ஜூலியன் அசாஞ்சே உலகப்பரப்பில் ஓர் அரசியல் புரட்சியாளனே | தினகரன் வாரமஞ்சரி

ஜூலியன் அசாஞ்சே உலகப்பரப்பில் ஓர் அரசியல் புரட்சியாளனே

லியன் அசாஞ்சே கைது உலகப்பரப்பில் அதிக அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இவரது கைது ஊடகத்துறைக்கு மட்டுமே உரியது என்பது போல் எல்லோரும் மெளனியாக உள்ளனர். அவரது கைதினை கண்டிக்குமளவுக்கு இலங்கைப் பரப்பில் எந்தவித நடவடிக்கையும் நிகழவில்லை என்பது வேதனை தரும் விடயமாகும். ஊடக சுதந்திரத்திற்கு அப்பால் அரசாங்கங்களின் படு மோசமான செயல்களை விமர்சிக்கும் தரப்புகள் மற்றும் உலக மயவாக்கத்தை நிராகரிக்கும் மார்க்சிஸவாதிகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களையும் மனித உரிமைகளையும் பேசிக்கொண்டிருக்கும் தரப்புக்கள் அவரது கைதினை எதிர்த்து எந்த நடவடிக்கையும் செய்யவில்லை என்பது அவமானமானதே. இக்கட்டுரையும் அவரது கைதும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் விளங்கிக் கொள்வதாக அமைந்துள்ளது.  

விக்கிலீக்ஸ்ன் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சே கடந்த 11ம் திகதி பிரிட்டிஷ் பொலிசாரால் லண்டனில் வைத்து கைது செய்யப்பட்டார். ஈக்குவடோர் அரசாங்கம் கடந்த ஏழுவருடங்களாக தனது துாதரகத்தில் அடைக்கலம் கொடுத்திருந்த நிலையில் தற்போது அத்தூதரகம் அசாஞ்சேவிற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறிவிட்டதாகக் கூறி அத்தகைய புகலிடத்தை விலக்கிக் கொண்டது. அதன் காரணமாக பிரிட்டிஷ் பொலிஸார் அவரை கைது செய்தனர். இதே நேரம் அவரை அமெரிக்காவுக்கு நாடுகடத்துமாறும் சுவீடன் தனது நாட்டுக்கு நாடுகடத்துமாறும் கோருகிறது. ஆனால் எதிர்காலத்தில் அவர் அவுஸ்ரேலியாவில் வாழப் போவதாகவும் அதனால் அவுஸ்ரேலியாவுக்கு நாடுகடத்த வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.  

2006ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் பரபரப்பை ஏற்படுத்திய இவரது செயல் தனித்துவமும் துணிச்சலும் மிக்க செயலாகும். எந்தவொரு அச்சமும் இன்றி கண்ணிமயப்படுதப்பட்ட கோப்புகளை வெளிப்படுத்துவதற்கு இனங்கண்டுகொள்ள முடியாத குறியீட்டை பயன்படுத்தும் இணையத்தளமொன்றை உருவாக்கி அத்தகவலை வெளியே விட்ட பெருமை அசாஞ்சேவுக்குரியது. குறிப்பாக அமெரிக்க இராணுவ இரகசிய ஆவணங்களை இராணுவ கணணிகளிலிருந்து இரகசியத்தனமாத் திருடி வெளியிட்டமை செல்வந்தர்களின் வெளிநாடுகளில் வைத்துள்ள இரகசியக் கணக்குகள், அதன் விபரங்கள் வெளிப்படுத்தியமை உலகளாவிய ரீதியில் அமெரிக்கா மேற்கொள்ளும் போர்க்குற்றங்கள் அமெரிக்கா தனது நட்பு நாடுகளை எப்படி இரகசியமாக வேவு பார்க்கின்றது என்பது தொடர்பாகவும் அரசாங்க ரீதியாக தகவல் பரிமாற்றம் பற்றியதாகவும் கண்காணிப்பு பற்றியதாகவும் அமைந்திருந்தது.  

இத்தகைய ஊடக சுதந்திரத்தை குற்றமாக கருதும் வல்லரசுகளும் அதற்கு ஊதுகுழலாக செயல்படும் அரசாங்கங்களும் அசாஞ்சேவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கின. அமெரிக்கா வெளிப்படையாக அவரது செயலை கண்டித்ததுடன் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. சுவீடன் அசாஞ்சே மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து வழக்கு தொடர்ந்துள்ளது. 2012இல் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணை வழங்கப்பட்டது. பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக தன்னை சுவீடனுக்கு நாடு கடத்தக் கூடாதென அசாஞ்சே தொடுத்திருந்த வழக்கு நிராகரிக்கப்பட்டதை அடுத்தே ஈக்குவடோர் துாதரகத்தில் தஞ்சமடைந்திருந்தார். இவ்வாறு இவர் உலக நாடுகளால் வெறுக்கவும் நிராகரிக்கவும் காரணம் என்ன என்பதே பிரதான கேள்வியாகும்.  

