அமெரிக்க-ஈரான் விவகாரம் போருமின்றி அமைதியுமின்றி காணப்படுகிறது. அமெரிக்கா தனித்து ஈரானை எதிர் கொள்வதிலிருந்து தவிர்த்துச் செயல்படுவதாக கடந்த வாரம் இப்பகுதியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்காக மேற்காசியாவை முழுமையாக கைவிடும் நிலையில் அமெரிக்கா இல்லை என்பதுவும் கவனத்திற்குரியதாகும். காரணம் ேமற்காசியாவே அமெரிக்க இருப்பின் பிரதான மையமாகும். அது தனித்து அரசியலில் மட்டுமன்றி பொருளாதாரத்திலும் இராணுவத்திலும் அமெரிக்காவின் இருப்பினை தீர்மானிப்பதில் மேற்காசியாவுக்கு பிரதான பங்குண்டு. அதனால் அதனை இழப்பதென்பது அதன் வல்லரசு இருப்பிற்கு ஆபத்தானதாக அமைந்துவிடும். அதனால் அப்பிராந்தியத்தை எப்படியாவது தக்கவைப்பதில் கரிசனை கொண்டுள்ளது அமெரிக்கா. அதே நேரம் அமெரிக்காவை பலவீனப்படுத்தினால் தமது இருப்பு காணாமல் போய்விடும் என்ற எதிர்பார்க்கையுடன் பல மேற்காசிய நாடுகள் காணப்படுகின்றன. அதில் மிகப் பிரதான நாடு சவூதி அரேபியா என்பது குறிப்பிடத்தக்கது.இக்கட்டுரையும் அமெரிக்கா சவூதிஅரேபியாவை திட்டமிட்டு எப்படி ஈரானுடன் போர்புரியவைக்க முயலுகிறது என்பதை விவரிப்பதாகவே அமைந்துள்ளது.
சவூதி அரேபியா - ஈரான் தொடர்பில் வெளிவரும் அறிக்கைகளும் நடவடிக்கைகளும் இரண்டு நாட்டுக்குமான உறவை பாதிப்பவையாக அமைந்துள்ளன. இரு நாட்டுக்குமான உறவு நீண்ட காலமாக பாதிப்புக்குள்ளானதாகவே அமைந்துள்ளது. புவிசார் மற்றும் பிராந்திய அரசியல் சமநிலை கருதி அவ்வாறு அமைந்தாலும் அமெரிக்க- _ சவூதி அரேபிய நெருக்கம் அதனை மேலும் அதிகரி-த்தது என்றே குறிப்பிட முடியும். 1980 களுக்கு பின் அமெரிக்க கொள்கை வகுப்பில் சவூதி அரேபியா முதன்மைபடுத்தப்பட்டதை அவதானிக்க முடிகிறது. வளைகுடா யுத்தமே முழுமையாக இரு நாட்டுக்குமான உறவை பலப்படுத்தியது எனக் கூறலாம். அதன் பின்பு இருநாடும் இணைந்து கொண்டு பிராந்திய அரசியலை கையாளும் போக்கு வளர்ந்தது. அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பின்பு ஈரான் விவகாரம் மேற்காசிய அரசியலில் பிரதான இயங்கு திறனுடையதாக மாறியது. சிரியா விடயத்தில் அமெரிக்கா சமரசம் செய்ய ரஷ்யாவுடன் உடன்பட்டாலும் ஈரான் விடயத்தில் அதற்கான எல்லா வாய்ப்புக்களையும் தகர்த்து செயல்படவே அமெரிக்கா விரும்பியது. காரணம் ஈரானின் அணுவாயுதப் பலம் பற்றியதாகவே உள்ளது. ஈரானின் அணுவாயுதப் பலமானது மேற்காசியாவின் இருப்பையும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நலன்களையும் முற்றாகவே தகர்த்தெறியும் என்றே அமெரிக்கா கருதுகிறது. இதனால் ஈரானை எப்படியாவது தகர்க்க வேண்டும் என அமெரிக்கா திட்டமிட்டு செயல்படுகிறது. ஐஎஸ் அமைப்பினை வைத்துக்கொண்டு இஸ்லாத்தை இஸ்லாத்தினால் அழித்துவிட திட்டமிட்ட அமெரிக்கா அதன் ஐரோப்பா மற்றும் வளர்ந்த நாடுகள் நோக்கிய நகர்வினால் அதனை அழித்தல் என்ற முடிவுக்கு வந்தது. அதிலும் முற்றாக அழித்தல் என்பது அமெரிக்காவின் மேற்காசிய நலனுக்கு ஆபத்தானது என்ற எண்ணம் தற்போதும் அமெரிக்க புலனாய்வுத்துறையிடம் உண்டு. ஆனால் அதனாலேயே மேற்காசியாவில் அமெரிக்காவுக்கு மாற்றீடாக ரஷ்யா வளர்ந்தது என்ற நிலையை அமெரிக்கா நன்கு புரிந்துள்ளது மட்டுமன்றி அதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்க முயன்று வருகிறது.இதனாலேயே சவூதி அரேபியாவை முன்னிறுத்தி ஈரான் மீதான போரை தொடக்க திட்டமிட்டுள்ளது. அதற்கு அமைவாகவே மேற்காசியாவில் பல போர் எச்சரிக்கைகளை திட்டமிட்டு நகர்த்தி வருகிறது.
அவற்றில் முதன்மையானது சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் அல் அசாப் வெளியிட்ட அறிக்கையாகும் . அதில் அவர் ஈரானுடன் போர் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை, போர் ஏற்படுவதை தவிர்க்கவே நாம் விரும்புகிறோம். அதே நேரத்தில் ஈரான் போரில் இறங்கினால் அதனை சமாளிக்க தயாராக உள்ளோம் என்றார்.
