![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/02/24/colvm-india123541357_6488599_23022019_EPW_CMY.jpg?itok=0qwtkp6S)
யாழ்.பல்கலைக்கழகம்
இந்திய பாகிஸ்தான் மோதல் தீவிரம் அடைகிறது. தென்னாசியாவில் இரு அணு வல்லரசுகளும் மோதுவது என்பது பிராந்திய மட்டத்தல் மட்டுமன்றி சாவதேச மட்டத்திலும் அதிக அச்சுறுதலாக பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் 17 திகதி விடுமுறைக்கு சென்று திரும்பிய துணை இராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 44 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இதனை அடுத்து இரு நாட்டுக்குமிடையிலான பதற்றம் அதிகரித்து வருகிறது. இக்கட்டுரையும் இரு நாட்டுக்குமான போர்ப் பதற்றம் பற்றிய தேடலாக உள்ளது.
இரு நாட்டுக்குமான நீண்ட போர் நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. இரு நாடும் 1947 முதல் தற்போது வரை பல போர்களை எதிர்கொண்டன. நடந்து முடிந்த இறுதி போராக கார்கில் போர் அமைந்திருந்தது. அதில் அதிக நெருக்கடியை பாகிஸ்தானுக்கு ஏற்படுத்தியதாக கூறப்பட்டாலும் இந்தியாவும் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டது. ஆனால் அந்த யுத்தத்தில் இந்தியா வெற்றி பெற்றதாக அப்போது ஆட்சியிலிருந்த வாஜ்பாய் அரசாங்கம் அறிவித்தது. இரு தேசங்களும் மத வேறுபாட்டினால் பாதிக்கப்பட்டிருப்பதுடன் அதனை அடிப்படையாகக் கொண்டு பிரிவினை முதல் மோதிக் கொண்டுவருகின்றன. அதிலும் காஷ்மீர் சுதந்திர காலத்திலிருந்து யுத்த களமாக இருந்து வருகின்றது. ஜம்மு மற்றும் அஸாத் காஷ்மீர் இருநாட்டுக்குமான பாகப்பிரிவினையாக அமைந்தாலும் இந்து - இஸ்லாம் மோதலாகவே வளர்ச்சியடைந்துள்ளது.
இராணுவ வீரர்கள் அணியாகச் சென்ற வாகன தொடர் மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இயங்கும் அமைப்பான ஜெய்ஸ்- இ-முகமது பொறுப்போற்றுள்ளது.புல்வாமா மாவட்டத்தில் காக்கபோரா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தாம் பெறுப்பேற்பதாக அவ்வமைப்பு அறிவித்துள்ளதை அடுத்து பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஏ. தொடர்பட்டுள்ளதாக இந்திய ஆட்சியாளரும் எதிர்க்கட்சியினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதே போன்று பல தாக்குதல்கள் ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பு மேற்கொண்டுள்ளது. 2016 இல் இரு தாக்குதலை அவ்வமைப்பு மேற்கொண்டுள்ளது அதில் 18 வீரர்கள் பயணம்செய்த வாகனம் மீதான தாக்குதலில் கொல்லப்பட்டனர். 2002 இல் ஜம்முவில் காலுசாக் இராணுவ பாசறையில் 36 வீரர்கள் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். தற்போதைய தாக்குதலே அதிக எண்ணிக்கையானவர்கள் கொல்லப்பட்ட சம்பவமாக பதிவாகியுள்ளது.
இத்தாக்குதலை அடுத்து இந்திய இராணுவம் பாரிய போர் ஒத்திகை ஒன்றினை மேற்கொண்டது. அதில் பாரிய போர் விமானங்கள், கவசப் படைப்பிரிவுகள் நீண்ட துாரம் தாக்கும் ஏவுகணைகள் என பெருமெடுப்பில் தாக்குதலுக்கான ஒத்திகை அமைந்திருந்தது. அதே நேரம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதியை தாம் சுட்டுக்கொன்றுள்ளதாக காஷ்மீர் இராணுவத்தின் ஜெனரல் நிலாம் அறிவித்துள்ளார். அது மட்டுமன்றி பாரிய தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளமதாக இந்திய இராணுவம் அறிவித்துளளது.கொல்லப்பட்ட 44 வீரர்களுக்குமான அஞ்சலி நாடுமுழுவதும் நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் கொதித்துள்ளதை அஞ்சலி நிகழ்வுகள் பதிவு செய்துள்ளன. மறுபக்கத்தில் இந்தியா பாகிஸ்தானுக்கு வழங்கிய வர்த்தகத்திற்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததுடன் இந்தியாவுடனான வர்த்தக நடவடிக்கையை கைவிடப்போவதாக எச்சரித்துள்ளது. அது மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் பாகிஸ்தானுடனான பொருளாதார உறவை ரத்து செய்யுமாறு கோரி வருகிறது.
