ஐரோப்ப மாற்றங்கள் உலக இருப்பை பாதிக்குமா? | தினகரன் வாரமஞ்சரி

ஐரோப்ப மாற்றங்கள் உலக இருப்பை பாதிக்குமா?

ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவது பற்றிய வாக்கெடுப்பு தொடர்கின்றது. பிரிடடனின் இரண்டாவது பிரதமரும் பிரிக்ஸிட் விடயத்தால் இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஏறக்குறைய ஐரோப்பா முழுமையாக மாறுதல் பற்றிய சிந்தனைக்குள் தள்ளப்பட்டுள்ளது.. அல்லது மேலும் ஒரு புரட்சிகரமான கட்டத்தை நோக்கி உலகத்தை நகர்த்த திட்டமிடுகிறது என கருதலாமா என்பது பிரதான கேள்வியாகும். இக்கட்டுரையும் ஐரோப்பாவுக்கு ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பற்றிய தெளிவினை அடைவதாக அமைந்துள்ளது.  

ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலுக்குரிய 751 ஆசனங்களுக்காக நிகழ்ந்த தேர்தலில் ஐரோப்பிய மக்கள் கட்சியே 178 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஏறக்குறைய 27 நாடுகளில் நடைபெற்ற தேர்தலில் என்றும் இல்லாதவாறு பெரும் மாற்றங்களை அவதானிக்க முடியும். குறிப்பாக பிரித்தானியாவைப் பெறுத்தவரை பிரிக்ஸிட் கட்சியே அதிக வாக்குகளை பெற்றுள்ளது. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் என்ற உணர்வுடன் செயல்படும் மக்கள் இக்கட்சியை அதிகம் ஆதரித்ததாக தெரியவருகிறது. அது மட்டுமன்றி வழமையான தொழில் கட்சியையும் கன்சவேட்டிவையும் நிராகரித்து விட்டு இக்கட்சி அதிக வாக்குகளை தனதாக்கியுள்ளது. இதில் எல்லா நாடுகளிலும் சூழலியலாளர்கள் தேசியவாதிகள் தராண்மைவாதிகள் குடியேற்றத்தை நிராகரிக்கும் பிரிவினர் ஆகியோர் வெற்றிகரமான நிலையை எட்டியுள்ளனர். இதில் சோஷலிஸ்டுகளும் ஜனநாயகவாதிகளும் இரண்டாவது அதிக வாக்குகளை பெற்றுள்ளனர். அவ்வாறே தராள ஜனநாயக வாதிகள் 105 ஆசனங்களை கைப்பற்றியுள்ளனர்.  

கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது மரபார்ந்த அக் கட்சிகளின் செல்வாக்கு சரிவடைந்து புதிய பிரிவினரது எழுச்சி சாத்தியமாகியுள்ளது. அதிலும் தேசியவாதிகளும் சூழலியல்வாதிகளும் குடியேற்றத்திற்கு எதிரான பிரிவினரும் எழுச்சியடைந்துள்ளமையே கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். வலுவான பொருளாதார கட்டமைப்பாக இருந்த ஐரோப்பிய யூனியன் நெருக்கடிக்குள்ளானதுடன் ஐரோப்பாவினது நிலை தென்படத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஆட்சிமாற்றங்களும் அதீதமான அதிகார மாற்றங்களும் தீவிரவாதத தாக்குதல்களும் அதிகரிக்கத் தொடங்கியது. அதிலிருந்து மீளமுடியாது திணறிய போது ஐரோப்பாவுக்குள் மீளவும் தேசியவாதம் தலையெடுக்க ஆரம்பித்தது. எல்லையில்லாத குடியேற்றவாசிகளது நுழைவும் அதிலிருந்து மீளமுடியாது சுதேசிகளது பேராட்டமும் பெருமெடுப்பில் ஐரோப்பாவை கலவரமடைச் செய்தது. ஐரோப்பியர் புதிய திசையை நோக்கி நகர வேண்டிய நிலைக்கு உட்பட்டனர்.  

இத்தகைய ஐரோப்பிய சமூகத்தின் சிந்தனையையும் அரசியல் நடத்தையையும் அங்கீகரிக்காத ஆட்சியாளர்களும் அவர்களது போக்கும் மேலும் ஐரோப்பியர் மத்தியில் முரண்பாட்டை அதிகரிக்க செய்தது. ஆட்சியாளரை மாற்றுவதும் அவர்களை நெருக்கடிக்கு தள்ளுவதும் அவர்களது இயல்பான அரசியல் பண்பாக காணப்பட்டது. காரணம் அதற்கான மரபுகளால் வளர்க்கப்பட்வர்களாக ஐரோப்பியர் காணப்பட்டனர். பொதுவாகவே ஐரோப்பிய சட்டங்களும் சுதந்திரமும் புரட்சிகரமான சிந்தனையும் மதம் மற்றும் மனித உரிமை சார் அங்கீகாரங்களும் அவர்களது இருப்பையும் பாதுகாப்பையும் பேணியதுடன் அவர்களை சட்ட பிரமாணங்களுக்கூடாக பாதுகாத்தும் வந்துள்ளது. அவர்கள் அனுபவிக்கும் சலுகைகளும் சுதந்திரங்களும் பங்கிடப்படுகின்ற போது அவர்கள் முரண்பாடுகளுக்கு உள்ளாகின்றனர். இதிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காகவே தமது வாழ்வை தமதாக்குவதற்காகவே மீண்டும் தேசியவாத சிந்தனைக்குள் தள்ளப்படுகின்றனர். அத்தகைய தவிர்க்க முடியாத இருப்பின் வடிவமாகவே ஐரோப்பா மாறிவருகிறது.  

