ஈரான்- அமெரிக்க விவகாரம் மேற்காசிய அரசியலில் பெரும் போர்ப் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இரு தரப்பும் வெளியிடும் கருத்துக்களை பார்க்கும்போது விரைவில் போர் ஒன்றுக்கான சூழல் அமைவது போல் தென்படுகிறது. ஆனாலும் இவ்வாறு வாய்வார்த்தைகளை வெளிப்படுத்தி போருக்கு சென்ற வடகொரியாவும் அமெரிக்காவும் சமாதானம் பேசியதைப் பார்க்கும் போது அதே அணுகுமுறை தான் இங்கும் நடைபெறுமா என்ற கேள்வியும் தவிர்க்க முடியாததாகும். இக்கட்டுரையும் அத்தகைய போர்ப் பதற்றத்தின் உண்மை நிலையை புரிவதற்கான ஒன்றாக அமையவுள்ளது.
ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கமேனி மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை அதிக சீற்றத்தை ஈரானிய மக்கள் மத்தியிலும் ஆட்சியாளரிடத்திலும் ஏற்படுத்தியது. குறிப்பாக ஈரான் அமெரிக்காவின் ஆளில்லாத விமானத்தை சுட்டு வீழ்த்தியதன் பின்பு விழித்துக் கொண்ட அமெரிக்கா, தொடராக பல நடவடிக்கைகளை முன்னெடுத்தது. அதிலும் அயதுல்லா மீதான சொத்துக்களை முடக்கும் செயல் ஈரானியர் மீதான அவமானமாக கருத வைத்தது. ஈரான் மீதான பொருளாதாரத் தடையை விட அயதுல்லா மீதான நடவடிக்கையே அவர்களை அதிகம் பாதித்த விடயம். அதாவது தமது புனிதர் மீதும் தமது மதத்தின் மீதும் நடவடிக்கை மேற்கொண்டதாக ஈரானியரும் உலக இஸ்லாமியர்களும் கருதுகின்றனர். இது போருக்கான புறச்சூழலை ஏற்படுத்த விளைகிறது. எல்லைப் பாதுகாப்பு படைகளையும் ஈரானிய இராணுவத்தையும் தூண்டும் விடயமாக மாறிவிட்டது. அத்துடன் பிற நாடுகளிலிருந்து இஸ்லாத்தின் பெயரில் உருவாகும் படைகள் ஒன்று சேர்ந்து போர் புரிவதற்கான உணர்வினை அதிகரிக்கச் செய்துள்ளது.
அடுத்து முக்கியமாக ஈரான் மீது அமெரிக்கா சைபர்த் தாக்குதலை நிகழ்த்தியதாக தெரிவிக்கின்ற செய்தி அதிக முரண்பாடானதாக மட்டுமன்றி ஆபத்தானதாகவும் அமைந்துள்ளது. அதில் அமெரிக்கா நிகழ்த்தியதாக கூறும் தாக்குதலை ஈரான் நிராகரித்துமுள்ளது. அமெரிக்கா முன்னெடுத்த முயற்சியை தாம் தடுத்து நிறுத்தி விட்டதாகவும் அதன் பிரதிபலிப்பிலிருந்து ஈரானின் தொழில் நுட்பம் பாதுகாத்து விட்டதாகவும் ஈரான் அறிவித்துள்ளது. எதுவாயினும் அத்தகைய தாக்குதல் பரஸ்பரம் இருவரையும் பாதிக்கும் விடயமாக அமைந்துள்ளது.
