புதிய அரசியல் செல்நெறியை சாத்தியமாக்குவது யார்? | தினகரன் வாரமஞ்சரி

புதிய அரசியல் செல்நெறியை சாத்தியமாக்குவது யார்?

ஜனாதிபதி தேர்தலுக்கான நாள், தேர்தல்கள் ஆணையகத்தினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டாயிற்று. போட்டியிடவுள்ள வேட்பாளர்களைப் பற்றிய சர்ச்சைகளும் இழுபறிகளும் ஒருவாறு முடிவுக்கு வந்துவிட்டன. இப்பொழுது போட்டியிலிறங்கவுள்ள கட்சிகள் தமது தரப்பு வேட்பாளரை அறிவித்து விட்டன. ஏறக்குறைய முதற்கட்டக் கொந்தளிப்பு, ஊகம் என்ற அலையெல்லாம் மெல்ல அடங்கி விட்டது. இனி வெற்றி நாயகரை நோக்கிய அலைகளே உயரப்போகின்றன.

எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே ஐக்கிய தேசியக் கட்சி சஜித்தை வேட்பாளராக அறிவித்திருக்கிறது. சஜித்துக்கான வெற்றி வாய்ப்பை அதிகரிப்பதற்காக ரணில் விக்கிரமசிங்க வகுத்துச் செயற்பட்ட “முட்டுக்கட்டை” வியூகமானது ஓரளவு வெற்றியாக அமைந்தேயிருக்கிறது. சவால்கள், எதிர்ப்புகளின் மத்தியிலே போராடி, மக்கள் ஆதரவைப் பெற்றுத்தான் சஜித் களமிறங்குகிறார் என்ற தோற்றப் புனைவை உருவாக்குவதற்கு ரணிலும் அவருக்கு ஆதரவான தரப்பினரும் முயற்சித்தனர். ஏனெனில் எதிர்த்தரப்பிலிருக்கும் கோத்தபாய ராஜபக்ஸ சிங்களப் பெரும்பான்மையின் பேராதரவைப் பெற்றவர் என்ற உள்ளுணர்வு பலருக்கும் இருப்பதால், அவரை எதிர்கொள்வதற்கு சஜித்தைப் பலமானவராக ஆக்க வேண்டும். அதற்கான ஏற்பாடே இந்த “சஜித் மறுப்பு” நாடகம்.

இப்பொழுது சஜித்துக்கான மக்கள் அனுதாபமும் ஆதரவும் கட்டி எழுப்பப்பட்டு விட்டன. ஆகவே இந்தச் சந்தர்ப்பத்தில் – பொருத்தமான நேரத்தில் - சஜித்தை அங்கீகரிப்பதாக அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே ஐ.தே.க தன்னுடைய வெற்றி வாய்ப்பை ஓரளவுக்கு உறுதி செய்துள்ளது எனலாம். இதற்கு அனுசரணையாக தமிழ் முற்போக்குக் கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட சிறுபான்மையினக் கட்சிகளும் சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன போன்ற தரப்பினரும் தம்முடைய ஆதரவை அளிக்க முன்வந்துள்ளமை கவனிக்கத்தக்கது.

