சர்வதேச அரசியலில் இரண்டு பிரதான விடயங்கள் இவ்வாரம் முதன்மைப்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டுமே ஒன்றுக்கு எதிரானதாக உள்ளது. எதிர் எதிரான இரண்டு விடயத்தினை விளங்கிக் கொள்வதே இவ்வாரக் கட்டுரையின் நோக்கமாகும். குறிப்பாக அமெரிக்க வடகொரிய அரசியலில் நிகழ்ந்து வரும் இரண்டாம் கட்ட பேச்சுகளது முடிவுகள் தந்துள்ள பாடம். இரண்டாவது இந்திய பாகிஸ்தான் போருக்கான நிகழ்வுகளாக அமைந்துள்ள விமானத் தாக்குதல்களும் அதன் பரபரப்பும் ஓய்வற்ற நிலையை எட்டிவருகிறது. இரண்டுமே தொடக்கத்தில் இருந்த பரிமாணத்தை தற்போது இழந்துள்ளன. சமாதானத்தில் தொடங்கியது போருக்கு தயாராவதும், போரைத் திட்டமிட்டது சமாதானத்தை நோக்கியும் நகர்கின்றது.
வடகொரிய அமெரிக்க சமாதானப் பேச்சுவார்த்தை
வடகொரியா- அமெரிக்க உரையாடல் பொருத்தமற்ற அல்லது சாத்தியமற்ற கோரிக்கையால் குழம்பியுள்ளது. பேச்சுவார்த்தை ஆரம்பித்த மறுதினமே அதன் மீது நம்பிக்கையின்மை ஏற்பட்டுவிட்டது என்பது கவனிக்கத்தக்கது. வியட்னாமில் தொடங்கிய ட்ரம்ப்- -_கிம் இரண்டாவது பேச்சுவார்த்தை அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அதன் காரணமாக உலகளாவிய ரீதியில் அணுவாயுதம் தொடர்பான அச்சுறுத்தலுக்கு தீர்வு எட்டப்படும் என்ற வாதமும் மேலோங்கியிருந்தது. ஆனால் அதனை எல்லாம் இலகுவில் தகர்க்கக் கூடிய பேச்சுக்களில் மைக்கல் பாம்பியோவின் கோரிக்கை அமைந்ததாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அதாவது பேச்சுக்களை நீடிக்க வேண்டுமாயின் அதற்கான காலத்தை கையாளும் உரையாடலை வெளிப்படுத்துவது வழமையான உரையாடல் ராஜதந்திரத்தில் பின்பற்றப்படும் உபாயமாகும். மாறாக பேச்சுக்களை முறிக்க வேண்டுமாயின் சாத்தியமற்ற இலகுவில் நிறைவேற்ற முடியாத கோரிக்கையை முன்வைக்க வேண்டும். அத்தகைய கோரிக்கை ஒன்றையே அமெரிக்க தரப்பு முன்வைத்தது. இது திட்டமிடப்பட்டதாக அமைந்ததா அல்லது எதேச்சையாக நிகழ்ந்ததா என்பது சற்று முன்வரை தெரியாத ஒன்றாக உள்ளது. அது எவ்வாறானதாக அமைந்தாலும் சிஎன்என் குறிப்பிட்டது போல் கிம் ட்ரம்ப்வை வைத்து விளையாடிவிட்டதாகவே தோன்றுகிறது.
