கதவு தட்டப்படுகிறது. யா ரும் திறப்பதாக இல்லை. கதவை உடைத்து உள்ளே நுழைகிறார்கள் பொலிசார். குறுக்கே வரும் எதிர்ப்புகளை சமாளித்து மேல் மாடிக்கு சென்று அந்த அறையில் படுத்திருந்தவரைப் பிடித்து பலவந்தமாக வெளியே இழுக்கிறார்கள். சாரமும் ஷர்ட்டுமாக படுத்துக் கிடந்தவர் குய்யோ முறையோ எனக் கூப்பாடு போட்டு என்னைக் கொல்றாங்க! எனச் சத்தம் போடுகிறார். குண்டு கட்டாகத் தூக்கி வாகனத்தில் ஏற்றி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். படுக்கையில் இருந்தவரை கைது செய்து இழுத்துச் சென்றார்கள் என்றதும் உங்களுக்கு நினைவுக்கு வந்திருக்கும் யாரைக் குறிப்பிடுகிறோம் என்று! தன்னைச் சிறையில் தள்ளி அழகு பார்த்தவரை தனக்கு வாய்ப்பு வந்தபோது அதிரடியாக வீடுபுகுந்து இழுத்து வந்து நார்நாராக்கி வஞ்சம் தீர்த்துக் கொண்டார் ஜெயலலிதா. ஆனால் கருணாநிதி மீது எந்த வழக்கும் இல்லை.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 2ஜி வழக்கு பிரமாதமாக பேசப்பட்டது. தொலைதொடர்பு அமைச்சராக இருந்த தி.மு.க அமைச்சர் அ.ராசா 2ஜி கற்றைகளை ஏலம் விட்டதில் ஊழல் இடம்பெற்றதால் அரசுக்கு சேர வேண்டிய ஒன்றரை லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது என்பது ராசாமீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. ஜெயலலிதா இவ் விவகாரத்தை தன் அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டார். முழு இந்தியாவுமே இந்தியா கண்ட மிகப்பெரிய ஊழல் மோசடியாக இதைப் பார்த்தது. இது பற்றி பேசாத ஊடகங்களே கிடையாது. காங்கிரஸ் நாடு தழுவிய வீழ்ச்சிக்கும் அடுத்து வந்த சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா வெற்றிவாகை சூடவும் இவ் வழக்கு காரணமாக அமைந்தது. காங்கிரஸ்கட்சியின் பங்காளிக் கட்சியாக தி.முக.விளங்கிய போதிலும் அ.ராசாவும், கனிமொழியும் திஹார் ஜெயிலுக்குள் தள்ளப்பட, அவர்களைப் பார்ப்பதற்காக தன் சக்கர நாட்காலியில் அமர்ந்து திஹாருக்கு சென்றார் முதல்வர் கருணாநிதி! இறுதியாக காட்சிகள் மாறின. வழக்கு முடிவுக்கு வந்தது. அனைவருமே விடுதலை செய்யப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஷைனி, நான் இறுதிவரை நம்பத்தகுந்த ஆதாரங்களை சி.பி.ஐ. தாக்கல் செய்யும் என எதிர்பார்த்திருந்தேன். வழக்கை முன்னெடுத்துச் செல்வதற்கான எந்த ஆதாரமும் முன்வைக்கப்படாததால் வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். பூதாகரமாகக் கிளப்பி கட்டமைக்கப்பட்ட ஒரு விஷயம் இறுதியில் நீர்க்குமிழியானது. ஆனால் ராசாவோ அல்லது கனிமொழியோ, காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போதே அந்த ஆட்சிக்கு களங்கம் விளைவிக்கும் ஒரு பொய் வழக்கை சோடித்து அதை பூதாகரமாக்கிய அந்த நபர் அல்லது சக்தி யார்? என்பதை வெளியே சொல்லவே இல்லை.
வழக்கில் விடுதலையாகிய ராசா, பின்னர் இவ் வழக்கு தொடர்பாக ஒரு புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். அதைப் படித்துப்பார்த்த அன்றை பிரதமர் மன்மோகன் சிங், அ.ராசாவை அழைத்து மன்னிப்பு கோரினார். இலங்கையில் திருடர்களைப் பிடிக்க வந்த அரசாங்கமும் இறுதிவரை திருடர்களைப் பிடித்து சிறையில் தள்ளத் தவறியிருப்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.