இனி மிஞ்சியிருப்பது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மட்டும்தான். அது ஒன்றும் பிரச்சினைக்குரிய விசயமே அல்ல. நிச்சயமாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஐ.தே.கவுக்கே – சஜித் பிரேமதாசவுக்கே – ஆதரவளிக்கும். இது உலகறிந்த விசயம். ஐ.தே.கவைக் கடந்து செல்லக் கூடிய – மாற்றுத் தீர்மானத்தை எடுக்கக்கூடிய - அரசியல் பார்வையோ அரசியல் ஒழுங்கோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமில்லை. ஆகவே அது நிச்சயமாக சஜித்துக்கான ஆதரவையே வழங்கும். ஆனால், இதைச் சற்று இழுத்தடித்து, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைப்பற்றிய ஐதீகக் கதைகள் சிலவற்றைச் சொல்லியே (தமிழ் மக்களுக்குக் கதை விடுவதாக நீங்கள் எடுத்தால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல) தன்னுடைய ஆதரவைப் பற்றி அறிவிக்கப்போகிறது. இது ஒரு நாடகமே. ஆனால் கூட்டமைப்புக்கு இதைச் செய்ய வேண்டியிருப்பது தவிர்க்க முடியாத ஒரு இக்கட்டான நிலை. ஏனென்றால், கூட்டமைப்பு ஆதரித்துக் கொண்டிருக்கும் தற்போதைய ஐ.தே.க (ரணில்) அரசாங்கம் தமிழ் மக்களுக்கு இனிப்பான எதையும் செய்யவேயில்லை. இந்த நிலையில் மேலும் ஐ.தே.கவை அப்படியே ஆதரிப்பதும் அங்கீகரிப்பதும் என்றால் அது தமிழ்ச்சனங்களுக்கு உவப்பாக இருக்காது. ஏற்கனவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஐ.தே.கவுக்கான நிபந்தனையற்ற ஆதரவையிட்டு தமிழ் மக்களுக்கு நிறையக் கோபங்களும் அதிருப்தியும் உண்டு. இதனால் கூட்டமைப்பு உடனடியாக தனது சஜித் ஆதரவு நிலைப்பாட்டைச் சொல்ல முடியாதிருக்கிறது. இந்தத் தயக்கமே தமது கோரிக்கைகளுக்கான ஏற்பும் நிபந்தனைக்கான சம்மதமும் வேண்டும் எனக் கூட்டமைப்புச் சொல்வதற்குக் காரணம்.

ஆனால், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையையும் நிபந்தனையையும் சஜித் அப்படியே ஆதரிக்கப்போவதில்லை. சஜித்தின் நிகழ்ச்சி நிரலிலும் இதற்கான இடமில்லை. அவருடைய மனதிலும் இதைப்பற்றிய எண்ணங்களில்லை. அவருக்குத் தெரியும், என்னதானிருந்தாலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஐ.தே.கவின் பட்டியை விட்டுச் செல்லாது. அதற்கு வேறு பட்டி ஏற்புடையதாக இருக்காது என. ஆகவே சஜித் பொத்தாம் பொதுவாக “எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளலாம். ஒன்றுக்கும் அவசரப்படவும் வேண்டாம். பதட்டமடையவும் வேண்டாம்” என்றவாறே பதிலளிப்பார்.

இப்பொழுது ஐ.தே.க ஆதரவு அணிகள் ஓரளவுக்கு சஜித்துக்காக வேலை செய்வதற்குத் தயாராகி விட்டன. ஆனால் பிரச்சினையாக இருப்பது, ஐ.தே.கவுக்குள்ளிருக்கும் ரணில் தரப்பினரே. ரணில் தரப்பில் உள்ள சிலர் சிறிய தயக்கங்களோடு இருப்பதாகக் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் இதுவும் ஒரு நாடகமே.

அடுத்ததாக உள்ளது பொதுஜன பெரமுன தரப்பில் களமிறங்கும் கோத்தபாய ராஜபக்‌ஷ விவகாரம். கோத்தபாய ராஜபக்‌ஷவைத் தமது தரப்பு வேட்பாளராக பொதுஜன பெரமுன அறிவித்த போதிருந்தே பல சர்ச்சைகளையும் சவால்களையும் அந்தத் தரப்பு எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஒன்று கோத்தபாயவின் இரட்டைக்குடியுரிமை விவகாரத்தில் உள்ள சிக்கல்களும் குழப்பங்களும் சட்டப்பிரச்சினைகளும். இரண்டாவது, கோத்தபாய மீதிருக்கும் குற்றச்சாட்டுகள். அவருடைய கடந்த கால அதிகாரத் தோரணை பற்றிய விசயங்கள். மூன்றாவது கோத்தாவை ஏற்றுக்கொள்வதில் சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கும் பொதுஜன பெரமுனவில் பங்காளிகளாக உள்ள ஏனையோருக்கும் உள்ள சங்கடங்கள். நான்காவது பொதுஜன பெரமுனவின் சின்னத்தில் அல்லாமல் பொதுச் சின்னமொன்றில் போட்டியிட வேண்டும் என்ற சுதந்திரக் கட்சியின் நிபந்தனை. ஐந்தாவது, சிறுபான்மையினத்தினரின் மனதில் தன்னை நிலைப்படுத்தக் கூடிய மாற்றங்களும் அறிவிப்புகளையும் நம்பிக்கையின் விதைகளையும் இன்னும் கோத்தபாய ஊன்ற முனையாதிருப்பது.

