![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/08/18/Capture.jpg?itok=YlXX0cRM)
ஜனநாயக நாடொ ன்று தனது ஜனநாயக பண்புகளை ஆரோக்கியமாக பேணி வருவதற்கு பலமான எதிர்க்கட்சி அவசியம் என்பது ஜனநாயகத்தில் பாலபாடம். மக்கள் அவ்வாறு எதிர்க்கட்சிக்கு பலம் சேர்க்காமல் பாராளுமன்றத்தில் பலவீனமான நிலையில் விட்டுவிடும் தருணங்களில் ஆளும் கட்சி ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் இறங்குவதற்கு வாய்ப்பாக அமைந்து விடுகிறது. இலங்கையில் நடைபெற்ற 1970ம் ஆண்டு தேர்தலில் வாக்காளர்கள் ஐ.தே.க.வை முற்றாக ஓரங்கட்டினார்கள். 1971 ஜே.வி.பி. ஆயுத கிளர்ச்சியின் போது ஸ்ரீமா அரசு கொடுமையான அடக்குமுறைகளின் மூலம் கிளர்ச்சியை ஒடுக்கியபோது அதற்கு எதிராகக் குரல் கொடுக்கக் கூடிய நிலையில் எதிர்க்கட்சி இருக்கவில்லை. தொழில் வாய்ப்பின்மை, பஞ்ச நிலை, பாராளுமன்றம் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது போன்ற அரசின் போக்குகளை ஐ.தே.க என்ற எதிர்க்கட்சி கைகட்டி பார்த்துக் கொண்டிருந்தது.
1977இல் என்ன நடந்தது தெரியுமா? ஜே.ஆர்.தலைமையிலான ஐ.தே.க.வுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கொடுத்த வாக்காளர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை தூக்கி எறிந்தார்கள். ஜே.ஆர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தனக்கு வேண்டிய மாதிரி ஒரு அரசியலமைப்பை வரைந்தார். சகல அதிகாரங்களையும் கொண்ட ஜனாதிபதியானார். வடக்கி கிழக்கு ஆயுத போராட்டத்தை ஜனநாயக வழியில் தீர்ப்பதில் அக்கறை கொள்ளாமல் கடின வழிமுறைகளைப் பயன்படுத்தியதால் ஆயுத கிளர்ச்சி படிப்படியாக வளர்ச்சி பெற்றதோடு 83 ஆடிக் கலவரத்தின் பின்னர் ஜே.வி.பியும் மற்றொரு ஆயுத போராட்டத்துக்கான ஏற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கியது. மக்கள் பலமான எதிர்க்கட்சியை பாராளுமன்றத்தில் ஏற்படுத்தியிருந்தால் அரசின் சில தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி இருக்கலாம்.
அசுர பலத்துடன் பதவிக்கு வந்த இந்திராகாந்தி தன்னைத் தடுக்க எந்த சக்தியாலும் முடியாது என்று கருதியதால் தான் இந்தியர்கள் முதல் தடவையாக அவசரகால சட்டத்தை ருசி பார்க்க நேர்ந்தது.
தற்போது பா.ஜ.க.வுக்கு இந்திய வாக்காளர்கள் அசுர பலத்தை பாராளுமன்றத்தில் வழங்கியிருக்கிறார்கள் எதிர்க்கட்சியான காங்கிரஸ் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது. அடுத்து வரவுள்ள டில்லி யூனியன் பிரதேசத்தையும் ஆம் ஆத்மியிடம் இருந்து பா.ஜ.க தட்டிப் பறித்து விடலாம். பாராளுமன்றத்தையும் பெரும்பாலான சட்ட சபைகளையும் தற்போது பா.ஜ.க. தன் வசம் வைத்துள்ளது. முழு இந்தியாவலும் பா.ஜ.க.வை இன்று எதிர்த்து நிற்கும் மாநிலங்களாக கேரளாவையும் தமிழகத்தையும் தான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது. எனவே இந்த இரு மாநிலங்களையும் தன்வசம் வீழ்த்துவதற்கு பா.ஜ.க. பல்வேறு வகையான தந்திரோபாயங்களை மேற்கொள்ளலாம். ஆனால் அதை வெகு நைச்சியமாக மேற்கொள்ளாமல் மிகவும் வெளிப்படையாகவும் நேரிடையாகவும் மேற்கொள்வதால், அந்த அவசர முகம் தமிழகத்தில் பல்லிளித்து விடுகிறது.
