மேற்காசிய அரசியலில் அமெரிக்காவின் வகிபாகம் | தினகரன் வாரமஞ்சரி

மேற்காசிய அரசியலில் அமெரிக்காவின் வகிபாகம்

இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் மேற்காசிய அரசியல் பெரும் முக்கியத்துவத்தை பெற்றுவருகிறது. குறிப்பாக அதன் எண்ணெய்வளம் பிரதான புள்ளியாக அமைந்தது. அதிலும் அமெரிக்காவின் செல்வாக்கும் ஆதிக்கமும் அப்பிராந்தியத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 70 வருட மேற்காசிய அரசியலில் அமெரி-க்கா ஒரு தீர்மானம் எடுக்கும் சக்தியாக விளங்கியது கவனிக்கத் தக்கது. அமெரிக்காவின் வரலாற்றில் தற்போதைய காலம் மட்டுமே நெருக்கடிமிக்க காலப்பகுதியாகக் காணப்படுகின்றது. இக்கட்டுரையும் அத்தகைய சூழலைப் பற்றிய புரிதலை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

அமெரிக்கா மேற்காசிய இராணுவ -அரசியலிலிருந்து வெளியேறும் நிலையை அதிகம் கொண்டுள்ளது. சில சந்தர்ப்பத்தில் அத்தகைய தீர்மானத்திற்கு எதிராகவும் செயல்படுகின்றது. அதாவது அமெரிக்கா பாரிய குழப்பத்திற்குள் அகப்பட்டுள்ளது என்பதையே வெளிப்படுத்துவதாக உள்ளது அதற்கு பல காரணங்கள் உள்ளன. என்பது இதே பகுதியில் பல தடவை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அத்தகைய அம்சங்களில் மிகப்பிந்தியதாக துருக்கிய விவகாரம் அமைந்துள்ளது. சவூதியரேபியாவின் விவகாரத்துடன் முக்கியம் பெற்ற துருக்கி தற்போது குர்திஸ் விடுதலையுடனும் சிரியாவிலிருந்து அமெரிக்கா வெளியேறும் விடயத்தின் தாக்கத்துடனும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. இதில் பிந்திய விடயமாக இரு நாட்டு ஜனாதிபதிகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுவது பற்றிய முடிவுகளை எட்டியுள்ளனர். அதாவது அமெரிக்க ஜனபதிபதியும் துருக்கிய ஜனாதிபதியும் அண்மையில் நடாத்திய தொலைபேசி உரையாடலின் போது வடக்கு கிழக்கு சிரியாவில் அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் குர்த்திஸ் விடுதலைப் படைகள் மீது துருக்கி தாக்குதல் நிகழ்த்த தயாராகும் நிலையை மாற்றிக் கொள்வது பற்றிய முடிவுகளை துருக்கி அறிவித்துள்ளது. அதற்கான பேச்சுக்களை அமெரிக்காவுடன் நடாத்தும் இராஜீக நடைமுறையை ஆரம்பித்துள்ளது.

அத்தகைய பேச்சுக்களில் சிரியாவின் வடக்கு கிழக்கு எல்லைப் பாதுகாப்பு பற்றியும் எஞ்சியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் மீதான தாக்குதல் மற்றும் இருநாட்டுக்குமான வர்த்தக உறவை மேம்படுத்துவது உள்ளடங்கலாக ஆயுத தளபாட பரிமாற்றம் என்பனவும் உரையாடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதைவிட குர்திஸ் விடுதலைப்படையிடம் உள்ள பிரதேசங்கள் தொடர்பான உரையாடலும் நடைபெற்றதாக தெரியவருகிறது.