இப்படிப் பல சவால்களையும் சிக்கல்களையும் கடந்தே கோத்தபாய ராஜபக்‌ஷ பயணிக்க வேண்டியுள்ளது.

இதைவிட தன்னுடைய காலத்தில் எத்தகைய மாற்றங்களைச் செய்வேன். அவற்றுக்கான உத்தரவாதம் என்ன என்ற எந்த வழிப்படங்களையும் உத்தரவாதங்களையும் கோத்தபாய இன்னும் வெளிப்படுத்தவில்லை. கோத்தாவுக்கான தற்போதைய ஆதரவுத் தளம் என்பது அவருடைய சகோதரர் மகிந்த ராஜபக்‌ஷவினுடையதே. அதையே அவர் தனக்கான முதலீடாகக் கொள்கிறார். ஆனால், ராஜபக்‌ஷ என்ற முதலீடு எதுவரையில் செல்லுபடியாகும்? என்பது கேள்வியே.

ஏனெனில் தனியே சிங்களப் பெரும்பான்மையின் வாக்குகளோடு கோத்தபாய ஆறுதல்பட்டுவிட முடியாது. அந்த நம்பிக்கை போதுமானதல்ல. ஏனெனில் அந்த வாக்குகளில் கணிசமானதை அள்ளக் கூடிய அளவில் ஜே.வி.பியின் அனுரகுமார திஸநாயக்க உள்ளார். ஆகவே அது சவாலுக்குரிய ஒன்றே.

அப்படியென்றால் சிறுபான்மையினச் சமூகத்தினரின் வாக்குகளையும் கோத்தபாய சேகரிக்க வேண்டும். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கினாலே அது சாத்தியப்படும். அதற்கு அவர் சில பல வேலைகளைச் செய்ய வேண்டும். தற்போது கோத்தாவை ஆதரிக்கும் சிறுபான்மைத் தரப்பினரின் கட்சிகள் (ஈ.பி.டி.பி மற்றும் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி உள்ளிட்டவை) ஒரு எல்லைக்குட்பட்ட வாக்குகளை மட்டுமே கொண்டவை. ஆகவே இதையும் கடந்து தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற வேண்டும். அதற்கான வெளிப்படுத்தல்களும் வேலைத்திட்டங்களும் அரவணைப்புகளும் தேவை. இல்லையெனில் கோத்தாவுக்கான நெருக்கடிகள் வலுவானதாகவே இருக்கும்.

இன்னொரு வலுவான தரப்பு ஜே.வி.பி – அனுரகுமார திஸநாயக்க. ஒப்பீட்டளவில் இந்தத் தடவை ஜே.வி.பி அதிகமான வாக்குகளைப் பெறக்கூடிய சூழலே காணப்படுகிறது. மேற்படி கோத்தபாய ராஜபக்‌ஷ, சஜித் பிரேமதாச மற்றும் ஐ.தே.க, பொதுஜனபெரமுன, சிறிலங்கா சுதந்திரக்கட்சி போன்ற தரப்புகளில் அதிருப்தியோடிருப்போர் நிச்சயமாக அனுரகுமார திஸநாயக்கவை ஆதரிக்கும் நிலையே காணப்படுகிறது. ஜே.வி.பியின் கூட்டங்களில் சேருகின்ற கூட்டங்கள் இதற்குச் சாட்சி.

