உலகளாவிய ரீதியில் சவூதி அரேபியா மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடாக விளங்குகிறது. ஒரு நாளுக்கு ஏழு மில்லியனுக்கு மேற்பட்ட பரல்களை ஏற்றுமதி செய்கிறது. அதிலும் மேற்கு நாடுகளுக்கு அதிக ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் சவூதியே முதன்மை பெறுகிற நாடாகும். இத்தகைய வளத்தைக் கொண்டே உலகத்தில் அதிக முக்கியத்துவம் பெறும் நாடாக சவூதி மாறிவருகிறது. அத்துடன் அமெரிக்காவுடன் பல தசாப்தங்களாக நெருக்கமான உறவுள்ள நாடாகவும் காணப்படுகிறது. இத்தகைய வலிமையுமைய நாட்டின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றனர். முடிந்த வாரத்தில் சவூதியின் எண்ணெய் வளத்தை இலக்கு வைத்து நிகழ்த்திய தாக்குதலில் பாரிய இழப்பினை சவூதி சந்தித்துள்ளது. இத்தாக்குதலுக்கான பின்னணி மற்றும் இத்தாக்குதலினால் சர்வதேச அரசியலில் பெறும் முக்கியத்துவமே இக்கட்டுரை நோக்கமாகும்.
சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்திலிருந்து 330கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள அரம்கோ நிறுவனத்தின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் அதனை அண்டியுள்ள குராய்ஸ் எண்ணெய் வயல்களும் காணப்படுகின்றன. இவற்றின் மீது, ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இவர்கள் ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனில் இயங்கிவரும் கிளர்ச்சியாளர்கள். இத்தாக்குதலுக்கு ஏறக்குறைய 10ஆளில்லா சிறிய விமானங்களை பயன்படுத்தியதாக தெரியவருகிறது. இதனால் சுத்திகரிப்பு ஆலையும், எண்ணெய் வயல்களும் தீப்பிடித்து எரிந்துள்ளன. ஆனாலும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது என சவூதி அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆனால் அங்கு ஏற்பட்ட புகை மண்டலம் பல கிலோ மீற்றர் தூரத்திற்கு பரவியதாகவும் ஏறக்குறைய ஐந்து மில்லியன் பரல் எண்ணெய் எரிந்து விட்டதாகவும் உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகின் மிகப் பெரிய கச்சாஎண்ணெய் பதப்படுத்தும் நிலையமாகும் இந்நிலையத்தில் சவூதி அரேபியாவின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் மூன்றில் இரண்டு பங்கு சுத்திகரிக்கப்படுகின்றது. இதில் கந்தகம் மற்றும் மணல் போன்றவற்றை நீக்கம் செய்கிறது. இது சவூதி அரேபியாவின் எண்ணெய் உட்கட்டமைப்பின் இதயம் என பாரிஸை தளமாகக் கொண்ட எரிசக்தி ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர் ஹோமாயூன் ஃபல்கூஹி கூறுகின்றார். எரியுண்ட அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலேயே தான் உலகின் பயன்பாட்டுக்கு தேவையான ஏழு சதவீத பெற்றோலிய எண்ணெய் உற்பத்தியைச் சுத்திகரிக்கும் வசதி உள்ளதாகவும் குராய்ஸ் எண்ணெய் வயலில் தான் உலக அளவில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயில் ஒரு சதவீதம் கிடைப்பதாகவும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
இத்தாக்குதலினால் ஏற்பட்டுள்ள பாதிப்பானது உலகளாவிய பொருளாதாரத்தை பாதிக்கும் என கருத்தியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமன்றி மேற்காசிய எண்ணெய் வளம் தொடர்பில் உலகத்திடம் அதிர்ச்சியும் நெருக்கடியும் ஏற்படும் என அத்தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. எரியுண்ட ஆலையில் மட்டும் ஒவ்வொரு நாளும் எழுபது லட்சம் பரல்கள் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலுக்கு பின்னர் அரம்கோ எண்ணெய் நிறுவனத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்திகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சவூதி தனது எண்ணெய் உற்பத்தியை 50சதவீதமாக குறைத்திருப்பதாக அறிவித்தது. இதனால் தினமும் 5.7மில்லியனுக்கு குறையாத பரல் கச்சா எண்ணெய் தயாரிப்பு பாதிக்கப்படும் என சவூதி அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் எரிசக்தி துறை அமைச்சின் பேச்சாளர் அப்துல் அஜிஸ்பின் சல்மான் கூறியதாவது,
ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் மேற்கொண்ட அப்காய்க் குரெய்ஸ் ஆகிய எண்ணெய் ஆலைகளில் கச்சா எண்ணெய் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது சவூதி அரேபியா. இத் தாக்குதல் சவூதியில் எண்ணெய் உற்பத்தியில் ஏறக்குறைய 50சதவீதத்தைப் பாதித்துள்ளது. அதாவது நாள் ஒன்றுக்கான உற்பத்தியில் 57இலட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை பாதித்துள்ளது என தெரிவித்தார்.
