பத்தொன்பதாம் நூற்றாண்டை ஐரோ ப்பாவின் நூற்றாண்டெனவும் இருபதாம் நூற்றாண்டை அமெரிக்காவின் நூற்றாண்டெனவும் பொதுவாக அடையாளப்படுத்துவதுண்டு. 19ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஏற்பட்ட கைத்தொழிற் புரட்சியைத் தொடர்ந்து ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் கைத்தொழில் மற்றும் விவசாயத்துறை நவீன மயமாக்கல் இணைந்து ஐரோப்பாவில் மிகப்பெரிய பொருளாதாரப் பாய்ச்சலை ஏற்படுத்தியது.
அதேபோல இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஐரோப்பிய நாடுகள் மத்தியில் இருந்த பொருளாதார கேந்திரத் தளம் படிப்படியாக அமெரிக்காவை மையப்படுத்தியதாகவும் முதன்மைப்படுத்தியதாகவும் நகர்ந்தது. எனவேதான் பொருளாதார ரீதியிலும் வலுச் சமநிலையை அடிப்படையாகக் கொண்டும் மேலே கூறப்பட்டவாறு நூற்றாண்டுகளை அடையாளப்படுத்துகின்றனர்.
2000ஆம் ஆண்டின் பின்னர் உலகின் பொருளாதார மற்றும் வலுச் சமநிலையில் தெளிவாக அவதானிக்கக்கூடிய வகையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த நூற்றாண்டின் இறுதித் தசாப்தங்களில் தென்கிழக்காசிய நாடுகள் சிலவற்றில் ஏற்பட்ட புதிய கைத்தொழில் எழுச்சி ஜப்பானையும் அதனைச் சூழவுள்ள நாடுகளின் பொருளாதார விரிவாக்கத்தின் காரணமாக ஏற்பட்டது. மிகத்துரிதமாக அவற்றின் பொருளாதாரங்கள் வளர்ச்சியடைந்ததைத் தொடர்ந்து ஆசியாவிலும் பொருளாதார வளர்ச்சி மையம் கொள்ளமுடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. எவ்வாறாயிலும் 1997ல் ஏற்பட்ட கிழக்காசிய நிதி நெருக்கடிகளின் காரணமாக இந்நாடுகளின் வளர்ச்சி வேகத்தில் ஒரு தொய்வு நிலை அவதானிக்கப்பட்டது.
புதிய நூற்றாண்டின் உதயத்தைத் தொடர்ந்து உலகின் சில முக்கிய நாடுகளின் பொருளாதாரங்கள் மேற்குலக அபிவிருத்தியடைந்த நாடுகளின் பொருளாதாரங்களை விட துரித விரிவாக்கம் காண ஆரம்பித்தன. குறிப்பாக பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீன மற்றும் தென்னாபிரிக்கா (BRICS) ஆசிய பிரிக்ஸ் நாடுகள் எழுச்சி பெற்றுவரும் பொருளாதாரங்களாக (Emerging Economies) அடையாளப்படுத்தப்பட்டன. இவற்றில் மூன்று நாடுகள் ஆசிய வட்டகையைச் சேர்ந்த மிகப்பெரிய பொருளாதாரங்களாகும். ரஷ்யாவின் பெரும்பகுதி ஆசியாவைச் சேர்ந்ததாகும். இந்தியா மற்றும் சீனா ஆசியாவின் மிகப்பெரிய நிலப்பரப்புகளை கொண்ட நாடுகளாகும். சனத்தொகையைப் பொறுத்தமட்டில் உலகின் முதலாவது, இரண்டாவது மற்றும் ஒன்பதாவது சனத்தொகை கூடிய நாடுகளாக இவை உள்ளன. தற்போது உலகின் மொத்த பொருளாதார உற்பத்திகளில் சுமார் மூன்றில் ஒரு பகுதியை இவை உற்பத்தி செய்கின்றன. 2030 அளவில் உலகின் அரைவாசிக்கும் மேற்பட்ட உற்பத்தியை மேற்படி மூன்று நாடுகளையும் உள்ளடக்கிய வட்டகை உற்பத்தி செய்யக் கூடுமென எதிர்வு கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் நோக்குமிடத்து இருபத்தோராம் நூற்றாண்டாவது ஆசிய நூற்றாண்டாக அமையக்கூடும் என ஹேஸ்யம் கூறப்படுகிறது.
