ஒற்றுமையே பலம்..! | தினகரன் வாரமஞ்சரி

ஒற்றுமையே பலம்..!

காட்டில் ஒரு வேடன் பறவைகளைப் பிடிப்பதற்காக வலையொன்றை விரித்து வைத்திருந்தான். சிறிது நேரத்தில் புறாக்கள் கூட்டமாக வந்து வலையில் அகப்பட்டுக் கொண்டன. ஒவ்வொரு புறாவும் தனித்தனியாக வலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சி செய்தன. எனினும் அவற்றால் முடியாமல் போனது. எடுத்த முயற்சிகள் வீணாயிற்று. இதற்கிடையில் காகம் ஒன்று இதைக் கவனித்தது. வலையில் அகப்பட்ட புறாக்களைப் பார்த்த காகம் நேராக புறாக்களிடம் சென்றது.  

"புறாக்களே! நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டு முயன்று வலையோடு சேர்ந்து பறந்து சென்று உங்களை காத்துக்கொள்ளுங்கள்" என்று ஆலோசனை கூறியது. புறாக்கள் காகத்தின் யோசனைப்படி, அவை அனைத்தும் ஒன்றுபட்டு வலையையும் தூக்கிக்கொண்டு பறந்து சென்று தப்பின. வலையை விரித்துவிட்டுச் சென்ற வேடன் திரும்பி வந்து பார்த்து ஏமாற்றமடைந்தான்.  

நீதி : ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு. ஒற்றுமை என்றும் பலமாம். ஒற்றுமையே என்றும் உயர்வு தரும்.

எஸ். லக்ஸான், 
தரம் 09B, கொ/தெமட்டகொட விபுலாநந்த தமிழ் மகா வித்தியாலயம், 
கொழும்பு 09.  

 

Comments