ஐரோப்பாவுக்குள் எழுந்துள்ள வடிவம் அறிவுபூர்வமாக செயல்வடிவம் பெறுகின்றதன் தோற்றமே பிரிக்ஸிட் ஆகும். அதற்கான முதலீட்டை பல வருடங்களுக்கு முன்பே அந்த தேசங்களின் மக்கள் உருவாக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதனை இலகுவதான சாதனங்களுக்குள்ளால் வெளிப்படுத்தாது அரசியலாகவும் அறிவுபூர்வமாகவும் வெளிப்படுத்தி வருகின்றனர். காரணம் இரண்டாம் உலகப் போரின் அனுபவங்களைக் கொண்ட ஐரோப்பிய சமூகம் தற்போதும் வழிகாட்டியாக உள்ளமை முக்கியமான விடயமாகும். அதே நேரத்தில் அந்த மக்கள் கூட்டம் தமது எதிர்கால இருப்புக்கான சூழலியல் வாதிகளையும் தாராளவாதிகளையும் பாதுகாப்பத்தில் கரிசனை உடையவர்களாகக் காணப்படுகின்றனர். எந்த மக்கள் கூட்டம் தேசியத்தை சிந்திக்கின்றதோ அந்த மக்கள் எப்போது சூழலியலையும் அன்னிய குடியிருப்புகளையும் நிராகரிப்பது வழமையானதாக காணப்படும். அது தவிர்க்க முடியாத அரசியல் பிரஞ்ஞையாகும். இதிலி-ருந்து மீள்வதென்பது தேசிய அபிலாசையினாலேயே முடியும் என்பதை கடந்தகால வரலாறு முழுவதும் ஐரோப்பியர் நிறுவியிருந்தனர். மீண்டும் அப்படியான ஒரு கட்டததை நோக்கி உலகத்தை அசைப்பதற்கு ஐரோப்பாவை தயார்செய்து வருகின்றனர். பழைய கோட்பாடுகளை உதறிவிட்டு புதிய கோட்பாடுகளை புகுத்துவதல்ல அவர்களது உத்திகள். பழையவற்றிலிருந்து எப்படி புதியவற்றை உருவாக்கமுடியும் எனக் கணக்குப் போடும் சமூகமாகவே இன்றும் ஐரோப்பியர் காணப்படுகின்றனர். அவர்களது புரட்சிகளும் புரட்சிகரமான சிந்தனைகளும் தமது இருப்பிலிருந்தே ஆரம்பமாவது என்பதை பலதடவை நிறுவியிருந்தவர்கள்.  

அத்தகைய பயணத்தில் அரசியல்வாதிகளையும் அவர்களது ஆட்சி அதிகாரத்தையும் பிரயோகிக்க முனைகின்றதாவே ஐரோப்பிய பராளுமன்ற தேர்தல் அமைந்துள்ளது. 2019 முதல் 2024 வரையான காலப்பகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஐரோப்பிய பராளுமன்றம் மேற்குறிப்பிட்ட பிரிவினரின் செல்வாக்குக்குள் கட்டுப்படப் போகின்றது. இதன் எதிர்காலம் ஒவ்வொரு நாட்டிலும் மாற்றத்திற்கான ஆரம்பமாகவே தென்படுகிறது. பிரித்தானியாவில் காணப்பட்ட நிலை மாறி தற்போது ஐரோப்பாவின் மேற்குப்பக்க நாடுகளை ஆக்கிரமித்த சிந்தனை தற்போது கிழக்கு நாடுகளையும் நோக்கி நகரத் தொடங்கியள்ளது. தற்போது நடைபெற்ற தேர்தலில் ஐரோப்பா முழுவதும் தேசியவாதிகளது எழுச்சி நிகழ்ந்துள்ளது. இத்தகைய தேசியத்திற்கும் ஐரோப்பியர் சார்பு ஆட்சிக்கும் பலியிடப்பட்ட தேசத்தின் தலைவராகவே டேவிட் கமரோன் மற்றும் திரேசா மே காணப்படுகின்றனர்.  