மூன்றாவது சவூதி அரேபியா மீதான ஹவுத்திப் போராளிகளது தாக்குதல்கள் அதிகரித்துச் செல்கிறது. குறிப்பாக ஈரானின் ஆதவுப் படைகளாக ஹவுத்தி தீவிரவாதத்தை அமெரிக்கா உட்பட மேற்குலகமும் சவூதி ஆதரவு நாடுகளும் கருதுகின்றன. அதன் தாக்குதலால் சவூதியின் பொருளாதார இலக்குகள் அழிவடைவதுடன் விமான நிலையம் எண்ணெய் தாங்கிக் குழாய்கள்’ என்பனவற்றின் மீதான தாக்குதல் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இது அமெரிக்காவை மட்டுமல்ல சவூதி அரேபியாவையும் ஒரு யுத்ததத்திற்கு தயாராக்குவது போல் அமைந்துள்ளது. இதனை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்வதுடன் சவூதியை ஈரானுக்கு எதிராக திருப்பி ஒரு யுத்தத்தை நடாத்த திட்டமிட்டு வருகிறது. வெளிப்படையாகப் பார்த்தால் சவூதி, இஸ்ரேல், அமெரிக்க கூட்டு என்பது ஒரு போருக்கான தயாரிப்பினை மேற்கொள்ள முனைகிறது.
நான்காவது அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இஸ்ரேலுக்கு பயணமானதை அடுத்து வெளிவிவகாரச் செயலரது பயணம் அமைந்திருந்தது. இது அமெரிக்கா ஈரானுக்கு எதிரான ஒரு போரை செய்வதற்கான நகர்வாகவே தென்படுகிறது. அமெரிக்கா ஒரு போதும் தனித்து போரை செய்யாது என்பது பற்றி பலதடவை இப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு வலுவான ஆதாரம் அமெரிக்கா இரண்டாம் உலக யுத்தம் முதல் அணிசேர்ந்தே தாக்குதலை மேற்கொண்டு வந்தது. அது போருக்காக சோஸலிசத்துடனும் பாசிசத்துடனும் அணிசேரத் தயாரான நாடு. அதன் வழியே இன்றும் செயல்படுகிறது. அதனால் சவூதி இஸ்ரேல் போன்ற நாடுகளின் ஆதரவுடன் இணைந்து ஒரு தாக்குதலை செய்ய திட்டமிட்டு வருகின்றதைக் காணமுடிகிறது.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் விரைவில் இடம்பெற இருப்பதுடன் அதில் தற்போதைய அதிபர் ட்ரம்ப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அவர் தனது பிரச்சாரத்தை புளோரிடா மாகாணத்திலிருந்து ஆரம்பித்துள்ளார் அதனால் ஏற்படப் போகும் தேர்தல் பலமான போட்டியாக அமையும் என்ற நம்பிக்கை ஆரம்பமாகியுள்ளது. காரணம் ட்ரம்ப் பெருமளவுக்கு அமெரிக்க மக்களாலும் அதிகாரிகளாலும் ஏன் தனது குடியரசுக்கட்சியி-னராலேயே வெறுக்கப்படுகின்றார். அவரது வெள்ளை மாளிகையில் பணிபுரிபவர்கள் தொடர்ச்சியாக மூன்று மாதம் வேலை செய்வது அரிதாகவே உள்ளது என்பது அவர்களின் ராஜினாமா மூலம் தெரியவருகிறது. இது அவர் மீதான அதிருப்தியை காட்டும் சிறந்த விடயமாகும். அது மட்டுமன்றி ஒட்டு மொத்த ஐரோப்பியரும் வெறுக்கத்தக்கதாக ட்ரம்ப் செயல்படுவதாக அண்மைய லண்டன் பயணத்தின் போது தெரியவந்தது. இஸ்லாமியர்களையும் இஸ்லாமிய நாடுகளையும் எதிர்க்கும் ட்ரம்ப் அமெரிக்கர் மட்டுமே உலகத்தில் வாழும் மனிதர்கள் என்ற எண்ணத்துடன் செயல்படுகின்றார். இது அவரை உலகளாவிய ரீதியில் வெறுப்படையச் செய்துள்ளது. இதனால் அவரது ஆதரவை போர் மூலம் திரட்ட வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது. அவரது டுவிட்டர் பக்கம் அவ்வகை கோசத்துடனேயே காணப்படுகிறது.