எனவே, 2021இல் அல்லது அதற்கு முன்பாக நடக்கக்கூடிய தமிழக சட்ட சபைத் தேர்தலில் அ.தி.மு.கவும் பா.ஜ.க.வும் இணைந்து போட்டியிடும் என்பது வெளிப்படையான உண்மை. இக் கூட்டணியோடு, புதிய கட்சியொன்றை ஆரம்பித்து அக்கட்சியை ரஜினி இணைததுக் கொள்வார் என்ற ஒரு அரசியல் அபிப்பிராயம் தமிழகத்தில் உள்ளது. இதற்கான வாய்ப்பு அதிகம். காஷ்மீர் விவகாரம் பற்றி கருத்துச் சொன்ன ரஜினி, ஜனநாயக நடைமுறைகளை ஒதுக்கியும் ஒடுக்கியும் வைத்துவிட்டு காஷ்மீர் மக்களின் சுதந்திரத்திலும் சிறப்பு உரிமைகளிலும் மோடி அரசு அதிரடியாகக் கை வைத்ததை பாராட்டியதோடு அதை ராஜதந்திரம் என்று வர்ணிக்கவும் செய்தார். காஷ்மீர் பயங்கரவாதத்தின் நுழைவாயில் போன்றிருப்பதாகவும் எனவே அதை ஒடுக்கும் வகையில் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளை அதாவது காஷ்மீர் அரசியல்வாதிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது சட்ட சபை கலைப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டமை இராஜதந்திரம் என்றும் ரஜினி குறிப்பிட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் அவர் ஒரு இந்துத்துவக்காரர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அவரது கொள்கைகள் அவரை பா.ஜ.கவைத் தவிர வேறு இடங்களுக்கு நிச்சயமாக அழைத்துச் செல்லாது. மோடி, அமித்ஷாவின் நட்பும், தேவைகளும் ரஜினிக்கு அவசியம். அவருக்கு இருக்கக் கூடிய கவலைகளை மோடியால் போக்கி வைக்க முடியும். அதனால்தான் ரஜினிகாந்த் அவ்விருவரையும், கிருஷ்ணன் அர்ஜுனன் என்று வர்ணித்தார். இதில் யார் அர்ஜூனன், யார் கண்ணன் என்பதை சொல்வதற்கில்லை என்று பாராட்டிய அவர் பின்னர், ஒருவர் ஆலோசனைகள் வழங்க இன்னொருவர் அதை நடைமுறைப்படுத்துவார் என்பதுதான் மகா பாரதத்தில் கண்ணன் அர்ஜூனன் பாத்திரங்களின் வேலை என விளக்கமும் சொன்னார்.
இது தொடர்பாக தன் கருத்தைச் சொன்ன விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன், மகாபாரதத்தில் வரும் கண்ணன் பாத்திரம் வஞ்சகமும், சூழ்ச்சியும், சதியும் நிறைந்தது என்றும் நயவஞ்சகத்தின்மூலம் பாண்டவர்களை கிருஷ்ணன் காப்பாற்றி இருப்பதாகவும் தெரிவித்திருப்பதோடு ஆர்.எஸ்.எஸ். சின் வஞ்சக இலக்குகளை அடைவதற்காக மோடியும் அமித்ஷாவும் திட்டங்களை நிறைவேற்றி வருவதாகக் குறிப்பிட்டிருப்பதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.
ரஜினி, ஆர்.எஸ்.எஸ்.சின் திட்டங்களை அறிவார். அதனால்தான் அடக்குமுறைகளை அவரால் ராஜதந்திரம் என்று கூற முடிகிறது. காஷ்மீர் மாநிலத்தை எடுத்துக் கொண்டால் அது மூன்று பிரிவுகளைக் கொண்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பிரதேசம் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்டது. லடாக்கில் புத்த மதத்தினரே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். ஜம்முவில் பெருமளவில் இந்துகள் வாழ்கின்றனர். 1947ம் ஆண்டு தான் ஆண்டு வந்த காஷ்மீர் சமஸ்தானத்தை இந்தியாவோடு ராஜா ஹரிசிஸ் இணைந்தபோது பாகிஸ்தானோடு இந்தியாவுக்கு பிணக்கு ஏற்பட்டது. அப்போது பாபா சாஹேப் டொக்டர் அம்பேத்கர் ஒரு யோசனையைச் சொன்னார். முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட காஷ்மீர் பிரதேச மக்கள்தான் எந்தநாட்டுடன் இணைய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். அனேகமாக அம் மக்கள் இந்தியாவைவிட இஸ்லாமிய பாகிஸ்தானையே விரும்புவார்கள்.