ஒன்று அமெரிக்க ஆட்சியாளரதும் அரசினதும் போலி முகத்திரையை கிழித்தெறிந்தார். அதாவது அமெரிக்க இராணுவத்தில் சித்திரவதைகளையும் கொடுமைகளையும் வெளிப்படுத்தியதுடன் அது எவ்வாறு உலகத்தை ஆளுகைக்குள் வைத்திருக்கின்றது என்பதை அம்பலப்படுத்தியிருந்தார். அமெரிக்க இராணுவம் மீதிருந்த நம்பிக்கை சதாரண மக்கள் மத்தியில் தகர்ப்பதற்கு வழியமைத்தார். அவ்வாறே ஆட்சியாளர் மீதும் அரசாங்கத்தின் நடவடிக்கை மீதும் வெறுப்பினை ஏற்படத்துமளவுக்கு அதன் செயல்களை அம்பலப்படுத்தினார். மிகப் பிரதான விடயம் அமெரிக்க தனது நட்பு நாடுகளை கண்காணிப்பதுவும் வேவுபார்ப்பதுவும் எத்தகைய நடவடிக்கைகளை செய்கிறது என்பதன் மூலம் அதன் நட்பு நாடுகள் அமெரிக்கா மீது வெறுப்பையும் சந்தேகத்தையும் ஏற்படுத்த வழிவகுத்தது. இது அமெரிக்காவின் உலகளாவிய இருப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இதிலிருந்து உலக நாடகள் அதிக மாற்றங்களை அரசியல் பொருளாதார மற்றும் இராணுவ விடயங்களில் ஏற்படுத்திக் கொண்டன.  

இரண்டாவது இத்தகைய அம்பலப்படுத்துகை சந்தைப் பொருளாதார பொறிமுறையை பாதித்தது. அதிலும் குறிப்பான பாதிப்பை ஏற்படுத்தியது அமெரிக்காசார் கூட்டு நாடுகளுக்கேயாகும். அமெரிக்காவின் சந்தை குறியீடு பாரிய பாதிப்பை அடைந்தது. அதன் பொறிமுறைகள் அரசிடமிருந்து விலகி வேறு நாடுகளிடமும் வங்கியமைப்புக்களிடமும் நிதி நிறுவனங்களிடமும் கைமாறியதுடன் அதன் சந்தை சக்திகள் படிப்படியாக வலுவிழக்கும் நிலையை எட்டின. ஆசியா ஆபிரிக்கா மற்றும் இலத்தீனமரிக்க நாடுகளிடம் குவிந்திருந்த சந்தை கட்டமைப்பு சரிவடையத் தொடங்கியது.  

மூன்றாவது உலகமயவாக்கத்தினை பறைசாற்றிய அமெரிக்கா அதனை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. மாற்று சக்திகளின் எழுச்சிக்குள் அகப்பட முடியாத நிலையில் தனது இருப்பினை தக்கவைக்க மேற்கு நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து உலக மயவாக்கத்தை நிராகரிக்க ஆரம்பித்தன. எல்லைகளும் சுவர்களும் விசா தடைகளும் குடியேற்றத்திற்க எதிரான நிராகரிப்பு வாதங்களும் ஏற்படுத்த வேண்டிய நிலைக்குள் மேற்கு நாடுகள் தள்ளப்பட்டுள்ளன. அதனை விக்கிலீக்ஸின் அம்பலப்படுத்தலே ஏற்படுத்தியிருந்தது எப்பது மறுக்க முடியாது.மேற்கு முதலாளித்துவத்தின் கட்டுமானம் என்பது ஒரு தொடரானது. அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் மையப்படுத்தியது. அது தங்கியிருப்பது பிற தேசங்களான ஆசியா ஆபிரிக்கா இலத்தீனமெரிக்கா போன்ற தேசங்களிலேயே. விக்கிலீக்ஸ் பிற தேசங்களில் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் அம்பலப்படுத்திய போது அதன் கட்டுமானம் தகர்வது அல்லது மீள் கட்டுமானத்துக்கு நகர்வது என்ற நிலைக்குள் தள்ளப்பட்டன. தற்போது அத்தகைய இரட்டைக் கொள்கைக்குள் தாராள முதலாளித்தும் தள்ளப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவுக்குள்ளும் ஐரோப்பாவுக்குள்ளும் அத்தகைய இரண்டு நிலைக் கொள்ளைக்குள் தத்தளிப்பதைக் காணலாம்.  

