![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/03/24/colaaaaa-%282%29101922311_6618286_23032019_VKK_CMY.jpg?itok=e88lyez5)
சவால்கள், விமர்சனங்களை கண்டு அஞ்சாத மகத்தான அரசியல் ஆளுமை
இலங்கையின் அரசியல் வரலாற்றில் ரணில் விக்கரமசிங்கவை போன்று உட்கட்சி, எதிர்க்கட்சித் தரப்புகளால் விமர்சிக்கப்பட்ட, சவால்களை எதிர்கொண்ட ஒரு அரசியல்வாதியை பார்க்கவே முடியாது. என்றாலும் கூட எந்தச் சவாலுக்கும் முகம் கொடுக்கக் கூடிய மகத்தான அரசியல் ஆளுமையாகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை காணமுடிகிறது. பொறுமை என்ற பேராயுதமே அவரை அரசியலில் உச்ச நிலைக்கு தூக்கி விட்டிருக்கின்றது.
பாராளுமன்ற அரசியலில் 40 வருடங்களைத் தாண்டி நிறைந்த அனுபவங்களைக் கொண்டவராகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மிளிர்கின்றார். சுதந்திர இலங்கையில் ஐந்து தடவைகள் பிரதமர் பதவியை வகித்த பெருமை அவரையே சார்ந்து நிற்கின்றது. எந்தவொரு கட்சிக்கும் தலைவருக்கும் கிட்டாத பெருமை என்றே சொல்ல முடிகின்றது. சமூக, பொருளாதார, அரசியல் ரீதியில் பூரணத்துவம் பெற்றதொரு அரசியல் ஞானியென்ற கூற்று ரணில் விக்கிரமசிங்கவுக்கு மிக பொருத்தமுடையதாகும். ரணில் எதிர்ப்புகள், சவால்கள், விமர்சனங்களைக் கண்டு அச்சம் கொள்ளாத மகத்தானதொரு அரசியல் ஆளுமையாகும். ஜனநாயக வழிமுறைகளில் முழுமையான நம்பிக்கை கொண்டவராகவே அவர் திகழ்கின்றார். எதிர்ப்புகளைக் கண்டு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் சோர்ந்து போனதை எம்மால் ஒருபோதும் காணமுடிந்ததில்லை.
வெற்றி, தோல்வி இரண்டினையும் சமமாக பகிர்ந்து கொள்ளும் மனப்பக்குவம் ரணிலிடம் நிறைந்தே காணப்படுகின்றது. வெற்றியைக் கண்டு இறுமாப்போ, தோல்வியைக் கண்டு அமைதியிழந்தோ ஒருபோதும் அவர் இயங்கவில்லை. ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் அமைதியாக பயணிக்கும் படகிலேயே அவர் பயணித்துக் கொண்டிருக்கின்றார். இன்றைய 70வது வயதில் கூட ஆட்டம் காணாத மன உறுதியுடன் பயணிக்கும் ஒரு தலைவனாகவே ரணில் விக்கிரமசிங்க உயர்ந்து நிற்கின்றார். ஜனநாயக அரசியல் மீது பற்றுறுதி கொண்ட ஆளுமையென்றே அவரைப் பார்க்கமுடிகின்றது.
அரசியலில் மேடு, பள்ளம் இயற்கையானது. தான் சார்ந்த ஐக்கிய தேசியக் கட்சி தோல்வி கண்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் கட்சியை மீண்டெழச் செய்யும் பாரிய பொறுப்புகளை தனது தலைமேல் சுமந்து கொண்டவர். பொறுமையொன்றே அவரது பேராயுதமாகக் காணப்படுகின்றது. அவசரப்படாமல், ஆத்திரப்படாமல் கொண்ட இலட்சியத்தில் பயணிக்கும் அவரது மனப்பாங்கு தான் அவரை உச்சத்துக்குக் ெகாண்டுவந்ததெனலாம். ஆசியப் பிராந்தியத்தில் மிகச் சிறந்த அரசியல் மதியூகியாகவே ரணில் விக்கிரமசிங்க மதிக்கப்படுகின்றார். சர்வதேசம் மதிக்கின்ற மகத்தான ஜனநாயகத்தலைவராகவே அவரை நோக்குகின்றது. கணவான் அரசியலை அவரிடமிருந்தே எவரும் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என்பது நிதர்சனமானதாகும்.