ஆனால், ஜே.வி. பியானது கனிந்திருக்கும் இந்த நற்சூழலை எந்தளவுக்குத் தனக்கு வாய்ப்பாகக் கொள்ளப்போகிறது? என்ற கேள்விகள் உண்டு. ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமாரவுக்கான வெற்றிச் சாத்தியங்கள் எந்தளவுக்குண்டு என்று யாரும் சிந்திக்கத் தேவையில்லை. சரியானமுறையில் கனிவான அரசியலை பன்மைத்துவத்தின் அடிப்படையில் - இலங்கைத்தீவுக்குப் பொருத்தமான – தேவையான அரசியலாக வெளிப்படைத்தன்மையோடும் உறுதியோடும் முன்வைத்தால் அனுரகுமார Vs ஜே.வி.பி வெற்றிச் சாத்தியங்களைப் பெற முடியும். ஜனாதிபதித் தேர்தலில் பெறப்போகின்ற வாக்குகள் அத்தனையும் அதன் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கு உதவும்.

இதற்கு ஜே.பி.வியிடம் திறந்த உரையாடல்களும் விரிந்த நோக்கும் அவசியமாக உள்ளது. ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு மேலான அரசியற் பாரம்பரியத்தைக் கொண்ட ஜே.வி.பி இனியும் தடுமாற்றங்களுக்குள்ளாகக் கூடாது. ஐ.தே.க, சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன ஆகியவற்றின் நிழற்பிரதிகளாகத் தன்னைக் கட்டமைக்க முற்பட்டால் அது ஜே.வி.பியின் அழிவுக்கும் பின்னடைவுக்குமே வழியை ஏற்படுத்தும். ஜே.வி.பியின் தொடக்கம் எப்படி ஒரு மாற்றுச் சக்திக்கான தேவையோடு ஆரம்பிக்கப்பட்டதோ அதே தேவையும் சூழலும் இன்னும் அப்படியே உள்ளது. ஆகவே அதே மாற்றுச் சக்தியாக, மாற்று அரசியலை முன்னெடுக்கும் பண்பில் அதனுடைய அரசியல் அமைய வேண்டும். அதாவது புதிய அரசியலொன்றையே இலங்கை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதைச் செய்தால் ஜே.வி.பிக்கு இடமுண்டு. இல்லையெனில் எதற்காக ஜே.வி.பி?

ஆகவே ஜே.வி.பி தன்னைப் புதுப்பித்து முன்வைக்க வேண்டும். வெற்றிக்கான குறுகிய உபாயங்களின் பின்னே தன்னைக் குறுக்கிக் கொள்ளாமல், தன்னை விரித்து மேலெழ வேண்டும். இதற்கு எந்தத் தயக்கமும் குழப்பமும் தேவையில்லை.

இனவாத அரசியலைப் புறந்தள்ளி விட்ட வெகுஜன அரசியலை – தேர்தல் அரசியலைச் செய்யலாமா? என்று குழப்பமடைந்தால் அது இன்னொரு ஜாதிக ஹெல உறுமயவைப்போலவோ, பொதுபல சேனாவைப்போலவோ போய் முடியும்.

ஆகவே வெற்றியின் அருகிலிருக்கும் அனுரவும் ஜே.வி.பியும் தற்போதைய சூழலை, அதன் சாதக நிலைமைகளை இலங்கையின் எதிர்காலத்துக்கும் தமது வெற்றிக்குமாக மாற்ற முற்படுவது அவசியம். அது இயலும்.

இப்பொழுது நாம் மூன்று தெரிவுகளின் முன்னே நிறுத்தப்பட்டுள்ளோம். அத்தனையும் கசப்பான பானங்கள்தான் என்று நம் மூளை உணருகிறது. இதில் எப்படித் தேர்வைச் செய்வது என்ற கேள்வி எழுந்து நிற்கிறது.

கருணாகரன்

Comments