அப்பகுதியை அவர்கள் விரும்பினால் பாகிஸ்தானிடம் ஒப்படைத்துவிட்டு பௌத்தர்களும் இந்துக்களும் பெரும்பான்மையாகக் கொண்ட லடாக் மற்றும் ஜம்முவை இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளலாம். இது இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைத் தரும். இல்லையேல் இது இந்தியாவுக்குத் தீராத தலைவலியாகவே முடியும் என்று அம்பேத்கர் அப்போது கூறியிருந்தார். அது எவ்வளவு தூரம் உண்மை என்பதை எம்மால் இப்போது புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் ஆர். எஸ். எஸ்.சின் கொள்கை வகுப்பாளராக விளங்கிய கோல்வோக்கர் தனது இந்துத்துவ சித்தாந்தத்தில் இந்தியாவை இந்து பாரதமாகவே குறிப்பிட்டு அது இந்து சக்தியின் எழுச்சி நாடாகத் திகழவேண்டும் எனக் கனவு காண்கிறார். இதனால் இந்துக்களை மதம் மாற்றி தடம் புரளச் செய்தவர்கள் எனக் கிறிஸ்தவர்களையும் குறிப்பாக முஸ்லிம்களையும் அவர் கருதுகிறார். அவரது இறுதி இலக்கு இந்து ராஜ்டிரியம். அதாவது இந்து இந்தியா. அதற்கு இடையூறாக வந்ததே பாகிஸ்தான். இந்தியாவின் இரண்டு பகுதிகளை, மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் என இரண்டாக பிய்த்துக் கொண்டு போன ஜின்னாவை அவர் மன்னிக்கத் தயாரில்லை. அதற்கு ஆதரவாக நின்ற மகாத்மா காந்திஜியை ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தப்படி கோட்சே மற்றும் குழுவினர் மன்னிக்கத் தயாராக இல்லாததன் விளைவாகவே காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். ஆர்.எஸ்.எஸ். மத வழி தேசியத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு இயக்கம். பல நாடுகள் மொழி வழி தேசியத்தைக் கொண்டுள்ளன. இலங்கையில் ‘பௌத்த சிங்கள’ என்ற வார்த்தை அல்லது குறியீடு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பௌத்த தேசியவாதிகள் இருவழி தேசியத்தையும் இங்கே கொண்டிருக்கிறார்கள். இலங்கையின் வீரவிதான மற்றும் சிஹல உறுமய அமைப்பின் சித்தாந்தமும் கோல்வோக்கரை அடியொற்றியதுதான். இலங்கையில் பிற மதத்வர்களும் இனத்தவரும் வாழலாம். ஆனால், அவர்கள் சிங்கள பௌத்தத்தை அடிப்படையாகக் கொண்டவர்களாக அல்லது சிங்கள பௌத்தர்களுக்கு அடி பணிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது இவர்களின் சிந்தாந்தம்.
கோல் வோக்கரும் இதைத்தான் சொல்கிறார். இந்து ராஜ்யம் இழந்த பூமியையும் (பாகிஸ்தான்) கொண்டதாக அமைய வேண்டும். காஷ்மீர் மாநிலம் எக்காலத்திலும் இந்தியாவுடன் இணைந்தே இருக்க வேண்டும். இஸ்லாமியறை கோல்வோக்கர் பொறுத்தும் கொள்ளத்தயாரில்லை. இந்து இந்தியா, ஒரே சட்டம், அயோத்தியில் இராமர் கோவில், ஒரே மொழியாக சமஸ்கிருதம் - இதுவே ஆர்.எஸ்.எஸ். வழிவந்த பா.ஜ.க.வின் – மோடி அரசின் சூத்திரமாக உள்ளது. காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, பலவீனப்படுத்தப்பட்டு, சிறப்புரிமைகள் இரத்துச் செய்யப்பட்டதை மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு பெரும் பிரச்சினையாகத் தெரியாது. ஆர்.எஸ்.எஸ். சிந்தனை வழியாகப் பார்த்தால் தான் விபரீதம் புரியும்.
ரஜினி காந்த் இதெல்லாம் புரியாமல்தான் மோடி – அமித்ஷாவை கண்ணன் அர்ஜுனனுடன் ஒப்பிட்டு பேசியிருப்பார்?
