தந்தையை அடுத்து மகனுடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | தினகரன் வாரமஞ்சரி

தந்தையை அடுத்து மகனுடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்

தென் இந்திய சினிமாவை பொறுத்தவரை கதாநாயகர்கள் தங்களுக்கு அடுத்த தலைமுறை கதாநாயகிகளுடனும் ஜோடி சேர்ந்து நடிப்பார்கள். ஆனால் கதாநாயகிகளோ சில வருடங்களில் ஓரம் கட்டப்பட்டுவிட்டு அந்த இடத்திற்கு வேறு இளம் நாயகிகள் கொண்டுவரப்படுவர்.  

தற்போது இந்த நிலை மாறிவருகிறது. நாயகிகளுக்கான சினிமா வாழ்க்கை என்பது அதிகரித்துள்ளது. முன்னணி கதாநாயகிகள் பலரும் பத்தாண்டுகளைக் கடந்து வெற்றிநடை போடுகின்றனர். திருமணத்துக்கு பின்னும் கதாநாயகியாக நடிக்கிறார்கள். இதில் கீர்த்தி சுரேஷ் இன்னும் வித்தியாசமானவர். அறிமுகமான சில ஆண்டுகளிலேயே முன்னணி நடிகர்கள் பலருடனும், சாவித்திரி கதாபாத்திரம் ஏற்றும் இந்தியத் திரையுலகில் பல மொழிகளிலும் நடித்து வருகிறார். 

கீர்த்தி மலையாளத்தில், மோகன்லால் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக தற்போது நடித்து வருகிறார். ‘மரக்கார் அராபிகளிண்டே சிம்ஹம்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தை பிரியதர்‌ஷன் இயக்கி வருகின்றார். மலையாளத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகின்ற வரலாற்று படம் இது. 

இந்தப் படத்தின் பணிகள் நடைபெற்றுவரும் போதே அவர் மோகன்லாலின் மகனான பிரனவ் மோகன்லாலுடனும் இணைந்து நடிக்கஉள்ளார். 2016-ம் ஆண்டு வெளியான ‘ஜேக்கப்பிண்டே சுவர்க்கராஜ்ஜியம்’ படத்தை நிவின்பாலியை கதாநாயகனாகக் கொண்டு இயக்கியவர் வினீத். இவர் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் பிரனவ், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்க உள்ளதாக செய்தி வருகிறது.     

Comments