்ள தாக்கங்களை ஆராய்வதாகவும் அதன் எதிர்காலம் பற்றிய தேடலாகவும் அமையவுள்ளது.

இரண்டு விடயம் பற்றிய தேடல் பிரெக்ஸிட்டால் ஏற்பட்டுள்ளது. ஒன்று நேரடியாக பித்தானிய ஆட்சியின் உறுதிப்பாடு தகர்கின்றது. இது முதலில் ஒரு பிரதமரை இராஜினாமா செய்யத்தூண்டியது. அது அரசியல் நாகரிகமாகப் பார்க்கப்பட்டதென்பது தனித்துவமானதும் என்பது நிராகரிக்கமுடியாததுமாகும். அதே நேரம் சிறந்த ஆட்சியாளரின் பங்கினை அந்த நாடு இழந்து போகிறது என்பதுவும் நினைவு கொள்ளப்பட வேண்டியதாகும். அது மட்டுமன்றி தற்போதைய பிரதமர் தெரேசா மே இரண்டுதடவை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொண்டுள்ளார். அதில் வெற்றி கண்டார் என்பதெல்லாம் வேறு விடயம். ஆனால் ஆட்சியின் உறுதிப்பாடு காணாமல் போகின்றது. உலகத்திற்கே முன்மாதிரியான தேசம் தனது நாட்டினை உறுதியானதாகவோ பலமான ஆட்சியையோ பாதுகாக்க முடியாதுள்ளது.

இரண்டாவது விடயம் பிரெக்ஸிட்ன் நடவடிக்கை அந்த நாட்டில் மட்டுமல்ல முழு ஐரோப்பாவையும் பாதிக்கின்ற நடவடிக்கையாக அமைந்துள்ளது. அத்தகைய விடயம் ஐரோப்பிய யூனியன் குறிப்பிடுவது போல் பிரித்தானியாவை இலகுவில் வெளியேற்றி விட முடியாதுள்ளமையும் கவனிக்கத்தக்கது. ஆளும் தரப்பு உடன்பாடுகளுடன் வெளியேற திட்டமிடுகிறது. எதிர்த்தரப்பு அத்தகைய உடன்பாடுகள் அவசியமற்றவை எனக்கருதுகின்ற நிலை காணப்படுகின்றது. இது கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்கிறது. பிரான்ஸ், ஜேர்மனி ஆட்சியாளர்களும் ஐரோப்பிய யூனியன் போன்றே கருதுகின்றனர். அதாவது உடன்பாட்டுடன் வெளியேறுவது பொருத்தமான பொருளாதார வர்த்தக கட்டமைப்பினை வரைந்து கொள்ள உதவுமெனக் கருதுகின்றன. இப்போது உள்ள சூழலில் நிலைமாற்றக் காலம் பற்றி சிந்திக்க ஆரம்பித்துள்ளனர் ஐரோப்பிய நாட்டுக்காரர்கள். அவ்வாறன்றி உடன்பாடு எதுவும் இன்றி வெளியேறுவது என்பது எந்தத் தொடர்புமற்ற போக்கினை உருவாக்கிவிடும். இதில் அமெரிக்கா அத்தகைய பிரிட்டனின் வெளியேற்றத்தை ஆதரிகிறது. காரணம் ஐரோப்பாவை விடுத்தால் இலகுவில் தாம் பிரிட்டனுடன் அனைத்து பொருளாதார உறவுகளையும் பலப்படுத்த முடியுமெனக் கருதுகிறது. அத்தகைய முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுவருவதையும் காணமுடிகிறது. ஆனால் பிரித்தானியாவைப் பொறுத்தவரை ஜரோப்பாவுடன் ஒத்துழைப்பது அமெரிக்காவை விட இலாபமானதென கருதுகிறது. அமெரிக்க வர்த்தகப் போட்டியில் பிரித்தானியாவின் இருப்பு காணாமல் போய்விடும் என்ற கருத்து நிலையே அதிகமானதாகவுள்ளது.