பாகிஸ்தான் மீது பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துமாறும் அதனுடன் வர்த்தக உறவை தவிர்க்குமாறும் உலக நாடுகளை இந்தியா கேட்டுள்ளது.
இதேவேளை பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானை பிச்சை எடுக்கும் நாடு எனக் கண்டித்துள்ளார். இத்தாக்குதலுக்கு இந்தியா பதிலடி வழங்குமொனவும் அறிவித்துள்ளார்.
இத்தாக்குதல் இந்திய மத்திய அரசின் இராணுவ கொள்கையிலுள்ள தவறு என்றும் சரியான உத்திகளை வகுக்கத் தவறியதன் விளைவென்றும் எதிர்க்கட்சியான இந்தியக் காங்கிரஸ் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவரமான ராகுல் காந்தி ெதரிவித்துள்ளார். இந்தியாவின் அரசியலில் மட்டுமல்ல இராணுவத்திலும் ஊழல் மலிந்துள்ள நாடு எனபதை நிராகரித்துவிட முடியாது. இந்தியா ரஷ்ய தயாரிப்புப் படைத்தளபாடங்களை கைவிட்டு அமெரிக்க ஆயுத தளபாடங்களை கொள்வனவு செய்யத்திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே அதற்கான நடவடிக்கைகளை தற்போதைய இந்திய பாதுகாப்பு அமைச்சு ஆரம்பித்துள்ளது.இந்த சந்தர்ப்பத்தில் அமெரிக்கத் தரப்பின் நடவடிக்கையினை விளங்கிக் கொள்வது அவசியமானது.
குறிப்பாக அமெரிக்கா இந்திய, -பாகிஸ்தான் முறுகல் பற்றிய எந்த விடயத்தையும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. இப்பத்தி எழுதப்படும்வரை பெரியளவில் எந்த நடவடிக்கையையும் பற்றி அமெரிக்க தரப்பு அலட்டிக் கொள்ளவில்லை.இதற்கு முன்பு பலதடவை இத்தகைய சூழல் ஏற்படும் போது எல்லாம் தீவிர நடவடிக்கையில் உடனடியாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சு செயல்பட ஆரம்பித்துவிடும். தற்போது மிக அமைதியாக செயல்படுவதைக் காணமுடிகின்றது. அவ்வாறே ஏனைய வல்லரசுகளும் இந்த விடயத்தில் வெளிப்படையாக பெரும் முக்கியத்துவம் காட்டிக் கொள்ளாமல் உள்ளன.இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன என்பதை தான் கவனிக்க வேண்டும்.
ஆனால் அமெரிக்காவின் நெருக்கமான நட்பு நாடான சவூதி அரேபியாவின் மன்னன் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்தமை கவனிக்கத்தக்கது. இத்தகைய விஜயத்திற்கு பின்னால் அமெரிக்காவின் அரசியல் நகர்ந்துள்ளது என்பதையும் அமெரிக்காவின் மெளனத்திற்குள் அடங்கியுள்ள அரசியலையும் விளங்கதல் வேண்டும்.
அதேநேரம் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான ஜெய்ஸ் அல் அடில்லின் தாக்குதலில் ஈரானில் 27 படையினர் கொல்லப்பட்டுள்ளமை இவ்விடயத்தில் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டிய அம்சமாகும். ஆனால் ஈரான் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே அறிக்கையிட்டுள்ளது. கடந்தவாரம் ஈரான் அனைத்து இஸ்லாமிய நாடுகளுடனும் நட்புறவைப் போணப் போவதாக அறிவித்திருந்துது.
இதே நேரம் இந்தியாவின் எதிர்க்கட்சி வரிசையிலுள்ள மம்தா பெனர்ஜி விடுத்துள்ள அறிக்கையில் புல்வாமா தாக்கதல் சந்தேகத்திற்குரியதாக உள்ளது எனவும் தேர்தல் காலத்தில் இவ்வாறு நிகழ்த்தப்பட்டிருப்பது ஆளும் தரப்பின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை பாரதிய ஜனதா மட்டுமல்ல காங்கிரஸ் ஆட்சியிலிருந்த காலங்களிலும் பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல்கள் நிகழ்ந்தன. குறைந்த பட்சம் சிறிய அளவிலாவது தாக்கதல் நடைபெறும் மரபு காணப்படுகிறது.