சிறு பராயத்தில் ரணில் (வலது பக்க மூலையில்)
1977ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முதன்முதல் களமிறக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க அதில் மகத்தான வெற்றியை ஈட்டிக் கொண்டார். அன்று தொடங்கிய அவரது பாராளுமன்ற அரசியல் பயணத்தில் ஒரு தடவை கூட தோல்வியைச் சந்தித்தது கிடையாது. அன்று 1977ல் வயதில் மிகவும் இளைய அரசியல்வாதியாகவே பாராளுமன்றத்துக்குள் பிரவேசித்தார். 41 ஆண்டுகளாக அந்தப் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. பாராளுமன்ற ஜனநாயகத்தின் மீதே அவர் பெரும் நம்பிக்கை கொண்டவராக திகழ்கின்றார். நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்றத்திடமே இருக்க வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டையே அவர் கொண்டிருக்கின்றார். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன 78ல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிமுறையை கொண்டுவந்தபோதிலும், இது விடயத்தில் ரணில் விக்கிரமசிங்க திருப்தி கொண்டதாகக் காணப்படவில்லை. அதிகாரம் பாராளுமன்றத்திடமே இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அவர் அன்றும், இன்றும் காணப்படுகின்றார்.
ஜனநாயக விழுமியங்களைக் கொண்டதொரு நாட்டில் நிறைவேற்றதிகாரம் பாராளுமன்றத்திடமே இருக்கவேண்டும் என்பதில் உறுதியான நிலைப்பாட்டை ரணில் விக்கிரமசிங்க கொண்டுள்ளார். அந்த நிலைப்பாட்டிலிருந்து அவர் இன்றுவரை விடுபடவே இல்லை. ஜனநாயகப் போர்வைக்குள் சர்வாதிகாரம் புகுந்து கொண்ட முறையாகவே நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை அவர் பார்க்கின்றார். 2015ல் நாட்டின் ஆட்சிமாற்றம் நிகழாது இருந்திருக்குமானால் நிச்சயமாக நாடு சர்வாதிகாரத்தின் பிடிக்குள் சிக்கி இருக்கும். அந்த ஆபத்திலிருந்து தெய்வாதீனமாக தேசத்தை மீட்டெடுப்பதில் ரணில் விக்கிரம சிங்க கையாண்ட வியூகம் பாராட்டத்தக்கதாகும். பதவியை விட நாடே முக்கியம் என்ற மகத்தான சிந்தனைப் போக்குடன் அவர் செயற்பட்டதன் காரணமாக, அர்ப்பணிப்பு காரணமாகவே ஜனநாயகம் மீள உத்தரவாதப்படுத்தப் படமுடிந்தது.
1948ஆம் ஆண்டு நாடு சுதந்திர மடைந்ததன் பின்னர் நடைபெற்ற அனைத்துப் பாராளு மன்றத் தேர்தல்களிலும் பெறப்பட்ட ஒட்டுமொத்த வாக்குகளை உற்று நோக்குகின்றபோது தொகுதிவாரித்தேர்தல் முறையில் மொத்தவாக்கு எண்ணிக்கையில் ஆகக் கூடுதல் வாக்குகளைப் பெற்ற கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியே காணப்படுகின்றது. தொகுதி அடிப்படையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக சில சந்தர்ப்பங்களில் ஐக்கிய தேசியக் கட்சி பலமிழந்தது. பெரும்பான்மைபலம் ஐக்கிய தேசியக் கட்சி வசமிருந்த போதும் தொகுதி மட்டத்தில் கட்சி பலவீனப்பட்டது. இதன் பின் விளைவே விகிதாசாரத் தேர்தல் முறைக்கு வழிவகுத்தது எனக் கொள்ளவும் முடிகின்றது.
