ஈரானிய அணு உலை மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துமா? | தினகரன் வாரமஞ்சரி

ஈரானிய அணு உலை மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துமா?

ஈரான்- அமெரிக்க மோதல் போக்கு நீடிக்கின்றது. இது ஒரு போரை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. அமெரிக்காவுக்கு தற்போது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட போர் அவசியம் என்பதை கடந்த கட்டுரைகளில் குறிப்பிட்டிருதோம். அதனை செய்வதில் அமெரிக்கா எவ்வளவு கவனம் கொண்டிருக்கிறதோ, அந்தளவுக்கு ஈரானும் அதனை தவிர்க்க முயலுகின்றமையை அவதானிக்க முடிகிறது. இது ஒருவகை அரசியல் போராக மாறிவிட்டது என்பதே தற்போது தெரிகின்ற விடயமாகும். இராணுவப் போருக்கு முன்பான அரசியல் போர், தவிர்க்க முடியாதது தான், என்பது கடந்த கால அனுபவமாக அமைந்தது. ஆனால் இதுவோ சற்று மாறுபட்டு தந்திரோபாய நகர்வுகளாக அமைந்துள்ளது. அதிலும் ஈரான் தந்திரோபாயமாக செயல்படும் நிலையை திறந்துள்ளது. இக்கட்டுரையும் மட்டுப்படுத்தப்பட்ட போர் அமைவது போல் இரு நாடுகளதும் தந்திரோபாய நகர்வையும் புரிவதற்கான முயற்சியாக அமையவுள்ளது. 

அமெரிக்கா ஈரானுடன் மட்டுப்படுத்தப்பட்ட போரைச் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளமைக்கான காரணங்கள் சிலவற்றை பார்த்திருந்தோம். அத்தகைய போர் அணுவாயுதத்தை அழிப்பதாகவே அமையவுள்ளது. ஒரு பெரும் போரை செய்ய அமெரிக்கா தயாராக இருந்தாலும் உலகம் தயாராக இல்லை. அதனால் ஒரு பெரும் போரைத் தவிர்த்து விட்டு சிறிய போர்களை முதன்மைப்படுத்துவதும் சிறிய நாடுகளை அடிமைப்படுத்துவதும் வல்லரசுகளிடம் ஏற்பட்டுவரும் மாறுதலாகும். இதனை சரிவர கையாளத்திட்டமிட்டுள்ள அமெரிக்கா, ஈரானின் அணுஉலைகளை அழிப்பதன் மூலம் அதன் அணுவாயுத வல்லமையை மீண்டும் ஓர் அரைநூற்றாண்டு பின்தள்ள திட்டமிட்டுள்ளது. ஈரானின் அணுகுண்டினை இஸ்லாமிய அணுகுண்டு என்றே மேற்குலகம் அழைக்கின்றது. காரணம் பாகிஸ்தானை இந்தியா அப்படி கருதினாலும் மேற்கு அப்படி பாகிஸ்தானை உணரவில்லை. ஆனால்  1979 இல் நிகழ்த்திய இஸ்லாமியப் புரட்சியின் பின்பு அமெரிக்காவுக்கு மட்டுமல்ல மேற்குலகத்திற்கே ஈரான் ஆபத்தானதாக அமையும் என்பதில் தெளிவுடன் மேற்கு காணப்படுகியது. இஸ்லாமிய அடிப்படைவாதம் வளர்ந்ததுடன் அரபுலகத்தின் இருப்பினையும் மரபினையும் பாதுகாத்து வைத்திருப்பது ஈரான் மட்டும் என்றே மேற்குலகம் கருதுகிறது. ஈரானை நீண்ட காலமாக அமெரிக்கா துடைத்தழிக்க வாய்ப்புத் தேடுகிறது. ஆனால் எல்லாச் சந்தர்ப்பத்திலும் ஈரான் தப்பிக் கொள்கின்றது என்பதில் அமெரிக்காவுக்கு ஏமாற்றமாகவேயுள்ளது. இதனாலேயே ட்ரம்பின் ஈரான் தொடர்பான கொள்கையை வெற்றிகரமானதாக மாற்ற, அமெரிக்க நிர்வாகம் முனைகின்றது. அதற்கான ஏற்பாட்டினை செய்துள்ள அமெரிக்கா டியாகோகார்சியா தீவில் இரு இராட்சத விமானங்களை தயார் நிலையில் வைத்துள்ளது, ஈரானின் அணு உலைகளைத் தாக்கி அழிப்பதற்கு. 1980களில் ஈரான் எடுத்த ஒரு அணுவாயுத தயாரிப்புக்கான முயற்சியை இஸ்ரேல் அழித்தது போல் இன்னும் பலமடங்கு அழிவை ஏற்படுத்த அமெரிக்கா   திட்டமிட்டுள்ளது. அதற்காகவே ஈரானின் நடவடிக்கையை தூண்டிவிடும் பாணியில் எதிர்மறையான செயல்களில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. அதன் மூலம் ஈரானை தூண்டிவிட்டு அணுவாயுதத்தை தயார் செய்ய அனைத்து நடவடிக்கையையும் நிகழச்செய்வதுடன் அதன் முழுமையை சாத்தியப்படும் இறுதித் தறுவாயில் அதனை முற்றாக தகர்த்து அழிப்பதாகவே அமெரிக்க திட்டமிட்டுள்ளது. அதனால் தான் ட்ரம்ப் ஈரானை சீண்டுவது மட்டுமல்ல போருக்கு அழைப்பு விடுத்துவிட்டு தமது தந்திரோபாய நகர்வு எனக்கூறியமை அண்மையில் ஈரான் பாதுகாப்பாக இருக்குமாறு தெரிவித்தமை என்பன கவனிக்கத்தக்கதாகும். இவை அனைத்தும் வெறும் உரையாடல்கள் அல்ல இவை அனைத்தும் அரசியல் தந்திரத்தின் உச்சங்களாகும். இவற்றுக் கூடாக ஈரானுக்கும் உலகத்திற்கும் அதிகமான செய்திகளை ட்ரம்ப் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார். 

