நடந்து முடிந்த இந்தியாவின் 17ஆவது மக்களவைத் தேர்தல் எதிர்பாராத பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.இம்மாற்றங்கள் அண்டய நாடான இலங்கையிலும தாக்கம் செலுத்தும் வாய்ப்புகள் அதிகமெனலாம். கலாசாரம், பண்பாடு, மூடநம்பிக்கை போன்றவற்றில் இன்றும் கட்டுப்பட்டு இருக்கும் இந்தியா போன்ற நாட்டில் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதே பெரும் போராட்டமாக நினைக்கும் சூழலில் இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று 78 பெண் உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்லவுள்ளனர்.
ஆனால், இந்திய சனத்தொகையில் பெண்களின் விகிதாசாரத்தின் படி இத் தொகை குறைவையே காட்டுகிறது. ஆனால் இத்தனை பெண் உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்வது இதுவே முதன்முறையாகும்.
இந்த தேர்தலில் மொத்தம் 724 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சி 54 பேருக்கு வாய்ப்பளித்தது. அடுத்த இடத்தில் பா.ஜ.க 53 பெண் வேட்பாளர்கள், பகுஜன் சமாஜ் 24, திரிணாமூல் காங்கிரஸ் 23, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 10, இந்திய கம்யூனிஸ்ட் 4 பெண் உறுப்பினர்களுக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது. 222 பெண் வேட்பாளர்கள் சுயேச்சைகளாகப் போட்டியிட்டனர்.
உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 104 பெண்கள் போட்டியிட்டனர். அதையடுத்து தமிழகத்தில் 64 பெண்களும், பீகாரில் 55 பேரும், மேற்கு வங்கத்தில் 54 பெண்களும் போட்டியிட்டனர்.
காங்கிரஸ் மற்றும் பாஜக முறையே 13% மற்றும் 12% வேட்பாளர்களை முன்னிறுத்தின. அதில், பாஜக சார்பாக நிறுத்தப்பட்ட 55 பெண் வேட்பாளர்களில் 41 பேர் (74 சதவீதம்) வெற்றிபெற்றிருக்கும் நிலையில், காங்கிரஸால் நிறுத்தப்பட்ட 52 பெண் உறுப்பினர்களில் ஆறு பேர் மட்டுமே வெற்றிபெற்றுள்ளனர்.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களில் 41 சதவீதம் பேர் பெண்களாக இருந்தனர். அதாவது, அக்கட்சியின் சார்பாக களமிறக்கப்பட்ட 17 பெண்களில் ஒன்பது பேர் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
நடப்பு எம்.பி.யாக இந்த தேர்தலைச் சந்தித்த 41 பேரில் 27 பேர் மீண்டும் தேர்வாகி தங்கள் வெற்றியை தக்கவைத்துக்கொண்டுள்ளனர். அதிகபட்சமாக உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 11 பெண் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
முதல் இரு மக்களவையில் 24 பெண் வேட்பாளர்கள் இடம்பெற்றிருந்தனர். 3-ஆவது மக்களவையில் 37 பேர்,8-ஆவது மக்களவையில் 45 பேரும், 9-ஆவது மக்களவையில் 28 பேரும், 10-ஆவது மக்களவையில் 42 பேரும் தேர்வாகியிருந்தனர்.
11-ஆவது மக்களவையில் 41 பேரும், 12-ஆவது மக்களவையில் 44 பேரும், 13-ஆவது மக்களவையில் 52 பேரும், 14-ஆவது மக்களவையில் 52 பெண் வேட்பாளர்களும் வெற்றிபெற்றிருந்தனர்.
15-ஆவது மக்களவையில் 52 பேரும், 16-ஆவது மக்களவையில் 64 பெண் உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்த நிலையில், 1952-ல் இருந்து நடைபெற்ற தேர்தல்களில் முதன்முறையாக 17-ஆவது மக்களவையில் 14 சதவீதம் (78) உறுப்பினர்கள் அதிகபட்சமாக வெற்றிபெற்றுள்ளனர்.பெண் வேட்பாளர்களை முன்னிறுத்தினால் வெற்றிபெற முடியாது என்ற எண்ணத்தை இந்த தேர்தல் மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.