உயர் மட்டங்களில் ஊழல் மோசடிகள் பெரிய அளவில் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவற்றைக் கையும் மெய்யுமாகப் பிடித்து, நிருபித்து தண்டனை வழங்குவது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. உயர்மட்டங்களில் ஊழல்களில் ஈடுபடுபவர்கள் நெளிவு சுழிவு தெரிந்தவர்கள் என்பதால் மிக நைச்சியமாக மோசடிகளில் ஈடுபடுகிறார்கள். அவற்றை சட்ட ரீதியாக நிரூபிப்பது கடினம். இலங்கையிலும் சிலரை நாம் பக்கா மோசடிக்காரர்களாக அறிவோம். ஆனால் எந்த ஆதாரமும் கிடையாது! ஜெயலலிதா சொத்து சேர்த்த வழக்கில் மாட்டி சிறை சென்றதற்கான பெரிய காரணம், அக் காலப்பகுதியில் அவர் ஒரு ரூபாவை மட்டுமே சம்பளமாக வாங்கி வந்ததுதான்!
ஒருவர் ஐந்து வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தால் அவர் ஐந்தாவது வருடத்தில் கோடீஸ்வரராகி விடுவதைப் பார்க்கிறோம். அரசியலும் மதமும் எப்படி இணை பிரியாததோ அப்படியே அரசியலும் ஊழலுலம் இணை பிரியாதாவையே! மன்னர் காலத்தில் இருந்தே இதுதான் கதை! அரசியலில் ஈடுபடவும் பதவிகளில் ஏறி அமர்வதற்கும் பணக்காரர்களும் கிரிமினல்களும் பகீரதப் பிரயத்தனங்களில் ஈடுபடுவதற்கும் ஒரே காரணம், ஊழல் மோசடிகள் மூலம் பலபல கோடிகளைத் திரட்டலாம் என்பதும் சட்டம் அவர்கள் வசப்படுவதும்தான் என்பதை நாம் புரிந்து கொண்டால் நடப்பு அரசியலை பட்டவர்த்தனமாக ஒருவரால் அறிந்து கொள்ளக்கூடும்.
தற்போது இந்தியாவில் பேசப்படும் விஷயமாக மாறி இருக்கிறது. சிதம்பரம் கைதான விவகாரம். 2ஜி வழக்கைப் போலவே இந்த விவகாரமும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. ப. சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்த காலத்தில் அவரது அதிகாரங்களைப் பயன்படுத்தி அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் தவறான வழியில் சொத்து சேர்த்தார் என்பதும் கறுப்புப் பணம் வெள்ளையாக்கப்பட்டது என்பதும் அதற்கு சிதம்பரம் உடந்தையாக இருந்தார் என்பதுமே இந்த வழக்கின் சாராம்சம். அவர் பங்குதாரராக விளங்கும் ஐ.என்.எக்ஸ். நிறுவனம் தன் முதலீட்டை அதிகரித்துக் கொள்வதற்காக 4.62கோடி ரூபாவை வெளிநாட்டு முதலீடாகப் பெறுவதற்கான அனுமதியை மத்திய அமைச்சிடம் கோருகிறது. அதற்கான அனுமதியும் வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கு 305கோடி ரூபா முதலீடாகக் கிடைக்கிறது. இவ்வளவு பெரிய தொகை ஏன் வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுகிறது. கடன் அல்லது முதலீடு என்ற பெயரில் இவ்வாறு உள்ளே வரும் பணம் யாருக்கு அப்பணம்போய்ச் சேர்கிறதோ அவரே அந்தப் பணத்தின் உண்மையான உரிமையாளர் என்பது புலனாய்வாளர்கள் கண்டு பிடித்திருக்கும் உண்மை. ஒருவரால் மோசடியாக சேர்க்கப்பட்டு வெளிநாட்டில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப்பணமே அவர் வசிக்கும் நாட்டினுள் கடனாகவோ, முதலீடாகவோ அல்லது வெகுமதியாகவோ வந்து சேர்கிறது. ஜெயலலிதாவின் ஊழல் வழக்குகளில் ஒன்றில் இப்படித்தான் ஒருகோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பணம் லண்டனில் இருந்து தன்னை அடையாளம் காட்ட விரும்பாத ஒரு ‘விசிறி’ ஜெயலலிதாவுக்கு பரிசாக அளித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கலைஞர் டி.வி. வழக்கிலும், 2ஜி விவகாரத்தில் ஈட்டப்பட்ட ‘இலாப’த்தின் ஒரு பகுதி கலைஞர் டி.விக்கு கடன் வடிவில் வந்தது என்ற வழக்கிலேயே கனிமொழி குற்றஞ்சாட்டப்பட்டு சிறை செல்ல நேர்ந்தது.