கிம்மைப்பொறுத்தவரை அவர் சீனாவின் ஆலோசனைக்கு அமைவாகவே செயல்பட்டவராகவே விளங்கினார். அவர் பேச்சுக்களுக்குமுன்பும் பின்பும் சீனா சென்றே தனது நாட்டுக்கு விஜயம் செய்பவராக உள்ளார். அரசியலில் அனுபவமெதுவும் இல்லாத குழந்தைத் தனமான மனிதன் உலக வல்லரசையே தனது வலிமையால் கையாளுவதென்பது பெரும் பலமான சக்தியுடனான ஆலோசனைக்கு அமைவானதேயாகும். அதனுடன் அதன் பிரதான பலம் அணுவாயுதமாகும். வடகொரியாவின் இராணுவ பலம் அணுவாயுதமாகும் என்பது, மாற்றுக்கருத்திற்கு இடமில்லாதது என்றே கூறலாம். அதனால் தான் அமெரிக்கா வடகொரியா விடயத்தில் இறங்கிவந்து செயற்பட்டதென்பது புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். இதனால் அணுவாயுதத்தை முற்றாக கைவிடுவதென்பது வட கொரியாவால் முடியாத காரியம். அதுவே அதன் உயிர் வாழ்வாகும். அதனை இழப்பதென்பது தற்கொலைக்கு ஒப்பானதாகும். அதனை எந்த அரசியல் தலைவனும் மேற்கொள்ள மாட்டான் என்பது வரலாற்றில் பல சம்பவங்களில் பதிவாகியிருந்தன. இதனையே கிம் எனும் தலைவன் வட கொரியருக்காக மட்டுமல்ல உலகத்தில் சிறிய தேசங்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளார். இத்தகைய முன் அனுபவத்தை அனேக தலைவர்கள் பின்பற்ற தவறுவதில்லை.
கிம்மைப் பொறுத்து அதிக இலாபங்களை அடைந்துள்ளார். அதாவது பேச்சுக்களை அமெரிக்கா தான் குழப்பியது என்ற செய்தி உலகமெங்கும் பதிவாகியுள்ளது. இரண்டு தனது சொந்த நாட்டு மக்களிடம் தமது தலைவன் மதிநுட்பமானவன் எனும் பெயரை ஈட்டியுள்ளார். எதற்கும்தயாரானவன் என்பது மட்டுமல்ல உலக வல்லரசுடன் உரையாடும் திறன் கொண்டவன் தமது தலைவன் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். மூன்று அணுவாயுதத்தை கைவிடாததன் மூலம் தனது தேசத்தின் பலத்தை கைவிடாத தலைவன் என்பதை ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகள் கூறுவது போல் கிம் ஒரு சர்வாதிகாரியாக இருக்கலாம் ஆனால் தனது தேசத்திற்காக எதனையும் தேவையற்ற விதத்தில் விட்டுக் கொடுக்காதவன் என்ற பெருமையையும் நாட்டின் இறையாண்மையையும் காப்பாற்றியுள்ளார். அந்த மக்கள் மூச்சுவிடுவதற்கான காலத்தை அடையாளம் காட்டியுள்ளார். கிம் அரசியலில் அரிச்சுவடியாளனாக இருந்தாலும் அதிகம் சாதிக்காதவனாக காணப்பட்டாலும் வடகொரியாவின் இருப்பை இழக்கவிடாத தலைவனாக விளங்குகிறமை கவனிப்பிற்கு உரியது.
மறுதளத்தில் ட்ரம்பின் அரசியல் முடிவுகளைஅளவிடும் போது வடகொரியாவைப் பொறுத்து கணக்குகள் தவறானவையாகவே அமைந்துள்ளன. இராணுவ ரீதியிலும் தவறான மதிப்பீட்டைக் கொண்டிருப்பது போல் அரசியலிலும் தவறான மதிப்பீடுகள் காணப்பட்டன. அமெரிக்காவைப் பொறுத்தவரை மிக இலகுவான விடயமாக வடகொரிய விவகாரம் காணப்பட்டாலும் அது உலக அரசியலில் ஒரு அங்கம் என்பது கவனிக்கத்தக்கது.அதன் பின்தளத்தில் சீனா ரஷயா மற்றும் ஈரான், சிரியா, பாகிஸ்தான் சார்ந்த ஓரணியொன்றைக் காணமுடிகிறது. எனவே வடகொரிய விடயம் ஒரு பூகோள அரசியல் முக்கியத்துவத்தை கொண்டது.