இங்கு அமெரிக்காவின் நிலையை கண்டுகொண்ட துருக்கியின் நடவடிக்கை சிறந்த உத்தியாக உள்ளது. மிக இக்கட்டான நிலையில் அகப்பட்டுள்ள அமெரிக்க சார்ந்த மேற்காசியக் கொள்கைக்கு நெருக்கடி தரும் நாடுகள் பட்டியலில் ரஷ்யா, சீனா, ஈரான், சிரியா மற்றும் துருக்கியும் காணப்பட்டது. தற்போது அத்தகைய துருக்கி மீதான பொருளாதார தடை பற்றிய உரையாடலை அமெரிக்கா அவ்வப்போது பிரச்சாரப்படுத்தியதும் துருக்கி தனது முடிவை தந்திரோபாய ரீதியில் கையாள ஆரம்பித்துள்ளது. அதற்கு அது முதன்மைப்படுத்திய அம்சமாக குர்திஸ் போராளிகள் மீதான நடவடிக்கை அமைந்துள்ளது. எனவே மிகவும் தெளிவாக புலப்படும் ஓரம்சமாக குர்திஸ் விடுதலை விடயம் அமைந்துள்ளது.

இரண்டு தரப்புமே குர்திஸ் விடுதலையை தமது நலனுக்காக பயன்படுத்துகின்ற நடைமுறையில் ஈடுபட்டு வருவதனைக் காணலாம். மீளவும் குர்திஸ் விடுதலை போராட்டம் பயன்படுத்தும் விடயமாகியுளள்ளது. இதில் துருக்கியின் பக்கம் வலிமையாகவும் அமெரிக்கா துருக்கியின் முடிவுகளுக்கு இசைவது போல் காணப்பட்டாலும் நீண்ட நோக்கில் துருக்கியை ரஷ்ய தரப்புக்குள் முழுமையாக போகவிடக்கூடாதென அமெரிக்கா கருதி செயல்படுகிறது.

மறுபக்கத்தில் அமெரிக்காவின் நட்புக்குள் பயணித்த இஸ்ரேல் ரஷ்யாவுடன் நெருக்கமான உறவை போண ஆரம்பித்துள்ளது. இது மேற்காசிய அரசியலில் திருப்பமாக அமையும் என்பதில் அதிக எதிர்பாரப்பு உள்ளது. இது பற்றிய தகவல்களை பரபரப்பு எனும் ஊடகம் அதிக காணொளிகளாக வெளிப்படுத்தி வருகிறது. ரஷ்யாவின் அனுமதியுடன் இஸ்ரேல் செயல்பட உடன்பட்டுள்ளமை ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இத்தகைய இடம்மாறுதல் நிரந்தரமானதாக அமையுமா இல்லையா என்பது கேள்விக்குரிய விடயமே. குறிப்பாக இஸ்ரேலின் பிரதானமான நோக்கம் தற்போது மேற்காசியாவில் பலமடைந்துள்ள ரஷ்யாவுடன் நெருக்கமான உறவை பேணுதலாகும் அதன் மூலம் இப்பிராந்தியத்தில் தனது வலுவை தக்கவைக்க முடியும் என்பது இஸ்ரேலியரது திட்டமிடலாகும்.

அதற்கு அமைவாகவே ரஷ்யாவிலுள்ள ஈரானின் இலக்குகள் மீது இஸ்ரேல்​ தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக அதன் இராணுவம் அறிவித்துள்ளது. ஈரானியப்படையான குட்ஸ் பிரிவு மீது தாக்குதல் தொடுத்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. கோலான் மலைப்பகுதியிலிருந்து ஏவப்பட்ட ரொக்கட் தாக்குதலை தாம் முறியடித்துள்ளதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதற்கு எதிராக கருத்து தெரிவித்த சிரியா இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலுக்கான நடவடிக்கை ஒன்றினை முறியடித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதே நேரம் இஸ்ரேலிய பிரதமர் ஈரானின் குட்ஸ் படைகள் மீது தாக்குதல் ஆரம்பித்திருப்பதுடன் அவர்களை துடைத்தழிக்கும் திட்டத்துடன் தாம் செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.

எனவே இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்துள்ளமையானது மேற்காசியாவில் இஸ்ரேலின் பலத்தை நோக்கியதாகவே அமையவுள்ளது. தவிர்க்க முடியாது அமெரிக்காவின் பின்வாங்குதலையோ அல்லது பலவீனத்தையோ கருத்தில் கொண்டு பதிலுக்கு இஸ்ரேல் அத்தகைய இடத்தை எடுக்க திட்மிட்டுள்ளது.