கார்த்திக் சிதம்பரம் விவகாரத்திலும் மொரிஷியஸ் நாட்டில் உள்ள மூன்று நிறுவனங்களில் இருந்து பெருந்தொகை பணம் இந்தியாவுக்குள் கொண்டுவரப்பட்டு வெள்ளையாக்கப்பட்டது என்றும் அவற்றில் ஒரு நிறுவனம் கார்த்திக் சிதம்பரத்தினுடையது என்றும் சி.பி.ஐ கூறுகிறது. இவ் விவகாரத்தில் கார்த்திக் சிதம்பரம் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார். அவரது 54கோடி ரூபா சொத்து முடக்கப்பட்டது. பிணைப் பணமாக அவர் செலுத்திய 10கோடி ரூபாவும் மீளளிக்கப்படவில்லை. இவ்விவகாரத்தில் கூட்டுப் பங்காளியாக விளங்கிய இந்திராணி முகாஜி அப்ரூவராக மாறியதையடுத்தே சி.பி.ஐ.யின் பார்வை ப.சிதம்பரத்தின் பக்கமாகத் திரும்பி இருக்கிறது.
ப. சிதம்பரம் ஒரு அறிவாளி. இந்தியாவின் முன்னணி சட்ட வல்லுநர்களில் ஒருவர். பொருளாதார நிபுணர். பக்கா காங்கிரஸ்காரர், ஆங்கிலப் புலமை கொண்ட அவர் அதற்கு சமமான தமிழ் அறிவும் பெற்றவர். காரைக்குடியைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வர்களான நாட்டுக் கோட்டை செட்டியார், பரம்பரையைச் சேர்ந்தவர். அழகப்ப செட்டியார், அண்ணாமலை செட்டியார், பழனியப்ப செட்டியார் எனப் பெரும் கோடீஸ்வர வர்த்தகர்களும் சமூக சேவைகளில் பரந்த மட்டத்தில் ஈடுபட்டவர்களுமான குடும்பம் ப. சிதம்பரத்தின் குடும்பம். ரவி தமிழ்வணன், கண்ணதாசன், குமுதம் சஞ்சிகை நிறுவனரான எஸ்.ஏ. அண்ணாமலை ஆகியோரும் நாட்டுக்கோட்டை செட்டியார் வம்சத்தவர்கள் தான்.
தமிழக அரசியல் வட்டாரத்தில் ப.சிதம்பரத்துக்கு ஒரு கௌரவம் உண்டு அகில இந்திய அளவில் மதிக்கப்படும் சிதம்பரம், டில்லி அரசியலில் மிக முக்கியமான புள்ளி. கடந்த ஐந்தாண்டு கால மோடி அரசின் தோல்விகளை மிக எளிமையாக எடுத்துச் சொன்ன அவரே, மோடியின்பண மதிப்பிழக்க நடவடிக்கை ஏன், எப்படி படுதோல்வியை சந்தித்தது என்பதோடு அது ஏற்படுத்திய பொருளாதார சிக்கல்களையும் அக்குவேறு ஆணிவேறாக எடுத்துக் காட்டிய பின்னரேயே ஏனைய பொருளாதார நிபுணர்களும் இறுதியில் மத்திய ரிசர்வ் வங்கியும் அதை ஒப்புக் கொண்டனர்.