அதனால் அமெரிக்கா ஒன்றும் நிரந்தரமாக தோற்றுவிட்டது என்பது அர்த்தமல்ல. மாறாக ட்ரம்ப்ன் அரசியல் போக்குகள் அமெரிக்காவின் இருப்பை பலவீனப்படுத்துகின்றது. அதனை இலகுவில் தடுத்துவிட முடியாது. அடுத்து வரும் ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் காத்திருகிறது. எனவே வடகொரியாவின் உத்தியை உடைத்ததில் மைக்கல் பாம்பியோவுக்கு பங்குண்டு. அதில் அமெரிக்காவின் உத்தியும் அடங்கியிருந்தது என்பதை கவனிக்க தவறியமை பலவீனமாகவே தெரிகிறது. எப்போதும் உரையாடல்கள் ராஜதந்திர செயல்பாடுகள் தான். அதனை உருவாக்கும் தரப்பாக மட்டும் இருந்துவிட்டால் போதாது அதனை பாதுகாக்கவும் மறுதரப்பே உடைத்தது என்ற செய்தியை வெளிப்படுத்துவதாக அமையவேண்டும். அதில் அமெரிக்கர்கள் தவறுவிட்டதாகவே தோன்றுகின்றது. இதன்விளைவு எதிர்கால அமைதிக்கான வாய்ப்புகள் தகர்ந்து போகின்றன. அதுமட்டுமன்றி சிறிய அரசுகளின் அணுவல்லமையானது அவசியம் என்ற உணர்வை தந்துள்ளது. இதனால் அணுவாயுதத்திற்கான போட்டி அதிகரிக்கவுள்ளது. பெரு வல்லரசுகள் சிறிய அரசுகளிடம் சரணடையும் நிலை எதிர்காலத்தில் ஏற்பட வாய்ப்புள்ளது. அல்லது அவ்வகை அரசுகளுடன் நெருக்கமான நட்பினை பராட்ட வேண்டிய நிலை ஏற்படவுள்ளது.
இந்திய பாகிஸ்தான் போர்
இந்தியாவும் பாகிஸ்தானும் தீவிரவாதத்தின் பெயரால் ஒரு யுத்தத்திற்கு தயாராகி வருகின்றன. ஏறக்குறைய யுத்தம் நிகழும் அளவுக்கு தாக்குதல் உத்திகள் திட்டமிடப்பட்டுவிட்டன. புல்வாமா தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதத்தில் விமானங்களை அனுப்பி தாக்குதல் நிகழ்த்தியதாக இந்தியத் தரப்பு கூறுகின்றது. பதிலுக்கு இந்திய போர் விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டு இரண்டு விமானிகள் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு கைது செய்யப்பட்ட விமானியை ஒப்படைக்க வேண்டுமென இந்திய வெளிவிவகாரத் தரப்பு கோரியதை அடுத்து பாகிஸ்தான் விமானியை ஒப்படைப்பதாக அந் நாட்டு பிரதமர் பராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மீது அமெரிக்காவின் மிரட்டல் ஒருபக்கம் மறுபக்கத்தில் இரு தரப்பும் போரைக் கைவிடவேண்டுமென சீனா ரஷ்யா மற்றும் அயல் நாடுகள் வலியுறுத்தியதன் நிமித்தம் பேச்சுக்களுக்கு தயாராவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விடயம் பாரதிய ஜனதாக் கட்சியின் அரசியல் மோடி தலைமையில் பலவீனமானதாக மாறிவருகிறது. அதற்கு அண்மையில் நடைபெற்ற மாநில தேர்தல்கள் சாட்சியாக அமைந்துள்ளன. அதனால் எதிர்க்கட்சிகள் ேபார் உத்திகள் தமது வீழ்ச்சியை சரிசெய்வதற்கென்ற தகவல் உலகளவில் பிரச்சாரப்படுத்தப்பட்டுள்ளது, எனவே விமானி அபினந்தனை இந்தியாவிடம் ஒப்படைத்தல் என்பது மோடிக்கும் இந்திய ராஜதந்திரிகளுக்கும் இம்ரான் கான் கொடுக்கப் போகும் அதிர்ச்சியாகவே அமையப் போகின்றது. தீவிரவாதத்திற்கு பதிலளிக்க முயன்று இறுதியில் வலிந்து ஒரு தாக்குதலை நிகழ்த்திவிட்டு அதில் பாகிஸ்தானிடம் கையேந்தி கோரிக்கை விடும் தந்திரமற்ற தீரம் அற்ற அரசாங்கம் என்பதை மீண்டும் ஒருதடவை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த போர் பதற்றத்தால் பாகிஸ்தானின் உள்நாட்டு அரசியல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிராந்தியசர்வதேச அங்கீகாரம் இம்ரான் கானுக்கு அதிகரித்துள்ளது. இராணுவத்திற்கும் பிரதமருக்குமான புரிதல் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தத்தில் பாகிஸ்தானுக்கு வாய்ப்பான அரங்கமாகும்.