அண்மையில் வேகமாக ஒரு போர்ப் பிரகடனத்தை செய்து பின்னர் வேகமாக விலக்கிக் கொண்ட ஜனாதிபதியாக விளங்கினார். இதனால் ஈரானுடனான போர் அவர் தூண்டுவதற்கும் அதில் கவனம் கொள்வதற்கும் அதிக வாய்ப்புள்ளது. இல்லாது விட்டாலும் ஈரானுடனான போர் அவரது ஆட்சியை சாத்தியப்படுத்துமாயின் அதில் ட்ரம்ப் அதிக கவனம் செலுத்துவார். அவர் உள்நாட்டில் அதிக மாற்றங்களை செய்துள்ளார் என்று கடும் போக்குவாதிகள் அதிகம் அவரை ஆதரிப்பதாக அமைந்துள்ளது.
அதனை ஒரு வாய்ப்பாகக் கொண்டு செயல்பட முனையும் ட்ரம்ப் நிச்சயமாக இஸ்லாமிய நாட்டின் மீது தாக்குதல் நிகழ்த்தினால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்ற நிலைப்பாடும் அமெரிக்காவி-ல் உண்டு. அதனால் ஆட்சியாளர்கள் அதற்கான வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளதாக தென்படுகிறது. ஏனைய காரணங்களைக் காட்டிலும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ஈரானுடனான போரை தூண்டும் பிரதான காரணியாக அமையவாய்ப்புள்ளது.
எனவே, ஈரான்- அமெரிக்க போர் படிப்படியாக வளர்ந்து வருகின்ற ஒரு விடயமாக அமைந்துள்ளது. 2020க்குள் ஒரு போரை மேற்காசியா மீண்டும் சந்திக்க முடியும் என்ற நிலையே அதிகம் வளர்ந்து வருகிறது. இது ஈரான் பக்கமுள்ள வாய்ப்புக்களை முற்றாக நிராகரித்து விடுவதாக அமையாது. காரணம் அத்தகைய போரை தடுக்கும் பலமும் ஈரானிடம் இல்லாமலில்லை. ஆனால் ஈரான் மீதான போருக்க முன்வைக்கப்படும் காரணம் தான் அமெரிக்காவுக்கு பலவீனமானதாக தெரிகிறது. சதாம் ஹுசைன் போன்று வாய்ப்புக்களை ஈரான் கொடுக்காத வரை ஈரானுக்கு பாதுகாப்பானதே. மேலும் ஈரான் அணுவாயுதத்தை வெளிப்படையாக உருவாக்கும் முயற்சியி-ல் ஈடுபடுமாயின் அதுவே ஈரானுக்கு ஆபத்தானதாக அமையும். ஆனால் ஈரானிடம் ஆணுவாயுதம் இல்லாத வரை அமெரிக்காவின் சீண்டல் தொடர்ந்த வண்ணமிருக்கும். அதற்காக அணுவாயுதத்தை தயாரிக்க முயலுமாயின் அது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே வாய்ப்பானதாக அமையும். அது ஈரானுக்கு அழிவான காலமாகவே முடிவடையும். அவ்வளவுக்கு பலவீனமானவர்கள் அல்ல ஈரானியர்கள். எனவே ஈரானின் ஆதரவுப் படையும் அதன் பிராந்திய சர்வதேச ஆதரவும் அதற்கு எப்போதும் பாதுகாப்பானது. குறிப்பாக சீனா ரஷ்யாவின் ஆதரவு ஈரானுக்கு இருக்கும் வரை ஈரான் பாதுகாப்புடனேயே பயணிக்கும்.
ஆனாலும் அமெரிக்காவுக்கு உலகப் பரப்பில் ஒரு போர் தேவையானதாக உள்ளது. அது உடனடியாக ஈரானாக அமையும் வாய்ப்பு அதிகமாகும். அதற்காக ஈரானை பலவீனமான தேசமாக கருதிவிட முடியாது.
கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்