இரண்டாவது, அண்மையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடல் பகுதியில் நிறுத்தி- வைக்கப்பட்ட சவூதி அரேபியாவின் எண்ணெய் தாங்கிக் கப்பல் மீது தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. அதில் சவூதி அரேபியாவின் எண்ணெத் தாங்கி பாரிய சேதமடைந்தது. அதனை ஈரானியரே தாக்கியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. அதுமட்டுமன்றி அமெரிக்கா தனது போர்க்கப்பலான யு.ஏ.இ.என்பதை அக்கடல் பகுதியில் நிறுத்தியுள்ளது.
மூன்றாவது, அண்மையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தலைமையில் அராபியக்கடலில் கூட்டு கடல் பயிற்சி ஒன்றினை நிகழ்த்தி அதன் வீடியோவை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அதில் அதிகபோர் ஒத்திகைகள் ஈரானுக்கு எதிரானவையாக வடிவமைக்கப்பட்டிருந்ததுடன் ஈரானை எச்சரிக்கும் விதத்தில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நான்கு இஸ்லாமியரின் புனித நகரமான மக்கா மீது இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டிருந்தன என்றும் அதனை சவூதி அரேபியா சுட்டு வீழ்த்தியதாகவும் சவூதி அரேபிய இராணுவம் அறிவித்துள்ளது. யெமனில் ஹவுத்தி புரட்சியாளருக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையே பாரிய உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இதில் யெமன் முடியாட்சிக்கு ஆதரவாக சவூதி அரேபியா உதவி வருவதுடன் ஜனாதிபதி மன்சூர் ஹவுத்திக்கு ஆதரவாக சவூதி அரேபியப் படைகள் போர் புரிந்து வருகின்றன. ஹவுத்தி யெமன் அரசுகளுடன் அமெரிக்காவும் குற்றம்சாட்டி வருகிறது. காரம் ஹவுத்தி புரட்சியாளர்கள் ஷியா முஸ்லிம்கள் என்பதனாலும் ஏமன் புவிசார் அரசியல் ரீதியில் முக்கியமான அமைவிடத்திலும் செங்கடலையும் அரேபியக் கடலையும் கொண்டிருப்பதனால் ஈரான் அதன் மீது ஆதிக்கம் கொள்ளலாம் என கருதப்படுகிறது.
ஐந்தாவது சவூதி அரேபிய அரசுக்கு சொந்தமான பெற்றோல் குழாய்கள் மீது ஆளில்லாத விமானம் மூலம் ஹவுத்தி புரட்சியாளர்கள் தாக்குதல் நிடத்திய தகவலை சவூதி அரேபியா வெளியிட்டுள்ளது. சவூதியரேபியாவின் ரியாத் நகரின் மேற்கிலுள்ள யான்பு நகருக்கு குழாய் மூலம் பெற்றோலிய கச்சாய் எண்ணெய் எடுத்துச் செல்லப்படுகிறது. சுமார் 1200 கி.மீ.நீளமான குழாய் மூலம் அத்தகைய எண்ணெய் விநியோகம் நிகழ்கிறது. இதன் மீதே ஈரானிய ஆதரவு ஹவுத்தி புரட்சியாளர்கள் தாக்கியதாக சவூதி அரேபியா குற்றம் சுமத்தியுள்ளது.
இவ்வாறு இரு நாட்டுக்குமான போர்ப் பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகள் நிகழ்ந்தவண்ணமுள்ளன. இதனை அமெரிக்க ஜனாதிபதி வெளியுறவு செயலாளர் மற்றும் பென்டகன் என்பன அதிகரிக்கும் விதத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. வெளிப்படையாக மேற்காசியாவை பதற்றத்துடன் வைத்துக் கொள்ளும் விதத்தில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் அண்மைக்காலத்தில் அதிகரித்துள்ளது. அதற்கு அமைவாகவே அண்மையில்தனது கடற்படைக்கப்பல்களையும் ஏவுகணைத் தாக்குதல் திறனையும் அமெரிக்கா மேறகாசியா நேக்கி நகர்த்தியது. தற்போது மேலும் அமெரிக்கப் படைகள் தேவை என்றடிப்படையில் பென்டகன் கோரிக்கை விடுத்துள்ளது. இரண்டு விதத்தில் அத்தேவையை பென்டகன் வலியுறுத்தியுள்ளது. ஒன்று அங்குள்ள அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நிகழ்த்த வாய்ப்புள்ளதாகவும் அதிலிருந்து அவர்களைப் பாதுகாக்க வேண்டுமாயின் அதிக படைகள் வேண்டும் எனக் கோரியுள்ளது. இரண்டாவது அமெரிக்காவின் முதலீடுகளையும் சொத்துக்களையும் பாதுகாக்க வேண்டுமாயின் அதிக படைகள் வேண்டுமென கோரியுள்ளது. எனவே மீளவும் அமெரிக்காவின் பிடியை அதிகரிக்கும் விதத்தில் இராணுவ நகர்வுகளை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது.
வெளிப்படையாகவோ அல்லது நேரடியாகவோ அமெரிக்கா தனித்து யுத்தத்தை ஈரானுடன் பிரியாது சவூதி அரேபியாவையும் ஏனைய அராபிய நாடுகளையும் ஒன்றிணைத்து தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள முயலுகிறது. அதற்கான தயாரிப்புகளை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது. அதற்கான பதில் நகர்வுகள் எவ்வாறும் அமையும் என்பதைப் பொறுத்ததாகவே அமெரிக்காவின் உத்தி-கள் அமையும்.
கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்