1994ம் இடம்பெற்ற தேர்தல் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. தோல்வி கண்ட கட்சியின் தலைமைத்துவப் பொறுப்பை ரணில் விக்கிரமசிங்க தனது தலைமேல் சுமந்து கொண்டார். அது மட்டுமன்றி பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் ஏற்றுக்கொண்டார். இப்பதவிகள் மூலம் நாட்டின் பாராளுமன்ற ஜனநாயக விழுமியங்களை வலுவடையச் செய்வதற்கும், வீழ்ந்து போயுள்ள ஐக்கிய தேசியக் கட்சியை மீளக்கட்டியெழுப்புவதற்கும் அயராமலும், சோர்ந்துவிடாமலும் பாடுபட்டார். மனம் தளர்ந்து போயிருந்த கட்சி ஆதரவாளர்களுக்கு தைரியத்தைப் பெற்றுக் கொடுப்பதிலும் பங்களிப்புச் செய்தார். கட்சியை போஷித்து பலப்படுத்துவதில் இரவு பகல் பாராது பாடுபட்டார்.
ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்தும் பொருட்டு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தார். 2000ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களை அமைப்பதற்கான 17ஆவது அரசியலமைப்புத்திருத்தம் இதில் முக்கியமானதாகும். இந்த நிலையில் 2001ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றார். இந்த ஆட்சியின் போது பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தார்.
நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த நிலையில் நாட்டுக்குப் பெரும் தலையிடியாகக் காணப்பட்ட பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவரவும், நாட்டில் நிலைபேறான அபிவிருத்தியை முன்னெடுக்கவும் திட்டமிட்டு பல்வேறுபட்ட வியூகங்களை கையாண்டார். முதலில் பிரச்சினைக்குத்தீர்வு தேடும் முயற்சியில் இறங்கினார். விடுதலைப்புலிகளுடன் போர் நிறுத்தத்தை மேற்கொண்டு நேரடிப் பேச்சுக்களை ஆரம்பித்தார். இப்பேச்சுவார்த்தைகள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல சுற்றுக்களாக இடம்பெற்றன. பிற்போக்குச் சக்திகள் இதனைக் கூட விமர்சித்து ரணில் நாட்டைக் காட்டிக் கொடுக்க முனைவதாக பழிசுமத்தியது. சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியில் தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு மக்களை பிரதமருக்கு எதிராக தூண்டிவிட்டு அவரை தேசத்துரோகியாக காட்ட முற்பட்டனர்.
மனைவி மைத்திரியுடன்
நம்பிக்கை இழந்து தடுமாறிக் கொண்டு திசைமாறிப்போகும் இளைஞர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அவர்களை ஓரணியில் திரட்டும் முயற்சியை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இளைஞர்களின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்தார்.
இளைஞர்களின் ஆளுமையை சரியான முறையில் ஆற்றுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்தார். அன்று தேசிய இளைஞர் அமைப்பை உருவாக்கிய ரணில் விக்கிரமசிங்க நாடளாவிய மட்டத்தில் யொவுன்புர எனும் இளைஞர் முகாம்களை நடத்தி இலட்சக்கணக்கான இளைஞர்களை ஓரணிக்குள் உள்வாங்கினார். இளைஞர்களின் சக்தியை நாட்டின் மேம்பாட்டுக்காகப் பெற்றுக்கொள்ளும் திட்டங்களை முன்னெடுத்தார்.
அது மட்டுமன்றி கல்வித்துறையிலும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் திட்டங்களையும் அறிமுகப்படுத்தினார். பாடசாலைக்கல்வியோடு மட்டுப்படுத்தாது தொழில்நுட்பக்கல்வி, உயர்கல்வி முறைகளில் பலமாற்றங்களைக் கொண்டுவந்தார். சர்வதேசத்தோடு போட்டிபோட்டு வெற்றிகொள்ளும் வகையில் உயர்கல்வி துறையிலும், தொழில் நுட்பக்கல்வியிலும் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். நாளைய உலகம் இளைஞர்களின் கைகளிலேயே தங்கியிருப்பதை மனதில்கொண்டு இளைஞர் சமுதாயத்தை தட்டிக்கொடுத்து ஊக்கமளிக்கும் பல்வேறுபட்டத் திட்டங்களை அறிமுகப்படுத்திய பெருமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையே சாரும்.