நான்காவது அத்தகைய சூழலில் புதிய தேசியவாதம் எனும் சிந்தனை அந்த தேசங்களில் ஏற்பட ஆரம்பித்துள்ளது. தற்போதைய புதிய தேசியவாதம் என்பது மரபாா்ந்த தேசியவாதம் பேதான்றதல்ல என்று முற்றுமுழுதாகக் கூறிவிட முடியாது. ஆனாலும் அதற்குள் ஏற்படும் மாற்றங்களும் குழப்பங்களும் அதற்குள் புதிய தேசியவாதத்தை தரிக்க செய்யும் என்ற எதிர்பார்க்கை காணப்படுகிறது. எதுவாயினும் புதிய தேசிய வாதம் தவிர்க்கமுடியாததாக உருமாறியுள்ளது உலகப்பரப்புக்குள் எழும் என்பது மறுக்கமுடியாதது.  

ஐந்தாவது அரசாங்கப் பொறிமுறையின் உண்மைத் தன்மை பற்றியது. மக்களுக்கான அரசாங்கம் என்பதை எப்படி ஆட்சியாளர்கள் தமது நலனுக்கும் இருப்புக்கும் பயன்படுத்திவிட்டு தேசிய நலன் என்ற போலிக்குள் மக்களையும் ஊடகத்தையும் ஏமாற்நுறுகிறார்கள் என்பதை தோலுரித்துக் காட்டியிருந்தாா்.  

ஆறு ஆட்சியாளரின் ஊழல் முகத்தின் வடிவம் என்ன என்பதுவும் மக்களின் வரிப்பணம் சூறையாடப்படும் தன்மையும் காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

இவ்வாறு சட்டத்தின் ஆட்சி ஜனநாயகம் நல்லாட்சி நியாயாதிக்கம் மனித உரிமை மனிதாபிமானச் சட்டங்கள் என்பன தந்த பாடங்களும் அதன் வலிகளும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.  

எனவே அசாஞ்சே எனும் விக்கிலீக்ஸ்ன் ஸ்தாபகர்  உலகப்பரப்பில் ஏற்படுத்திய மாற்றங்கள் மிக அதிகமானவை.  அவற்றை சதாரணமாக எடைபோட்டு விட முடியாது. அதன் விளைவுகளால் நேரடியான மாற்றங்களை மேலே குறிப்பிட்டது போல் மறைமுகமாக நுாற்றுக்கணக்கான காரணங்கள் உண்டு. அவற்றை எல்லாம் ஆராய வேண்டிய தேவைகள் முழு உலகப்பரப்பிலும் உள்ள ஆய்வாளர்களுக்குரிய பணியாகும். அதனை எதிர்காலச் சமூகத்திற்கு எடுத்து ச் செல்வதுடன் அரசாங்கங்களையும் அரசுகளது கட்டமைப்பையும் மாற்றம் செய்வதற்கான வாய்ப்பும் சந்தர்ப்பமும் தற்போது கிடைத்துள்ளது. இது தனது ஆய்வுகளுக்கும் வாசிப்புக்கு மட்டுமுரியதல்ல. அதனையும் கடந்து அரசியலுக்கும் ஆட்சியாளருக்கும் ஆட்சி இயந்திரத்திற்குமானது. இது ஒரு புது யுகத்திற்கான புரட்சிப் பாய்சலாகும். கடந்த 13ஆண்டுகள் அதனை மூடிமறைப்பதற்கான முயற்சிகள் செய்யப்பட்டதே அன்றி அதனை பாது காக்க எவரும் முன்வரவில்லை என்றே கூறலாம்.  

எனவே அசாஞ்சேவுசாவை தனி-த்து ஊடக பரப்பினரது புரட்சியாளனாகப் பார்க்காது முழுமையான அரசியல் புரட்சிக்கான விதையாக கருதுவதே மேலானது. அதனை நோக்கி இலங்கைப் பரப்பில் சிந்தனைகளும் எண்ணங்களும் ஏற்பட வேண்டும். அதனால் அதிக மாற்றங்களை எட்டமுடியும்.  

Comments