![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/02/24/colthamilagam-pix-03170722090_6489350_23022019_SPW_CMY.jpg?itok=NVqc9DMB)
ஆனாருனா
எதிர்வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் இந்திய பாராளுமன்றத் தேர்தல் உண்மையாகவே மிகவும் பரபரப்பான ஒரு நாள் டி- _ 20 ஆட்டம்போல் அமையும் என்கிறார்கள் இந்திய அரசியல் பார்வையாளர்கள்.
தமிழகத்தை எடுத்துக் கொண்டால், காட்சிகள் பரபரப்பாக அரங்கேறி வருகின்றன. இரண்டு பிரதான கழகங்களும் கட்சிகளை வளைத்துப் போடுவதிலும் தொகுதி உடன்பாடு காண்பதிலும் தீவிரமாக உள்ளன. தி.மு.கவின் கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க என்பனவும் வேறு பல திராவிட அமைப்புகளும் திராவிடக் கழகமும் உள்ளன. தமிழ் மொழி, தமிழ் கலாசாரம் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்ட கூட்டணியாக இது விளங்குகிறது.
இரண்டாவது கூட்டணி, அ.தி.மு.கவினுடையது. இதில் பிரதான பங்காளிகட்சியாக விளங்குவது பா.ஜ.க. பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வதற்கு அ.தி.மு.க முக்கியஸ்தர்கள் பலருக்கும் விருப்பம் கிடையாது. வீட்டுக்காரரின் விருப்பமின்றி பலாத்காரமாக வீட்டுக்குள் புகுந்த சண்டியன் நடுவீட்டில் அமர்ந்து கொண்டு போக மறுப்பது போன்ற ஒரு நிலைதான் அ.தி.மு.கவுக்கு. பா.ஜ.க, அக் கட்சிக்கு வேண்டாத விருந்தாளி.
ஏனெனில் தமிழகத்தில் அ.தி.மு.க செல்வாக்கு கலகலத்துப் போயிருக்கிறது. அ.தி.மு.கவின் செல்வாக்குக்கு குந்தகம் விளைவிக்கும் முதல் ஆளாக விளங்குவர் டி.டி.வி தினகரன். தி.மு.கவுக்கு இத்தகைய ‘உள்குத்து’ பிரச்சினை கிடையாது. தினகரன் ஏற்படுத்தக்கூடிய செல்வாக்கு சீரழிவை மதுரை மு.க அழகிரி தி.மு.கவுக்கு ஏற்படுத்த முடியாது. தினகரன் அ.தி.மு.க கோட்டையில் பெரியதுளை போட்டுக் கொண்டிருக்க, தமிழகத்தில் செல்வாக்கு இழந்திருக்கும் பழைமை வாத, மொழி, சமய தீவிரவாதத் தன்மை கொண்ட, திராவிட சிந்தனைக்கு முற்றிலும் எதிரான பா.ஜ.க.வுடன் விரும்பியோ விரும்பாமலோ தேர்தல் கூட்டு வைத்துக் கொள்வது தமக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என அ.தி.மு.க தலைமை அஞ்சுகிறது. எனவே அதற்கு மாற்றீடாக விஜயகாந்தின் தே.மு.தி.கவை அணைத்துக் கொள்ள விரும்புகிறது. ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சியுடன் தேர்தல் உடன்பாடு ஏற்பட்டுவிட்டது. தொகுதி உடன்பாடும் ஏற்பட்டு விடும் என்றும் பிரச்சினை எழாது என்றும் பேசப்படுகிறது. காரணம், அ.தி.மு.கவின் நிலை சாதகமாக இல்லை. கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்தாக வேண்டிய நிலை.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு இத்தேர்தலில் சாதகமான கூட்டணியாக விளங்குவது தி.மு.க கூட்டணிதான். ஸ்டாலின் பா.ம.க தலைவர் மருத்துவர் ராமதாசுக்கு மரியாதை தரவில்லை என்றும் கலைஞரின் மறைவின் பின்னர் பா.ம.க. தொடர்பில் ஸ்டாலின் நடந்து கொண்ட விதம் ராமதாசின் மனதை புண்படுத்துவதாக இருந்தது என்றும் கூறப்பட்டாலும் விடுதலை சிறுத்தைகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் ஏழாம் பொருத்தம் என்பதால் தி.மு.க – பா.ம.க கூட்டு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவே. ஏனெனில் பா.ம.க. எந்தக் கூட்டணியில் இருக்கிறதோ அந்தக் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம் என திருமாவளவன் திட்டவட்டமாகச் சொல்லி விட்டதால், பா.ம.க., தி.மு.க கூட்டணிக்குள் வருவது சாத்தியமற்றதாகிவிட்டது.