உலகின் சனத்தொகை மிக்க நாடாகிய சீனாவுக்கு மக்களின் எண்ணிக்கை மாபெரும் சுமையாக இருக்கக்கூடுமென பைழமைவாத மேற்குலக சிந்தனாவாதம் கருதிய போதிலும் அதனைத் தகர்த்தெறிந்து துரித வளர்ச்சியை சாதித்துக்காட்டக்கூடிய நாடே சீனா. அதேபோலவே இரண்டாவது சனத்தொகை கூடிய நாடாகிய இந்தியாவும் துரித வளர்ச்சியில் பதிவு செய்துள்ளது. அண்மைக் காலங்களில் இவ்விரு நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சியில் ஒரு தொய்வு நிலை ஏற்பட்டுள்ளபோதிலும் அவற்றின் வளர்ச்சி வேகங்கள் மேற்குலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இன்னமும் உயர்வாகவே இருக்கின்றன.
இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகியவற்றின் உற்பத்திப் பெருக்கம் மிகப்பெரியளவில் மேற்குல சந்தைகளிலேயே தங்கியுள்ளது. இவை மூன்றும் உற்பத்திப் பொருளாதாரங்களாக (Production Economic) உள்ளனவேயன்றி நுகர்வுப் பொருளாதாரங்களாக இன்னும் மாறவில்லை.
அத்துடன் இவற்றின் உற்பத்திகள் மேற்குலக ஏற்றுமதிச் சந்தைகளை நோக்கியதாகவே உள்ளன. மேற்குலக நாடுகளைச் சேர்ந்த பல்தேசியக் கம்பனிகள் மிகப்பெரியளவில் இவற்றில் முதலீடுகளைச் செய்துள்ளன. இதனை மேற்குலக நுகர்வோருக்காகவே இவற்றின் உற்பத்திகளில் கணிசமாகவும் மேற்கொள்ளப்படுகிறது.
ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும்போது அந்நாட்டின் மத்தியதர வர்த்தகத்தின் அங்கத்தவர் எண்ணிக்கை அதிகரிக்கும். இது அந்நாட்டின் நுகர்வின் விரிவாக்கத்திற்கு ஏதுவாகும் என்னும் சாதாரண கருதுகோளின் அடிப்படையில் அவதானித்தாலும் கூட உலகின் மிகப்பெரிய சனத்தொகையை கொண்ட இந்தியாவிலும் சீனாவிலும் இந்த எண்ணிக்கை மிகப்பெரியளவு அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் ஆசிய கலாசாரத்தின் ஒரு பிரதிபலிப்பாகிய குறைவாக நுகர்ந்து நிறைவாக வாழல் என்பதன் அடிப்படையில் இந்நாடுகளில் நுகர்வு விரிவாக்கம் போதியளவு இடம்பெறவில்லை. சாதாரண ஒரு அமெரிக்கரின் நுகர்வு மட்டத்தை இன்னும் எந்த ஒரு நாடும் எய்தவில்லை என்றே கூறலாம்.
இப்போதுதான் சீனர்களும் இந்தியர்களும், ரஷ்யர்களும் படிப்படியாக தமது நுகர்வு மட்டத்தை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளனர். நமது இலங்கை சாலைகளில் எதிர்கொள்ளும் சீனர்களினதும் இந்தியர்களினதும் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வது இதன் ஓர் அங்கமாகும். வருமானம் அதிகரித்துச் செல்வது இதன் ஓர் அங்கமாகும். வருமான அதிகரிப்பு உல்லாசப் பயணங்களை ஊக்குவிக்கும்.
மாறிவரும் உலகப் பாங்குகளை புரிந்து கொண்ட காரணங்களினால் சீனா இரண்டு நுகர்வுகளை மேற்கொண்டது.
ஷங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பை (Shanghai Cooperation Organization) உருவாக்கியமை.