இத் தாக்குதல் சவூதியை மட்டும் இலக்கு வைத்து நடத்தப்பட்டவில்லை. உலக எண்ணெய் சந்தை மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும் தாக்குதலாகவே அமைந்துள்ளதாக சவூதி அரேபியா குற்றம் சாட்டியுள்ளது. உலகளாவிய உற்பத்தியில் ஏறக்குறைய 10சதவீதத்தை நிரப்பீடு செய்யும் நாடு சவூதி அரேபியா என்பது கவனத்திற்குரியது. இதனால் உலக சந்தையின் எண்ணெய் விலையில் பாரிய மாற்றம் தவிர்க்க முடியாதது என கருத்தியலாளர்கள் கருதுகின்றனர். இத்தகைய நெருக்கடியை அவர்கள் 1979ஈரானியப் புரட்சிக் காலத்துடனும் 1973அரபு- இஸ்ரேல் யுத்த காலத்துடனும் 1990குவைத் தாக்குதலுடனும் ஒப்பீடு செய்து அவற்றைவிட ஆபத்தான தருணம் எனக் குறிப்பிடுகின்றனர்.
இத்தகைய பாதிப்பு உலக சந்தையை பாதிக்க ஆரம்பித்துள்ளது எனலாம். அதன் முதல் கட்டமே அமெரிக்க ஜனாதிபதி டுவிட்டரில் பதிவிட்டபடி அமெரிக்க இருப்பில் வைத்திருந்த கச்சா எண்ணெயை பாவிப்பதற்கான அனுமதியை வழங்கியிருந்தமையாகும். ஆனால் அது பின்னர் கைவிடப்பட்டடதுடன் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் பாம்பியோ சவூதிக்கு அவசர பயணத்தை மேற்கொண்டுள்ளதுடன், உற்பத்திக்கான நடவடிக்கை பற்றிய பேச்சுக்களை ஆரம்பித்துள்ளார். அதன் பின்பு சவூதி இன்னமும் மூன்று வாரத்தில் உற்பத்தி மீள ஆரம்பிக்கப்படும் எனத் தொரிவித்துள்ளது. மறுபக்கத்தில் கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையே உலக அளவிலும் பிராந்திய மட்டத்திலும் அதிக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இராணுவ செய்தி தொடர்பாளர் யஹ்யா சரீ தாக்குதல் பற்றி தெரிவிக்கும் போது,
இத்தாக்குதலானது சவூதி அரசாங்கத்தில் உள்ள மரியாதைக்குரிய மனிதர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது என்றும் நாங்கள் நினைத்த நேரத்தில் எங்கள் கரங்கள் சவூதி அரேபியாவின் எந்த பகுதிக்கும் நீளும் என்பதை அந்நாட்டு அரசுக்கு உறுதிப்பட தெரிவித்துக் கொள்கிறோம் எனக் குறிப்பிட்டார்
ஆனால் சவூதி அரேபியாவில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது தாக்குதல் நடாத்தியது ஈரான் தான் என அமெரிக்கா திட்டவட்டமாக குற்றம் சாட்டி வருவதோடு அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளது
இத்தாக்குதல் குறித்து அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ தனது டுவிட்டரில் பதிவிட்டதன்படி ஏமன் நாட்டிலுள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலை நடத்தியதற்கு எந்த ஆதாரம் இல்லை. ஈரான் தான் இத்தாக்குதலை நடத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். முன் எப்போதும் இல்லாதளவுக்கு உலகின் எண்ணெய் வளத்தின் மீதும் அதன் விநியோகம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சவூதி அரேபியா மீது நூற்றுக்கணக்கான தாக்குதலுக்கும் நிகழ்த்தப்பட்டுள்ளது இதற்குப் பின்னால் ஈரான் உள்ளது, ஈரானிய ஆட்சியாளர்கள் தூதரக ரீதியில் செயல்படுவதாக பாசாங்கு செய்கிறார்கள். ஈரானின் தாக்குதல்களை பகிரங்கமாகவும், சந்தேகத்திற்கு இடமின்றியும் கண்டிக்க உலக நாடுகளுக்கும் முன்வர வேண்டும். எண்ணெய் வளச் சந்தைகள் நன்கு செயல்படுவதை உறுதி செய்வதற்காக அமெரிக்கா நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படும் என பாம்பியோ குறிப்பிட்டுள்ளார்
அதே சமயம் இத்தாக்குதலின் சூத்திரதாரி யார் என்பது எங்களுக்கு தெரியும் ஆனால் இதனை எவ்வாறு கையாள வேண்டும் என சவூதி அரேபியா தான் முடிவு செய்ய வேண்டும் என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது இத்தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருப்பதற்கான ஆதாரங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது குறிப்பாக செய்மதிப் படங்களையும் புலனாய்வுத் தகவல்களையும் மற்றும் செயற்கைக்கோள் படங்களையும் ஆதாரப்படுத்தியுள்ளது. மேலும் இத் தாக்குதல் வடமேற்குப் பகுதியிலிருந்து நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என அமெரிக்க அதிகாரி ஒருவர் குறிப்பட்டுள்ளார். அது ஈரான் அல்லது ஈராக் பகுதியாகவே கருதப்படுகிறது.
கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்