அதேபோன்று ஜப்பானும் பிரிட்டன் ஐரோப்பாவுடன் ஒத்துழைத்து செயல்படுவதை அதிகம் விரும்புகிறது. அது குறிப்பிடும் காரணம் பொருளாதார போட்டியில் அரசுகள் தனித்து விடப்படுவது ஆபத்தானதென்பதாகும். அது மட்டுமன்றி பிரிட்டனின் பொருளாதாரக் கொள்கைகளால் அதிக நன்மை அடையும் நாட்டில் ஜப்பானும் ஒன்றாகும். அதனால் அந்நாடு அதிகம் பொருளாதார பாதுகாப்பினை கோருகிறது. அது ஒட்டுமொத்தமான தாராள பொருளாதார பொறிமுறையை பாதுகாக்கவென திட்டமிட்டுள்ளது. அதனால் ஐரோப்பாவுக்குள்ளிருந்து பிரிட்டன் வெளியேறுவதை நிராகிகிற ஜப்பான் படிப்படியாக வெளியேறும் சூழலை ஊக்குவிக்கின்றது.

ஆனால் உண்மையில் ஏன் இந்த இழுபறி தொடர்கிறது என்பதுதான் பிரதான கேள்வியாகும். குறிப்பாக மேம்போக்காகப் பார்த்தால் எதிர்க்கட்சியினதும் ஆளும் தரப்பிலுள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்களதும் செயலாகத்தான் இது தென்படும். அது ஆட்சி மாற்றத்தை நோக்கியதாக அமையுமா என்பதே கேள்வி. அதற்கான வாய்ப்பு இல்லாதுள்ளது. இரண்டு தடவை எதிர்க்கட்சி எடுத்த முயற்சி தோல்வியி-ல் முடிந்துள்ளது. அப்படியாயின் ஆட்சி மாற்றத்திற்கு கன்சர்வட்டிக் கட்சியினர் வாய்ப்பினை கொடுக்கமாட்டார்கள். அப்படியாயின் ஏன் இந்த இழுபறி நீடிகிறது.

இதற்கு ஐரோப்பாவுக்குள் ஏற்பட்டுவரும் மாறுதலே காரணமாகும். ஐரோப்பா எப்போதும் புதியவகை மாறுதல்களையும் புரட்சிகளையும் ஊக்குவிக்கும் தேசம் என்பது அதற்கே உரிய சிறப்பாகும். அதன் தனித்துவத்தை பாதுகாப்பதுவும் மீள் எழுவுதும் இயல்பானதென்றேயாகும். உலகளாவிய ரீதியில் அதன் தனித்துவம் நெருங்குகின்றது என்ற எண்ணம் ஐரோப்பியரிடம் ஏற்பட்டுவிட்டது. குறிப்பாக தேசியம் பற்றிய உணர்வும் மீளக்கட்மைக்கப்பட வேண்டிய மனநிலையும் அவர்களிடம் ஏற்பட்டுள்ளது. அதிலும் தமது வாழ்வியலுடன் இசைந்து பயணிக்கின்ற அனைத்து வாய்ப்புக்களும் ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க குடியேறிகளாலும் அவர்களது பண்பாடுகளாலும் தமக்கேயுரியவை அழிந்து போவதாக கருதுகின்றனர். கீழ் திசைநாடுகளது குடியேறிகள் ஏற்படுத்தியிருக்கும் அசெளகரியங்களை மீட்பதற்கும் தமக்கான எல்லையை வரையறுக்கவும் மீள இறைமைைய ைகட்டமைக்கவும் விரும்புகின்ற சூழல் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பான வாழ்க்கை முறைக்குள் தமது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள தேசிய உணர்வை மீளப் புதுப்பிக்க வேண்டுமென கருகின்றனர். அதற்கான எழுத்துக்களையும் வாய்ப்புக்களை கண்டறியும் அணுகுமுறைகளும் ஆரம்பித்துள்ளன. அதனை எட்டுவதற்கு தமக்குள்ளேயே வரையறைகளையும் எல்லைகளையும் போட முனைகின்றனர். அமெரிக்கா சுவர் எழுப்புவதும் பிரித்தானியா ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதும் ஏறக்குறைய ஒன்றே தான். இது தற்போதுள்ள தாராள வாத ஆட்சியாளர்களால் ஓரளவு தடுக்கப்பட்டு பாதுகாப்பான ஆட்சிகள் அமைகின்றனவே அன்றி எதிர்காலத்தில் இத்தகைய தரப்பு வீழ்ந்து தீவிரவாத தரப்பு எழுச்சி பெறும் சூழல் ஏற்பட முனையும். அவ்வகை அரங்குக்கான திறவு கோலாகவே பிரெக்ஸிட் விவகாரம் அமைந்துள்ளது.