நான்கு டிரிலியன் பொருளாதார இலக்கு பற்றி பிரதமர் மோடி பேசி வருகிறார். ஆனால் நிதர்சனத்தில் இந்தியா கடுமையான பொருளாதார பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்தியாவின் மோட்டார் வாகன உற்பத்தித்துறை கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. வாகன ஏற்றுமதி சந்தை வீழ்ச்சி கண்டிருக்கிறது என்றால் உள்நாட்டிலும் வாகன விற்பனை படுத்துவிட்டது. இதனால் லட்சக்கணக்கானோர் வேலை இழந்திருக்கிறார்கள். கடந்த வாரம், இந்தியாவின் மிகப் பெரிய பிஸ்கட் கம்பனியான பார்லே, ஒரு லட்சம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளது. தமது பிஸ்கட் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக அதன் தலைவரே ஒப்புக் கொண்டிருக்கிறார். இப்படி, வர்த்தகத்துறை, இரும்பு உற்பத்தித்துறை, சேவைத் துறை எனப் பல துறைகளும் நசிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பொருளாதார நசிவு இன்று இந்தியாவெங்கும் பேசப்படும் முக்கிய பொருளாகியிருக்கிறது.
ப. சிதம்பரத்தைக் கைது செய்வதற்கான முயற்சிகள் கடந்த ஏழு மாதங்களாக நிகழ்ந்து வந்தாலும் அவருக்குத் தொடர்ந்து முன்ஜாமின் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த வாரம் அவரது முன்ஜாமினை நீட்டிக்கும் மனுவை பரிசீலித்த நீதிபதி அதை நிராகரித்ததும்தான் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு டில்லியை தொற்றிக் கொண்டது. இதை மறுபரிசீலனை செய்யும் படி ஒரு மனுவை சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய, வெள்ளிக்கிழமையே அது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றம் கூறி விட்டது.
எனவே தீர்ப்பு வெளியான 20ம் திகதி மாலை ப. சிதம்பரத்தை பற்றி எந்தத் தகவலும் இல்லை என்பதால் அவரை ஊடகங்கள் தேடத் தொடங்கின. 21ம் திகதியும் அவர் தென்படாமல்போகவே ஊகங்கள் கொடி கட்டத் தொடங்கின. சி.பி.ஐ உடனடியாக அவரை தேடப்படும் நபராகக் கருதி ‘லுக் அவுட்’ நோட்டிஸ் பிறப்பித்தது. இரண்டு மணித்தியாலத்தில் அவர் சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என அவர் வீட்டு வாசல் கதவில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
22ம் திகதி இரவு டில்லி காங்கிரஸ் அலுவலக மண்டபத்தில் காணாமல் போன ப. சிதம்பரம் தோன்றினார். ஒரு அறிக்கையை ஊடகங்களுக்கு விடுத்தார். என் வாழ்க்கை மற்றும் சுதந்திரம் என்ற இரண்டில் எதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு நிலை வந்தால் நான் சுதந்திரத்தையே எடுத்துக் கொள்வேன் என்று தன் பேச்சை ஆரம்பித்தார் சிதம்பரம். மேல் நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முன் ஜாமின் மனுவில் தவறுகள் இருந்ததாலேயே அது நிராகரிக்கப்படுவதாக நீதியரசர் கூறியிருந்ததால் புதிய மனுவைத் தயாரிக்க வேண்டியிருந்தாகவும் தானும் புகழ்பெற்ற சட்டத்தரணிகளான கபில் சிபல், யாசிம் மாலிக் ஆகியோருடன் அமர்ந்து இரவிரவாக அவ் வேலையில் ஈடுபட்டிருந்ததாகவும் அதை முடித்து விட்டு தற்போது வந்திருப்பதாகவும் கூறிய அவர் விசாரணையாளர்கள் அழைத்தபோதெல்லாம் தான் சென்றிருப்பதாகவும், ஓடி ஒளிய வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார். தன் மீது அல்லது தன் மகன் மீது இதுவரை சார்ஜ் ஷீட் அல்லது தகவல் அறிக்கை போடப்படவில்லை என்றும் தன் மகன் பிணையில் வெளி வந்து ஒரு வருடமாகியும் அவர் மீதும் முதல் தகவல் அறிக்கை கூட போடப்படவில்லை என்றும் கூறிவிட்டு தன் வீட்டுக்குச் சென்றார்.
