![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/07/13/q1_0.jpg?itok=UW7xGIP8)
பறவைகள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம்பெயர்ந்து செல்கின்றன. ஐரோப்பாவில் வசந்த காலத்தில் இனப்பெருக்கம் செய்யும் சில பறவைகள் குளிர்காலத்தில் இனப்பெருக்கம் செய்யும் சில பறவைகள் குளிர்காலம் வருவதற்குள் வட ஆபிரிக்கப் பகுதிக்கு செல்கின்றன.
ஏனெனில் ஐரோப்பாவில் ஏற்படக்கூடிய கடும் பனி பறவைகளையும், அதன் இரையான பூச்சிகளையும் கொன்றுவிடும் தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே பெரும்பாலான பறவைகள் இடம்பெயர்ந்து செல்கின்றன. நீண்டதூரம் பறந்து செல்லும் இவை எப்படி தமது வழியை அறிகின்றன என்பது தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.
குறிப்பிட்ட காலத்தில் பிறந்த இடத்திலிருந்து பல ஆயிரம் கிலோ மீற்றர் தூரம் பறந்து சென்று பருவம் மாறியதும் திரும்பி வருகின்றன.
பகல் நேரம் அதிகமாகும்போது பறவைகளின் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதுவே இடம்பெயர்ந்து செல்லத் தூண்டுகிறது. பகல் நேரம் குறையத் தொடங்கியதும் திரும்பிச் செல்ல வேண்டும் என்ற உணர்வு தூண்டப்படுகிறது என்று கூறப்படுகிறது.
மூன்றரை கிராம் எடையுள்ள ஹம்மிங்பேர்ட் எங்கும் நிற்காமல் வட அமெரிக்காவிலிருந்து மெக்சிகோ வளைகுடா வழியாக தென் அமெரிக்காவுக்கு 800கி.மீ தூரம் பறந்து செல்கிறது. ஆர்க்டிக் டெர்ன் என்ற பறவைதான் அதிக தூரம் இடம்பெயர்ந்து செல்கிறது. வட துருவத்திலிருந்து தென் துருவத்துக்குப் போய் திரும்பவும் வருகிறது. இவற்றுக்கிடையிலான தூரம் 35ஆயிரம் கிலோ மீற்றராகும். கனடா, கிறீன்லாந்து, ஐஸ்லாந்திலிருந்து புறப்பட்டு ஐரோப்பா, ஆபிரிக்கா கடலோரமாக இவை செல்கின்றன. மிக வேகமாகவும் இவை பறக்கக்கூடியவை. ஒரு பறவையை அடையாளமிட்டு சோதனை செய்ததில் 1,76,000கி.மீ தூரத்தை 115நாட்களில் பறந்து கடந்திருப்பது தெரியவந்தது. அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு 160கி.மீ இது பறக்கிறது.
அவுஸ்திரேலியா அருகேயுள்ள தீவுகளில் வசிக்கும் சிறு பறவைகள் ஜப்பான், அலஸ்கா, கனடா ஆகிய இடங்களுக்கெல்லாம் 32ஆயிரம் கி.மீ பிரயாணம் செய்துவிட்டு நவம்பர் 20ஆம் திகதியளவில் திரும்புகின்றன. ஏப்ரல் மத்தியில் திரும்பக் கிளம்பிவிடும்.
என். மதிவதனி,
லுனுகலை.