இதேசமயம் தற்போது தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் திருநாவுக்கரசர் தினகரன் முகாம் பக்கம் நல்முகம் காட்டி வருவது தி.மு.க.வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுலின் செல்லப்பிள்ளையாகவும் வலம்வந்த திருநாவுக்கரசரை, கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைவர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கியது காங்கிரஸ் தலைமை. அதற்குப் பிறகும் திருநாவுக்கரசரின் செயல்கள் காங்கிரஸ் _ தி.மு.க கூட்டணிக்கு சாதகமற்றதாகி விடலாம் என தி.மு.க கருதுகிறது.
திருநாவுக்கரசருக்கு நெருக்கமான ஆதரவாளர்கள் நாடாளுமன்றத் தேர்தல் முடியும்வரை தன்னை தலைவர் பதவியிலிருந்து எடுக்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்பினார் திருநாவுக்கரசர். ஆனால், அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் திருநாவுக்கரசர் இருப்பதாக தி.மு.க தலைமை கருதியது. அதற்குக் காரணம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா தரப்பிடம் திருநாவுக்கரசர் காட்டிய நெருக்கமும் தினகரன் தரப்போடு அவருக்கு உள்ள தொடர்பும் தி.மு.க தலைமை அவர் மீது சந்தேகம்கொள்ளச் செய்தது. தலைவர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டாலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. டில்லியில் ராகுலிடம் இந்த உத்தரவாதத்தைப் பெற்றுக்கொண்டே சென்னை திரும்பினார் திருநாவுக்கரசர். காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவியிலிருந்து ஒருவரை நீக்கிவிட்டால், அவர் கிட்டத்தட்ட செல்லாக்காசாகவே மாறிவிடும் நிலையே இருந்துவந்தது. ஆனால், அவர் அவ்வாறு இருந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். அதனால்தான், அ.தி.மு.க கூட்டணியில் செல்வதற்குப் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கும் தே.மு.தி.க கட்சியின் தலைவர் விஜயகாந்த்தை நேரடியாகச் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பை தி.மு.க தரப்பு ரசிக்கவில்லையாம். ஏற்கெனவே தே.மு.தி.க, அ.தி.மு.க தரப்புடன் பேரம் பேசிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் விஜயகாந்தை நேரடியாகச் சென்று அவரைச் சந்தித்து அரசியல் பேசியதாக வெளியே சொல்லியது ஏன் என்று தி.மு.க தரப்பு நினைக்கிறதாம். எனவே, உடனடியாகவே தி.மு.க, டெல்லிக்கு, திருநாவுக்கரசர் அத்துமீறிச் செல்கிறார் என்ற ரீதியில் ஒரு புகாரை அளித்தது.
விஜயகாந்த்தை சந்தித்து தி.மு.க அணிக்கு வருமாறு அவர் அழைப்பு விடுத்திருந்தாலும், தி.மு.க தலைமை சந்தோஷப்பட்டிருக்கும். ஆனால், தே.மு.தி.க-விடம் திருநாவுக்கரசர் கொடுத்த ஆலோசனையே வேறு! 'இரண்டு திராவிடக் கட்சிகளையும் விட்டுவிட்டு நீங்கள் தினகரன் பக்கம் போங்கள். தமிழ்நாட்டில் தினகரன் தவிர்க்க முடியாத சக்தியாக உருவாகுவார்’ என்று சொல்லியிருப்பதாகத் தகவல் கசிந்துள்ளது.
அதேபோல் திருநாவுக்கரசர் சம்பந்தி இசக்கி சுப்பையாதான் தினகரனுக்கு வலதுகரமாக இப்போது உள்ளார். திருநாவுக்கரசர் ஏக நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார். அவர், தேர்தலில் நின்றால் செலவு செய்யும் பணியைச் சம்பந்தியான இசக்கி சுப்பையாவே பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். தேர்தலில் ஜெயித்தால் காங்கிரஸ் கட்சியில் காலம் தள்ளுவார் அரசர். தேர்தல் முடிவு வேறுமாதிரியாக வந்தால் மீண்டும் திருநாவுக்கரசர் அணி மாறினாலும் ஆச்சர்யப்பட வேண்டாம். உண்மையில், அவரது அரசியல் எதிர்காலம் காங்கிரஸ் கட்சியில் எப்படி இருக்கும் என்று தெரியாமல் உள்ளது. அதை அவரும் உணர்ந்துதான் அரசியல் காய்களைக் கச்சிதமாக நகர்த்த ஆரம்பித்துவிட்டார். தினகரன், விஜயகாந்த், ரஜினிகாந்த் இவர்கள் ஒன்றுசேர்ந்தால் தமிழகத்தில் மிகப்பெரும் சக்தியாக உருவாகிவிடுவார்கள் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் திருநாவுக்கரசர் சொல்லிய தகவல் தி.மு.க தலைமைக்கு எட்டியிருக்கிறதாம்!