அங்கு விரைந்த சி.பி.ஐ. அதிகாரிகள் சுவரேறிக் குதித்து அவரைக் கைது செய்து அழைத்துச் சென்று கடந்த வியாழன் சி.பி.ஐ நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள்.
ப. சிதம்பரத்தை ஒரு வழியாக சிக்க வைத்தாயிற்று. பெரும் ஊழல் மோடிக்காரர் என்ற பெயரை அகில இந்திய அளவில் ஏற்படுத்தியாயிற்று. இவ் வழக்கை சில வருடங்களுக்கு இழுத்துச் சென்று அவர் அழைக்கழிக்கப்படுவதை வேடிக்கை பார்த்து மோடி மற்றும் அமித்ஷா குரூர திருப்தி அடையலாம். ஆனால் இதுவரை முதல் தகவல் அறிக்கையே தாக்கல் செய்யப்படாத ஒரு வழக்கை நீதிமன்றத்தில் தகுந்த ஆதாரங்களுடன் தாக்கல் செய்து தந்தையையும் மகனையும் தண்டனை வாங்கிக் கொடுத்து சிறையில் அடைப்பார்களா? என்பது பெரிய ஒரு கேள்விதான். ஏனெனில் சமீப காலத்தில் மாட்டுத் தீவன வழக்கில் லாலுபிரசாத் யாதவ்வும், சொத்து சேகரிப்பு வழக்கில் ஜெயலலிதாவும்தான் குற்றவாளியாகத் தண்டிக்கப்பட்ட இரு புகழ் பெற்ற அரசியல்வாதிகள். ஏனைய பிரபல அரசியல்வாதிகள் எவருமே ஊழல் விவகாரத்தில் சிக்கி சிறை சென்றதில்லை. உதாரணம் 2ஜி வழக்கு. அனேகமாக ப. சிதம்பரத்தின் மீதான இந்த வழக்கும் இறுதியில் புஸ்வாணமாகிப் போகும் சாத்தியமே அதிகம்.
சிதம்பரத்தை ஒரு குற்றவாளியைப் போல வலை வீசி சி.பி.ஐ தேடியமைக்கான காரணம் உள்துறை அமைச்சரான அமித்ஷாவே என்றும் இது ஒரு பழிதீர்க்கும் படலமே தவிர வேறில்லை என்றும் சொல்கிறது காங்கிரஸ்.
ஏனெனில் 2011ம் ஆண்டு ப. சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த போது ஜுலை 25ம் திகதி அமித்ஷா கைது செய்யப்பட்டார். குஜராத்தில் சோராபுதீன்ஷேக் என்பவரை போலி என்கவுண்டரில் கொன்றதாக ஒரு சம்பவத்துடன் அமிஷா சம்பந்தப்பட்டிருப்பதாக கருதப்பட்டே அவர் கைதானார். குஜராத் மேல் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியது. எனினும் குஜராத்தில் வசிக்க தடை விதிக்கப்பட்டதால் இரண்டாண்டுகள் அவர் டில்லியில் வாழ வேண்டியதாயிற்று. 2012ம் வருடமே அவர் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் குஜராத் திரும்பினார். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் தனக்கு எதிராக போடப்பட்ட வழக்கின் பின்னணியில் ப. சிதம்பரம் இருந்தார் என்ற ஆத்திரம் காரணமாகவே தற்போது சி.பி.ஐ மற்றும் அமலாக்கல் துறைகளை உள்ளடக்கிய உள்துறை அமைச்சு தனக்குக் கீழ் வந்ததும் சிதம்பரத்தை பழிவாங்கும் வகையில் ஐ.என்.எக்ஸ். மீடியா விவகாரத்தை அமித்ஷா கையில் எடுத்திருக்கிறார் என்பது பொதுவான அரசியல் ‘டக் டிக்டுக்’ கணக்காக இருக்கிறது.