ஈரானைப் பொறுத்தவரை அணுவாயுதத்தை தயார் செய்யவும் வேண்டும் அதே நேரம்’ அமெரிக்காவிடமிருந்து தப்பிக்கொள்ளவும் வேண்டும் என்ற இரட்டை இலக்கை நோக்கி நகர்கிறது. இரண்டும் அணுவாயுத தயாரிப்பிலுள்ளது என்பது உலகம் அறிந்த செய்தியாகும். அணுவாயுதம் தயாரித்துவிட்டால்’ ஈரானிடம் அமெரிக்கா மோதலைத் தவிர்க்க முயலும் என்பது வடகொரியா தந்த பாடமாகும். அதனால் அணுவாயுதம் தயாரிப்பதில் குறியதாக உளளது ஈரான். ஆனால் அத்தகைய நடவடிக்கை ஈரானுக்கு இலாபகரமான விடயமாக அமைவதென்பது கடினமே. அதனை எப்போது எந்த சந்தர்ப்பத்தில் செய்ய வேண்டும் என்பது தான் முக்கியம். அதற்கான சந்தர்ப்பத்தை ஈரான் பயன்படுத்துவதைவிட அணுவாயுதத்தை எப்படியாவது தயாரிக்க வேண்டும் எனக்கருதுவது போல் ஈரான் செயல்பட முனைகிறது. காலக்ெகடுவை விமர்சித்த ஈரான் ஒவ்வொரு 60 நாட்களும் அணுவாயுத உடன்பாட்டிலிருந்து விலகுவதாக எச்சரிப்பதிலும் ஐரோப்பிய நாடுகள் மீது விமர்சனத்தை முன்வைப்பதிலும் கவனம் செலுத்துகிறது. ஆனால் ஈரானுக்கு வலுவான சக்தியே ஐரோப்பிய நாடுகள் என்பதை உணரவேண்டும். அமெரிக்க கூட்டாளிகளை வைத்துக் கொண்டே அமெரிக்காவை கையாள வேண்டும். அமெரிக்கா விரும்புவதனை செய்வதைவிட அமெரிக்காவிடம் ஈரான் எதிர்பாரப்பதை  ஐரோப்பிய நாடுகளை வைத்துக் கொண்டு செய்ய முனைய வேண்டும். அணுவாயுதத்தை தயாரிப்பதற்கான யூரேனியம் செறிவூட்டலை ஈரான் ஆரம்பித்து விட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. இதனை ஈரானிய ஜனாதிபதியே குறிப்பிடும் போது ஈரான் அணுவாயுத உடன்படிக்கையிலிருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளது. அதற்கு மாறாகவே ஈரான் ஜனாதிபதியின் வெளிப்பாடு அமைந்திருக்க வேண்டும். தொடர்ச்சியாக உடன்படிக்கையிலிருந்து வெளியேறுவதாகக் காட்டிக் கொள்வதை நிறுத்த வேண்டும். அதற்கு துணையாக ஐரோப்பிய நாடுகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நிறைவடையும் வரை அத்தகைய சூழலை ஈரான் கடைப்பிடிக்குமாயின் ஈரான் அணுவாயுதம் காப்பாற்றப்படுவதுடன் எதிர்கால ஈரானின் இருப்பும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும். இதற்கு  அண்மைய பதிவொன்றை குறிப்பிடுதல் பொருத்தமானதாக அமையும். ஒபாமா நிர்வாகத்தில் இருந்து இறங்குவதற்கும் ட்ரம்ப் பதவி ஏற்பதற்கும் இடைப்பட்ட  காலத்தில் ரஷ்ய ஜனாதிபதி புடின் சிரியாவின் துறைமுகமான ரோட்டஸ்யைக் கைப்பற்றியமை கவனிக்கத்தக்கது. அதுவே மேற்காசிய அரசியலை மாற்றம் செய்வதில் அதிக முக்கியத்துவம் பெற்றிருந்தது. அவ்வாறு ஈரான் நகருவதே பொருத்தமானது. 