ஐரோப்பிய தேசியம் பதிய திசைக்குள் தமது தேசங்களை தயார் படுத்த திட்டமிட்டுள்ளது. உலக அரசுகளது போட்டிகள் ஒருபக்கம் மறுபக்கம் ஐரோப்பியருக்கு உரித்தான பொருளாதார வாய்ப்புக்களை பிற கண்டத்தவர் அனுபவிப்பதால் தமது இருப்பு கேள்விக்குறியதாகின்றது. இது பூகோளமயவாக்கத்தால் சாத்தியமானது. அத்தகைய வாதத்தை முன்வைத்த தரப்பே அதனை நிராகரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. ஆனால் அது தவிர்க்க முடியாது தனது செயலை முதன்மைப்படுத்த முனைகிறது. அதனை தடுக்க முடியாது திணறுவதாகவே பிரெக்ஸிட் உள்ளது. இத்தகைய இழுபறிக்கு பின்னால் அமைந்துள்ள குழப்பத்திற்கு அதுவே காரணமாகும். ஒரு தரப்பு ஏற்கவும் மறுதரப்பு நிராகரிக்கவும் முனைவது தாராளப் பொறிமுறையில் மாற்றத்தை நோக்கியுள்ள சூழலை தருவிப்பதற்காகவே. உலகப் பொருளாதாரப் பொறிமுறையின் போக்கில் புதிய திசை எழுகையானது ஐரோப்பாவுக்கு மட்டுமல்ல முழு உலகத்திற்கும் அவசியமானது. ஆனால் இத்தகைய போக்கானது நிராகரிப்பையும் மீலெழுகையையும் ஏற்படுத்துவதாக அமையுமாயின் மீண்டும் ஐரோப்பாவால் உலகம் அதிக அதிர்வுகளை எதிர்கொள்ளும். அது மீளவும் முரண்பட்ட உலகத்தை பிரசவிப்பதாகவே அமையும்.

எனவே, பிரெக்ஸிட் விவகாரம் சாதரணமான அரசியல் பொருளாதார பொறிமுறையை தரவில்லை. அது ஆபத்தான கட்டத்தை ஐரோப்பா தொட்டுள்ளது என்பதையே உணர்த்துகின்றது. அதிலிருந்து பிரிட்டன் மீளுவதென்பது அதன் அலகுகளையும் இறைமையையும் பாதுகாப்பதற்கான வேலியாகவே அமையும்.

இத்தகைய வரையறைகள் இறைமையின் ஆரம்ப வடிவமாக அமையுமா அல்லது பின் நவீனத்துவத்தின் வடிவமாக அமையுமா என்பது அதன் மாறுதலை தருவிக்கின்ற தலைமையிடமும் அந்த மக்கள் கூட்டத்திடமுமே தங்கியுள்ளது. அதனை நோக்கி பிரிட்டன் நகர்கிறது. அதனை நேர்க்கணியத்தில் பயணிக்க விடாது தடுக்க முயலுவது அதிர்ச்சியான ஐரோப்பாவை உருவாக்குவதாக அமையும்.

Comments