![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/04/27/q8.jpg?itok=0ITiMQe9)
வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டும் என்றால் நாம் பல விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். பிரச்சினைகளைக் கண்டு பயப்படுவது கோழைத்தனம். புத்திசாலிகள் பிரச்சினைகளை எதிர்கால வாய்ப்பாக மாற்றிக்கொள்கிறார்கள். பிரச்சினைகளை எப்படி சமாளிக்கலாம் என மண்டையை போட்டு புரட்டிக் கொண்டிருப்பதை விட புதிதாக என்ன செய்யலாம் என்று சிந்திப்பது புதிய வாய்ப்பை உருவாக்கிக்கொள்ள வசதியாக இருக்கும். ஒவ்வொரு வழியிலும் பிரச்சினைகளை சமாளிக்க புதிய வழிகளை கண்டுபிடிப்பது இன்றைய உலகில் மிகவும் அவசியம் ஆகிறது. முதலில் செய்ய வேண்டியது என்ன? அவை முக்கியத்துவம் வாய்ந்ததா? அதே நேரத்தில் அது அவசியமானதா என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சிலர் எப்போதும் எதிலும் அவசரம் காட்டுவார்கள். ஆனால் அவர்கள் முக்கியமான வேலையை மறந்து விடுவார்கள். ஒவ்வொரு பிரச்சினையையும் வரிசையாக சமாளிக்க தெரிந்திருக்க வேண்டும். திட்டமிட்டு எந்தவொரு வேலையையும் செய்தால்தான் அதில் வெற்றிபெற முடியும். எதையும் அவசரப்பட்டு செய்யக்கூடாது. பொறுமையாக முடிவுகளை எடுக்க வேண்டும். உணர்ச்சிவசப்படுகிறவர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். சிறிய விஷயங்களில்கூட நாம் கவனமாக நடந்துகொள்ள வேண்டும். அவர்களிடம் அன்பு செலுத்துவது, மரியாதையுடன் நடந்துகொள்வது போன்றவை நமக்கு மற்றவர்களிடம் நல்ல மதிப்பை தரும்.
நண்பர்களை தேர்ந்தெடுக்கும்போது நிச்சயம் கவனம் தேவை. நல்ல நண்பர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் சந்திக்கும் அனைவரையும் நண்பர்களாக தேர்ந்தெடுக்கக்கூடாது. எந்தவொரு விஷயத்திலும் பொறுமையாக செயல்பட்டோம் எனில் அதை எளியமுறையில் முடித்துவிட முடியும். நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையை புரிந்துகொண்டு வாழ வேண்டும். வாழ்க்கையை தெரிந்து கொண்டவர்கள் மிகமிகக் குறைவு. பிரச்சினைகள், சிக்கல்கள், தடைகள், தோல்விகள் வரும்போது மனம் தளர்வடைகிறது. தடுமாறுகிறது. அந்த நேரத்தில் ஏன் இப்படி ஆனது? இனி செய்ய வேண்டியது என்ன? என்பதை ஒரு நிமிடம் பொறுமையாக யோசித்து செயல்பட்டால் நம் பிரச்சினை சூரிய ஒளிப்பட்ட பனித்துளிபோல கரைந்து போகும். ஒழுக்கம், தன்னம்பிக்கை, சுய கட்டுப்பாடு, சாதனைத்திறன், தலைமைப்பண்பு போன்ற குணங்கள் இருந்தால் வாழ்க்கையில் முன்னேறவும் பொறுமை இருந்தால் இலகுவாகவும் முன்னேற முடியும்.
சோ.வினோஜ்குமார்,
தொழினுட்ப பீடம்,
யாழ். பல்கலைக்கழகம்,
கிளிநொச்சி.