தற்போது பிரெஞ்சு ஜனாதிபதியின் முயற்சியை ஈரான் வலுவாக பிடித்துக் கொள்வது அவசியமானது. ஐரோப்பிய நாடுகள் ஈரானுடன் கொண்டுள்ள உறவை முதன்மைப்படுத்தும் வகையில் ஈரானின் நடவடிக்கைகள் அமைவது அவசியமானது. அமெரிக்கா நிராகரித்த அணுவாயுத உடன்பாட்டினை, ஐரோப்பிய நாடுகளுடன் ஈரான் சீர்செய்து செயல்பட வேண்டும். அதனைப் போல் ஐரோப்பிய நாடுகளின் கப்பல்களை மிரட்டுவது போல் செயல்படுவதனை தவிர்த்துக் கொள்ளுதல் அவசியம். பிரித்தானியாவின் எண்ணெய்த் தாங்கிக் கப்பலான ஹெரிட்டேஜ் ஹர்மோஸ் வளைகுடாவுக்கு வருவதற்கு தயங்கி சவூதி அரோபியாவின் கடற்பகுதிக்குள் அடைபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ளளபின்னர் பிரித்தானியாவின் போர்க் கப்பலான ஹெச்எம்எஸ் மெண்டோஸின் உதவியுடன் ஹர்மோஸ் வளைகுடாவை கடக்க முயன்றபோது ஈரானின் மூன்று படகுகள் குறுக்கிட்டதாக பிரிட்டிஸ் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளளது.  ஏற்கனவே ஈரானிய எண்ணைக் கப்பலை வழிமறித்தமைக்கான பதில் நடவடிக்கை இது என்ற அச்சம் பிரிட்டனுக்கு இருந்தமை மறுக்க முடியாதாகும்.  

ஈரான் மற்றும் -அமெரிக்காவின் தற்போதைய போக்குகள் விரைவாக ஒரு போரை எட்டிவிடுமா என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது. அது அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியையும் சேர்த்து உருவாக்கும் வல்லமையை ஏற்படுத்தக்கூடியதாகும். கிழக்காசியாவில் கைகொடுத்துக் கொண்டு மேற்காசியாவில் போர் தொடுப்பதற்கான சூழலை நோக்கிய தந்திரத்தினை அமெரிக்கா நகர்த்துகிறது. இதன் விளைவுகள் மேற்காசியாவுக்குள் அமைவதுடன் அதிலும் ஈரானுடன் மட்டுப்படுத்தப்படுவதாக அமைக்க அமெரிக்கா விரும்புகிறது. ஈரானினது  நகர்வுகள் தற்போதைய சூழலில் தந்திரோபாயமாகக் காணப்பட்டாலும் அது இன்னும் அதிகரிக்கப்படுதல் அவசியமானது. அதனை நோக்கி ஐரோப்பிய நாடுகளையும் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளையும் ஈரான் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். சீனாவும் ரஷ்யாவும் ஈரானின் நட்பு சக்திகளாயினும் அடிப்படையில் அவை சர்வதேச சக்திகளாக அமைந்துள்ளன. அவற்றினுடனான உலக அரசியல் பலத்தை ஐரோப்பியக் கூட்டுக்களுடன் இணைத்தே ஈரான் பயன்படுத்தி வருகிறது. ஆனால் அதனையும் தாண்டி அவற்றின் அணுகுமுறையை தனித்துவமான நெருக்கத்திற்குள் கொண்டுவருவதனை அமெரிக்காவுக்கு தெரியப்படுத்தல் வேண்டும். 

எனவே, ஈரான் அமெரிக்க முரண்பாட்டின் போக்கு அதிக நெருக்கடியை எண்ணை அரசியலிலும் பொருளாதாரத்திலும் ஏற்படுத்தப் போகிறது.இலங்கை போன்ற பொருளாதார ரீதியில் பலவீனமான நாடுகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. குறிப்பாக எண்ணெய் வளத்தில் தங்கியுள்ள நாடுகள் அதிகமான அரசியல் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். பிரிட்டன்-, ஈரான் உரசல் படிப்படியாக மோதலை நோக்கி நகரும் காரணம் பிரிட்டன் ஈரானின் நடவடிக்கையை சர்வதேச சட்டத்திற்கு புறம்பானது என்றும் தாக்குதல் நோக்குடன் படகுகள் செயல்பட்டிருந்தால் தாம் தாக்க தயாராக இருந்ததாகவும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. ஏறக்குறைய 10 இலட்சம் பீப்பாய் எண்ணெய்யுடன் வருகை தந்த பிரிட்டனின் எண்ணெய்க் கப்பலை ஈரான் தாக்க முயன்றுள்ளதாகவும் அவ்வமைச்சு குற்றம் சாட்டியுள்ளது. இதனை முற்றாக மறுத்துள்ள ஈரான் அதன் நடவடிக்கையை தவறான உத்தியாக கருதுகிறது. எனவே, இவற்றைப் பார்க்கும் போது ஒரு போர் பற்றிய தீர்மானத்துடன் அமெரிக்கா மேற்கு நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துள்ளது போல் தெரிகிறது.  

கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்

Comments