கை,கால், கண், காது, நாக்கு என அனைத்து உறுப்புகளும் நன்றாக இருப்போர் அங்கவீனம் காது கேளாமை, பேச்சு இழந்தோர், பார்வையற்றோர் ஆகியோரைப் பார்க்கும்போது அண்டவன் எந்தக் குறையும் இல்லாமல் என்னைப் படைத்தாயே என்று இறைவனுக்கு நன்றிசொல்ல மறந்து விடுகிறோம். அதே சமயம் தெருவில் யாராவது சிரித்துப் பேசி செல்வதைப் பார்த்தால் சிரிப்பைப் பார் சிரிப்பை! என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு.. என்று சிலருக்கு மனம் வெம்முகிறது.
அடுத்தவர்கள் சற்று மகிழ்ச்சியாக இருந்தால் கூட, இவர்களால் பொறுக்க முடிவதில்லை. இந்த பொறாமை குணத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து மகாபாரதத்தில் ஒரு கதை உள்ளது. திருதராஷ்டிரன் மனைவி கந்தாரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அவளுக்கு அரண்மனை வாழ்வு. ஆள், அம்பு, சேனை, ராஜபோகம், பணிப்பெண்கள் என அனைத்து வசதிகளும் இருந்தன. திருதராஷ்டிரன் தம்பியான பாண்டுவின் மனைவி குந்தியோ காட்டில் ஒரு வசதியும் இல்லாத சூழலில் வசித்து வந்தாள்.
இந்நிலையில் குந்திதேவி கந்தாரிக்கு முன்னரே குழந்தை பிறந்துவிட்டது. இச்செய்தி நாட்டில் வாழ்ந்த கந்தாரிக்கு தெரிந்ததும் அவளுக்கு பொறுக்க முடியவில்லை. அவள் உள்ளத்தில் பொறாமைத் தீ, எரிமலை குழம்பாய் வெடித்து, வழிந்தது. அதன் விளைவாக காந்தாரி ஒரு அம்மி குழவியை எடுத்து, தன் வயிற்றில் இடித்துக் கொண்டாள். அவள் கரு சிதைந்து இரத்தம் கலந்த சதைக் கூறுகளாக சிதறின.
வியாசர் அந்தச் சதை கூறுகளை, நூற்றியொரு குடங்களில் இட, துரியோதனன் முதலான நூறு பேரும், துச்சலை என்ற ஒரு பெண்ணும் உருவாயினர். காந்தாரியின் இத்தகைய பொறாமை குணத்தின் காரணமாகவே கவுரவர்களும் இயல்பிலேயே பொறாமை குணம் படைத்தோராக விளங்கி, பாண்டவர்களின் மேல் கொண்ட பொறாமையால் அழிந்தனர். நாம் யாரைக் கண்டு பொறாமைப் படுகிறோமோ அவர்களுக்கு ஒன்றும் நேராது. பொறாமைப்பட்ட நமக்குத்தான் கேடு விளையும்.
எனவே, பொறாமையை மனதிலிருந்து துரத்தி நற்சிந்தனைகளை மனதில் வளர்த்துக் கொள்ளுங்கள். நடப்பவை, நல்லனதாகவே அமையும்.
சோ. வினோஜ்குமார்,
தொழினுட்ப பீடம்,
யாழ். பல்கலைக்கழகம், கிளிநொச்சி.