யூதர்களது மனநிலையும் அவர்களது பதில் நடவடிக்கையும் அவ்வாறானதேயாகும். கடந்த காலம் முழுவது அவ்வாறே தமது இருப்பினை யூதர்கள் மேற்காசியாவில் நிறுவிக்கொண்டனர். அதற்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை தாமே எதிர்கொள்ள தயாராகிவிட்டதன் வடிவமே அமெரிக்காவின் சிரியாவை விட்டு வெளியேறப் போவதாக தெரிவித்துள்ள செய்தியின் உண்மைப்பக்கமாகும். ரஷ்யாவின் ஆதிக்கத்தை அமெரிக்கா முறியடிக்க முடியாத நிலையில் வேறு மார்க்கமின்றி இஸ்ரேல் தனது நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இதுவரை அமெரிக்காவையும் அதற்கு முன்பு பிரித்தானியாவையும் முன்னிறுத்தி தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திய இஸ்ரேல் தற்போது தனித்து இராணுவரீதியில் மேற்காசியாவை தாக்க ஆரம்பித்துள்ளது. இத்தகைய தாக்குதல் அதன் எல்லைகளுடன் நிறைவு பெறுவதாக அமையாது. அதனையும் தாண்டி மேற்காசியாவிலுள்ள நாடுகளையும் அவற்றின் இராணுவ வல்லமையையும் இலக்கு வைத்ததாகவே அமையும்.

எனவே, மேற்காசியாவில் அமெரிக்காவின் சறுக்கல்கள் இஸ்ரேலுக்கு களம் அமைத்துக்கொடுத்துள்ளது. அதனை இலகுவாதாக எடைபோட முடியாது. ரஷ்யாவின் நடவடிக்கைகளை இராஜரீகமாக எதிர் கொண்டுள்ள இஸ்ரேல் அதன் மூலம் தனது பாதுகாப்பையும் அமெரிக்க நலன்களையும் உத்தரவாதப்படுத்தியுள்ளது. அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இழுபறியினால் ஒரு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது என்பதை இஸ்ரேல் கருத்தில் கொண்டு அந்த சூழுலை இலவாக்க கையாளுகையை கடந்த பல வருடங்களாக மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேலியப் பிரதமர் மற்றும் ஜனாதிபதி உட்பட பலர் பெரும் அளவிலான இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டனர். அதன் விளைவாகவே தற்போது வெற்றியை எட்டியுள்ளது. இதனால் அமெரிக்காவின் தோல்வியும் எதிர்கொள்ளப்பட்டதுடன் தனது நெருக்கடியையும் இஸ்ரேல் சமாளித்துள்ளது. இத்தகைய தந்திரேபாயத்தில் யூதர்கள் பலமானவர்கள் என்பதை மீண்டும் ஒரு தடவை உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேற்காசிய அரசியல் களம் எப்போதும் போர்க்களமாகவே காட்சியளிக்க போகிறது. இஸ்ரேலுக்கு ஈரானின் அணுப்பலம் சிரியாவின் எழுச்சியும் ரஷ்யாவின் ஒத்துழைப்பும் பெரும் நெருக்கடியாகவே அமையவுள்ளது. அதனை எதிர்கொள்ள அது எடுத்துள்ள புதிய நடவடிக்கையே ஈரான் படைகள் மீதான தாக்குதலாகும். அமெரிக்காவின் பின்வாங்கல் எதுவும் நிரந்தரமானதாக அ​ைமயாது என்பதை இஸ்ரேல் வெளிப்படுத்தவுள்ளது. ஆனால் இஸ்ரேலின் போர் நடவடிக்கை அமெரிக்காவின் தாக்குதல் போன்றதல்ல. அது எப்போதும் அரபுலகத்தை ஒன்றிணைப்பதாகவே அமையும்.

 

 

Comments