பட்டி மற்றும் பாதைத் திட்டத்தை (Belt and Road Initiative) நடைமுறைப்படுத்தியமை அதாவது புதிய பட்டுப்பாதை.
இவை இரண்டின் மூலமும் ஆசிய நாடுகள் உலகின் முக்கிய இடத்தை அடைய முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றுள் பட்டி மற்றும் பாதை திட்டம் குறித்து முன்னர் ஒரு கட்டுரையில் அவதானம் செலுத்தியுள்ளோம்.
சீனாவின் தலைமையில் 2001ஆம் ஆண்டு சீனாவின் ஷங்ஹாய் நகரில் கூடிய தலைவர்களின் மாநாட்டில் ஷங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பு உருவாக்கப்பட்டது. பிராந்தியப் பாதுகாப்பு, பிராந்திய பயங்கரவாதத்தை தடுத்தல், இன ரீதியிலான, மத ரீதியிலான பிரிவினைவாதத்திற்கு எதிராக செயற்படல், பிராந்திய அபிவிருத்தி என்பன இந்த ஐரோப்பிய ஆசிய நகர்வின் முக்கிய குறிக்கோள்களாக அமைகின்றன.
சீனா, ரஷ்யா, கஸகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன.
ஆப்கானிஸ்தான், பெலரூஸ், ஈரான், மொங்கோலியா ஆகிய நான்கு நாடுகள் அவதானிப்பாளர்களாக உள்ளன.
அசர்பைஜான், ஆர்மேனியா, கம்போடியா, நேபாளம், துருக்கி, இலங்கை ஆகிய ஆறு நாடுகள் கலந்துரையாடல் பங்காளர்களாக உள்ளன.
ஒட்டுமொத்தமாக நோக்குமிடத்து முன்னைய சோவியத் ஒன்றியத்தின் பெரும்பாலான நாடுகளையும் ‘பிரிக்ஸ்’ நாடுகளான சீனா, இந்தியாவுடன் ஏனைய சில முக்கிய நாடுகளையும் உள்வாங்கியதாக இவ்வமைப்பு உள்ளது. இதில் இந்தியா – சீனா, இந்தியா-, பாகிஸ்தான் போன்ற ஒவ்வாமை நோய்கொண்ட நாடுகளும் கொதிநிலையிலுள்ள நாடாகிய ஈரானும் அவதானிப்பாளர் அந்தஸ்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். நமது இலங்கையும் இதில் ஏதோ ஒரு அந்தரத்தில் தொங்கிக் கொண்டுள்ளமை சிறப்பம்சமாகும். அரசியல், பொருளாதார பாதுகாப்பு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட இவ்வமைப்பின் 2019 ஆண்டிற்கான மாநாடு ஜூன் 14ம் திகதி கிர்கிஸ்தானில் இடம்பெற்றது. இதில் முக்கிய அங்கத்துவ நாடுகளாக சீனாவும் ரஷ்யாவும் ஒத்துழைப்புடன் செயற்படுமா போட்டியாளர்களாக செயற்படுமா என்னும் முக்கிய வினா எழுந்தது. ஆசிய வட்டகையின் பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு, அரசியல் உறுதி நிலை என்பவற்றை பேண வேண்டுமாயின் இந்த நாடுகளிடையே ஒத்துழைப்பு மிக முக்கியமானது.
ஒரு புறம் தனது பட்டி மற்றும் பாதைத்திட்டத்தின் கீழ் சீனா தனது பொருளாதார வல்லாதிக்கத்தை விஸ்தரித்து வருகிறது. மறுபுறம் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கீழ் ஒத்துழைப்பு பேண முயற்சிக்கிறது. ரஷ்யாவும் இந்தியாவும் இந்த விரிவாக்கத்தை எந்தளவு தூரம் சகித்துக் கொள்ளும் என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
எவ்வாறிருப்பினும் சீனாவின் விரிவாக்கம் தற்போது ஏனைய நாடுகளால் கட்டுப்படுத்த முடியாதளவுக்கு சென்றுள்ளது என்பதை மறுக்க முடியாது.
கலாநிதி எம். கணேசமூர்த்தி
பொருளியல் துறை, கொழும்புப் பல்கலைக்கழகம்