பாகிஸ்தான் தரப்பு அதிக தந்திரத்துடன் இந்திய விமானப்படையை தமது எல்லைக்குள் இழுத்துள்ளன. பின்னு தாக்கியுள்ளது. பாகிஸ்தான் இளைஞா்கள் விமானி அபினந்தனை விரட்டி அடித்தது மட்டுமல்லாது அவரது கால்களில் துப்பாக்கியால் சுட்டுமுள்ளனர். விமானத்தை சுட்டுவீழ்த்தி விமானியை கைது செய்து ஒர் அரசியல்அரங்கை திட்டமிட்டு நகர்த்தயுள்ளனர். உலக நாடுகள் அனைத்துமே இரு தரப்பையும் சமாதானத்திற்கு போகுமாறும் யுத்தத்தை தவிர்க்குமாறும் கோரிக்கை விடுத்துவருகின்றன. இந்தியாவைத் தவிர அனைத்து நாடுகளும் போரை தவிர்க்கவற்புறுத்திவருகின்றன. ஆனால் பிரதமர் மோடி மட்டும் தொடர்ச்சியாக போர் பற்றி உரையாடிக்கொண்டிருக்கின்றார். அமெரிக்கா ஆரம்பத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக செயல்பட்ட போதும் ஏனைய நாடுகளின் நடவடிக்கை அடுத்து தாம் மத்தியஸ்தம் செய்ய தயார் என்ற அறிவிப்புக்கு போகச் செய்துள்ளது. எதுவாயினும் இந்தியத்தரப்பின் போக்கு பலவீனமானதாகவே உள்ளது. போர் என்பது அனைத்து விதிகளையும் மீறுவதாகும் அத்தகைய நிலையில் தமது விமானி கைதுசெய்யப்பட்ட செய்தியை அடுத்து இந்திய வெளி விவகாரத்துறையின் அறிக்கையில் பாகிஸ்தான் சர்வதேச விதிகளை மீறிவிட்டதாக குற்றம்சாட்டியமை அதன் பலவீனத்தை காட்டுகிறது.
எனவே இந்தியாவின் அணுகுமுறையில் எதிர்க்கட்சியினருக்கு மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது ஒரு தேர்தல் அரசியலாக உள்ளதென்பதை இந்திய ஆளும் தரப்பின் நடவடிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன. அபினந்தன் கையளிக்கப்படுவதென்பது மோடியின் எதிர்கால அரசியலுக்கு ஆபத்தாகவே அமையும். தேசிய தளத்தை விட தேர்தல் அரசியலை அதிகம் நேசித்தால் கிடைக்கும் பதிலும் அதுவாகவே அமையும்.இன்றய தகவல் யுகத்தில் எந்த உத்தியையும் இலகுவில் மறைத்துவிட முடியாது. இது ஒரு தகவல் யுகம். அதற்குள் எந்த மனிதனும் விதிவிலக்கானவன் அல்ல.
எனவே இந்திய -பாகிஸ்தான் போரும் அமெரிக்க வடகொரிய சமாதானமும் அரசியல் அரங்கில் தலைகீழான முடிவுகளை எட்டியுள்ளன. போர் நிகழுமென எதிர்பார்த்த விடயம் சமாதானத்தை நோக்கியும் சமாதானம் நிழவிருந்தது போரை நோக்கியும் நகர்கின்றது.இத்தகைய அரசியல் யுகம் தொடரான உலக நெருக்கடிக்கு வித்திடும் என்பதையே காட்டிநிற்கிறது.