நாட்டு மக்கள் இன்று முகம் கொடுக்கும் அவலநிலையை அன்று உணர்ந்த ரணில் விக்கிரம சிங்க நாட்டையும், மக்களையும் பலப்படுத்தி மேம்பாடடையச் செய்யும் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துவருகின்ற போதிலும் அவற்றைப் புரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு இலங்கை மக்களில் பலருக்கு இல்லாமை கவலை தரக்கூடிய விடயமாகும்.
இறுதியாக 2015 ஜனாதிபதி தேர்தல் வந்தபோது அரசிலிருந்து வெளியேறிய அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ரணிலுடன் இணைந்து ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினார்.
இதன்போது நிறைவேற்று அதிகாரம் நிச்சயமாக ஒழிக்கப்படும் என்ற வாக்குறுதி பொது முன்னணியால் முன்வைக்கப்பட்டது.
இக்கால கட்டத்தில் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் பேரலையொன்று உருவானது. நல்லாட்சியொன்றைக் கொண்டுவர நாட்டு மக்கள் ஒன்று திரண்டனர். ஐக்கிய தேசியக் கட்சியுடன் சுதந்திரக் கட்சியிலிருந்த முக்கிய சிலருடன் கூட்டணி அமைக்கப்பட்டது. 2015 ஜனவரி 08ல் நாட்டு மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினர். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டு ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றார். அவரது அரசியல் வரலாற்றில் இது மூன்றாவது தடவை பிரதமரானதாகும். 100 நாள் அரசின் மூலம் நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் குறிப்பிட்ட சில அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. படிப்படியாக நிறைவேற்று அதிகாரம் மாற்றம் பெறக்கூடிய சாதகமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
2015 ஆகஸ்டில் நடந்த தேர்தலில் தேசிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. ரணில் விக்கிரமசிங்க நான்காவது தடவையாக நாட்டின் பிரதமராக பதவியேற்றார். ரணில் இன, மத, மொழி பேதங்களைக் கடந்து சிந்திக்கும் ஒரு தலைவராவார். உண்மையிலேயே அவர் எமது நாட்டின் தேசியத் தலைவர்கள் வரிசையில் இடம்பெற வேண்டிய முக்கியமானவராவார்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவின் உறுதியான மனோநிலை ரணில் விக்கிரமசிங்க விடமும் காணப்படுகிறது. எடுத்த காரியத்தை வெற்றியடையும் வரை ஓயாமல் இயங்கும் ஒருவராக அவர் காணப்படுகிறார்.
அவரது அரசியல் சிந்தனை உலகத்தலைவர்களுக்கு நிகரானதாகும். இலங்கை மாதாவுக்குக் கிடைத்த அரும் பொக்கிஷமாகவே ரணில் விக்கிரமசிங்கவை காண முடிகிறது.
அவரது 40 வருடங்கள் தாண்டிய அரசியல் பயணம் தேசத்துக்கு ஒரு ஒளியைப் பெற்றுக்கொடுத்துள்ளது. நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதற்கு ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டல்களே மிகச் சிறப்பான தாகும்.
நாளைய சந்ததியினர்க்கென நாட்டை வளப்படுத்திக் கொடுக்கும் பிரதமரின் இலட்சிய நோக்குக்கு நாமும் கரம் கொடுப்போம்.
இன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவுக்கு இனமத மொழி பேதங்கள் கடந்து ஒன்றாக நல்வாழ்த்துக்களை இச் சந்தர்ப்பத்தில் தெரிவித்து வாழ்த்துவோம்.
எம்.ஏ.எம். நிலாம்