எது ஏவ்வாறாயினும் உலக வல்லரசுகளின் மெளனம் அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் நடவடிக்கையில் காட்டப்படும் காலதாமதம் இரண்டு விடயத்தில் குழப்பத்தை தருகிறது. ஒன்று இத்தகைய யுத்தத்தின் மூலம் மீண்டும் பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சியை உறுதிப்படுத்த அல்லது பலப்படுத்த திட்டமிடுகிறது. அல்லது அப்படியான எந்த யுத்தமும் வருவதற்கான சூழல் இல்லாதுள்ளது என்பதாகும். ஏனெனில் யுத்தம் ஏற்படுவது அமெரிக்காவின் நலனுக்குட்பட்டதாகவே அமைய வேண்டும் என்பது அதன் கொள்கையாகும். அதிலும் இந்தியா அமெரிக்காவின் பொம்மையாக இருக்கும் போது இந்தியா தனித்து போருக்கு போகலாமா இல்லையா என்பதை தீர்மானிக்கும் தகைமை அமெரிக்காவுக்கே உண்டு. அதனாலேயே அதிகமான குழப்பம் நீடிகிறது. 1962 சீன -_ இந்திய யுத்தத்தைக் கூட அமெரிக்காவின் தூண்டுதலாலேயே நிகழ்ந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இந்திரா காந்தியை மட்டுமே அமெரிக்கா கையாள முடியாத போக்கு காணப்பட்டது. ஆனால் அந்த நிலை இந்திரா காந்திக்கு பின்பு இல்லை என்றே கூறலாம்.
எனவே, புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் இந்திய- _பாகிஸ்தான் போர் வெடிக்கும் என்பதை விட ஒரு அரசியல் களம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது எனக் கூறலாம். அக்களம் போரைத் தருவிக்குமா அல்லது பராதிய ஜனதாவின் அரசியலை பலப்படுத்துமா என்பதே தற்போதுள்ள விடயமாகும். ஆனால் இந்தியா பாகிஸ்தான் மீதான நெருக்கடியை அதிகரிக்க முயற்சிக்கும். அதனால் பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி வலுவடைவதுடன் இராணுவத்தின் ஆட்சிக்கான வாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்யும் அல்லது சீனாவின் பிரசன்னத்தை அதிகரிக்கச் செய்யும். சீனா முழுமையாக பாகிஸ்தானை தனது பொருளாதாரா பலத்தினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடும். எது நிகழ்ந்தாலும் இந்தியாவுக்கு சவாலானதாகவே அமையும். அமெரிக்கா இரு தரப்பையும் கையாளும் உத்தியாகவே சவூதி அரேபியாவை நகர்த்தியுள்ளது எனக் கூறலாம். அப்படியாயின் நிச்சயம் போருக்கான முனைப்புகள் அதிகரிக்கும். அதனால் அமெரிக்க ஆயுத வினியோகம் சாத்தியமானதாகும். ஏற்கனவே அத்தகைய முயற்சி எடுக்கப்பட்டு ரஷ்ய விரும்பிகளது அழுத்தத்தினால் பின்வாங்கப்பட்டுள்ளதே அன்றி முற்றாக கைவிடப்பட வில்லை.
அதனால் யுத்தத்தை ஏற்படுத்துவதன் மூலம் ஆயுத இறக்குமதிக்கான வாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்யலாம். இதற்கான பதில் அரசியல் அரங்கம் இதுவரை திறக்கப்படவில்லை. ரஷ்யாவோ சீனாவே தான் அத்தகைய களத்தை திறக்க வேண்டும். அதனை இதுவரை கண்டு கொள்ள முடியவில்லை.
அதனாலேயே சவூதியை அமெரிக்கா களம் இறக்கியிருக்கலாம். அமெரிக்காவுக்கு பதில் அரசியலை ரஷ்யா - சீனா மேற்கொள்ளும் என்பதால் அமெரிக்காவின் நகர்வை நிதானித்து கடைப்பிடிக்க திட்டமிட்டிருக்கலாம்.
எதுவாயினும் இந்தியாவின் தயார்ப்படுத்தலுக்கு நிகராக பாகிஸ்தான் போருக்கு தயாரில்லாதுள்ளது. உடனடியாக போர் வருமாயின் அது இந்தியத் தரப்பின் வலிந்த தாக்குதலாகவே அமையும்.