பிரித்தானிய பிரதமர்களது விலகலுக்கு அவர்களது அரசியல் கலாசாரத்தை ஒரு வலுவான காரணமாக சொல்லப்படுவது வழமையானது. ஆனால் அதற்கு அப்பால் உள்ள காரணங்கள் அவர்களது அணுகுமுறைகள் பிரித்தானியாவினதும் ஐரோப்பாவி-னதும் எதிர்காலம் சார்ந்ததாகும். அதில் அவர்களது அணுகுமுறைகள் மென்மையானதாக அமைந்திருப்பதுடன் மக்களதும் ஏனைய அரசியல் தலைவர்களதும் நடத்தையையும் எதிர்த்து செயல்படுவதன் மூலம் ஐரோப்பாவை அழித்துவிட முடியாது என்ற எண்ணமுமாகும். பிரித்தானியாவையும் ஐரோப்பாவையும் மிக நிதானமாகவும் சட்டவரைபுகளுக்குள்ளாலும் நியாயாதிக்கத்துடனும் மட்டுமே நகரவைக்க வேண்டும் எனக் கருதும் பழமைவாதிகளாகவே உள்ளனர். அதனாலேயே அவர்களது நடவடிக்கைகளின் போக்குகள் நிதானமாக அமைந்துள்ளது. இதனை வேகப்படுத்த முயலும் தேசிய வாதிகளுக்கும் பழமைவாதிகளுக்கும் இடையில் காணப்படும் இழுபறி இது என்பதே மீள மீள நிகழும் வாக்கெடுப்பு சொல்லும் செய்தியாகும். பழமைவாதிகள் முற்றாக மாற்றத்தை நிராகரிக்கவில்லை என்றே கூறலாம். ஆனால் அத்தகைய மாற்றத்தை அடைவதற்கான வேகத்தை மட்டுப்படுத்துவதிலும் அதனால் ஏற்படவுள்ள அபாயத்தை தடுக்கவும் விரும்புகின்றனர். இதுவே தற்போதைய காலதாமதமாகும்.  

உலகம் வர்த்தகத்தினாலும் சந்தையினாலும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. அதனை அடைவதற்கு ஐரோப்பியர்கள் நீண்ட காலம் போராடியவர்கள் என்பதை அவர்கள் நிராகரிக்க மாட்டார்கள். அதனால் அத்தகைய கட்டமைப்பினால் இயல்புச் சூழல் அவர்களை பாதிப்பதாக அமைந்தாலும் அதனை காலதாமதப்படுத்த முனைகின்றனர். பிரிக்ஸிட் ஒரு வரலாற்றுப் போக்கை தீர்மானிக்கப் போகின்றது என்பதே தற்போதுள்ள நிலைப்பாடாகும். ஐரோப்பிய பொது அடையாளத்தினை மீளமைக்க முயலும் ஆட்சியாளரும் அதனை தகர்க்க முயலும் எதிர்தரப்பினருடனான மக்களும் என்ற நிலை பிரி-த்தானியாவின் இருப்பினை பாதிப்பதாக அமையப் போகின்றது.  

ஐரோப்பாவில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்துமே முழு உலகத்தையும் பாதிப்பதாக அமையும். அதன் முழுமை ஏற்படாது விட்டாலும் அதன் எச்சங்கள் பாதிப்பினை ஏற்படுத்தும். அதனால் உலகம் தளுவிய விதத்தில் ஏற்படவுள்ள தேசியம் சார்ந்து மக்களது எழுச்சி புதிய யுகம் ஒன்றுக்கான பதிவாக அமையும்.

அது ஆட்சிக்கட்டமைப்பையும் அதிகாரத்தின் வடிவத்தையும் மாற்றத்துக்கு உள்ளாக்கும். இதன் ஆரம்ப தேற்றமே பிரித்தானியாவினது நிலைப்பாடாகும். ஆனால் அது ஏனைய தேசங்களைப் போலல்லாது மிக நிதானமாக மாறுவதன் மூலம் இது உருவாக்கப்பட்டிருந்து.  

ஆகவே அதனை நோக்கி ஐரோப்பா புதிய வடிவத்தை எட்டப் போகிறது. அதனால் உலகப் பரப்பில் வாழும் குடியேற்றவாசிகளும் அவர்களது வாழ்வியல் அங்கீகாரங்களும் மாறுதல் அடைவதுடன் புதிய குடியேற்ற கட்டமைப்புக்கு வித்திடுவதாக அமையப் போகின்றது.

மதங்களாலும் இன பேதங்களாலும் கட்டப்பட்ட சமூகம் எதிர்காலம் முழுவதும் தனது இருப்பினை நிலைப்படுத்துவதற்காக போராட வேண்டிய நிலைக்குள் தள்ளியுள்ளது.

இதில் ஐரோப்பா பலியிடுவதற்கு பதிலாக பிற தேசங்களும் தேசியத்தவர்களும் துயரப்படும்ட நிலை தவிர்க்க முடியாததாக அமையவுள்ளது.

கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்  

Comments