இந்துத்துவத்தில் ஆழ்ந்த பற்று கொண்டவர் ரஜினி. அவருக்கு ஆர்.எஸ்.எஸ். தத்துவங்கள் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக சொல்வதற்கு முன்னர் இருந்தே மோடியின் அனுதாபியாகத்தான் இருந்தார். கட்சி ஆரம்பிப்பதாக பேச ஆரம்பித்த அவரது பேச்சும் போக்கும் பாஜகவை ஆதரிக்கும் விதத்திலேயே இருந்து வந்திருக்கிறது. காஷ்மீர் விவகாரம் புரியாமல் அவர் பேசி விட்டார் என்ற கருத்து சரியல்ல. அவர் தெரிந்து தெரிந்துதான் கண்ணன் (சிந்தனையாளன்) எடுத்துக் கொடுக்க அதை அர்ஜுனன் என்ற செயல்வீரன் (அமித்ஷா) நிறைவேற்றுகிறார் என்று வர்ணித்துள்ளார். ஊரடங்கு சட்டம் பிறப்பித்து, அரசியல் தலைவர்களை வீட்டுச் சிறையில் வைத்து (வெளியே இருக்க விட்டால் மோடியின் திட்டத்தை குழப்பியடித்து விடுவார்களாம்), தொலை தொடர்புகளை நிறுத்தி, சட்ட சபையைக் கலைத்து, சட்ட சபை ஒப்புதலுக்குப் பதிலாக கவர்னர் ஒப்புதலைப் பெற்று, இராணுவத்தை குவித்து, யுத்தகால நிலையை உருவாக்கிய பின்னர் புதுடில்லி பாராளுமன்றத்தில் ஒரே நாளில் மசோதாவை நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்ற மோடி தந்திரத்தைத் தான் ரஜினி ‘அதுதான் ராஜதந்திரம்’ எனப் புகழ்கிறார் என்றால் அது அவர் அறியாமல் வந்த வார்த்தைகள் அல்ல. எடப்பாடிபழனிச் சாமி எவ்வாறு மோடியின் பொக்கட்டில் இருக்கிறாரோ அவ்வாறே ரஜினியும் மோடியின் பொக்கட்டில்தான் வாசம் செய்கிறார் என்பது தற்போது ‘அப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதாக வெளிப்பட்டிருப்பதாகக் கொள்ளலாம்.
எனவே, ஒரே நாளில் முத்தலாக் சட்டத்தை ஜனாதிபதி ஒப்புதலுடன் நிறைவேற்றிக் காட்டியதைப் போலவே எழுபது ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு தயங்கிய ஒரு காரியத்தை மோடியவர்கள் ஒரே நாளில் அதிரடியாக சாதித்துக் காட்டியிருக்கிறார்.
இது எப்படி சாத்தியமானது என்றால், இந்திய வாக்காளர்கள், குறிப்பாக இந்தி பேசும் இந்து வாக்களார்கள் ஒட்டு மொத்தமாக அள்ளி வழங்கிய அபரிமிதமான லோக்சபா ஆசனங்களின் மூலம்தான்! இலங்கையில் சிங்கள வழிக் கல்வி பயிலும் பௌத்த மததத்தவர்கள் தனித் தீவாக வைக்கப்பட்டிருப்பதன் அரசியல் நோக்கம், மதத்தையும் இனத்தையும் முன்னிலைப்படுத்தி அரசியல் செய்யலாம் என்பதற்காகவே உள்ளது. வெற்றிகரமாக இந்த மத – இன அரசியல் இலங்கையில் ராஜ நடைபோட்டும் வருகிறது. எதிர்வரும் தேர்தல்களில் இந்த இன- மத அரசியல் ஒரு வெற்றிக்கான ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம். இக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி, ஜனநாயக அமைப்பில் எப்போதுமே எதிர்க்கட்சிக்கு அதற்கான இடம் வழங்கப்பட வேண்டும். அதீத ஆர்வத்தில் ஒரு கட்சிக்கு வாக்குகளை அள்ளி வழங்கினால் என்ன நடக்கும் என்பதை முதலில் பார்த்தோம். இப்போது பாஜகவுக்கும் இந்திய வாக்காளர்கள் அதி கூடிய ஆசனங்களை வழங்கி அதன் மூலம் மோடி அரசு எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற சூழலை உருவாக்கித் தந்திருக்கிறார்கள். இதற்கு, பாகிஸ்தான் பிரிவினை, இஸ்லாமிய வெறுப்பு, மொழி, மதப் பற்று ஊட்டி வளர்க்கப்பட்டமை என்பனவே பின்புலமாக இருந்திருக்கின்றன. இந்த வகையில் தமிழகம் பாராட்டப்பட வேண்டிய மாநிலம். அத்திவரதர் தரிசனத்துக்காக மில்லியன்களில் மக்கள் திரண்டாலும் இன்னும் இப் பூமி பெரியார் பூமியாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது. பா.ஜ.க., ரஜினி என்ற கூராயுதத்தை எதிர்காலத்தில் பெரியார் பூமியை சிதைக்க பா.ஜ.க பயன்படுத்தலாம். பொறுத்திருந்து பார்ப்போம்!
அருள் சத்தியநாதன்