ஏற்கனவே தேர்தல் தோல்வி, சொந்தத் தொகுதியிலேயே ராகுல் காந்தி தோல்வி, ராகுலின் ராஜிநாமாவையடுத்து தலைவர் ஒருவரைத் தேடிக்கொள்ள முடியாமல் சுகவீனமுற்றிருக்கும் சோனியாவே அப்பதவியை தற்காலிக அடிப்படையில் ஏற்றிருக்கும் சூழல் என பின்னடைவுகளை சந்தித்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய தலைவர் மீது தற்போது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கிரிமினல் ஒருவரைத் தேடுவது போலத் தேடி இன்று காவலில் வைக்கப்பட்டுள்ளார். இது காங்கிரசுக்கு மற்றொரு சம்மட்டி அடியாக அமைந்துள்ளது.
அதே சமயம், தனது பொருளாதார நிர்வாகம் எதிர்பார்த்த பலன்களைக் கொடுக்காமல் சரிவை சந்தித்து வருவதும், நிறுவன அடைப்பு, வேலை இழப்பு என்பனவற்றில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்பவே முத்தலாக் சட்டம், காஷ்மீர் மாநிலம் மீதான நடவடிக்கைகள் என்பனவற்றை அதிரடியாக பா.ஜ.க. அரசு மேற்கொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளினால் முன்வைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்திலேயே தற்போது காங்கிரசின் மூத்த தலைவர் ஒருவரின் மீது பா.ஜ.க.கை வைத்திருக்கிறது.
பிளேட்டோ, அரசர்கள் ஞானிகளாக இருக்க வேண்டுமென்றார். ஞானிகளால் அரசாள முடியாது என்பது நடைமுறை உண்மை. அரசியல் தலைவர்கள் ஞானிகளாக இருக்க வேண்டாம். பழி தீர்க்கும், வஞ்சம் தீர்க்கும் மனோபாவத்தில் இருந்தாவது, தம்மை பக்திமான்களாகக் காட்டிக் கொள்ளும் இவர்கள், முதல் காரியமாக விடுபட வேண்டியது அவசியம். தலைவர்களும் தொண்டர் மனப்பான்மையுடன் வெட்டு, பழி என்று இருந்தால் எப்படி? இத்தனைக்கும் இந்திய அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாக ஒரு மகாத்மா காந்தி இருக்கிறாரே!.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு
2017, மே 17: ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக 305கோடி நிதி பெற்றதாக கார்த்தி சிதம்பரம், அவரின் தந்தை ப. சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.
ஜுனை 16 : கார்த்திக் சிதம்பரம் உட்பட 4பேருக்கு எதிராக வழங்கப்பட்டு இருந்த லுக் அவுட் நோட்டீசை சென்னை மேல் நீதிமன்றம் நிறுத்திவைத்தது.
ஆகஸ்ட் 14: லுக் அவுட் நோட்டீஸ் தொடர்பாக சென்னை மேல் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது.
நவம்பர் 20: தனது மகளுடன் கார்த்தி சிதம்பரம் இங்கிலாந்து செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
2018, பெப்பரவரி 16: கார்த்தி சிதம்பரத்தின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சொத்துகளை பராமரித்து வந்த அவரின் கணக்காய்வாளர் பாஸ்கர ராமன் கைது.
பெப்ரவரி 28 : வெளிநாடு செல்ல முயன்ற கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ சென்னை விமான நிலையத்தில் கைது செய்து, டெல்லிக்கு அழைத்து சென்றது.
மார்ச் 23: 23நாட்கள் சிறைவாசத்துக்கு பின்னர் கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்தது.
ஜூலை 25: ப. சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி மேல் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
அக்டோபர் 11: இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் தொடர்புடைய கார்த்தி சிதம்பரத்தின் 54கோடி சொத்துகளை அமுலாக்க பிரிவு முடக்கியது.
2019, பெப்ரவரி 22: ப. சிதம்பரத்தின் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற்றது. சி.பி.ஐ.
மே 29: கார்த்தி சிதம்பரம் செலுத்திய 10கோடியை திருப்பி தரக்கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
ஜூலை 11: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முக்கிய நபரான இந்திராணி முகர்ஜி நீதிபதியிடம் அப்ரூபவராக மாற ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
ஆக 20: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நன்றி: தினத்தந்தி
அருள் சத்தியநாதன்